தலைமைப் பாத்திரங்கள்

தலைமைப் பாத்திரங்கள் “கதைக் கருவிற்கு விளக்கம் தருபவர்களாக விளங்குவார்கள். கதை, முடிவு இப்பாத்திரங்கள் பற்றியதாக அமையும். படிப்போர் உள்ளத்தில் தம் வாழ்வில் கலந்த பாத்திரங்களைப் போன்று படிப்போர் குறிப்பிட்டு பேசுவர்” என்று பா.சம்பத்குமார் (மு.வ.நா.பா.ஓ.தி.ப. 54, 55) குறிப்பிடுகிறார்.        

இப்பொருண்மையின் அடிப்படையிலேயே தோட்டம் நாவலில் சேதுமணி மணியன் தலைமைப் பாத்திரங்களைப் படைத்துள்ளமையைக் காணமுடிகிறது.

பரிமளா இயற்கையின் பேராற்றலை உள்வாங்கி மிகவும் சிறப்பாக வளர்ந்து வந்தவள். இவளின் சக்திகள் பலமானவை. ஒரு நாள் பரிமளா ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது யாரோ தொடுவது போல் ஓர் உணர்வு ஏற்பட்டது. அப்போது திடீரென்று விளக்கு வெளிச்சத்தில் பார்க்கும்போது காளியப்பன்தான் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்திருக்கிறான்.

அவளுக்குக் கோபம் உச்சியைத் தொட்டது. அவனை வீழ்த்த அவளால் முடியும். பரிமளா சிறுவயதிலிருந்து உழைத்து, விளையாடி, சிலம்பாடி, கராத்தே போன்றவை கற்றுக்கொண்டு வலுவாக, மனம் நிறைய “நம்பிக்கையின் துணிச்சலாக” இருந்தாள். “எவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகம்! அப்பா அடிக்கடி சொல்வார் பாவங்களிலேயே மிகப்பெரிய பாவம் நம்பிக்கைத் துரோகம்தான்” (தோ.நா.ப.8) என்கிறார்.

கல்வி கற்பதற்குத் தடை

கல்வி தான் ஒருவரை வாழ்க்கையில் உயர்த்தும். பொருளாதாரம், குடும்பநிலை போன்ற பல்வேறு காரணங்களால் கல்விவாய்ப்பு அனைவருக்கும் கிடைப்பதில்லை. இதனை திருவள்ளுவர்,

“விலங்கொடு மக்கள் அனைவர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்” (குறள் - 410)

கல்வி அறிவு இல்லாத ஒருவன், மிருகம் போல்தான் செயல்படுவான் என்ற குறள் மூலம் அறியலாம்.

பரிமளாவின் மாமா “பொட்டப் புள்ள வண்ணான் கணக்கு எழுதுற அளவுக்குப் படிச்சாப் பத்தாதா? அதான் அஞ்சாங் கிளாஸ் பாஸ் பண்ணிருச்சுல்ல. படிப்ப நிறுத்திருக்கா. அப்புறம், லவ் லட்டர் எழுதுறது அது, இது’ன்று போய் முடியும் சொல்லிப்புட்டேன்” (தோ.நா.ப. 9) என்று கூறினார்.

இப்படி பல இன்னல்களைத் தாண்டி பரிமளாவின் வாழ்க்கையில் ஒரு பெண் கல்வி கற்றால் அக்குடும்பமே சிறப்பாக இருக்கும் என்பதற்கு அடையாளமாகப் பரிமளாவைக் காணமுடிகிறது.

உதவி செய்யும் மனப்பான்மை

உதவி செய்யற மனப்பான்மை எல்லோருக்கும் இருக்காது. பிறருக்கு உதவுதல் என்பது மிகச்சிறந்த ஒரு பண்பு. உதவுவதன் மூலம் நம் உடல், மனம் இரண்டும் நன்மை பெறுகின்றன. அதைப்போல பரிமளா அவள் வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு செல்லும் வழியில் ‘லீலா’ ஆசிரியர் வீடு இருக்கிறது. லீலா டீச்சர் தண்ணீர் சுமந்து கொண்டு வருவது பரிமளாவால் தாங்க முடியவில்லை. டீச்சரிடம் இருந்த தண்ணீர்க் குடத்தை வாங்கி வீட்டில் வைத்தாள். பரிமளா டீச்சர் வீட்டுக்குச் சென்று தன்னால் முடிந்த வேலைகளைச் செய்தாள். பரிமளா “ஏன் டீச்சர், மேல் வேலைக்கு ஒரு ஆள் போட்டுக்கக் கூடாதா?” (தோ.நா.ப. 10) என்று கேட்டாள்.

லீலா ஆசிரியரின் கணவர் உடன் பிறந்தவர்கள் நான்கு பெண்கள். அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்ததால் கடன் ஆகிவிட்டது. அதனால் வாங்கும் சம்பளம் கடனுக்கு சரியா போகிறது என்று கூறினாள். அன்றிலிருந்து தினமும் காலை எட்டு மணிக்கு டீச்சர் வீட்டுக்கு வந்து ஆடை கசங்காமல், வேலை செய்வாள். எது சாப்பிட கொடுத்தாலும், பரி “வயிறு ரொம்மிடுச்சு” என்று கூறுவாள். பரிமளா லீலா டீச்சரின் வேலைகளைப் பகிர்ந்து கொள்ளுவது அவளுக்கு அளவில்லா மகிழ்ச்சியையும், மனநிறையையும் தந்தது. படிக்கிற புள்ள இல்ல. அதான் ஒரு உதவி செஞ்சா இப்படித் திருப்பிச் சொல்லுது” (தோ.நா.ப. 12) நன்றி என்று பரிமளா கூறுவாள்.

பரிமளாவின் உதவி இப்படி மாணவர், டீச்சர், அம்மா, மற்றவர்கள் என்று உதவி செய்யும் மனப்பான்மை வளர்ந்து கொண்டே செல்லுவது போற்றுதற்குரியதாகும்.

திட்டமிடுதல்

திட்டமிடுதல் என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய எடுக்க வேண்டி நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிடுவதாகும்.

பரிமளா அப்பாவோடு சொந்தம் என்று சின்னம்மா, பூவாயி வீட்டுக்கு வந்தனர்.

“பரி தான் படிப்பு முடிச்சிடுச்சே! ஒரு வாரம் எங்க கூட இருந்துட்டு வரட்டும்” (தோ.நா.ப. 14) என்று சின்னம்மா கூறினாள்.

பரிமளாவைக் காளியப்பனுக்குத் திருமணம் செய்து விட்டு “சொத்தை” கை மாற்றிக் கொள்ளலாம் என்று பூவாயி திட்டம் தீட்டினாள். இதனை அறிந்த பரிமளாவும் “தலையில் சம்மட்டி கொண்டு அடித்தது போல்” இருந்தது. பூவாயி மீண்டும் “நம்மளோட திட்டம்”லாம் நிறைவேறிய பிறகு கௌதம்மை ‘தேவை’ன்னா முடிச்சிரலாம்” என்று கூறினாள்.

பரிமளா “குதிரை கீழ தள்ளுனதும் இல்லாம குழியும் பறிச்சிச்சாப்”ங்கற கதைப்போல இருக்கது என்றாள். பரிமளா மீது அன்பு வைத்ததைத் தவிர வேறு பாவம் அறியாதவன் கௌதம். நம்மால் கௌதம்க்கு எந்தப் பிரச்சனையும் வரக்கூடாது என்று இறைவனை வேண்டினாள்.

திறமை

சிறந்த திறனை “திறமை” என்று கருதலாம். திறமை என்பதற்கு தமிழில் புலமை, இயல்திறன், திறன் என்று பொருளாகும். பரிமளா பெண்டிங்க் பள்ளியில் ஐந்து குழுக்களாகப் பிரிந்து எல்லா பாடங்களையும் குழந்தைகளுக்கு கறுகு கொடுக்குவாள். வகுப்பறை திருவிழா மாதிரி காட்சியளிக்கும்.

ஒரு நாள் பரிமளாவிடம் “டீச்சர் இந்த வகுப்பு வரலாறு வகுப்பு. வரலாறு டீச்சர் வரல; நீங்க வாங்க டீச்சர்” என்று அழைத்தார்கள்.

பரிமளா "பாடம்’லாம் முடிச்சிட்டேனே!" என்று கூறினாள். “இங்லீஸ் கிராமர், டீச்சர்” என்று மாணவர்கள் கேட்டனர். விமலா டீச்சர், “ஆமாம் டீச்சர் பரி டீச்சர் கிராமர் எடுத்தா, டிராமா பாத்த மாதிரி இருக்கும் என்றார்கள்.

பரிமளாவிற்கு உரிய பாணியில் “இங்லீஸ் கிராமரத் தமிழ்’ல் படிச்சோம்” எளிமையாகப் புரியும். “மொதல்ல தெரிஞ்சுக்குவோம், புரிஞ்சுக்குவோம் அப்புறம் பயன்படுத்துறப்போ, இங்லீஸ்’ல பின்னிடுவோம்!” (தோ.நா.ப. 47) என்று பரிமளா பன்முகப் பார்வையில் அந்த பள்ளிக்கூடத்தை வலம் வந்தாள் என்பதை அறிய முடிகிறது.

அன்பு என்னும் உணர்வு

அன்பு என்பது ஊற்றுப்போல் தானாக வெளிப்படும் உணர்வு எல்லா மதங்களும் அன்பையே வலியுறுத்துகின்றன.

இதனை வள்ளுவர்,

“அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கணீர் பூசல் தரும்” (குறள் - 77)

அன்புடையவரின் சிறு கண்ணீரே அவர் அன்பினைப் பலர் அறிய வெளிப்படுத்தி விடும் என்கிறது திருக்குறள்.

மிஸ் எட்வின் அவர்கள் ஓர் ஆசிரியர் ஒரு வருசத்துல ஒரு டீச்சர் எவ்வளவு செய்ய முடியும், எவ்வளவு உருவாக்க முடியும், எவ்வளவு சாதிக்க முடியும்”னு என்பதை அறிய முடிகிறது.

பரிமளா வகுப்பறையில் உள்ள அனைத்து மாணவர்களிடம் அன்பாக இருந்துள்ளதை அறியமுடிகிறது.

அறிவுரை வழங்குதல்

ஒருவருக்கு நன்மை பயக்கும் வகையில் அளிக்கப்படும் கருத்து, ஆலோசனை, புத்திமதி, கூறுவதேயாகும். பரிமளா தன்னுடைய வகுப்பு மாணவிகளுக்கு “நீங்க எல்லாரும் எவ்வளவு கெட்டிக்காரங்க”ன்னு தெரியும். பெண்டிங்க் பள்ளி மாணவிகளின் அறிவும், திறமையும் சென்னை முழுவதும் தெரியும்.

“நீங்க நிறைய பொருளீட்டனும், எல்லா நுகர்வுகளும் பெற்று மகிழணும், அதேசமயம் மற்றவர்களின் நிறைவேறாத தேவைகள் உங்க கண்கள் உறுத்தணும், முடிந்தவரை அவற்றை நிறைவேற்றவும், உழைக்கணும். இயற்கைத் தாய் உங்களோட இருப்பாங்க” (தோ.நா.ப.) என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினாள் பரிமளா.

கௌதமின் பண்பு நலன்கள்

பெண்ணுரிமைக்குக் குரல் கொடுத்தல், ஏக்கம், சுயதொழில், புகழ்தல் போன்ற பண்பு நலன் ஆகும்.  

பெண்ணுரிமைக்குக் குரல் கொடுத்தல்

பெண்களுக்கு ஏதாவது பிரச்சனையோ, தடையோ ஏற்பட்டால் பெண்களுக்காக ஆண்கள் காப்பாற்ற வருவதேயாகும். அதைப்போல பரிமளாவிற்கு ஐந்தாம் வகுப்பு முடிந்ததும் ‘மாமா’ எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனை அறிந்த கௌதம் பரிமளாவின் அப்பாவிடம் சென்று பரிமளா “பள்ளிக்கூடத்திலேயே முதல் மாணவி பரி” என்று கூறினாள் பரிமளாவைப் படிக்க அனுப்பவில்லை என்றால் “உங்க தொழிற்சங்க வாசல்ல” வந்து “தர்ணா” பண்ணுவோம் என்று அபிநயம் காட்டி சொன்னான் கௌதம்.

பரிமளாவின் அப்பா கௌதமை அலாக்காகத் தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்துவிட்டார். கௌதமை “பெண்ணுரிமைக்குக் குரல் கொடுத்த என் சிங்கமே!” (தோ.நா.ப. 13) என்று பாராட்டினார்.

ஏக்கம்

ஏக்கம் என்பது விரும்புவது கிடைக்காத துக்கம், நிறைவேறாத ஆசை எனக் குறிப்பிடலாம். கௌதம் பரிமளா மீது அளவுக்கு அதிகமாக ஆசையை வைத்துள்ளான், கௌதம்மை எங்கு பார்த்தாலும் சண்டை போடுவாள். பள்ளிக்கூடத்தில் மற்ற மாணவர்கள் இடத்தில் நல்லாப் பேசுவாள். தன்னிடம் நல்ல பேச மாட்டாளோ என்ற ஏக்கம் கௌதமிடம் ஏற்பட்டது.

