காரல் மார்க்சு 1818ஆம் ஆண்டு மே 5ஆம் நாள் செருமனி (பிரஷ்யா) நாட்டில் டிரியர் எனும் சிறிய நகரத்தில் பிறந்தார்

காரல் மார்க்சு தன் பள்ளிப்படிப்பின் இறுதித் தேர்வில், எதிர்காலப் பணியைத் தேர்வு செய்வது குறித்து ஒரு இளைஞனின் சிந்தனைகள் எனும் தலைப்பில் எழுதிய கட்டுரையில் “மனித குலத்தின் பெருமைக்காகப் பாடுபடக்கூடிய ஒரு வேலையைத் தீர்மானித்துக் கொண்டால், எவ்வளவு சுமைகளும் நம்மை வளைத்துவிடாது. ஏனெனில் அவை யெல்லாம் அனைவருக்குமான தியாகங்கள். நமக்குக் கிடைக்கப் போகிற மகிழ்ச்சியோ எல்லையற்றது; கஞ்சத்தனமில்லாதது; அகங்கார மற்றது. நமது மகிழ்ச்சி கோடானுகோடி மக்களுக்குச் சொந்தமானது. நமது சாதனைகள் நீடித்து நிற்கும்; என்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கும். உன்னதமான மனிதர்கள் வடிக்கும் கண்ணீரால் நமது சாம்பல் கழுவப்படும்” என்று எழுதினார். ஆழ்ந்த கருத்துகளைக் கவிதை நடையில் எழுதும் ஆற்றல் காரல் மார்க்சுக்குப் பள்ளிப் பருவத்திலேயே அமைந்து விட்டது.

karl marx 450 copyமார்க்சு எழுதிய இக்கட்டுரையும் மற்றும் ஆறு கட்டுரைகளும் இன்றும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

டெமாக்ரிடஸ் மற்றும் எபிகூரசு ஆகியோரின் இயற்கை பற்றிய தத்துவத்தில் வேறுபாடு எனும் தலைப்பில், மார்க்சு தன் முனைவர் பட்டத்துக்கான ஆய்வுக் கட்டுரையை எழுதினார். டெமாக்ரிடஸ், எபிகூரசு இருவருமே நாத்திகர்கள். ஆயினும் டெமாக்ரிடசைவிட எபிகூரசின் ஆய்வும், தத்துவமும் உயர்ந்தவை என்பது மார்க்சின் மதிப்பீடாகும். இக்கட்டுரையில் எபிகூரசை, கீழ்க்குறித்துள்ள லுக்ரிடசின் புகழ் மொழிகளை மேற்கோள் காட்டி மார்க்சு பாராட்டியுள்ளார். “பிணம் போல் கனத்த மதத்தின் சுமை தாங்காமல் மனிதக் கண்ணுக்கும் புலப்படாதபடி மனித வாழ்வு முட்டிபோட்டு ஊர்ந்தது. முரண்டு பிடித்த தனது ஊனக் கண்களைக் கிரேக்கத்தின் ஒரு மனிதன் உயர்த்தினான். முதலில் முதுகெலும்பை நிமிர்த்தினான். துணிவோடு எதிர்கொண்டான். கடவுள்கள் பற்றிய கதைகள் அவனை நொறுக்கவில்லை. வானத்தின் மின்னல் ஒளியும் இடியும் அவனை அசைக்கவில்லை. அவனது காலடியில் மதம் வீழ்ந்து நசுங்கியது. அவனது வெற்றியால் நாமெல்லாம் வானமளவுக்கு உயர்ந்தோம்”.

1841 ஏப்பிரல் 15 அன்று ஜெனா பல்கலைக் கழகம் காரல் மார்க்சுக்கு முனைவர் பட்டம் வழங்கியது. அப்போது மார்க்சுக்கு அகவை 23. ரைன்லாந்து பகுதியின் தலைநகரான கொலோனில் 1842இல் ரைனிஷி ஷெய்டுங் என்ற நாளேடு தொடங் கப்பட்டது. 1842 மே மாதம் அதில் பத்திரிகைச் சுதந்தரம் பற்றி மார்க்சு நீண்ட கட்டுரை எழுதினார். அக்கட்டுரையில், "வாழ்வதற்கும் எழுதுவதற்கும் மனிதன் சம்பாதிக்க வேண்டும் என்பது உண்மையே. ஆனால் சம்பாதிப்பதற்காகவே அவன் வாழவோ, எழுதவோ கூடாது. எழுத்தாளனுக்கு அவனது எழுத்து ஒரு கருவி அல்ல. அது தன்னளவிலே முடிந்த ஒரு இலக்கு. தேவைப்பட்டால், எழுத்து உயிர்த்திருப்பதற்காகத் தனது உயிரையும் தியாகம் செய்வான்” என்று எழுதினார். அதன்படியே தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார்.

