செட்ரிக் ராபின்சன் (1940-2016)

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கறுப்பின ஆய்வுத் துறை, அரசியல், விஞ்ஞானம் ஆகிய துறைகளில் பணிபுரிந்த பேராசிரியர். போர்க்குணம் கொண்டவர். கறுப்பின மார்க்சியம் (Black Marxism) என்ற அறிவுத் துறையை உருவாக்கி வளர்த்தவர். 2001 ஆம் ஆண்டில் ‘மார்க்சியத்தின் ஒரு மானுடவியல்’ (An Anthropology of Marxism) என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அவரது நூல் 2022 ஆம் ஆண்டில் தமிழில் மொழிபெயர்ப்பாகி சென்னை, நியூ செஞ்சுரி பதிப்பகத்தால் பிரசுரிக்கப்படுகிறது.

உலக நாடுகளின் பொதுவான வரலாற்றை மார்க்சும் ஏங்கெல்சும் இனக்குழுப் பொதுஉடமைச் சமூகம், அடிமைச் சமூகம், நில உடமைச் சமூகம், முதலாளியச் சமூகம், சோசலிச-கம்யூனிச சமூகம் என ஐவகைச் சமூக அமைப்புகளாகப் பகுத்துக் காட்டினர். 19-20ஆம் நூற்றாண்டுகளில் உலகம் பெரும்பாலான நாடுகளில் முதலாளியத்தின் செல்வாக்கின் கீழ் வந்து சேர்ந்தது. உலக நாடுகள் பண்டைக் கால வரலாற்றைத் தாண்டி, முதலாளியத்தினுள் நுழைந்து, வளர்ச்சி அடைந்த முதலாளியமாக முதிரும்போது சோசலிசப் புரட்சியை எட்டும் பக்குவத்தை அடையும் என்று மார்க்சும் ஏங்கெல்சும் கணக்கிட்டனர். வேறு வார்த்தைகளில் சொல்லுவதானால், தொழிலாளர் வர்க்கத்தின் பேருலகு ஆகிய சோசலிசம் தோன்ற இருப்பதை முன்னறிவிப்பது முதலாளிய சமுதாயம் என்பதை மார்க்சின் ‘மூலதனம்' நூல் எடுத்து காட்டியது. வரலாற்றுப் போக்கில் சோசலிசத்தின் முன்நிபந்தனை முதலாளியம் என்று மார்க்சியம் கூறியதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

cedric robinson“சோசலிசப் புரட்சியை முதலாளியம் முன்னறிவிக்கிறது” என்ற சொற்களை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். கூர்மையான போராட்டக் குணம் கொண்ட வர்க்கங்கள், வளர்ச்சியடைந்த எந்திரத் தொழிலைக் கொண்ட உற்பத்தி சக்திகள், சமூகப் புரட்சிக்கான அகவய, புறவய நெருக்கடிகள் எனப் பலவகைச் சூழல்கள் பொருந்தி வரவேண்டும். இன்னும் நாம் எதிர்நோக்காத பல காரணிகள் ஒன்றுபட்டு புரட்சிக்கான சூழல்கள் மிகை நிர்ணயம் (Overdetermination) ஆகிவரும் என்று பின்னாட்களில் இது குறித்து மார்க்சியர்கள் எழுதினர்.

ஆயின், முதலாளியத்திற்கு முந்திய சமூக அமைப்புகளிலேயே சோசலிசம் தோன்றுவதற்கான சூழல்கள் அமைந்திருந்தன என்று செட்ரிக் ராபின்சன் வாதிட்டார். மத்திய கால (இடைக்கால, medieval) ஐரோப்பிய சமூகங்களிலேயே வணிகர்கள், வட்டிக்கடைக்காரர்கள், நிலப்பிரபுக்கள், கத்தோலிக்க சர்ச் அதிகாரிகள் ஆகியோருக்கு எதிரான எதிர்ப்பாளர்கள் உருவாகியிருந்தனர் என்று செட்ரிக் ராபின்சன் கண்டறிந்து கூறுகிறார். ஃபிரான்சிஸ்கன், அனபாப்டிஸ்ட் மற்றும் ஜெசூயீட் (ஏசுசபைத்) துறவிகள் ஏற்றத்தாழ்வான சர்ச் கட்டமைப்பைத் தீவிரமாக விமர்சித்து வந்தனர். ஆன்மிக சமத்துவ சிந்தனைகளால் மேட்டிமைத் துறவிகளின் அதிகார முறைமைகள் விமர்சிக்கப்பட்டன. கான்ட், ஹெகல், அரிஸ்டாட்டில் ஆகியோரின் சனநாயகச் சிந்தனைகள் முன்னுக்குக் கொண்டுவரப்பட்டன. இடைக்கால சோசலிச அறவியலில் வேர்கொண்டிருந்த சமத்துவ சிந்தனைகள் புதிதாக முன்னுக்கு வந்தன.

