சங்க இலக்கியக் குறிஞ்சித்திணைப் பாடல்களில் அமைந்துள்ள அங்கதக் குறிப்புகள் பற்றிய கருத்துக்களைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அங்கதம் பயன்பாடு
அங்கதம் என்பது புலவர்கள் பாடல்களைப் பாடுவதற்குப் பயன்படுத்திய ஓர் இலக்கிய உத்தியாகும்.
தொல்காப்பியர் குறிப்பிடும் அங்கதம்
தொல்காப்பியர் செய்யுளியலில் ஏழுவகையான இலக்கியங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.
“பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே
அங்கதம் முதுசொல் அவ்வேழ் நிலத்தும்”1
என்ற நூற்பாவில் பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் ஆகியனவற்றைக் குறிப்பிட்டுள்ளார். இவற்றில் அடிவரையறை இல்லாத ஆறினைத் தனியாகப் பிரித்து,
“அவைதாம்,
நூலி னான புணர்ந்த பிசியி னான
ஏது நுதலிய முதுமொழியான
முறைமொழி கிளந்த மந்திரத் தான
கூற்றிடை வைத்த குறிப்பி னான”2
என்று கூறுகிறார். இதிலிருந்து பாட்டு என்பது அடிவரையறையோடு கூடியதென்றும், ஏனைய ஆறும் அடிவரையறையற்ற யாப்பு என்றும் விளங்குகின்றது. மேலும் அங்கதம் என்பதை இங்குக் ‘கூற்றிடை வைத்த குறிப்பு’ என்ற தொடரால் விளக்கியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே இதனை,
“எழுத்தொடுஞ் சொல்லொடும் புணரா தாகிப்
பொருட்புறத் ததுவே குறிப்பு மொழியே”3
என்ற நூற்பாவில் ‘குறிப்புமொழி’ என்பதனை அங்கதம் என்பதற்குப் பதிலாகப் பயன்படுத்துகின்றார். எனவே எழுத்தாலும் சொல்லாலும் வெளிப்படையாகக் கூறாமல் குறிப்பால் புலப்படுத்துவதே அங்கதம் என்பதை அறியமுடிகின்றது. அங்கதத்தின் வகைகள் குறித்துத் தொல்காப்பியர்,
“அங்கதந் தானே அரில்தபத் தெரியிற்
செம்பொருள் கரந்த தெனவிரு வகைத்தே”4
என்று குறிப்பிடுகின்றார். இதில் ‘செம்பொருள்’. ‘கரந்த’ என்ற இருவகை அங்கதத்தைக் குறிப்பிடுகின்றார். இதில் செம்பொருள் அங்கதம் என்பதனை,
“செம்பொரு ளாயின் வசையெனப் படுமே”5
என்பதால் ‘வசை’ (நேரடியாக வசைமொழி அமைந்தால் அது வசை) என்றும் கரத்தல் என்பதனை,
“மொழிகரந்து மொழியின்அது பழிகரப் பாகும்”6
என்பதில் ‘பழிகரப்பு’ (தான் மொழியும் மொழியை மறைத்து மொழியின் அது பழிகரப்பாகும்) என்றும் விளக்கம் தருகின்றார்.
மேலும், தொல்காப்பியர் செவியுறைக்கும் அங்கதத்திற்கும் உள்ள வேறுபாட்டையும் விளக்கியுள்ளார். செவியுறைச் செய்யுளை விளக்கும் போது,
“புகழொடும் பொருளொடும் புணர்ந்தன் றாயின்
செவியுறைச் செய்யுள் என்மனார் புலவர்”7
என்றும், அங்கதச் செய்யுளை விளக்கும் போது,
“வசையொடும் நசையொடும் புணர்ந்தன் றாயின்
அங்கதச் செய்யுள் என்மனார் புலவர்”8
என்றும் செய்யுளை இருவகைகளாகப் பிரித்து ஒன்று செவியுறை, மற்றொன்று அங்கதம் எனக் கூறி, இரண்டிற்குமான வேறுபாட்டை விளக்குகிறார். பின்னர் செவியுறையை வேறாகக் கருதிய தொல்காப்பியர்,
“செவியுறை தானே,
பொங்குத லின்றிப் புரையோர் நாப்பண்
அவிதல் கடனெனச் செவியுறுத் தன்றே”9
என்று குறிப்பிட்டுள்ளார்.
அங்கதம் - விளக்கம்
தொல்காப்பியர் கூறும் ‘அங்கதம்’ என்ற சொல்லுக்கு நிகராகவும், தமிழில் பயன்படுத்தப்படும் சூழலை ஒட்டியும் மேலைநாடுகளில் அதன் விளக்கமானது, “அங்கதம் என்னும் பொருளுடைய ‘சடையர்’ (Satire) என்ற சொல் இலத்தீன் மொழிச் சொல்லான ‘சாட்சுரா’ (Satura) என்ற சொல்லில் இருந்து வந்தது என்பர். சாட்சுரா என்பதற்கு முதலில் முழுவதும் (full) என்ற பொருளில், பின்னர் ‘பலபொருட்களின் கலப்பு’ (A mixture of full of different things) என்ற பொருளும் வழக்கில் இருந்தது. கதம்பம், குழப்பம் என்ற பொருளும் இதற்கு உண்டு. ஓர் உணவுப் பொருளின் பெயர்”10 என்று கில்பர் ஹைட் கூறுவர். அங்கதம் என்பது “தீங்கையும் அறிவின்மையையும் கண்டனம் செய்யும் பாட்டு”11 என்று ஆர்தர் போலார்டு கூறுகின்றார்.
