தமிழர்த் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் தை மாதம் முதல் மூன்று நாட்கள் உலகமெங்குமுள்ள தமிழர்களால் மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

மொழி, சாதி, சமயப் பாகுபாடின்றி கொண்டாடப்படும் விழாக்களுள் இச்சமத்துவ விழாவும் ஒன்று.

எந்தவொரு விழாவும் அது கொண்டாடப்படும் நாட்களுக்கு முந்தைய ஆயத்த நாட்களில் அதிக எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். பொதுவாக முக்கிய விழா நாட்கள் அவ்விழா ஏற்பாட்டின் இறுதி நாட்களாகத் தான் இருக்கும். அந்தவகையில் இப்பொங்கல் விழாவிற்கு முன்னேற்பாடாக, கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு முன்பிருந்தே வீட்டை சுத்திகரிப்பது, வெள்ளையடிப்பது, பழையன கழிவது என தடபுடலாகப் அப்பொங்கலை வரவேற்கும் நிகழ்வுகள் நடைபெறும்.bullock cart 1பெரும்பாலான பள்ளி, கல்லூரி மற்றும் பொது நிறுவனங்களிலும் சமத்துவத்தை நிலைநாட்டும் நோக்கில் இப்பொங்கல் முன்விழா புதுப்பானைகளில் புத்தரிசியால் இனிப்புப் பொங்கலிடப்பட்டு அனைவரும் சமத்துவப் பொங்கலாகக் கொண்டாடுவது அதிகரித்து வருகிறது; சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் இத்தித்திக்கும் பொங்கல் குதூகலத்தால் நிறைத்து விடுகிறது.

அதிலும் சிறப்பாகப் புதிதாகத் திருமணமான சோடிகளின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அதற்கு முக்கிய காரணம், திருமண வாழ்க்கையின் முதல் பொங்கலை சந்திக்கும் மணமக்களுக்காக அப்பெண் வீட்டிலிருந்து கொடுக்கப்படும் பொங்கல் சீதனம்தான். இதை “பொங்கல் படி” என்பர். தங்களது இல்லத்தில் பொங்கல் விடப்படுகிறதோ இல்லையோ புகுந்த வீட்டில் தனது மகள் சிறப்பாக பொங்கலிட்டு மகிழ்ந்திருக்க வேண்டும் என்ற அதீத அன்பே இதற்கான அடிப்படைக் காரணம். ஆம் விருந்தோம்பல், உபசரித்தல், பிறர்நலம் பேணல் போன்ற மானுடத்தின் அறப்பண்புகளைத் தலைமுறைத் தலைமுறையாகக் கடத்தி வரும் ஓர் உயர்ந்த பண்பாட்டின் சுருக்கக் குறியீட்டு வடிவமாகவே இப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

மக்களின் போக்குவரத்திற்கு மாட்டுவண்டுகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்த 1980கள் வரை தமிழகத்தின் தென்மாவட்ட கிராமங்களில் பொங்கலுக்கு முந்தைய வாரங்களில் சந்தைகளின் வெளிப்புறங்களிலும், தெருக்களிலும் வில்வண்டிகள் மற்றும் சக்கடா வண்டிகளின் நடமாட்டமாகத்தான் இருக்கும்.

அதில் நீண்டு நிற்கும் செங்கரும்புக் கட்டுகள், மண் மணம் வீசும் பனங்கிழங்குகள், பச்சை இலைகளோடு பிடுங்கப்பட்ட மஞ்சள் செடிகள் போன்றவற்றோடு பொங்கல் சீர்வரிசையைச் சுமந்தபடி ஜல்ஜல் என்ற ஜதியோடு வாலை முறுக்கிக் கொண்டு தலையை ஆட்டியபடி நுழையும் மாட்டு வண்டிகளின் ஆரவாரம் கிராமங்களை நிறைத்திருக்கும்.

அம்மாட்டு வண்டிகளைப் பின் தொடர்ந்து உற்சாக ஒலியெழுப்பியபடி அதனைத் துரத்தியோடி மகிழும் சிறுவர் பட்டாளம் ஒருபக்கம். தனது தாய் வீட்டு மாட்டுவண்டியின் ஓசைக்காகவே கனவு களோடு காத்திருக்கும் புதுப்பெண்களின் புன்னகைப் பார்வை... என அன்றைய நாட்களின் சீர் கொண்டு வரும் நிகழ்வே தனி அழகுதான்.