1842இல் அந்நாளேட்டின் ஆசிரியரானார். பிரடெரிக் எங்கெல்சு இங்கிலாந்தில் இந்நாளேட்டின் நிருபராக இருந்து செய்திகளையும் கட்டுரைகளையும் அனுப்பி வந்தார். மார்க்சும், எங்கெல்சும் நேரில் சந்திப்பதற்கு முன்பே, இந்த நாளேட்டின் மூலம் இருவரும் அறிமுகமாகியிருந்தனர். ‘ரைனிஷி ஷெய்டுங்' நாளேட்டிற்கு நான்கு மாதங்களே மார்க்சு ஆசிரியராக இருந்தார். அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகத் திறனாய்வு செய்ததால், அரசு அந்நாளேட்டை வெளியிடுவதற்குத் தடை விதித்துவிட்டது.

1843 சூன் 19 அன்று காரல் மார்க்சும் ஜென்னியும் திருமணம் செய்து கொண்டனர். ஏழு ஆண்டுகளுக்கு மேலான இவர்களின் காதல் திருமணத்தில் முடிந்தது. அப்போது மார்க்சின் அகவை 25. ஜென்னியின் அகவை 29. பிரஷ்யாவில் (செருமனி) இருந்து கொண்டு பத்திரிகை நடத்த முடியாது என்பதால், பாரிசு நகரிலிருந்து அர்னால்டு ரூகே என்பவருடன் இணைந்து புதிய பத்திரிகை நடத்துவதற்காக, மார்க்சும் ஜென்னியும் 1843 அக்டோபரில் பாரிசில் குடியேறினர். 1844 சனவரியில் ஜெர்மன்-பிரெஞ்சு வருடாந்திர ஏடு என்ற பெயரில் இரட்டை இதழாக வெளிவந்தது. இதன் ஆசிரியர்கள் அர்னால்டு ரூகே - காரல் மார்க்சு என அட்டையில் குறிக்கப்பட்டிருந்தது. இம்முதல் இதழே இறுதி இதழாகவும் அமைந்து விட்டது. பிரஷ்ய அரசு (ஜெர்மன்) தனது நாட்டுக்குள் இப்பத்திரிகை நுழையத் தடை விதித்தது. மேலும் மார்க்சு தன் சொந்த நாடான பிரஷ்யாவுக்குள் நுழைந்தால் கைது செய்ய ஆணை பிறப் பித்தது. ஜெர்மன்-பிரெஞ்சு வருடாந்திர ஏடு இதழில் மார்க்சு, ஹெகலின் உரிமையின் தத்துவம் பற்றிய விமர்சனத்திற்குப் பங்களிப்பு: ஓர் அறிமுகம் என்ற கட்டுரையை எழுதியிருந்தார். 13 பக்கங்கள் கொண்ட அக்கட்டுரையில் தான் மார்க்சின் புகழ்பெற்ற - மதம் மக்களுக்கு அபின் எனும் சொற்கோவை இடம்பெற்றுள்ளது. அதன் முழுமையான பத்தி கீழே தரப் பட்டுள்ளது.

“மதத்திற்கு எதிரானப் போராட்டம் என்பது அந்த மதம் எனும் ஆன்மீக வாசனையைக் கொண்டுள்ள உலகத்திற்கு எதிரான மறைமுகப் போராட்டமே! மத ரீதியான துன்பம் என்பது உண்மையான துன்பத்தின் வெளிப்பாடே - உண்மையான துன்பத்துக்கு எதிரான கண்டனமே. மதம் என்பது; ஒடுக்கப்பட்ட சீவனின் பெருமூச்சு; இதயமற்ற உலகின் இதயம்; ஆன்மநேய மற்ற சூழல்களின் ஆன்மநேயம். அது மக்களுக்கு அபின். மக்களின் கற்பிதமான இன்பம் என்கிற மதத்தை ஒழிக்க உண்மையான இன்பத்தைக் கொண்டுவர வேண்டியுள்ளது. நடப்புச் சூழல்கள் பற்றிய மாயைகளைக் கைவிடச் செய்ய, அந்த மாயைகளைத் தாங்கி நிற்கும் சூழல்களைக் கைவிடச் செய்ய வேண்டியுள்ளது. ஆகவே மதம் மீதான விமர்சனம்என்பது மதம் எனும் ஒளி வட்டத்தைக் கொண்ட கண்ணீர் வாழ்வு பற்றிய முதல் விமர்சனமாகும்”.

