அண்மையில் ‘வழக்கறிஞர் பி.வி.பக்தவச்சலம் - வாழ்வும் பணியும்’ என்ற குறுநூல் வெளியிடப்பட்டுள்ளது. பி.வி.ப-வின் மணிவிழா மலராக வந்த செங்கோல் இதழ்க் கட்டுரைகளில் இருந்து செய்திகளைத் தொகுத்து இக்குறு நூலைத் தயாரித்தவர், கரிசல் எழுத்தாளர்களில் ஒருவரும் பி.வி.ப-வின் மைத்துனருமான சூரியதீபன் எனும் பா.செயப்பிரகாசம். சென்னை பெரியார் திடலில், பி.வி.ப. குடும்பத்தினர் நடத்திய பி.வி.பக்தவச்சலம் நினைவேந்துதல் நிகழ்ச்சியில் இந்தக் குறுநூலை பழ.நெடுமாறன் வெளியிட்டார். தமிழகத்தின் குறிப்பிடத்தக்க தேசிய ஆற்றல்களும் ஜனநாயக ஆற்றல்களும் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்.
 
இக்குறுநூல் வெளியிடப்படுவது பற்றியோ, அதில் உள்ள செய்திகள் பற்றியோ பி.வி.ப-வின் மூத்த அண்ணனும் ம.உ.க-வில் பி.வி.ப. தலைவராக இருந்த போது பொதுச் செயலராக இருந்து ஒன்றாகப் பணியாற்றியவருமான தோழர்.வே.இராமானுசத்திடம் பா.செயப்பிரகாசம் தெரிவிக்க வில்லை. பி.வி.ப-வின் இளமைக் காலம் பற்றியும், அரசியல் வாழ்க்கை பற்றியும் அவரால் மட்டுமே சொல்ல முடியும் என்றிருந்தும்கூட இதனை முற்றாகத் தவிர்த்துக் கொண்டார் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம். தோழர் பொ.வே. இராமானுசத்தைக் கலந்து ஆலோசிக்காமலேயே வெளியிடப்பட்ட இந்தக் குறுநூல், உண்மைகளைக் கொண்டில்லாமல் தவறான செய்திகளுடன் வந்திருப்பதை வெளிப்படுத்திய தோழர் பொ.வே.இராமானுசத்தின் விமர்சனங்களுடன், ‘புரட்டுகளாலும் வரலாற்றுத் திருட்டுகளாலும் புனையப்பட்ட ஒரு பொய்மாலை’ என்ற வெளியீட்டை த.நா.மா.லெ.க. வெளியிட்டுள்ளது.
.
பி.வி.ப. மனித உரிமைகளுக்குப் போராடிய ஒரு வழக்கறிஞர்; அவரது மூத்த சகோதரர் தோழர் பி.வி.இராமானுசத்தால் மார்க்சியத்துக்கும், மார்க்சிய இயக்கத்துக்கும் வென்றெடுக்கப்பட்டவர்; த.நா.அ.கு. என்றிருந்து, பின்னர் த.நா.மா.லெ.க-வாக மாறிய கட்சியின் ஆதரவாளராக இருந்தவர்; ஒரு வழக்கறிஞராக மட்டுமின்றி போலீஸ் அடக்குமுறைகளுக்கு எதிராகக் கிளர்ச்சியூட்டும் பேச்சாளராக இருந்தவர்; இவை காரணமாக கட்சியின் மக்கள் திரள் அமைப்பான மக்கள் உரிமைக் கழகத்தின் தலைவராகக் கட்சியால் அறிவிக்கப்பட்டவர்.
 