சங்கப் பாடல்களுள் ஒன்றான எட்டுத்தொகையில் அக இலக்கியத்தொகை நூல்களில் காணப்படும் அங்கதக் குறிப்புடைய பாடல்கள் மொத்தம் 61 ஆகும்.
இவை முறையே, நற்றிணை - 15, குறுந்தொகை - 12, ஐங்குறுநூறு - 11, கலித்தொகை - 7, அகநானூறு - 16 பாடல்கள் அமைந்துள்ளன.
குறிஞ்சித்திணைப் பாடல்களில் அங்கதம்
சங்க இலக்கிய அகப்பாடல்களில் குறிஞ்சித்திணையில் (நற்.34, 136, 365, ஐங். 226, 247, 248, 249, 284, குறுந்.78, 342) ஆகிய பத்துப் பாடல்கள் அங்கதக் குறிப்புடையனவாக அமைந்துள்ளன.
1. சிறைப்புறமாகத் தலைவன் இருந்தபொழுதும்
2. தலைவன் களவு நீட்டித்த பொழுதும்
3. தலைவன் பிரிந்த பொழுதும்
ஆகிய மூன்று சூழல்களில் தலைவன் தொடர்புடைய அங்கதப் பாடல்கள் அமைந்துள்ளன. மேலும் வேலனைக் கேலி செய்வதாக உள்ள பாடல்கள் அனைத்தும் வெறியாடல் தொடர்புடைய சூழல்களில் அமைந்துள்ளன.
இவ்வாறு தலைவனை ஏளனம் செய்கின்ற பாடல்களாக நற். 136, 365, 226, 284, குறுந். 78, 342 ஆகிய ஆறு பாடல்கள் காணப்படுகின்றன. வேலனை ஏளனம் செய்கின்ற பாடல்களாக நற். 34, ஐங். 247, 248, 249 ஆகிய நான்கு பாடல்கள் உள்ளன. தலைவி கூற்றாக நற்றிணையில் 136ஆவது பாடலும், பாங்கன் கூற்றாக குறுந்தொகையில் 78ஆவது பாடலும் உள்ளன. ஏனைய எட்டுப் பாடல்களும் தோழியின் கூற்றாகும். ஆனால் பிற அகநூல்களில் குறிஞ்சித்திணையைச் சார்ந்த பாடல்களில் அங்கதத்தைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை.
தலைவி கூற்றில் அங்கதம்
களவொழுக்கத்தில் தலைவன் பிரிதலால் தலைவி தன் மேனி வேறுபடுவதனை உணர்ந்து தலைவன் தன்னை விரைந்து மணம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தினைத் தலைவன் சிறைப்புறமாக நிற்கும்பொழுது அவனுக்குக் கேட்பது போல தோழிக்குக் கூறியதாக அமைந்த பாடலான,
“திரிந்துகோல் எல்வளை வேண்டி யான் அழவும்
அரும் பிணி உறுநர்க்கு, வேட்டது கொடாஅது
………………………………………………...
………………………………………………..
தோள் பழி மறைக்கும் உதவிப்
போக்குஇல் பொலந் தொடி செறீஇயோனே”12
சிறந்த கைவினையால் செய்யப் பெற்ற ஒளி பொருந்திய தோள் வளையை நான் விரும்பினேன். அது கிடைக்காததால் அழுதேன். என் தந்தை தீர்த்தற்கு இயலாத நோயை அடைந்தவர்; விரும்பியதைக் கோடாமல் ஆய்ந்து நோய்க்குத் தக்கவாறு மருந்து தரும் அறமுடைய மருத்துவரை ஒப்பவர். பலரும் புகழும் மலைநாடனாகிய நம் காதலனை நாம் பிரிந்திருப்பதைத் தந்தை அறிந்தனர் போலும். அதனால் தோளுக்கு அணியாக இறுகிய பொன்னால் அமைந்த கீழே விழாத தொடியினைச் செய்து தந்தார் என்று இப்பாடல் பொருள்பட அமைந்துள்ளது.
தோழி கூற்றில் அங்கதம்
தோழி, தலைவன் சிறைப்புறத்தானாக நிற்கும் சூழலில் அவனுக்குக் கேட்பது போல் தலைவியிடம் கூறியதாக அமைந்த பாடலான,
“அருங் கடி அன்னை காவல் நீவி
பெருங் கடை இறந்து, மன்றம் போகி,
……………………………………..
…………………………………….
