தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து தனது கல்வியாலும் அறிவாலும் சிந்தனைத் திறத்தாலும்  அகில இந்திய அளவில் உயர்ந்த ஒப்பற்ற சிந்தனையாளர் சிங்காரவேலர் ஆவார். இந்தியாவினுடைய பொதுவு டைமை இயக்கத்தின் முதல் நிறுவனர்களில் ஒருவர்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல் - குறள் 664

என்ற குறளுக்கு இலக்கணமாய் இலக்கியமாய் வாழ்ந்து மறைந்தாலும் அவரது சிந்தனைகள் மறு வாசிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டிய காலக்கட்டத்தில் தமிழ்நாடு உள்ளது.

விடுதலைப் போராட்ட வீரரும் மார்க்சியச் சிந்தனை யாளருமான க.ரா.ஜமதக்னி அவர்கள் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரோடு ஒரே அறையில் சிறைவாசம் இருந்த பெருமை உண்டு. பல முறை என்னிடம் க.ரா.ஜமதக்னி சிங்காரவேலரின் சிறப்புகளைப் பகிர்ந்துள்ளார். க.ரா.ஜமதக்னி சிறை சென்ற போது சிங்காரவேலர், காசநோயால் உடல்நலம் பாதித்து நோயுற்ற நிலையில் இருந்தார். அப்போது அதே சிறையில் ராஜாஜியும் இருந்தார்.  ராஜாஜி ஜமதக்னியைப் பார்த்து சிங்கார வேலரின் அறைக்குள்  தங்க வேண்டாம் என்று கூறினா ராம். ராஜாஜியின் பேச்சைக் கேட்காமல் சிங்காரவேலரின் அறையிலேயே தங்கினேன் என்று ஜமதக்னி கூறினார்.

ஒரு மடலில் க.ரா.ஜமதக்னி - விடுதலைப் பேராட்டத் தில் பல ஆண்டுகள் சிறையில் கழித்தேன் இந்தியா விடுதலை பெற்றது. அப்போராட்டத்தில் சிறை புகுந்த போது பொதுவுடைமைச் சிற்பியான  சிங்காரவேலுவைச் சந்தித்தேன்.  முதுமைப் பருவத்தில் காசநோயால் அவதியுற்ற  சிங்காரவேலருக்குச் சிறையில் எல்லாப் பணிகளையும் செய்தேன். அப்போது காங்கிரசு இயக்கத் தலைவர்கள் சிங்காரவேலுவிடம் பேசாதே உனக்கு விஷத்தை  (பொதுவுடைமை நெறியை) ஊட்டி விடுவார் என்று கூறுவார்கள். பொதுவுடைமைச் சிற்பியோ  சிறையில்  தனக்குத் தரப்பட்ட மாமிச உணவை எனக்கு அன்புடன் அளிப்பார். அறிவுப் பசிக்கு மார்க்சிய உணவை ஊட்டினார். எனவே வாழ்நாள்  முடிவதற்குள் கார்ல் மார்க்சின் மூலதனத்தைத் தமிழ் கூறும்  நல்லுலகத்திற்குத் தருவது எனது தலையாய கடமையாகும்” என எழுதிய குறிப்பை மூலதனம் மிகைமதிப்பு மொழியாக்க நூலின் பதிப்பா சிரியரின் உரையில் இக்கட்டுரையாசிரியர் பதிவு செய்துள்ளார்.

இன்றைய இந்தியாவில் பிற்போக்குத்தனமான மதவாத மூடநம்பிக்கை நிறைந்த அரசியல் ஒன்றிய  அரசின்  ஆளும் சக்தியாக  அமைந்தது முற்போக்கு இயக்கங்களுக்கு  ஏற்பட்ட ஒரு பின்னடைவாகும். வரும் காலத்தில்  முற்போக்கு இயக்கங்கள் ஒன்று கூடி மக்களாட்சி கூட்டாட்சி இயல், மதசார்பற்ற உணர்வுகள் மீண்டும் அரசியலில் இடம் பெறுவதற்கு பெரும் களத்தை அமைக்க வேண்டிய சூழல் உள்ளது. சிங்காரவேலரின் சிந்தனை களை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தி, அவர் வாழ்நாளில் வலியுறுத்திய  பகுத்தறிவு, பொதுவுடைமை நெறிகளை இளைஞர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய பெரும் கடமை உள்ளது.