1970களில் மா.லெ. புரட்சியாளர்களின் மீது அரசு கடும் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்ட நிலையில், இவற்றை அம்பலப்படுத்துவதற்கான அமைப்புகளாக மா.லெ. இயக்கங்கள் உரிமை அமைப்புகளைத் தொடங்கின. தமிழகத்திலும் அவ்வாறே 1976-77இல் கட்சியால் தொடங்கப்பட்ட அமைப்பே மக்கள் உரிமைக் கழகம். மா.லெ. புரட்சியாளர்கள் மற்றும் அரசியல் கைதிகள் மீதான அடக்குமுறைகளை அம்பலப்படுத்தும் இயக்கங்கள் தொடக்கத்தில் ம.உ.க. பெயரில் மேற்கொண்ட கட்சி, 1981க்குப் பிறகு பொதுவாக ஜனநாயக உரிமை மற்றும் குடியுரிமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பரப்புரை வேலைகள் ம.உ.க. பெயரில் செய்தது. 1983இல் பாசிச எதிர்ப்பு அரசியல் திட்டமொன்றை கட்சி வகுத்துக் கொண்ட பின், ம.உ.க. பெயரில் அத்திட்டத்தை மக்கள் நடுவில் பரவலாகப் பல்வேறு வடிவங்களில் பரப்புரையாக மேற்கொண்டது. 1988இல் உழவர், தொழிலாளர், இளைஞர், மாணவர், மகளிர் அமைப்புகளைத் தொடங்கியவுடன், அரசியல் அரங்க வேலைகளுக்கு பாசிச எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பும் கட்சி தொடங்கியது. 1988க்குப் பின் ம.உ.க-வை உரிமைகள் அரங்கில் மட்டும் செயல்படும் அமைப்பாக மாற்றியது.
 
கட்சி தலைமறைவாக இருந்தது, மக்கள் நடுவிலான வேலைகளை குறிப்பிட்ட காலம் ம.உ.க. பெயரிலேயே மேற்கொண்டதும், பெயரளவுக்குத்தான் என்றாலும் பி.வி.ப-வே ம.உ.க. தலைவராக முன்னிறுத்தப்பட்டதும், வெளியில், பி.வி.ப.தான் ம.உ.க-வை உருவாக்கி செயல்படுத்தியவர் என்பது போலவும், ம.உ.க-வை மட்டுமல்ல, அதன் பின்னணியில் உள்ள கட்சியையும் உருவாக்கி செயல்படுத்தியவர் என்பது போலவும் ஒரு பொய்த்தோற்றம் உருவாகக் காரணமானது. உண்மையில் ம.உ.க.வின் கொள்கைகளையோ, அமைப்பு முறைகளையோ, வேலைத் திட்டங்களையோ உருவாக்குபவராகவோ, செயல்படுத்துபவராகவோ அவர் என்றும் இருந்ததில்லை. இவை அனைத்தும் கட்சியால் தீர்மானிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன. பி.வி.ப-வைப் பொறுத்தவரை ஒரு சொற்பொழிவாளராகவும், இயக்கம் சார்ந்த வழக்குகளில் ஒரு வழக்கறிஞராகவும், கட்சியால் நடத்தப்பட்ட வெகுமக்கள் இயக்கங்களில் பங்கேற்ற எண்ணற்ற தோழர்களில் ஒருவராகவும் மட்டுமே இருந்தார். மேலும் கட்சியிலும் அவர் ஆதரவாளராகத்தான் இருந்தாரே அன்றி முழுத்தகுதி பெற்ற அடிப்படை உறுப்பினராகக் கூட இருந்ததில்லை.
 
கட்சி சில காலம் தேக்கமுற்றபோது, வற்றிய குளத்தை விட்டு வளமான குளம் நோக்கிப் பறந்து செல்லும் பறவைபோல, எம்.எல்.ஏ., எம்.பி. பதவி ஆசையுடன், புதிய தமிழகம் கட்சிக்குத் தாவி ஓடினார். அந்நாள் வரை தன்னுடைய சாதியை வெளிப்படுத்தாமலும் தன்னுடைய பிள்ளைகளுக்கு எல்லாம் சாதி, மதம் இல்லை என்று கூறி பள்ளியில் சேர்த்தது பற்றி பெருமிதமாகப் பேசிக் கொண்டும் இருந்த பி.வி.ப., புதிய தமிழகத்தில் சேர்ந்ததும் பி.வி.பக்தவச்சல ரெட்டியாராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். ரெட்டி ஓட்டுகளைத் தேடி வீதி வீதியாக அலைந்தார்; ரெட்டி சாதி சங்கங்களுக்கு ஏறி இறங்கினார். இவ்வாறு ஆதிக்கச் சாதி அடையாளத்துடன் சீரழிந்து போனார்.
 
