நடந்து முடிந்த உலகக் கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் (திமிதிகி-2022) அர்ஜென்டினாவும் ஃபிரான்ஸும் விளையாடின. அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸியும் ஃபிரான்ஸின் கிளியன் பாப்பேயும் தமிழகம் எங்கும் மிகவும் பிரபலமாயிருந்தனர். அவர்களை உத்தேசித்து அவர்களது அணிகளின் ரசிகர்களாய் ஆனவர்கள் இருக்கலாம். ஆனால், ‘அர்ஜென்டினா’ ஒரு மூன்றாம் உலகத்து நாடு, லத்தின் அமெரிக்க நாடு, அது ‘சே’ யின் நாடு என்ற வகையால் அது வெற்றிபெற வேண்டும் என விரும்பியவர்கள் ஏராளம் என்பது தெரிகின்றது. ஃபிரெஞ்சு அணியில் பெரும்பாலும் ஆப்பிரிக்க கருப்பின வீரர்கள் பங்கு பெற்றிருந்தது சிலரை அர்ஜென்டினாவா, ஃபிரான்ஸா என குழம்ப வைத்தும் நடந்தது.
லத்தின் அமெரிக்காவின் கால்பந்தாட்டம் அதன் கலை போன்ற அழகியலுக்காக உலகெங்கும் பிரசித்தம் ஆனதுதான். லத்தின் அமெரிக்க இலக்கியங்களும் கடந்த இரு தசாப்தங்களாகத் தமிழகத்தில் பிரபல்யம் ஆகியுள்ளது. எந்தவொரு நாட்டையும் அந்த நாட்டிலிருந்து பிரபல்யமான எழுத்தாளரின் பேரால் அறிவது இலக்கிய வட்டங்களில் வழக்கமாகியுள்ளது. சிலி என்றால் பாப்லோ நெருடா, உருகுவே என்றால் எட்வர்டோ காலியானோ, கொலம்பியா என்றால் காபிரியல் கார்ஸியா மார்க்வெஸ், அர்ஜென்டினா என்றால் போர்ஹே என அடையாளப்படுத்தப்படுவது நடந்துவந்தது.
ஆனால், இப்போது அந்த நாடுகளில் அரசியலும் அதிபர்களும் புகழ்பெறத் தொடங்கியுள்ளனர். ஒவ்வொரு நாடாய் லத்தின் அமெரிக்காவின் அனைத்து நாடுகளும் இடதுசாரி கட்சிகளை ஆளும் கட்சியாகத் தேர்ந்தெடுத்துள்ளன. இத்தனைக்கும் இந்த நாடுகளின் மரபார்ந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் பலமாய் இல்லை. வெற்றி பெற்றவர்கள் புதிய இடதுசாரிகள். ஏகாதிபத்திய எதிர்ப்பு, பெருமுதலாளித்துவ எதிர்ப்போடு இன்றைய உலகின் வரம்புகளுக்குட்பட்டு ஆட்சி நடத்தி மக்கள் நலப் பணிகள் புரிபவர்கள், இன்றைய உலகில் ஆளுங் கட்சிகளாய் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஒரு கட்சி ஆட்சி நடக்கும் நாடுகளில் அவை பின்பற்றும் கொள்கைகளுக்கும் லத்தின் அமெரிக்காவின் புதிய இடதுசாரி கட்சிகள் பின்பற்றும் கொள்கைகளுக்கும் பெரிய வேறுபாடுகள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. லத்தின் அமெரிக்கக் கட்சிகள் தமது நாட்டிலுள்ள முதலாளித்துவ ஜனநாயக முறைகளில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து மக்கள் நலன் அரசுகளாகப் பணிபுரிபவை.
வெளிநாட்டு உள்நாட்டு ஆதிக்கங்களின் பலத்தால் தோற்றாலும் பொறுமையாய்ப் பணியாற்றி மீண்டும் ஆட்சிக்கு வருபவை. உட்கட்சியில் வளமான ஜனநாயகம் கொண்டவை. இவை குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் இந்தியாவிலும் தமிழகத்திலும் எளிதில் காணக் கூடியதாகவே உள்ளது,
அங்கு மட்டுமல்லாமல் ஐரோப்பாவின் பல நாடுகளிலும் இதேபோன்ற முயற்சிகள் அங்குள்ள இடதுசாரி கட்சிகளுக்கு முன்னேற்றத்தைத் தந்துள்ளன. கிரீசின் சிரிஸா, போர்ச்சுகல்லின் ஓ பிளாக்கோ, ஸ்பெயினின் பொடேமாஸ் ஆகியவையும் இந்த வகையைச் சார்ந்தவையே. இது தவிர ஜெர்மனியின் டிலிங்கே, ஃபிரான்ஸில் ஜான்-லுக்-மெலன்சோன் தலைமையிலான இன்சோமைஸ் ஆகியவற்றையும் இந்த வகை என்றுதான் கூற வேண்டும்.
அரசியல் களத்தில் மட்டுமல்லாது அறிவார்ந்த கருத்தியல் தளத்திலும் இந்தப் புதிய காற்று பல புதிய சிந்தனைகளை உருவாக்கியுள்ளது. மார்க்சிய லெனினியத்தை 21 ஆம் நூற்றாண்டின் எதார்த்தங்களுக்கும் தேவைகளுக்கும் வளர்த்தெடுக்கும் மறுவாசிப்பு செய்யக்கூடியதாக இந்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஜப்பானியக் கம்யூனிஸ்ட் கட்சி, தென்னாப்பிரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை மட்டுமல்லாது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுமே இந்தப் புதிய முயற்சிகளுக்கு முகங்கொடுத்துப் பரிசீலிப்பது நடந்து வருகின்றது.
என்.சி.பி.எச் நிறுவனம் தனது வரம்புகளுக்கு உட்பட்டு சில நவீன மார்க்சிய சிந்தனைகளை அறிவார்ந்த தமிழில் வாசகர்கள், செயல்பாட்டாளர்களின் பரிசீலனைக்கும், விவாதத்திற்கும் தமிழகம் கொண்டு வந்து தரும் பணியைச் செய்து வருகின்றது. ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு ‘மார்க்சிய செவ்வியல் நூல் வரிசையில்’ 15 நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டன. மிகுந்த வரவேற்புடன் பிரதிகள் அநேகமாக விற்றுத் தீர்ந்து விட்டன. அடுத்த கட்டமாக இந்த வரிசையில் 15 நூல்கள் வர இருக்கின்றன. இது குறித்த அறிவிப்புகள் கடந்த பல ‘உங்கள் நூலக' இதழ்களில் வந்ததை வாசகர்கள் அறிந்திருப்பர். அதில் ஆறு நூல்கள் 2023, சென்னை புத்தகக் கண்காட்சியின் போது வெளிவருகின்றன. ஏனையவை அடுத்தடுத்து வர இருக்கின்றன. இந்தப் புதிய காற்று தமிழகத்திலும் இந்தியாவிலும் அறிவார்ந்த கருத்தியல் தளம் வளரவும் செழுமையடையவும் உதவும்; இந்திய இடதுசாரி அரங்கச் செயல்பாட்டிற்கு இது உதவும் என உங்கள் நூலகம் ஆசிரியர் குழுவும் கருதுகின்றது. இந்த முயற்சிக்கு உங்கள் ஆதரவைக் கோருகின்றது.
- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு