ஆத்துப் பொள்ளாச்சி தந்த கவியருவி சிற்பி அகவை தொண்ணூறை நிறைவு செய்துள்ளார். எழுத்து வேந்தன் ஜெயகாந்தன் சிற்பியை ‘கவிஞருள் மகாத்மா’ என்றார். ‘வாழும் கோவை வள்ளுவன்’, ‘கொங்கு தேசத்துக் கம்பன்’, ‘கவிதையாய் வாழும் கவிஞர்’, ‘பாரதிக்குப் பின் சிற்பி’, ‘சொற்களை வைரங்களாகச் செதுக்கும் சிற்பி’, ‘மானுடம் பாடிய வானம்பாடி’ - இலக்கிய உலகம் இப்படி பலவாறு கவிஞர் சிற்பிக்குப் புகழாரம் சூட்டுகிறது.

sirpi 450மொழிபெயர்ப்பு, கவிதை என இரு வகைமைகளிலும் சாகித்ய அகாதமி விருது, தமிழ்நாடு அரசின் பாவேந்தர் விருது மற்றும் கலைமாமணி விருது தொடங்கி, ஒன்றிய அரசின் பத்மஸ்ரீ விருது வரை பல விருதுகள் அவரைத் தேடி வந்தன.

ஆனால் விருதுகளால் பெற்ற பெருமையைத் தலைக்கேற்றிக் கொள்ளாமல், தமிழ்ச் சமூகத்தின் மேன்மைக்கான தனது பன்முகப் பங்களிப்பை அடக்கமாகத் தொடர்ந்து கொண்டிருப்பவர், கவிஞர் சிற்பி.

இதற்கு அடிப்படை அவருள் இயங்கும் மனிதநேயம் என்ற மணிச்சரடு எனலாம்.

“மானிடன் - ஒரு மானிடன் - நல்ல

மானிடன் எனில்...

கானம் பொங்குதடா- தோள்கள்

கனத்து விம்முதடா!”

இந்தப் பார்வையுடன் மனிதகுல மேன்மைக்கு நெறி காட்டிய வள்ளுவரையும், காலந்தோறும் எரியும் கவிதைகளைத் தந்த மகாகவி பாரதியையும், சமத்துவத் தத்துவத்தை உலகிற்கு அளித்த காரல் மார்க்சையும் வியந்து பாராட்டுகிறார், சிற்பி.

“காலத்தின் குரலாகச் சமுதாயத்தின் வாய், காது, கண், நெஞ்சத் துடிப்பாக கலை இலக்கியப் பணிபுரியுங்கள்” எனக் கட்டளையிட்டார் பேராசான் ஜீவா. கவிஞர் சிற்பியிடம் இந்தக் கோட்பாடு இயல்பாகவே ஊறித் திளைத்துள்ளது.

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் கவிஞர் படித்தபோதிருந்த திராவிட இயக்கச் சூழல், மகாகவி பாரதியின் படைப்பு்களைப் படித்து பாரதிக் காதலனாகியது, பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் படிப்பின் போது சகமாணவர் வெ.சண்முகசுந்தரம் மூலமாக மார்க்சிய நூல்கள் அறிமுகம் என சிற்பியின் சமூகப் பார்வை விரிவடைந்து பரந்த மானுடத்தை நேசிக்கும் பரிமாணத்தைப் பெற்றது.

அத்துடன் மார்க்சியத்துடன் கம்பனையும் வள்ளுவனையும் பாரதியையும் இணைத்துக் கொண்டு பொதுவுடைமை, இலட்சிய விதையைத் தமிழ்நாடெங்கும் விதைத்து வந்த பெருமகனாம் ஜீவா அண்ணாமலை நகர் விடுதியில் மாணவர்களோடு தங்கி, திருவேட்களம் திடலில் முழக்கம் செய்ததைக் கேட்டு சமதர்மக் கோட்பாட்டின் வலிமையை உள்வாங்கினார், சிற்பி.

1958 முதல் பொள்ளாச்சி என்.ஜி.எம். கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்து 30 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டே வீரியமிக்க கவிதை நூல்களைப் படைத்துக் கொண்டிருந்த சிற்பி அவர்கள் ஜீவாவின் 'தாமரை'யுடன், ஜீவாவின் எழுத்துக்களையும் பின்தொடர்ந்தார்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தை உருவாக்குவதில் முன்முயற்சி எடுத்த புதுக்கோட்டை சேதுராமன் (அறந்தை நாராயணனின் மாமனார்) ஏற்பாடு செய்த பாரதி விழாவில் ஜீவாவின் தலைமையில் பேசினார் சிற்பி.

ஜீவாவின் மானசீகச் சீடனாக இருந்து வந்த சிற்பி, அவருடன் பெருமன்றத்தில் தீவிரமாகப் பணியாற்ற விரும்பிய கட்டத்தில் பேராசான் 1963 இல் காலமானார்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றத்துடனான தொடர்பை வலுப்படுத்தும் வாய்ப்பாக 1966 இல் பொள்ளாச்சியில் நடைபெற்ற பெருமன்றத்தின் இரண்டாவது மாநாடு அமைந்தது. அதற்கு உரமூட்டும் வகையில் பொள்ளாச்சி தந்த புரட்சியாளர் பாலதண்டாயுதமும், மண்வாசனையுடன் கவிதை படைத்த கே.சி.எஸ்.அருணாசலமும் அந்த மாநாட்டை முன்னின்று வழிநடத்தினர். இந்தியத் திரையுலகின் மகத்தான நடிகர் பால்ராஜ் சஹானி, மலையாள இலக்கிய ஆளுமை தகழி சிவசங்கரன் பிள்ளை, கல்வியாளரும், கேரள கல்வியமைச்சருமான பேராசிரியர் ஜோசப் முன்டசேரி போன்றோர் பங்கேற்ற அந்த மாநாட்டின் பணிகளில் தன்னைப் பிணைத்துக் கொண்டு உழைத்தார் சிற்பி.

தியாகச் செம்மல் பாலதண்டாயுதம் தனக்கு ஓர் ஈர்ப்பு சக்தியாக விளங்கியதைத் தனது நேர்காணலில் சிற்பி பதிவு செய்துள்ளார். தனது வேண்டுகோளை ஏற்று 'எது இலக்கியம்' என்ற தலைப்பில் தோழர் பாலன் பொள்ளாச்சியில் ஆற்றிய உரையை வாழ்நாளெல்லாம் மறக்க முடியாது என்கிறார், சிற்பி. விமான விபத்தில் பாலன் காலமான போது 'பாலன் என் இலக்கிய வழிகாட்டி' என்ற உணர்ச்சிமிகு கவிதை வழியே தனது துக்கத்தை இறக்கி வைத்தார், சிற்பி. “ஆழ்ந்த படிப்பு, எல்லையற்ற துணிவு, மக்கள் நேசம், ஆற்றல் மிக்க உரைத்திறன் இவைகளின் வடிவாக பாலன் என் மனதில் வாழ்கிறார்” என்கிறார் சிற்பி.

பெருமன்றத்தை நிறுவிக் கட்டியமைத்த தொ.மு.சி.ரகுநாதன், நா.வானமாமலை,
கே.சி.எஸ்.அருணாச்சலம், தா.பாண்டியன் ஆகியோருடன் நெருங்கிப் பழகிய பெருமைக்குரியவர் கவிஞர் சிற்பி. இலக்கியப் பேரறிஞர் எஸ்.ராமகிருஷ்ணன், இலக்கிய வணங்காமுடி ஜெயகாந்தன், மார்க்சிய அறிஞர் ஆர்.கே.கண்ணன் ஆகியோரின் பேரன்பையும் ஆழ்ந்த நட்பையும் பெற்றவர் கவிஞர் சிற்பி.

காலஞ்சென்ற குன்றக்குடி அடிகளார் காலந்தொட்டு பெருமன்றத்தின் தலைமைக்குழு உறுப்பினராக அதன் வளர்ச்சியிலும், இயக்க நடவடிக்கைகளிலும் சிற்பி அவர்கள் ஆர்வமுடன் வழிகாட்டிவருவது மிகந்த ஆக்கமும் ஊக்கமும் அளிக்கிறது.