செட்ரிக் ராபின்சனின் கருத்துப்படி, நவீன எந்திர யுகத்தின் வருகைக்கு வெகுகாலத்திற்கு முன்னதாகவே கருத்தளவில் சோசலிசம் குறித்த சிந்தனைகள் உருவாகிவிட்டன என செட்ரிக் ராபின்சன் எடுத்துக்காட்டுகிறார். கருத்து நிலையைத் தாண்டி செயல்பாட்டை நோக்கி நகர்ந்து சென்று கிறித்தவ அமைப்புகள் தொழில்பட்டன என்பதை அவர் எடுத்துக் காட்டினார். விவசாயிகள் பெருந்திரளாக ஒன்றுபட்டு, நில உடமையை எதிர்த்து நின்ற சந்தர்ப்பங்கள் உண்டு. 13-16 ஆம் நூற்றாண்டுகளில் காத்திரமான விவசாயிகளின் எழுச்சிகள், தொடர் இயக்கங்களாக ஐரோப்பிய நாடுகளில் நிகழ்ந்தன. இவற்றைக் கற்பனாவாத சோசலிசம் எனப் புறக்கணித்தல் கூடாது. நவீன காலம், தொழில்யுகம், முதலாளியம் ஆகியவற்றிற்கு பெரிதும் முந்தியது சோசலிசம் என்று செட்ரிக் ராபின்சன் எழுதுகிறார். சோசலிசத்தின் தோற்றுவாய் குறித்த பூர்வீக வரலாற்றை ராபின்சன் மீட்டுருவாக்கம் செய்கிறார்.

ராபின்சனின் இடைக்கால சோசலிசம் கீழ்க்கண்ட வரலாற்று அனுபவங்களைத் தன்னுள் சுவீகரித்துக் கொண்டுள்ளது.

1.            கிறித்தவ சமயம், ஆரம்ப கால அடிமைகளின் வாழ்க்கை அனுபவங்களைத் தன்னில் பிரதிபலிப்பது. அடிமைகளின் விடுதலை ஏக்கங்கள் அதன் எதிர்பார்ப்புகளாக அமைந்தன.

2.            கிறித்தவ அறம் கிறித்தவ சிந்தனையின் அடிப்படையாக அமைந்திருந்தது.

3.            கிறித்தவ மக்களின் விடுதலை உணர்வு, கிறித்தவத்தின் சமூகவியல், மனிதநேயம் ஆகியன இடைக்கால சிந்தனையை உருவாக்கின.

நில உடமைக்கும் சர்ச்சுக்கும் எதிரான போராட்டங்களைத் தாண்டி, அடிமைப்படுத்தப்பட்ட கறுப்பின மக்களின் போராட்டங்கள் பற்றியும் செட்ரிக் ராபின்சன் எழுதுகிறார். இடைக்கால கிறித்தவத்தில் எந்த அளவுக்கு ஏற்றத்தாழ்வுகள் பெருகினவோ, அதே அளவுக்கு அக்காலச் சமூக அமைப்பில் கறுப்பின அடிமைகள் எண்ணிக்கையில் அதிகமாக இடம்பெற்றிருந்தனர். படிப்படியாக அவர்களின் வர்க்க உணர்வும் விழிப்படைந்தது. இடைக்கால மக்களின் போராட்டங்களுக்கு அவையே அடிப்படையாக அமைந்தன. எனவே, முதலாளியம் போன்ற ஒரு முழுச் சமூக அமைப்பு தோன்றி சோசலிசத்திற்கு முன்னறிவிப்பாக அமைந்திருக்க வேண்டிய அவசியம் உருவாகி இருக்கவில்லை. அதனை ஈடுகட்டக்கூடிய சமூக அறவியல் செட்ரிக் ராபின்சனுக்குப் பின்புலமாக அமைந்திருந்தது. அது கறுப்பின மக்களின் உணர்வு நிலைக்குப் பொருந்திய வடிவுக்கு ஏற்ப அமைந்து போயிற்று.