மதம் நீடித்திருப்பதற்கான அடிப்படைச் சூழலை மாற்றாமல் மதத்தை ஒழிக்க முடியாது என்கிற இம் மாபெரும் கருத்தை, மார்க்சு தன் 26ஆம் அகவையில் கண்டறிந்தார் என்பது பெருவியப்புக்குரியதாகும். மேலும், இதே கட்டுரையில் மார்க்சின் மற்றொரு புகழ்பெற்ற மேற்கோளும் இடம் பெற்றுள்ளது: ஒரு பௌதிக சக்தியானது இன்னொரு பௌதிக சக்தியாலேயே தூக்கி எறியப்படும். ஆனால் சித்தாந்தமும் கூட ஒரு பௌதிகச் சக்தியாக மாறும் -எப்போது எனில், அது மக்கள் திரளைக் கவ்விப் பிடிக்கும் போது. தத்துவத்துக்கும் நடைமுறைக்கும் இடையிலான தொடர்பையும், தத்துவம் மனிதர்களின் வழியாக மாபெரும் பௌதிகச் சக்தியாக மாறும் என்கிற பேருண்மையையும் மார்க்சு இதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மார்க்சைவிட 14 ஆண்டுகள் மூத்தவரான பாயர் பாக் என்பவர், 1841இல் கிறித்துவத்தின் சாரம் என்கிற நூலை வெளியிட்டார். பொருள் முதல்வாத அடிப்படையில் பாயர்பாக் அந்நூலில் மதத்தை விமர்சனம் செய்திருந்தார். இந்நூலை மார்க்சு வரவேற்றார். ஆயினும் பாயர்பாக் தர்க்க அடிப்படையில்­சிந்தனை அடிப்படையில் மட்டுமே மதத்தை விமர்சனம் செய்திருப்பதை மார்க்சு உணர்ந்தார். பாயர்பாக்கின் தத்துவம் நடைமுறையிலிருந்து விலகி கற்பனை உலகில் நிற்பதால் பயன்படாது என்று எண்ணினார். 1844இல் பாரிசில் இருந்தபோது பாயர் பாக்கின் நூல் பற்றிய தன் கருத்துகளைக் குறிப்பேட்டில் இரத்தினச் சுருக்கமாய் எழுதினார். இதுவே பாயர்பாக் பற்றிய சூத்திரங்கள் எனப்படுகிறது. இதன் 1ஆம் சூத்திரத்தில் “தத்துவ ஞானிகள் பல வகையிலும் உலகை விளக்கி இருக்கிறார்கள். நாம் செய்ய வேண்டியது என்னவோ அதை மாற்றுவதுதான்” என்று எழுதி இருந்தார். இக்குறிப் பேட்டை மார்க்சு இறந்தபிறகே எங்கெல்சு கண்டெடுத்தார்; 1888இல் இதை நூலாக வெளியிட்டார். மார்க்சின் கல்லறையில் இந்தச் சொற்றொடர் மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது.

பிரஷ்ய அரசின் நெருக்குதல் காரணமாக 1845ஆம் ஆண்டு மார்க்சு குடும்பம் பாரிசிலிருந்து வெளியேற வேண்டும் என்று பிரான்சு அரசு ஆணையிட்டது. அதனால் மார்க்சு குடும்பம் பெல்ஜியத்தின் தலைநகரான பிரஸ்ஸெல்ஸ் நகரில் குடியேறியது. நடப்பு அரசியல் பற்றி மார்க்சு எழுத்து வடிவில் ஏதும் வெளியிடக் கூடாது என்கிற நிபந்தனையின் பேரில்தான் அந்நாட்டில் அவர் தங்க அனுமதிக்கப்பட்டார்.

இவ்வுலகம் கடவுளால் படைக்கப்பட்டது. கடவுளால் படைக்கப்பட்ட பொருள்களும் உயிரினங்களும் அவை தோன்றிய காலம் முதலாக மாறாமல் நிலைபெற்று இருக்கின்றன என்று மத வாதிகளும் கருத்து முதல் வாதிகளும் கூறிவந்தனர். இதை மறுத்து செருமானிய தத்துவ அறிஞரான ஹெகல் (1770-1830) இவ்வுலகிலும் -இப்பேரண்டத்திலும் உள்ள எல்லாப் பொருள்களும் இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் இருக்கின்றன. பொருள்களின் இயக்கத்திற்கு அப்பொருள் களுக்குள் பொதிந்துள்ள எதிரெதிர் ஆற்றல்களே -முரண்பாடே காரணம். உலகில் எந்தவொரு பொருளும் தனித்து இருப்ப தில்லை. எல்லாப் பொருள்களும் ஒன்றையொன்று சார்ந்து நின்று இயங்குகின்றன என்று அறிவியல் அடிப்படையில் ஆராய்ந்து அறிவித்தார். இந்தக் கோட்பாடுதான் இயக்கவியல் எனப் படுகிறது. இதுவே மார்க்சியத்தின் அடிப்படையாகும். எனவேதான் ஹெகல் இயக்கவியலின் தந்தை எனப்படுகிறார்.

ஹெகலின் கோட்பாட்டை மார்க்சு, எங்கெல்சு உள்ளிட்ட எண்ணற்ற இளைஞர்கள் தீவிரமாக ஆதரித்தனர். இவர்கள் இளம் ஹெகலியர் என அழைக்கப்பட்டனர். ஆனால் மார்க்சின் ஆய்வுநோக்கு விரிவடைந்த பின், உயர்ந்த படைப்புகளை உருவாக்குவதற்கு அடிப்படையாக இருப்பது மனிதனின் சிந்தனையே என்கிற ஹெகலின் முடிவை மார்க்சு எதிர்த்தார். ஹெகல் இயக்கவியலைத் தலைகீழாக நிறுத்தியுள்ளார். அதை நேராக மாற்றுவதே நம் வேலை என்று மார்க்சு கூறினார்.

ஆனால் மற்ற இளம்ஹெகலியர்கள்,ஹெகல் கூறியுள்ளதே சரி என்று கூறி, ஹெகலைத் தலைமேல் வைத்துக் கொண்டாடினர். எனவே இளம் ஹெகலியரின் தத்துவ நிலைபாடுகளுக்கு எதிராக1845நவம்பரில்மார்க்சும்எங்கெல்சும் இணைந்து, ஜெர்மானிய சித்தாந்தம் என்ற நூலை எழுதினர். ஆனால் எங்கெல்சின் இறப்புக்குப் பின்னரே, இந் நூலின் சில பகுதிகள் வெளிவந்தன. முழுமையான வடிவில் நூலாக 1930களில் சோவியத் கம்யூனிஸ்டு கட்சியால் வெளியிடப்பட்டது. இந்த நூலில்தான் மார்க்சியத்தின் பிழிவான வரிகளாகத் திகழும் உணர்வு வாழ்நிலையைத் தீர்மானிப்பதில்லை; வாழ்நிலைதான் உணர்வைத் தீர்மானிக்கிறது எனும் வரிகள் இடம் பெற்றுள்ளன.

இந்திய சமூகத்தில் இந்திய மார்க்சியர்களும், மற்றவர்களும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே கூறப்பட்டிருப்பது போன்ற - நூற்பா (சூத்திரம்) போன்ற - ஒரு கருத்தை மார்க்சும் எங்கெல்சும், செருமானிய தத்துவம் நூலில் எழுதியுள்ளனர்:

“ஆளும் வர்க்கத்தின் சிந்தனைகளே ஒரு யுகத்தை ஆளும் சிந்தனைகளாக உள்ளன. ஆளும் வர்க்கம் என்றால் அது சமுதாயத்தின் பொருளியல் சக்தியை மட்டுமல்லாது அறிவுச் சக்தியையும் ஆளுகிறது. பொருள் உற்பத்திக்கான காரணங்களைத் தன் கட்டுக்குள் வைத்திருக்கிற வர்க்கமானது, அதன் காரணமாகவே அறிவு உற்பத்திக்கான காரணங் களையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இந்தச் சாதனங் களைக் கொண்டிராதவர்களின் சிந்தனைகள் இதற்குப் பொதுவாகவே அடங்கிப் போய்விடுகின்றன”.

இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அறிவுச் சக்தியை ஆளும் வர்க்கமாகப் பார்ப்பனர்களே இருந்து வந்துள்ளனர். வருணாசிரம-சாதிய அமைப்பின் காரணமாகப் பார்ப்பனர்கள் சமூகத்திலும் மதம் தொடர்பானவற்றிலும் பெற்றிருந்த ஏகபோக உரிமையால் சமூகத்திற்கான கருத்துரு வாக்கம் செய்யும் மூலகர்த்தாக்களாக விளங்கினர். உற்பத்திச் சக்திகளிலும் உற்பத்தி உறவுகளிலும் வரலாற்றில் ஏற்பட்ட மாற்றங்களால் பார்ப்பனர்களின் ஏகபோக உரிமைகளில் பிறப்பால் அறிவிலும் தகுதியிலும் உயர்ந்தவர் என்ற நிலைமையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை. முதலாளிய உற்பத்தி முறை மேலோங்கிய பிறகும், இதே நிலை தான் நீடிக்கிறது.

ஏனெனில் உற்பத்திச் சக்திகளிலும் உற்பத்தி உறவுகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்ற அதே வேகத்தில், அச்சமூகத்தின் சித்தாந்தத்தில் மாற்றங்கள் நிகழ்வதில்லை. இதற்கெனத் தனியாக, தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டாலன்றி, பழைய சமூகத்தின் சித்தாந்த ஆதிக்கமே தொடர்ந்து நீடிக்கும். “இந்தியாவில் பாரசிகர், ஹுணர், குஷானர், துருக்கியர், ஆங்கிலேயர் முதலான அயல்நாட்டவர்களின் படையெடுப்பும், ஆட்சிகளும் ஏற்பட்ட பிறகும், இந்தியாவில் பார்ப்பனியச் சித்தாந்தமே சமூகத்தை ஆட்டிப் படைக்கிறது. உற்பத்தி உறவுகளில் ஏற்பட்ட மாற்றத்தின் வேகத்திற்கு ஈடான வகையில் சமூகச் சிந்தனையில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்ற குறிக் கோளுடன் சீனாவில் 1965இல் மாசேதுங் கலாச்சாரப் புரட்சியை நடைமுறைப்படுத்தினார்.

செய்தி ஏடுகள், தொலைக்காட்சி, கணினி போன்ற நவீன ஊடகங்கள் வாயிலாக ஆளும்வர்க்கம் தன் இருத்தலுக்கான நியாயத்தை மக்கள் நெஞ்சங்களில் பதியச்செய்து வருகிறது. இந்தியா அரை நிலப்பிரபுத்துவ - அரை முதலாளித்துவ நாடாக இருப்பதால், பார்ப்பனர்கள் ஊடகங்கள் வாயிலாகத் தங்கள் கருத்தியலை, சாதி அமைப்பை, தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருகின்றனர். 1847இல் புருதோன் என்பவர் வறுமையின் தத்துவம் என்ற நூலை எழுதினார். முதலாளித்துவம் பற்றிய பொருளாதார விதிகள் என்பவை நிலையானவை; மாற்ற முடியாதவை என்று புருதோன் அந்நூலில் அறுதியிட்டுக் கூறியிருந்தார். அந்நூலின் கருத்தை மறுத்து, மார்க்சு, தத்துவத்தின் வறுமை என்ற நூலைப் பிரெஞ்சு மொழியில் எழுதினார். ஏனெனில் புருதோன் அவருடைய நூலைப் பிரெஞ்சு மொழியில் எழுதியிருந்தார்.

பொருளாதார விதிகள் என்பவை வரலாற்று ரீதியாக உருவானவை. மனிதனின் தேவைகளின் பொருட்டே புதிய கண்டுபிடிப்புகளும் உற்பத்திச் சாதனங்களும் தோன்றி வருகின்றன. இந்த வளர்ச்சியின் நிகழ்வுப் போக்கின் ஊடாகச் சமுதாயம் மாறுகிறது. உற்பத்திச் சக்திகளையும் உற்பத்தி உறவுகளையும் அடிக்கட்டுமானமாகக் கொண்டுள்ள சமுதாயத்தில், அவற்றுக்கு ஏற்ப, மேல்கட்டுமானமாக உள்ள அரசியல், சட்டம், தத்துவங்கள் முதலானவற்றில் மாறுதல்கள் ஏற்படுகின்றன என்று மார்க்சு பதில் அளித்தார்.

இலண்டனில் இருந்த நீதியாளர் கழகம் என்பது 1847 முதல் கம்யூனிஸ்டுக் கழகம் என்ற பெயரில் இயங்கியது. கம்யூனிஸ்டுக் கழகத்தின் வேண்டுகோளை ஏற்று மார்க்சும் எங்கெல்சும் இதில் இணைந்தனர். புதிய பெயருக்கு ஏற்ற தன்மையில் கட்சியின் கோட்பாடுகளை வகுக்கும் பொறுப்பு மார்க்சு, எங்கெல்சு இருவரிடமும் ஒப்படைக்கப்பட்டது. இவர்கள் உருவாக்கிய 23 பக்க அறிக்கை கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை என்ற பெயரில் 1848 பிப்பிரவரியில் இலண்டனில் வெளியிடப்பட்டது. உலகையே உலுக்கிய இந்த அறிக்கையை எழுதிய போது மார்க்சின் அகவை 30; எங்கெல்சுக்கு 28 அகவை. இதுநாள் வரையிலுமான சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறேயாகும் எனும் வரியுடன் தொடங்கும் கம்யூனிஸ்டு அறிக்கையில், நிலவுடைமை உற்பத்தி முறையிலிருந்து முதலாளிய உற்பத்தி முறைக்கு மாறியுள்ளதால், சமூகத்தில் உற்பத்தி உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், முதலாளித்துவத்தின் இயக்கப் போக்கு மற்றும் அதன் சுரண்டல் வடிவங்கள் குறித்து நெஞ்சைக் கனலாக்கும் நடையில் எழுதப்பட்டுள்ளது.

“அஞ்சி நடுங்கட்டும் ஆளும் வர்க்கங்கள் - கம்யூனிசப் புரட்சி வருகிறதென்று; பாட்டாளிகள் இழப்பதற்கு ஏதுமில்லை ­தங்கள் அடிமைச் சங்கிலிகளைத் தவிர! ஆனால் அவர்கள் வெல்வதற்கோ அனைத்து உலகும் இருக்கிறது”.

எனவே உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற அறைகூவலுடன் முடியும் கம்யூனிஸ்டு அறிக்கை உலகம் முழுவதும் உழைக்கும் மக்களிடையே புரட்சிக் கனலை மூட்டியது. முதலாளிகளிடையே பெரும் அச்சத்தை ஊட்டியது. கம்யூனிஸ்டு அறிக்கையில், தான் புதியதாகக் கூறியுள்ள கோட்பாடு குறித்து மார்க்சு வெய்டெமை யருக்கு 1852 மார்க்சு 3ஆம் நாள் எழுதிய மடலில் அவருக்கே உரிய அறிவு நாணயத்துடன் எழுதியுள்ளார்.

“என்னைப் பொறுத்தவரை நவீன சமுதாயத்தில் வர்க்கங்கள் இருக்கின்றன என்பதையோ, அவற்றிற்கு இடையே போராட்டம் நடக்கிறது என்பதையோ கண்டுபிடித்த பெருமை என்னைச் சேராது. எனக்கு வெகுகாலத்திற்கு முன்னரே இந்த வர்க்கப் போராட்டத்தின் வரலாற்று வளர்ச்சியை முதலாளித்துவ வரலாற்றாளர்கள் விரிவாகக் கூறியிருக்கிறார்கள். அதேபோன்று இந்த வர்க்கங்களின் பொருளாதார உள்கட்டமைப்பை முதலாளித்துவப் பொருளாதாரவாதிகள் விவரித்து விட்டார்கள். நான் செய்துள்ள புதிய பங்களிப்பு 1. இந்த வர்க்கங்களின் இருப்பு என்பது உற்பத்தி வளர்ச்சியின் குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதாகும். 2. வர்க்கப் போராட்டமானது அவசியமான வகையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்கிறது. 3. அந்தச் சர்வாதிகாரமும் அனைத்து வர்க்கங்களையும் ஒழித்த, ஒரு வர்க்கமற்ற சமுதாயத்திற்கான இடைக்கால ஏற்பாடாகவே இருக்கும்”.

கம்யூனிஸ்டு அறிக்கையை செருமனி,பிரெஞ்சு, ஆங்கிலம், இத்தாலி, பிளமிஷ், டேனிஷ் ஆகிய ஆறு மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியிடத் திட்டமிட்டனர். 1848 பிப்பிரவரியில் செருமன் மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. நாற்பது ஆண்டுகள் கழித்து - மார்க்சு மறைந்த பிறகு, 1888இல் தான் ஆங்கில மொழியில் வெளிவந்தது. சமதர்ம அறிக்கை என்ற பெயரில் பெரியார் 1931இல் குடிஅரசு ஏட்டில் கம்யூனிஸ்டு அறிக்கையை வெளியிட்டார். அய்ந்து வாரங்கள் ஒரு தொடராக அது வெளிவந்தது. முதலாளிகளும் பட்டாளிகளும் எனும் முதல் அத்தியாயம் மட்டுமே வெளியானது. ப.ஜீவானந்தம் இதை மொழிபெயர்த்தார்.