கவிஞர் சிற்பியின் கவிதைப் பயணம் தனித்துவமானது. தமிழ் மரபின் வளமான கூறுகளைக் கைவிடாமல் முற்போக்கான பாதையில் அது பயணித்துள்ளது. மானுடம் பாடும் வானம்பாடி இயக்கத்தின் மூலமாக புதுக்கவிதையை ஜனநாயகப்படுத்தி, சமகாலச் சிக்கல்களைத் தொட்டு, தீர்வுகளை நோக்கித் தூண்டும் கவிதைகளைப் படைக்கும் புத்துலகக் கவிஞர்களுக்குச் சாளரத்தைத் திறந்து விட்டது - வானம்பாடி இயக்கம். அதன் அச்சாணியாக சிற்பி இயங்கினார் என்றால் மிகையாகாது.

இயற்கை மீதான சிற்பியின் காதல் அவர் பிறந்த ஆத்துப்பொள்ளாச்சியின் பசுமைச் சூழலுடன் பிறந்து விடுகிறது. இன்று, கட்டடங்கள், சாலைகள், வளர்ச்சித் திட்டங்கள் என காடுகளும் இயற்கைச் சூழலும் அழிந்து வருவதை வேதனையுடன் சாடுகிறவர் சிற்பி.

சிற்பியின் 'நிலவுப் பூ' தொகுப்பிற்கு அணிந்துரையாக, சிற்பியின் கவிதைகளைப் படித்து 'நாவூறிப் போனேன்' என்றார் பாவேந்தர் பாரதிதாசன். 'நீ எனது பேரன்' என்று சிற்பியின் உச்சி முகந்து முத்தம் தந்தார் பாவேந்தர் என்பது, இப்போது நினைத்தாலும் சிலிர்ப்பூட்டுகிறது.

பாரதி, பாவேந்தர் வழியே சிற்பி பற்றிக் கொண்ட தமிழுணர்வு மிக ஆழமானது. 2007 ஆம் ஆண்டில் தமிழ்க்கல்வி, தமிழ்வழிக் கல்வி கோரி சாகும் வரை உண்ணாநோன்பிருந்த நூற்றுவரில் ஒருவரான சிற்பி, அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இன்னும் நெடுங்கனவாக நீடிப்பதை மனப் பதைப்புடன் கூறி வருந்துகிறார். இந்த உயர்ந்த லட்சியங்களுக்காக உயிர்துறந்திருக்கலாமே என்று நொந்து பேசுகிறார்.

ஒன்றிய அரசின் இந்தித் திணிப்புக் கொள்கையை நிராகரிப்பதுடன், அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க இந்திய நாட்டின் 22 தேசிய மொழிகளும் ஆட்சி மொழிகளாக ஏற்கப்பட சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று பொள்ளாச்சியில் நடைபெற்ற சிற்பி 90 நிறைவு விழாவில் தனது நிறைவுரையில் கவிஞர் சிற்பி பெரும் ஆதங்கத்துடன் கோரிக்கை விடுத்தார்.

பாரதி, தமிழ், இயற்கை, மானுட சமத்துவம் என ஒரு விரிந்த பரப்பில் பயணித்துள்ள, தமிழ்நாட்டின் தவிர்க்கமுடியாத கவிஞராக அங்கீகரிக்கப்பட்டுள்ள, மானிட சமத்துவம் பேணும் சமூகமாக தமிழ்ச் சமூகம் மலர்ந்திட பல்துறைகளிலும் பங்களிப்புகளைச் செய்துள்ள கவிஞர் சிற்பி நலமுடன் நூறாண்டுகள் கடந்து வாழ்ந்திட வாழ்த்துவோம். இத்தகு பேராளுமையைத் தனது தலைமைக்குழுவில் பெற்றுள்ளமைக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் பெருமை கொள்கிறது.

ப.பா.ரமணி,  மாநிலப் பொருளாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்