cedric robinson book***

செட்ரிக் ராபின்சனின் இடைக்கால சோசலிசம் பற்றிய எதிர்பார்ப்புகள் தமிழில், குறிப்பாக பழந்தமிழில் கனிந்த சோசலிசம் பற்றிய சித்திரங்களை நினைவுக்குக் கொண்டு வருகின்றன. ஐரோப்பாவில் கிறித்துவ பின்புலத்தில், அல்லது அதற்கு முன்னதாகவே பழங்குடிச் சமூகங்களில் உருவான சோசலிசக் கனவுகள் பழந்தமிழ் இலக்கியங்களிலும், காப்பியங்களிலும் சித்திரிக்கப்பட்ட காட்சிகளை நினைவுக்குக் கொண்டு வருகின்றன. சங்க இலக்கியங்களும் ஐம்பெரும் காப்பியங்களும் நம் கண்முன் விரிகின்றன. சீத்தலைச் சாத்தனார் உருவாக்கிய ‘மணிமேகலை' காப்பியம் இவற்றுள் முதல் வரிசையில் நிற்கிறது. மணிமேகலை காப்பியம் சில குறிப்பிடத்தக்க விடயங்களில் சிறப்பாகக் கூறத்தக்கது.

1.            மணிமேகலை காப்பியம் ஒரு பௌத்த நூல். பௌத்தமும் சமணமும் அத்தனைப் பழங்காலத்தில் மனித உயிர் (பிற உயிர்கள்) குறித்த தனித்த இயக்கம் கண்ட சிந்தனைப் போக்குகள். உயிர்களைக் கொல்லக்கூடாது, உயிர்களை வதைக்கக்கூடாது, உயிர்களின் மீது அதிகாரத்தை, ஆதிக்கத்தை செலுத்தக் கூடாது என்பது சமணபௌத்தங்களின் அடிப்படை நிலைப்பாடு. சொல்லிலும் செயலிலும் எண்ணத்திலும் வன்முறை கூடாது என்பது பண்டைத் தமிழ்.

2.            பழந்தமிழ் காப்பியங்கள் உயிர்களுக்கு உணவிடுவதை முதற் கடமையாக அறிவிக்கின்றன. ஒரு காப்பியத்தின் மையப் பிரச்சினையாக உணவு/பசி என்பதை வரையறை செய்யும் மெய்ம்மையும் நேர்மையும் மணிமேகலை காப்பியத்திற்கு அமைந்திருக்கிறது. தத்துவம் என்றால் மெய்ப்பொருள் காண்பது எனில் இந்த இலக்கணத்தை மணிமேகலை முதலிடத்தில் கைப்பற்றுகிறது. பசி என்பதை தத்துவத்தின் முதல் பிரச்சினையாக அறிவிக்கும் யோக்கியதை தமிழுக்கு இருந்திருக்கிறது.

3.            பிரபஞ்சம் தழுவிய அளவில் உயிர்களின் பன்முகத்தன்மையை, ஒற்றுமையை, அவற்றின் பரஸ்பர தொடர்பை-உறவை மணிமேகலை முன்வைக்கிறது. உயிர்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வை, வருண வேறுபாட்டை, அப்படி ஒரு சனாதன (நிரந்தர) ஏற்பாட்டை சமணமும் பௌத்தமும் ஏற்கவில்லை.

4.            நீதி, நெறி, ஒழுக்கம், அறம் என்ற வகைப்பட்ட விழுமியங்களின் மீது சமணமும் பௌத்தமும் கட்டமைக்கப்பட்டுள்ளன. அறத்தின் மீது சமணமும் பௌத்தமும் கட்டப்பட்டன. சாதி வெறியும் வெறுப்பும் அவற்றுக்கு அடிப்படையாகவில்லை. சமத்துவ அறம் உடமை உணர்வுகளைவிட ஆற்றலுடையது என்பது தமிழ் அறம்.

செட்ரிக் ராபின்சனும் சீத்தலைச் சாத்தனாரும் கார்ல் மார்க்சுடன் உரையாடல் நடத்தும் அற்புதமான தருணங்கள் இவை. ஆப்பிரிக்கப் பழங்குடி உணர்வுகளுடன் மார்க்ஸ் உரையாட முடியும் என்று எடுத்துக் காட்டுகிறார் செட்ரிக் ராபின்சன். சாத்தனாருடனும் புத்தருடனும் மார்க்ஸ் உரையாட முடியும் என்பதையும் நாம் உய்த்துணர முடிகிறது. கால எல்லைகளைத் தாண்டி நாம் பயணப்பட முடிகிறது.

- ந.முத்துமோகன்

Pin It