உண்மைகள் இவ்வாறு இருக்க, ‘பி.வி.ப. வாழ்வும் பணியும்’ குறுநூல், பி.வி.ப. பற்றி பொய்யான பிம்பத்தைக் கட்டமைக்க முயல்கின்றது..
 
1936இல் பிறந்த பி.வி.ப-வை, சிறுவயதிலேயே மேதையாக இருந்தார் என்று காட்டுவதற்காக, 1943இல், ஏழு வயதில், ஆறாம் வகுப்பில் (முதல் படிவம்) சேர்க்கப்பட்டதாக இக்குறுநூல் கூறுகிறது. அதே நூல் வேறு ஒரு பக்கத்தில் பி.வி.ப. 13 வயதில் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார் என்று முரண்பாடாகக் கூறுவது வேறொரு செய்தி.
 
பி.வி.ப. சிறுவயது முதலே சுதந்திரப் போராட்ட வீரராக இருந்தார் என்று காட்டுவதற்காக, முதல் சுதந்திரத் தினத்தன்று அவர் ஊரில் பி.வி.ப. கொடி ஏற்றியதாகக் குறுநூல் கூறுகிறது. உண்மையில் அன்று கொடி ஏற்றியவர் அந்த ஊர் தியாகி நரசிம்மராஜூலு என்பவர். அப்போது 11 வயது பி.வி.ப. அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
 
வறுமைச் சூழலில் பி.வி.ப. துயரங்கள் அனுபவித்து சுயமுயற்சியில் படித்ததாகவும், படிப்பைத் தேடி பெங்களூர் ஓடிப் போனதாகவும் குறுநூல் சித்தரிக்கின்றது. உண்மையில் பி.வி.ப-வின் அப்பா நிலபுலங்களுடன் இருந்தவர்; நில அடமான வங்கியில் வேலையும் பார்த்து வந்தவர். வறுமைத் துயரத்தில் பி.வி.ப. உழன்றதாக குறுநூல் காட்டும் செய்தி தவறானது. அவரது அப்பாவும் குடும்பத்தினரும் தொடர்ந்து எந்தத் தடையும் இன்றி படிக்க வைத்தனரே அன்றி அவரே தானாகப் படித்தார் என்பது தவறு. பெங்களூருக்கு அவர் ஓடியது படிப்பைத் தேடி அல்ல. அவர் செய்த தவறுக்கு அவர் அம்மா திட்டியதாலேயே அவர் பெங்ளூருக்கு ஓடினார்.

பி.வி.ப-வின் ‘வறுமையைக்’ காட்டுவதற்காக அவர் அப்பாவுக்கு நிலம் இல்லை என்று பொய் கூறும் அந்தக் குறுநூல், இன்னொரு பக்கத்தில் அவர் அப்பா நிலங்களுடன் இருந்த உண்மையை ஒப்புக் கொள்கிறது. எந்த இடைவெளியும் இன்றி, அவர் அப்பா படிக்க வைத்தார். குறுநூலோ 1951இல் ஏழாம் வகுப்பிலும், 1952இல் எட்டாம் வகுப்பிலும் சேர்க்கப்பட்டதாக கூறிவிட்டு 1951க்கும் 1952க்கும் இடையில் இல்லாத இரண்டாண்டுகளில் பி.வி.ப. படிப்பு, வறுமை காரணமாக தடைபட்டதாக நம்பச் சொல்கிறது.
 
பள்ளியில் படிக்கும் போதே பெண்கள் விரும்பக் கூடியவராக அவர் இருந்தார் என்று சித்தரிக்க, ஆம்பூர் பள்ளியில் அவருடன் படித்த மாணவிகள் பி.வி.ப-க்கு கடிதங்கள் எழுதியதாகவும், அதனால் பி.வி.ப. பள்ளியை விட்டு நீக்கப்பட்டதாகவும், இதற்கு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தாகவும் குறுநூல் கூறுகிறது. மாணவிகள் கடிதம் எழுதினால் எதற்காக பி.வி.ப-வை பள்ளிய விட்டு நீக்க வேண்டும்? உண்மையில் பி.வி.ப-தான் தவறாக நடந்து கொண்டார். அதனால் ஆசிரியர்களும் பெற்றோர்களும் பி.வி.ப-வை பள்ளியில் இருந்து நீக்கும்படி கோரினர். அதன் காரணமாக பி.வி.ப. பள்ளியில் இருந்து, தலைமை ஆசிரியரின் நல்லெண்ணம் காரணமாக, மாற்றுச் சான்றிதழ் கொடுத்து நீக்கப்பட்டார்.
 