காங்கிரசு இயக்கத்தில் காந்தியார் தலைமையில் இணைந்தாலும் அவர் தனது கருத்துகளை யாருக்கும் அஞ்சாமல் வெளியிட்டார். காந்தி விடுதலை இயக்கத்தை இந்து சமய மீட்சி இயக்கமாக நடத்துவதாகவும் நாளடைவில் ஆங்கிலேயர்களிடமும் சுரண்டும் பூர்ஷ்வா வர்க்கத்தினரிடமும் சமரசம் செய்து கொண்டு விடுவார் என்று, இந்தியாவின் மூத்த மார்க்சிய சிந்தனையாள ரான எம்.என். ராய் பேசியும் எழுதியும் வந்தார். முதல் அகில உலக கம்பூனிஸ்ட் மாநாட்டில் காந்தி  நல்ல நேர்மையான  ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் என்று லெனின் வைத்த மதிப்பீட்டை எம்.என்.ராய் ஏற்கவில்லை. இந்தக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட சிங்காரவேலர் காந்தியின் சமூக, பொருளாதாரக் கொள்கைகளையும் ஏற்கவில்லை. குறிப்பாக, தர்மகர்த்தா முறை, கதர்க் கொள்கை ஆகிய வற்றைச் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் ஏற்கவில்லை. 1925 முதல் 1936 வரை சிங்காரவேலர் எழுதிய கட்டுரைகளில் இக்கருத்துகளைக் காண முடியும்.

சிங்காரவேலர் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் அதனுடைய தாக்கங்களையும் கட்டுரைகளாக எழுதி யுள்ளார். சிங்காரவேலர் அறிவியல் சார்ந்த பகுத்தறி வையும், பொருளாதாரக் கொள்கையில் காரல் மார்க்சு பற்றிய அறிவியல் சமதர்மத்தையும் போற்றி வளர்த்தார். இந்த இரு கருத்துருக்களுக்கும் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரே முன்னோடி எனலாம்.

26.12.1931இல் தந்தை பெரியார் தலைமையில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் சென்னை சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் சிங்காரவேலரின் உரை தனித்தன்மையானது. அறியாமை இருள் இருப்பதால்தான் எல்லா மதங்களும் தத்துவங்களும் சாத்திரங்களும் இயக்கங்களும் இந்த நாட்டில் தோன்றியுள்ளன....மதங்களே அறியாமையில் இருந்து புறப்பட்டவை. சாதி இந்தியாவில் முளைத்த ஒரு கற்பனை என்று கூற வேண்டும்... எனக்கோர் வழித் தோன்றுகிறது.

பகுத்தறிவை உயர்கல்வி மூலமாக வளரச் செய்ய வேண்டும் என்பது இதிலும் கஷ்டம் இருக்கிறது. சென்ற 50 ஆண்டுகளாக உயர் தரக் கல்வியில் தேர்ச்சியடைந்து வரும் பிராமணர்கள் சாதியை விட்டபாடில்லை. நமது இராஜகோபாலாச்சாரியும் சத்தியமூர்த்தியும் பூணுலைக் கழட்டி எறிந்தார்களா? இல்லையென்றால் எங்கே உயர் தரக்கல்வியின் பயன்?... பாமர மக்களுக்குச் சுடரொளி யாக உங்கள் இயக்கம் (திராவிட இயக்கம்) வந்துள்ளதாக எண்ணுகிறேன். நீங்கள்தான் இந்த ஆயிரம் தலை யுடைய விஷப்பாம்மை நசுக்க வேண்டும். உங்களால் ஆகாவிட்டால் உலகிற்கு இனி எந்த நம்பிக்கையும் கிடையாது....சமதர்மமே அதாவது மதமற்ற சாதி வேற்றுமையற்ற, பொருளாதார வேற்றுமையற்ற தர்மமே நமது நாட்டையும் மற்ற நாடுகளையும் காப்பற்ற உள்ள இயக்கமாகும் (சிங்காரவேலர் சொற்பொழிவு புலவர் ப.வீரமணி 2014). சிங்காரவேலரின் தொலை நோக்குப் பார்வை  இன்றைய சமூக அரசியல் நிகழ்வு களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தந்தை பெரியாரையும் திராவிடர் இயக்கத்தையும் அவர் செய்த மதிப்பீடு எவ் வளவு துல்லியமானது என்பதைப், புரிந்து கொள்ளலாம்.