பரிமளாவின் அப்பாவிடம் “ஏன் மாமா, ஒரு சராசரிப் புள்ளய நீங்க பெத்துருக்கூடாதா?” என்று கேட்டான். அதற்கு பரிமளாவின் அப்பா “சராசரிப் பிள்ளையா இருந்தா நீ திரும்பிப் பார்த்திருப்பியாடா” என்ற பொழுது “அதுவும் சரிதான்” என்று கூறினாள்.

இவ்வாறு பரிமளா தன்னிடம் எப்படியாவது அன்பாக பேசுவாளோ என்ற ஏக்கம் கௌதமிடம் காணப்பட்டது. பரிமளா மனதில் எப்படியாவது இடம் பிடிக்க வேண்டும் என்ற கொள்கையோடு இருந்தான்.

பரிமளா “எனக்கு எல்லாமே நீ தான்’டா எப்பவும் எனக்கு நீ வேணும்!” என்று கூறும்போது முத்தமிட்டாள். அவனுக்குப் பிரமை பிடித்தவன் போல் இருந்தான். அவனுக்கு வியப்பு, மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.

கௌதம் பரிமளாவின் மேல் வைத்து இருந்த அன்பு உண்மையானது. அவனின் ஏக்கத்திற்கு கிடைத்த பரிசு பரிமளா. தன் வாழ்க்கையில் ‘பரிமளாவை’ பொக்கிஷம் போல பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் அவன் உள்ளிருந்து தோன்றுவதை அறிய முடிகிறது.

சுயத்தொழில்

பரிமளா கலிபோர்னியாவில் “இந்தியத் தமிழன் பலசரக்குக் கடை” என்று ஆரம்பிக்கலாம் என்று கூறினாள். அதற்கு வில்லியம், "எனக்கு ஆசைதான் ஆனா, அதுக்குப் பொருள் பரிமாற்றத்துக்கும் உதவிக்கு இந்தியாவுல நம்பகமான, திறமையான ஆள் வேணுமே!” என்கிறார் வில்லியம். பரிமளா, கௌதம்க்கு உடம்பெல்லாம் வியாபார மூளை இருக்கிறது. சின்ன வயதிலிருந்து வியாபாரக் கனவோடும், கடினமாக உழைப்பும், திறமையும், கௌதமிடம் இருக்கின்றது என்று பரிமளா கூறினாள். மேற்கண்டவாறு நால்வரும் இணைந்து சுயத்தொழில் செய்யலாம் என்பதை அறியமுடிகிறது.

முடிவுரை

‘தோட்டம்’ நாவலில் முதன்மை மாந்தர்களாக பரிமளா, கௌதம் இடம்பெறுகின்றனர். வகுப்புத் தோழர்களாக அறிமுகமாகி திருமண வாழ்க்கையில் இணைகின்றனர். உள்ளூரில் சுயத்தொழில் ஆரம்பித்து கலிப்போர்னியா வரை ஏற்றுமதி செய்து அதில் வரும் வருமானத்தை டிரஸ்ட் அமைத்து தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்கும், சமுதாயத்திற்கும் தொண்டு செய்யக் கூடிய தலைமைப் பாத்திரமாக அமைகின்றனர் என்பதை அறியமுடிகிறது.

துணை நூற்பட்டியல்

1.      மு.வ. நாவல்களில் பாத்திரங்கள் ஓர் திறனாய்வு - பா. சம்பத்குமார்

2.      ராஜம்கிருஷ்ணன் புதினங்களில் - ஹரி. விஜயலட்சுமி, பெண்மாந்தர் ஓர் ஆய்வு

3.      விந்தன் நாவல்கள் ஓர் ஆய்வு - மு. பரமசிவ0ம்

4.      தோட்டம் நாவல் - முனைவர் சேதுமணி மணியன்

5.      அற இலக்கியக் களஞ்சியம் - க.ப.அறவாணன்

- மு. புஷ்பா, பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காரிமங்கலம்.

நெறியாளர்: முனைவர். சௌ. கீதா, முதல்வர், அரசு மகளிர் கலைக்கல்லூரி, கிருட்டிணகிரி.