நிலப்பிரபுத்துவக் குடும்பத்தில் பிறந்து நிலப்பிரபுத்துவ அடக்குமுறைகளைக் கண்டு கொதித்து கம்யூனிஸ்டாக மாறினார் என்று சித்தரிப்பதற்காகவே, ஒரே ஒரு ஊரின் மணியக்காரராக இருந்து, ஜமீன்தாரின் நடவடிக்கைகளை எதிர்த்து மக்களோடு இணைந்து போராடிய அவரது தாத்தாவை, ஏழு ஊர் மணியக்காரராகவும், கொடிய நிலப்பிரபுவாகவும் இக்குறுநூல் ஆக்கிவிட்டது.
 
அயராது உழைத்து தொழிற் சங்கங்கள் கட்டிய தொழிற் சங்கத் தலைவர் பி.வி.ப. என்கிறது குறுநூல். உண்மையில் இ.பொ.க. கட்சியில் இருந்த போது அக்கட்சித் தோழர்களுடன் இணைந்து 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் கட்டி அவற்றின் செயலராக இருந்தவர் பி.வி.ப-வின் மூத்த அண்ணன் தோழர் பொ.வே.இராமானுசம்தான். வழக்கறிஞராகவும், பேச்சாளராகவும் இருந்ததால் பி.வி.ப-வை அச்சங்கங்களுக்குத் தலைவராகவும், சட்ட ஆலோசகராகவும் நியமித்திருந்தனர். பி.வி.ப. எந்த ஒரு தொழிற் சங்கத்தையும் கட்டியதில்லை.
 
பி.வி.ப-வை வீரதீர சாகசக்காரராகக் காட்டுவதற்கு 1980களில் தருமபுரியில் மா.லெ. புரட்சியாளர்கள் மீது போலீஸ் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்ட காலத்தில் பி.வி.ப. வீட்டைக் கொளுத்த போலீஸ் முயற்சித்ததாகவும், அதில் அவர்கள் தோற்றுப் போனதாகவும் ஒரு கற்பனையை இக்குறுநூல் திகில் நாவலைப் போல விவரிக்கின்றது. உண்மையில் போலீஸ் அடக்குமுறைகளைப் பற்றி விசாரிப்பதற்காக, திருப்பத்தூரில் தங்கியிருந்த உண்மை அறியும் குழுவினரைத்தான் தேவாரம் தலைமையிலான போலீஸ் ரௌடிகள் கடுமையாகத் தாக்கினர். இதனை மறந்துவிட்டு கற்பனையாக ஒரு நிகழ்வை இக்குறுநூல் விவரிக்கிறது. கதையைச் சொல்லும் பரவசத்தில் தாக்கப்பட்ட குழுவில் இல்லாத சுவாமி அக்னிவேஷை அங்கு இருந்ததாகக் கூறுகிறது; பி.வி.ப-வின் சித்தப்பா மகன் மைத்துனர் என்று கூறுகிறது.
 
ம.உ.க-வை பி.வி.ப. கட்டினார், பெரிய போராட்டங்கள் நடத்தினார், அதிகப்படியான பணிகள் மூலம் இயக்க வளர்ச்சிக்கு வழி செய்தார், புதிய வடிவங்களில் மக்களிடம் சென்றார், மாநாடு நடத்தினார் என்றெல்லாம் இக்குறுநூல் பொய்யுரைக்கிறது அதற்கும் மேல், கட்சி கட்டிய உழவர் அமைப்பையும், இளைஞர் அமைப்பையும் பி.வி.ப. கட்டியதாகக் கூறுகிறது. பு.இ.மு. பெயரில் கட்சி நடத்திய “ஈழ அகதிகளை வெளியேற்றாதே! ஈழப்போராளிகளை இழிவுபடுத்தாதே!” (1991) இயக்கத்தையும் உலகத் தமிழ் மாநாட்டை ஒட்டி ஜெ அரசை அம்பலப்படுத்திய இயக்கத்தையும் (1995) பி.வி.ப. நடத்தி சிறை சென்றதாகக் கூறுகிறது. தேசிய விடுதலைப் புரட்சி என்ற முடிவை கட்சி எடுத்தபின், அதன் ஆதரவாளராக இருந்த பி.வி.ப. அந்த முடிவை ஆதரித்தார் என்ற உண்மையை மறைத்து பி.வி.ப-வே சொந்தமாக தேசிய இனப்பிரச்சனையில் முடிவெடுத்து இயக்கத்தில் முன்னெடுத்தது போலக் காட்டுகிறது.
 