பொங்கல் சீர்வரிசை என்பது நமது முன்னோர் களால் உறவுமுறையைத் தொடர்ந்து வலுவுடன் வைத்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட ஓர் உன்னதமான நடைமுறை. தங்கள் வீட்டுப் பெண் புகுந்த வீட்டினரால் பிறந்த வீட்டின் பெருமையறிந்து மதிப்புடனும், அன்பு பாராட்டியும் வாழ வைக்கப்பட வேண்டும் என்ற அன்பின் மிகுதியால் பெண்ணின் தாய்வீட்டிலிருந்து அளிக்கப்படுவது.

அச்சீர்வரிசையில் பொங்கலிடத் தேவையான பித்தளை, வெண்கலம், மண்பானை இவற்றுள் ஏதாவது ஒருவகைப் பானையும், அச்சு வெல்லம், கருப்பட்டி, 11 படி பச்சரிசி, 9 படி புழுங்கரிசி, கரும்பு, மஞ்சள் கொத்து, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, கைமுறுக்கு, வாழை இலை, காய்கறிகள், ஏலக்காய், முந்திரி, குத்து விளக்கு, சந்தனம், குங்குமம், விளக்கு திரி, பணம் போன்ற அனைத்தும் மாட்டு வண்டியில் ஏற்றிப் பிறந்த வீட்டு சீராக உடன் பிறந்த சகோதரர்கள் தங்களது சகோதரியின் வீட்டில் கொண்டு சென்று இறக்குவர். இதில் இடம்பெறும் பொருட்களில் அவரவர் குடும்ப பொருளாதார வசதிக்கேற்ப மாற்றமிருக்கும். ஆனால் அச் சீர்வரிசை தாங்கி நிற்கும் அன்பின் அளவில் மட்டும் மாற்றமேயிராது!

சீர்வரிசையோடு பெண் வீட்டின் சகோதரர்கள் மற்றும் அவர்களுடன் செல்லும் தனது உறவினர்களை உபசரிக்கும் முகமாக, ஆட்டுக் கிடா அல்லது கோழி வெட்டி அன்பு மணம் கமழ “சம்பந்தி விருந்து” வைத்து அவர்களை வழி அனுப்புவர். அதை ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்த்தபடி பொங்கல் படி கொண்டு வரும் குடும்பத்தின் அருமை பெருமைகளை அக்கிராமத்தினர் கூடிப் பேசும் அழகு நமது தமிழ்ச் சமுகத்தின் கலாச்சாரத்தை உயிர்ப்பித்துக் கொண்டிருந்தன.

மாட்டு வண்டிகள் வழக்கொழிய தொடங்கிய தொண்ணூறுகளில் தொடங்கி இன்றுவரை மூன்று சக்கர ஆட்டோக்கள் மாட்டுவண்டிகளின் இடத்தைப் பிடித்தன.

கிராமங்களுக்குள் ஊர்ந்துவரும் அந்த மஞ்சள் வாகனம் சீர்களின் அளவிற்கு ஏற்ப அசைந்தும், ஆடியும் நகர்ந்து கொண்டு தெருக்களின் முக்கு அம்மாட்டு வண்டிகளைப் பின் தொடர்ந்து முடுக்குகளுக்குள் எல்லாம் சென்று வருவதும் போவதுமாக உள்ளது.

பொங்கல் சீர்வரிசையால் குடும்ப உறவில் ஏற்படும் மகிழ்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாக, தலைப் பொங்கலோடு நின்று விடாமல் வாழ்க்கை முழுவதும் தங்களது சகோதரிக்கு பொங்கல் படி வழங்கும் சகோதரர்களும் பெற்றோர்களும் இன்றும் தமிழகத்தில் இருக்கின்றனர் என்பது நமது தமிழ்ப் பண்பாட்டின் பெரும் சிறப்புகளுள் ஒன்று.

- த.ஜான்சி பால்ராஜ்

Pin It