28.8.1931இல் குடிஅரசு இதழில் சிங்காரவேலர் மதங்களால் உண்டாகும் பொருளாதார கஷ்டங்களுக்கு அளவே கிடையா. கோயில்கள் எத்தனை! தெப்பங்கள் எத்தனை! விக்கிரகங்கள் எத்தனை! உழைப்பின்றி வாழும் சிப்பந்திகள் எத்தனை! தாசி வேசிகள் எத்தனை! இவ்வளவு செல்வமும் யாருக்குமே நற்பிரயோசன மின்றிப் போவதைப் பயனற்ற அர்ச்சனைகளுக்கும் உற்சவங்களுக்கும் செலவாகும் பணத்தைக் கொண்டும் ஊரில் செய்தால் நிலங்களைச் சீர்படுத்தலாமே; ஊரில் நீர்வளங்களை உண்டாக்கலாமே என்று கூறியுள்ளார்.

இன்று நடப்பதென்ன? உச்ச நீதிமன்றம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளைப் போற்றும் வண்ணம் ஆண்-பெண் அனைவரும் ஆண்டவன் முன் சமம் என்று கூறிய பின்பும் ஐயப்பன் கோயிலுக்குள்  10 முதல் 50 வயது பெண்கள் செல்லக் கூடாது என்று கூறுவது-அதை நியாயப்படுத்தி ஊடகங் களில் சிலர் பேசுவது  எவ்வளவு அடாவடித்தனம் என்பதை எண்ணும்போது சிங்காரவேலரின்  சிந்தனை இருளைப் போக்கும் ஒளியாக அல்லவா அமைகிறது.

இந்து மதத்தில் பொய்யாகப் பரப்பி இன்றும் வணிகம் பார்க்கும் ஆன்மாவைப் பற்றி 1931இல் அவர் எழுதிய கட்டுரையில் தோலுரித்துக் காட்டியுள்ளார். செல்வி. ஜெயலலிதா மறைந்தபின் இன்றைய துணை முதல்வர் ஓ.பி.எஸ். அவரது நினைவிடத்தில் அமர்ந்து தியானம் புரிந்தார். முதல்வர் எடப்பாடியைப் பார்த்து அம்மாவின் ஆன்மா மன்னிக்காது என்று கூறினார். சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மகாளய அமாவாசையின் போது தமிழக அமைச்சர் ஒ.எஸ்.மணியன் அரை நிர்வாணக் கோலத்தில் காவிரிக் கரையில் அமர்ந்து கொண்டு  ஜெயா  அம்மாவின்  ஆவி சாந்தியடைய ஐயர் முன்னிலையில் தர்ப்பணம் அளித்தார். எந்தக் காலத்தில்? எந்த நேரத்தில்?  அறிவியல் தொழில்நுட்பப் புரட்சி மேலோங்கி உலகில் மட்டுமல்லாது விண்வெளியில் நடக்கும் நிகழ்வுகளை நம் கண் முன்னே நிறுத்தும் இணைய வழி வந்த பிறகும் ஆன்மா வழியைத் தேடுவது எவ்வளவு கயமைத்தன மான செயல் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கருத்தைக் காவிரியில் கரைக்கிறார் மணியன்.