மொத்தத்தில் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் தொகுத்து வெளியிட்டுள்ள இக்குறுநூல், பி.வி.ப., சிறுவயதில் இருந்தே சுதந்திரப் போராட்ட வீரராக இருந்து, வறிய குடும்பத்தில் கஷ்டப்பட்டுப் படித்து வக்கீலாகி, நிலப் பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்து நிலப்பிரபுத்துவ கொடுமைகளைக் கண்டு கொதித்து கம்யூனிஸ்டாக மாறி, தொழிலாளர்களை அமைப்பாக்கி தொழிற்சங்கத் தலைவராகி, ம.உ.க-வைக் கட்டி முன்னெடுத்த தலைவராகி, இறுதியில் உழவர், இளைஞர் அமைப்புகளைக் கட்டியும், மா.லெ. இயக்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியும், தேசிய விடுதலை குறித்த அரசியல் முடிவுகளை எடுத்தும், மா.லெ. கட்சிக்கே தலைவராக இருந்தவர் என்ற ஒரு பொய் பிம்பத்தைக் கட்டமைக்க முயற்சிக்கிறது.

அதுமட்டுமல்லை, படிப்பைத் தேடி பெங்களூருக்கு ஓடிப் போகையில் உண்டியலை உடைத்து ஒரு ரூபாயை மட்டும் எடுத்துச் சென்ற உத்தமர், மாணவிகளெல்லாம் பி.வி.ப-க்கு கடிதம் எழும் அளவு பெண்களால் விரும்பப்பட்ட ஒழுக்க சீலர், போலீஸ் தீ வைத்துக் கொளுத்த முயன்றும் அதற்கு ஒத்துழைக்க மறுத்ததன் மூலம் சமூக விரோதிகள் கூட நேசித்த மாமனிதர் என்று மிகவும் கவனமாக ஜமுக்காளத்தில் பொய்களை வடித்து பி.வி.ப-வுக்கு ஒளிவட்டம் தீட்ட முயல்கிறது; புதிய தமிழகம் கட்சியில் சேர்ந்த கடைசிப் பத்தாண்டுகளில் அவர் பக்தவச்சல ரெட்டியார் என்ற ஆதிக்க சாதி அடையாளத்துடன் எம்.பி., எம்.எல்.ஏ. பதவி ஆசையுடன் அலைந்து திரிந்தார் என்ற உலகறிந்த உண்மையைக் கூட தலித் ஆதரவு என்ற முகமூடி போட்டு மறைக்கப் பார்க்கிறது.
 
இந்தக் குறுநூலுக்கு நம்பகத்தன்மை கொடுப்பதற்காக பிரபலமானவர்களை அழைத்து, விழா நடத்தி, அதில் பிரபலமானவர்களைக் கொண்டு நூலை வெளியிடும்படி செய்துவிட்டார் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம். அந்த பிரபலமானவர்களும் ஒரு பிரபல எழுத்தாளர் சொல்வதாலேயே அது உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்பி நூலை வெளியிட்டு விட்டனர்.