கம்யூனிஸ்டு அறிக்கையை குடிஅரசில் வெளியிட்ட போது பெரியார் எழுதிய அறிமுக உரையில், “உலகில் சமதர்ம உணர்ச்சிக்கு விரோதமான தன்மையில் எல்லா நாடுகளிலும் பணக்காரன்-ஏழை, முதலாளி-தொழிலாளி என்கிற வேற்றுமை மட்டுமே இருக்கின்றன. ஆனால் இந்தியாவிலோ இவற்றுடன் கூட உயர்ந்த சாதி-தாழ்ந்த சாதி என்கிற ஏற்றத்தாழ்வு முதன்மையானதாகவும், இந்தத் தத்துவத்துக்குக் கோட்டை யாகவும் இருந்து வருகிறது” என்று எழுதினார்.

சமதர்மம் வருவதற்கு-வர்க்க ஒர்மை ஏற்படுவதற்குத் தடையாக உள்ள வருணாசிரம-சாதி அமைப்பைத் தகர்க்க வேண்டியது முதன்மையான வேலை என்று பெரியார் தன் வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தி வந்தார்.

1849 ஆகஸ்டு மாதம் மார்க்சு இலண்டனில் குடியேறினார். அதன்பின், இறுதி வரை இலண்டனிலேயே வாழ்ந்தார். 1851 முதல் இலண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியம் நூலகத்தில் தொடர்ந்து பல ஆண்டுகள் படித்தார். 1853இல் அமெரிக்காவின் நியூயார்க் டெய்லி டிரிபியூன் ஏட்டிற்கு மார்க்சு இந்தியாவைப் பற்றி 11 கட்டுரைகள் எழுதினார். இலண்டனில் படித்தவற்றின் அடிப்படையில் இந்தியாவின் நிலையை மார்க்சு தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். இதோ, ஓர் எடுத்துக்காட்டு: “இந்துஸ்தானத்தில் கொலையே ஒரு தெய்வச் சடங்காயிற்று. இதை நாம் மறக்கக் கூடாது. இந்தச் சிறு சமூகங்கள் சாதி வேறுபாடுகளாலும் அடிமை முறையாலும் களங்கமடைந் திருந்தன. மனிதனைச் சூழ்நிலைக்கு எசமானன் ஆக்குவதற்குப் பதிலாக, அவனை அதற்கு அடிமைப்படுத்தின. சமூக நிலையை ஒருபொழுதும் மாறாத இயற்கை விதியாகச் செய்தன. இயற்கையையே மனிதன் கும்பிட்டு வணங்கும் மிருகத்தன மான நிலைமை ஏற்படுத்தப்பட்டது. இயற்கையின் எசமான னாகிய மனிதன் குரங்காகிய அனுமன் முன்பும் பசுமாட்டின் முன்பும் தெண்டனிட்டு வணங்கியதில் இந்தச் சிறுமை காட்சியளித்தது. இவற்றை நாம் மறக்கக் கூடாது”.

1857 மற்றும் 1858இல் நியூயார்க் டெய்லி டிரிபியூன் ஏட்டிற்கு சிப்பாய்க் கலகத்தை மய்யப்படுத்தி மார்க்சு 18 கட்டுரைகளும், எங்கெல்சு 10 கட்டுரைகளும் எழுதினர். மார்க்சு எழுதிய முதல் கட்டுரையில், ரோமாபுரியின் பிரித்தாளும் கொள்கை எனும் சக்தி வாய்ந்த ஆயுதத்தைக் கடைப்பிடித்தே பிரிட்டன் ஏறக்குறைய 150 ஆண்டு காலமாக இந்திய சாம்ராச்சியத்தைத் தந்திரமாகத் தனது பிடியில் வைத்திருக்கிறது.பகைமைகள் நிறைந்த பல்வேறு இனங்கள், குலங்கள், சாதிகள், சமயங்கள், அரசுகள் ஆகியவற்றை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கின்ற பூகோள ஒற்றுமையைத் தான் இந்தியா என்று அழைக்கின்றோம் என்று எழுதியுள்ளார்.