1931இல் சிங்காரவேலர் கூறிய ஒரு கருத்தியல் நமக்கு வியப்பளிக்கிறது. “இந்துமதக் கோட்பாடுகளில் ஆன்மா பெரும் பங்கு வகிக்கிறது. குரங்கு ஒரு கிளையை விட்டு மறு கிளையைத் தாவிப் பிடிப்பது போன்று ஆஸ்திகன் கடைசி கிளையாகிய பிரக்ஞை (உள்ளுணர்வு) அடைவது என்பது ஒரு கற்பனையாகும். அதுவும் கடவுள், ஆன்மா, உயிர் போன்றவை கற்பனைச் சொற்களே. பிரக்ஞை ஒரு தனிப்பொருள். பிரக்ஞை என்பதும்  நாவும் உதடும் குரலும் மற்றும் சில உடல் உறுப்புகளின் அசைவின் பயனே என்று கூறப்படும். உரத்துப் பேசினால் அது தான்  பேச்சு. மெதுவாகத் தனக்குத்தானே பேசினால் அதுதான் பிரக்ஞை. எண்ணம் நினைவு என்று கூறல் வேண்டும் என்கின்றனர் விஞ்ஞானிகள்...விஞ்ஞானம் அடைந்துவரும் ஒவ்வொரு வெற்றியும் நாஸ்திகத்தைப் பலப்பபடுத்திக் கொண்டு வருகிறது”.

இன்றைய உலகில் நடைபெறும் இயற்கைச் சீற்றங் களால்  மக்களுக்கு ஏற்படும் சீரழிவுகளை மாற்ற வேண்டும் என்றால் உயிர்பன்மம் (Bio-diversity) வளர்க்கப்பட வேண்டும். ஆனால் சிங்காரவேலர் இதே கருத்தை 1935இல் எதிரொலித்துள்ளார். உலகம் வறண்டு போகிறதா என்ற தலைப்பில் சைன்டிஸ்ட் (Scientist) என்ற பெயரில் எழுதியுள்ளார். பூமி வறண்டு வருவதற்கு  இன்னொரு காரணம் உண்டு. காடுகளை அழிக்கும் காரணத்தினால் குளிர்ச்சியாக இருக்க வேண்டிய  இடங்கள் வறட்சியடைகின்றன.

மழைத்துளி  பூமி மேல் பட ஆகாயத்தில் ஈரம் நிறைந்திருக்க வேண்டும். அதற்கு  முக்கிய ஆதாரம் அடர்ந்த காடு. இவ்விதமாக காடுகளின் அழிவாலும் மழை குறைவதாலும் புல் பூண்டு தங்கவிடாமல் பூமியை உழுவதாலும் நாடுகள் வறண்டு விடும் என்பதில் சந்தேகமில்லை (தொகுதி-3 பக்.3) என்று குறிப்பிடுகிறார்.

“அக்கட்டுரையின் முடிவில், நமது பூமியும் சந்திரனுடைய கதி அடையும் காலை பூமி மேலுள்ள காற்றும் பூமியில் உள்ள நீரும் ஒழிந்து போய்விடும். நமது பூமி அந்தக் காலத்தில் காற்றற்று நீரற்று உயிரற்றுப் போய்விடும். அந்தக் காலம் வருவதற்கு நெடுநாள் பிடிக்கும். ஆனால் நமது அறியாமையால் அந்தக் கேட்டை நாமே சீக்கிரம் வரவழைப்போம் போல் காண்கிறது” என்று நுண்மாண் நுழைப்புலத்தோடு சிங்காரவேலர் எடுத்தியம்பியுள்ளார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு  வட்டார அளவில் போர்கள் நடைபெற்று வருகின்றன. அப்போர் களின் விளைவாக ஒவ்வொரு நாடும் நாட்டின் பாதுகாப்பிற்காகத் தொழில்நுட்பம் நிறைந்த புதுப்புது ஆயுதங்களைக் குவித்து வருகின்றன. உலக அளவில் ஆயுத வணிகம் பல இலட்சம் கோடி அளவைத் தாண்டி விட்டது. மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பயன்பட வேண்டிய நிதியாதாரங்கள் அழிவிற்கான அடித்தளமாக அமைகின்ற ஆயுதப் போட்டியில் முடிவடைகிறது. தற்போது  இந்தியாவின் பாதுகாப்பிற்கு என்று கூறி ரபேல்  விமானம் பல்லாயிரம் கோடி அளவிற்கு மோடி அரசு வாங்க முடிவு செய்துள்ளது. இந்த ஆயுதக் கொள்முதலிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்பதைப் பல ஆதராங்களைச் சுட்டிக்காட்டி காங்கிரசு குற்றம் சாட்டுகிறது.