அதன் பின் முற்போக்கு ஊடகங்கள் ஒவ்வொன்றுக்கும் தானே இக்குறுநூலைக் கொடுத்து அது பற்றி எழும்படி கேட்டுக் கொண்டார் பா.செயப்பிரகாசம். ஒரு பிரபலமான எழுத்தாளர் நூலைத் தந்து அதைப் பற்றி எழும்படி கேட்கிறார், அந்த நூலை பிரபலமானவர்களே வெளியிட்டுள்ளனர் என்ற பின்புலத்தில் இருந்து இந்த நூலில் சொல்லப்பட்ட செய்திகள் உண்மைதான் என்று மயங்கி ஏமாந்து போயின பல இதழ்கள். மிக மேலோட்டமான பார்வையில் கூட பல முரண்பாடுகள் பல்லிளிக்கும் இந்தக் குறு நூலைப் படித்தவர்கள் 'நெஞ்சுருகச் செய்யும் நூல்’ என்றும், ‘சமூகப் போராளிகள் படிக்க வேண்டிய வரலாற்றுக் கருத்தோவியம்’ என்றும், ‘திருக்குறள் போல மிகச் சுருக்கமாக அடக்கி அளிக்கப்பட்ட நூல்’ என்றும், ‘பி.வி.ப-வை மிக நேர்த்தியாக அறிமுகப்படுத்தும் தொகுப்பு’ என்றும், ‘பல தளங்களில் செயல்பட்டு தனிமுத்திரை பதித்த பி.வி.ப.வின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்க நூல்’ என்றும், இன்னும் பலவாறு வியந்து அறிமுகம் செய்தன; இக்குறுநூலில் இருந்து பல கதைகள் எடுத்தும் எழுதின. 

எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் கட்டமைத்த பி.வி.ப. பற்றிய பொய்பிம்பம் அம்பலப்படுத்தப்பட்ட பின் கூட தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல் தான் செய்தது சரிதான் என்று ஞாயப்படுத்தும் முயற்சிகளையே மேற்கொண்டு வருகிறார் பா.செயபிரகாசம். இக்குறுநூல் வெளியிடப் பட்டதும் இது பற்றி பொ.வே.இராமானுசம் கேட்டபோது, ‘அவசரமாக வெளியிடப்பட்டது’ என்று மழுப்பலாகவும் ‘பி.வி.ப. கயிறு ஏற்றியதாகத்தானே உள்ளது, கொடியேற்றியதாக இல்லையே’ என்று குதர்க்கமாகவும் பதில் அளித்தார் பா.செயப்பிரகாசம்.

இதே காலத்தில் கோவையில் மதிவாணன் என்ற நபரின் மூலம், பி.வி.ப-வை ம.உ.க-வின் தலைவராகவும் கட்சியின் தலைவராகவும் சித்தரித்து, கடைசி வரை வக்கீலாக தொழில் பார்த்துக் கொண்டிருந்த பி.வி.ப-வைப் பார்த்து பலர் போராட்ட வீரர்களாகவும் முழுநேர ஊழியர்களாகவும் இயக்கத்துக்கு வந்தனர் என்றும், அவர் இறுதி வரை தமிழ்த் தேசிய விடுதலை இலட்சியத்திற்குப் பாடுபட்டார் என்றும், இப்போது அவர் குடும்பம் அந்த இலட்சியத்திற்காகப் பாடுபட்டு வருகிறது என்றும், அதற்கு எல்லோரும் நிற்க வேண்டும் என்றும் பல நகைச்சுவைகளுடன் ஒரு துண்டறிக்கையை வெளியிட்டு அதன் அடிப்படையில் ஒரு நினைவேந்துதல் கூட்டத்தை நடத்தவும் ஏற்பாடு செய்தார்.

இந்தத் துண்டறிக்கை தவறானது, இதன் அடிப்படையில் நிகழ்ச்சி நடத்துவது தவறு என்று மதிவாணனிடம் தெரிவிக்கப்பட்டதும் அவர் அதை ஏற்றுக் கொண்டு, அத்துண்டறிக்கையை தான் வெளியிட்ட தவறு என்றும், அதன் அடிப்படயில் தான் நடத்த இருந்த நிகழ்ச்சியை இரத்து செய்வதாகவும் வெளிப்படையாக அறிவித்து, நிகழ்ச்சியையும் இரத்து செய்தார். இதைப் பொறுக்க முடியாமல் கட்சி அராஜகம் செய்வதாகப் புலம்பினார் பா.செயப்பிரகாசம்.