1858இல் மார்க்சு அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பு என்ற நூலை எழுதினார். இந்நூலுக்கு 1859இல் மார்க்சு ஒரு முன்னுரை எழுதினார். இந்நூலைவிட இந்த முன்னுரை புகழ்பெற்றதாகி விட்டது. அந்த முன்னுரையில் மார்க்சியத்தின் சாறாக உள்ள ஒரு மேற்கோளைப் படியுங்கள்: “மனிதர்கள் தங்களது சமூக வாழ்வை நடத்திச் செல்லும் பொழுது சக மனிதர்களுடன் சில திட்டவட்ட மான உற்பத்தி உறவுகளை மேற்கொள்கிறார்கள். அந்த உறவுகள் தவிர்க்க முடியாதவை. இவர்களின் ஆணைக்கு அடங்காதவை. அந்த உற்பத்தி உறவு களின் கூட்டு மொத்தமே சமுதாயத்தின் பொருளாதாரக் கட்டமைப்பாக -உண்மையான அடித்தளமாக அமைகிறது. இந்த அடித்தளத்தின் மீதே ஒரு சட்டபூர்வ மற்றும் அரசியல் மேற்கட்டுமானம் எழுகிறது. அதற்கேற்ற திட்டவட்டமான சமூக உணர்வுகளும் தோன்றுகின்றன. பொருள் உற்பத்தி வாழ்வு முறையே பொதுவாக சமூக, அரசியல், அறிவுபூர்வ வாழ்வு முறையினை நெறிப்படுத்துகிறது. மனிதனின் உணர்வு நிலை மனிதனின் வாழ்நிலையைத் தீர்மானிக்கவில்லை. மனிதனின் வாழ்வு நிலையே மனிதனின் உணர்வு நிலையைத் தீர்மானிக்கிறது”.

மனிதகுல வரலாற்றைப் பொருள் முதல்வாத அடிப்படை யில் விளக்கும் மார்க்சின் இந்நூல் வெளி வந்த 1859ஆம் ஆண்டில், சார்லஸ் டார்வின் எழுதிய இயற்கைத் தேர்வின் மூலமாக உயிரினிங்களின் தோற்றம் எனும் நூலும் வெளிவந்தது. மார்க்சின் வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கோட்பாட்டுக்கு டார்வினின் நூல் அரண்சேர்ப்பதாக அமைந்தது. 1867 செப்டம்பர் 14 அன்று மார்க்சின் பேருழைப்பால் உருவாக்கப்பட்ட மூலதனம் நூலின் முதல் பகுதி வெளியிடப் பட்டது. முதலாளிய உற்பத்தி முறையில் மூலதனத்தை உருவாக்குவதிலும் பெருக்குவதிலும் அச்சாணியாகச் செயல்படும் உபரி மதிப்பை ஆய்ந்தறிந்து கூறியதே மார்க்சின் இரண்டாவது மாபெரும் பங்களிப்பாகும். அய்ரோப்பிய நாடுகளின் பொருளாதார நிலைமைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மூல தனத்தின் முதல் பாகத்தை மார்க்சு எழுதினார். தன் சிந்தனயை மேலும் விரிவுபடுத்துவதற்காக அமெரிக்காவின், இரஷ்யாவின் பொருளாதாரம் குறித்த எண்ணற்ற நூல்களைப் படித்தார். விரிவான குறிப்புகளை எழுதினார். ஆனால் இவற்றை நூல் வடிவில் எழுதுவதற்குள் 1883 மார்ச்சு 14 அன்று அவர் மறைந்தார். மனிதகுலத்தின் ஒரு தலை குறைந்தது. ஆனால் நம் தலைமுறையின் மிகச்சிறந்த தலை அது என்று எங்கெல்சு கூறினார்.

மூலதனத்தின் இரண்டாம் பாகம் என்று எழுத மார்க்சு திட்டமிட்டிருந்ததை, எங்கெல்சு இரு பகுதிகளாகப் பிரித்து இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என்று வெளியிட்டார். இரண்டாம் பாகம் 1885ஆம் ஆண்டிலும், மூன்றாம் பாகம் 1894ஆம் ஆண்டிலும் வெளியிடப்பட்டன. உண்மையில் இரண்டாம், மூன்றாம் பாகங்களை மார்க்சும் எங்கெல்சும் இணைந்து எழுதினார்கள் என்றே கருத வேண்டும்.

வெவ்வேறு நாடுகளில் நிலவும் சமூகச் சூழல்களுக்கு ஏற்பவே மார்க்சியத்தைக் கட்டமைக்க வேண்டும் என்பதை மார்க்சியத்தின் மூலவர்களான மார்க்சும் எங்கெல்சும் வலியுறுத்தியுள்ளனர். இலெனினும் மாவோவும் இக்கருத்துக்கு மேலும் செழுமை சேர்த்துள்ளனர். இந்தியாவின் சமூக உற்பத்தியிலும் உறவிலும் சாதி அமைப்பு திட்ட வட்டமான முறையில் செயல்படுகிறது என்பதைக் கருத்தில் கொண்டு, இன்றைய ஏகாதிபத்தியச் சூழலில் மார்க்சியத்தை மறுகட்டமைப்புச் செய்ய வேண்டிய வரலாற்றுக் கடமை நம்முன் உள்ளது.

- க.முகிலன்