சிங்காரவேலர் போரினால் ஏற்படும் பொருளாதாரச் சீரழிவுகளைச் சுட்டிக்காட்டி, போர்கள் இல்லாத உலகை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சிங்கார வேலர் சுட்டிய ஒவ்வொரு முனைப்பான கருத்தும் இன்றையக் காலக்கட்டத்தில் களம் அமைப்பதற்குக் கருவியாகப் பயன்படும். சிங்காரவேலர் மறைந்த போது தந்தை பெரியார்-சுயமரியாதைச் சுடரொளி தமிழ்நாட்டில் வீச ஆரம்பித்த காலத்தில் பக்கத்தில் இருந்த படைத் தளபதிகளில் பெருமைக்குரியவர் தோழர் ம.சிங்காரவேலர். 86 வயது நிரம்பிய கிழப்புலியின் மறைவு கேட்டு திராவிடம் திடுக்கிட்டது அவர் அளித்துப் போன அறிவுக் கருவுலங்கள் திராவிடர் கரங்களை மட்டுமல்ல கருத் தையும் கவின் பெறச் செய்தனவாகும் (16.2.1946) என்று குறிப்பிட்டார்.

பேரறிஞர் அண்ணா, இந்தியாவிலேயே விஞ்ஞான அறிவுக்கலை சம்பந்தமாகவும் பொதுவுடைமை சம்பந்த மாகவும் அதிகம் படித்துப் புரிந்து கொண்டு அந்த அறிவைக் கொண்டு மற்றவர்களுக்கும் அதைப் புரியும்படியாகச் செய்த பெருமைக்குரிய இடத்தில் முன்வரிசையில் முதலிடம் அவருக்கே அளித்தாக வேண்டும். ஏகாதிபத்தியம், மதவாதம் இரண்டுமே முடக்குவாத நோய்தான் சமுதா யத்திற்கு என்பதை அவர் எவருக்கும் அஞ்சாது கூறினார் என்று குறிப்பிட்டார்.  

முடக்குவாத நோய்கள் இந்திய சமுதாயத்தில் பற்றிக் கொண்டுள்ள இந்நேரத்தில் சிங்காரவேலரின் சிந்தனை யைப் பரப்ப வேண்டியது ஒவ்வொரு இனமான உணர்வுள்ள தமிழரின் கடமையாகும்.

(சிங்காரவேலர் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்வு 19.10.2018 அன்று சென்னைப் பல்கலைக்கழக மெரினா வளாகத்தில் தமிழ் இலக்கியத் துறையின் சார்பில் நடைபெற்ற சிங்காரவேலர் 159 பிறந்த நாள் விழாவாக நடைபெற்றது. இவ்விழாவில் சிங்காரவேலர் அறக்கட்ட ளையின் சார்பில் புலவர் ப.வீரமணி வரவேற்புரை நிகழ்த்தினார். இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் திரு.சீதாராம் யெச்சூரி சிங்காரவேலரின் கருத்துகளை இக்காலக்கட்டத்தோடு ஒப்பிட்டு ஒரு சிறந்ததொரு உரையை நிகழ்த்தினார். இந்நிகழ்விற்கு பேராசிரியர் மு.நாகநாதன் தலைமை தாங்கினார். தமிழ் இலக்கியத் துறைத்தலைவர் பேராசிரியர் ஒப்பிலா.மதிவாணன் நன்றியுரை நிகழ்த்தினார். இக்கட்டுரை பேராசிரியர் மு.நாகநாதன் 2018இல் நடைபெற்ற சிங்காரவேலைர் அறக்கட்டளைச் சார்பாக ஆற்றிய உரையின் கருத்துச் சுருக்கமாகும்).

Pin It