பி.வி.ப. மகள் அஜிதாவிடம், பி.வி.ப. குறித்த நூல் கட்சியின் நடவடிக்கைகளை பி.வி.ப-வின் நடவடிக்கைகளாகக் காட்டும் வரலாற்று திருட்டைச் செய்கிறது என்பதால் அந்த நூலைத் திரும்பப் பெற்று வெளிப்படையாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கட்சி கோரியது. ஆனால் தவற்றைத் திருத்திக் கொள்ள அடாவடியாக மறுத்த அஜிதாவும், எழுத்தாளர் பா.செயப்பிரகாசமும் கட்சி ரௌடித்தனம் செய்வதாக அவதூறுகளில் இறங்கினர்.
 
இதன் பின்பே பா.செயப்பிரகாசம் வெளியிட்ட குறுநூலில் உள்ள தவறுகளைத் தொகுத்து “புரட்டுகளாலும் வரலாற்றுத் திருட்டுகளாலும் புனையப்பட்ட ஒரு பொய்மாலை” என்ற தலைப்பிலான ஒரு வெளியீட்டை த.நா.மா.லெ.க. வெளியிட்டது. ‘பி.வி.ப-வின் வாழ்வும் பணியும்’ அசிங்கமாக நாறிப் போன பின்பும் அது மணம் வீசும் சந்தனம் தான் என்று அடாவடியாக மீண்டும் அதே நூலை, பல்வேறு இதழ்கள் தெரிவித்த மதிப்புரைகளையும் சேர்த்து, இரண்டாவது முறையாக வெளியிட்டுள்ளார் பா.செயப் பிரகாசம்.

தனது பொய்ச் சரக்குக்கு நம்பகத் தன்மை தருவதற்காக, தனது பிரபலத்தைப் பயன்படுத்தி, பிரபலங்களைக் கொண்டு நூலை வெளியிடச் செய்து, தானே இதழ்களுக்குத் தந்து, அதனால் அந்த நூல் உண்மையானது என்று ஏமாந்துபோய் அவை புகழ்ந்து எழுதியவற்றை இரண்டாம் பதிப்பில் சேர்த்துப் போட்டு, இந்த நூல் நம்பகத் தன்மையானது என்பதற்கு அதையே ஆதாரமாகக் காட்ட பா.செயப்பிரகாசம் முயற்சிப்பதை கோமாளித்தனம் என்று சொல்ல கஷ்டமாகத்தான் உள்ளது. நம்ம இதழ்களும், வாசகர்களும், ஜனநாயகச் சக்திகளும் ஏமாளிகள் தான் என்பதில் அவ்வளவு நம்பிக்கை நமது எழுத்தாளருக்கு!
 
முன்னர் வெளியிட்டபோதும் சரி, பின்னர் வெளியிட்ட போதும் சரி, தொகுப்பு தன்னுடையது என்று பொறுப்பேற்கவில்லை இந்த சூத்திரதாரி. இரண்டாவது பதிப்பில் ‘வெளியிட்டோர்’ என்று பி.வி.ப. குடும்பத்தில் இருந்து சிலரின் பெயர்களைப் பிடித்துப் போட்டு, அந்த கூட்டத்துக்குள் தன்னையும் ஒரு ஆளாக மறைத்துக் கொள்ள முயற்சிக்கிறார் பரிதாபமாக. மேலும் குடும்பத்தார் சிலரின் பெயரைப் போட்டதன் மூலம் ம.உ.க-வைக் ‘கட்டியும்’, கட்சியைக் ‘கட்டியும்’, ‘வழிநடத்தி’ மறந்து போன அந்த ‘மாபெரும் தலைவனின்’ பணிகள் பற்றி வெளியிட பி.வி.ப. குடும்பத்தின் ஒரு சிலரை விட்டால் யாரும் இல்லை என்ற உண்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.
 
எப்படியோ, பிரபலம் என்று சொன்னாலே ஏமாந்து போகும் நிலையில்தான் முற்போக்கு ஊடகங்கள் உள்ளன என்பதையும், பிரபலம் என்பதைப் பயன்படுத்தியே பொய்களை வரலாறாக்கும் ஏமாற்று வித்தையில் கைதேர்ந்த எழுத்தாளராக பா.செயப்பிரகாசம் ‘முன்னேறியுள்ளார்’ என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

இ.செந்தில்