வான் தோய் மா மலைக் கிழவனை,
‘சான்றோய் அல்லை’ என்றனம் வரற்கே”13
தாயின் கட்டுக்காவலை மீறி, வீட்டை விட்டு வெளியேறி, பகல் நேரத்தில் பலரறிய மன்றத்தில் தலைவனுடைய ஊரைப் பற்றி வினவித் தலைவன் ஊருக்குச் செல்வோம் என்று தோழி கூறுகிறாள். அவ்வாறு செல்வதற்கு அவள் சொல்லும் காரணம், தலைவனை ‘நீ சான்றோய் அல்லை’ எனச் சொல்வதற்கே. உண்மையில், தோழி இதனை நடைமுறைப்படுத்தக் கூறவில்லை. சிறைப்புறமாக இருக்கும் தலைவனிடத்தில் தங்களது துயரநிலையையும், அதைப் போக்குவதற்கு எடுத்துக்கொள்ளும் முயற்சிகளையும் அவனுக்குப் புரிய வைத்து அவனை விரைவில் மணம் முடிக்கத் தூண்டுவதற்கேயாகும். இக்குறிப்பினாலும் தலைவன் இயல்பினைக் குறிப்பால் சாடுவதாலும் இப்பாடல் அங்கதப் பொருளுடையதாகிறது.
வேலன் வெறியாடும் சூழலில் அங்கதம்
வெறிவிலக்கலுறுந் தோழி தமர் கேட்பத் தலைமகளை வினவுவாளாய்ச் சொல்லியதாக அமைந்த பாடலான,
“அன்னை தந்தது ஆகுவது அறிவென்,
பொன்நகர் வரைப்பில் கன்னம் தூக்கி,
முருகென மொழியு மாயின்,
அருவரை நாடன் பெயர்கொலோ, அதுவே?”14
என்பதில் அன்னை வெறியாட்டுச் செய்வதன் பொருட்டு வேலனை அழைத்ததை நான் அறிவேன். வேலன் நம் அழகிய மனையிடத்து வெறியாடித் தாயத்தையும் தலைவியின் கையில் கட்டி நோய்க்குக் காரணம் முருகனே என்று கூறுவானாயின், அப்பெயர் அரிய மலையையுடைய நம் தலைவன் பெயராகுமா? ஏன்று தோழி கூறுகின்றதாக இப்பாடல் அமைந்துள்ளது.
களவு நீட்டித்த சூழலில் அங்கதம்
செறிப்பறிவுறுக்கப்பட்ட பின் வரைவின்கண் செல்லாது, பின்னும் வரவு வேண்டிய தலைமகனைத் தோழி நெருங்கச் சொல்லி வரைவு கடாவுகிறாள் என்பதாக அமைந்த பாடலான,
“கலைகை தொட்ட கமழ்களைப் பெரும்பழம்
காவல் மறந்த கானவன், ஞாங்கர்
…………………………………………….
……………………………………………
நயந்தோர் புன்கண் தீர்க்கும்
பயம்தலைப் படாஅப் பண்பினை எனினே?15
என்னும் பாடலில் தலைவி துன்பம் அடைந்திருக்கிறாள், அவள் துன்பத்தைத் தீர்க்க வேண்டியது உனது கடன். அதனைச் செய்யாதிருப்பது உனது இயல்புக்குத் தகுதியல்ல என்றும், வரையாது களவின்பமே காமுறுதல் உனது பெருமைக்கு இழுக்கு என்றும் கடிந்துரைக்கிறாள் என்று நேரடியாக இடித்துரைப்பதில் அங்கதக் குறிப்பு காணப்படுகிறது.
பாங்கன் கூற்றில் அங்கதம்
காமநோயால் மெலிந்த தலைவனை, ‘இது உன் தகைமைக்குத் தக்கதன்று’ என்று பாங்கன் இடித்துரைப்பதாக அமைந்த பாடலான,
“பெருவரை மிசையது நெடுவௌ; அருவி
முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பி
சிலம்பின் இழிதரும் இலங்குமலை வெற்ப
நோதக் கன்றே காமம் யாவதும்
நன்றுஎன உணரார் மாட்டும்
சென்று நிற்கும் பெரும் பேதைமைத்தே”16
என்னும் பாடலில் பெரிய மலையுச்சியில் பிறந்த அருவி தன் பிறப்புயர்வு நோக்காது தாழ்ந்த மலைகளிடத்தே வீழ்ந்து இழிவது போல, நீயும் உன் உயர்குடிப் பிறப்பிற்கேற்ப காமநோயால் இழிந்து கலங்குகின்றாய் எனப் பாங்கன் தலைவனைக் கடிந்துரைக்கின்றான். இப்பாடல் உள்ளுறை வழியாகத் தலைவனை இகழ்ந்துரைக்கும் அங்கதக் குறிப்பினை வெளிப்படுத்தி நிற்கின்றதைக் காணமுடிகின்றது.
முடிவுரை
l சங்க இலக்கியங்கள் தமிழ்மொழியின் சிறப்பையும், தமிழரின் அக, புற வாழ்க்கை நெறிமுறைகளையும் பிரதிபலிப்பவையாக அமைந்துள்ளதோடு சங்கப் புலவர்கள் பட்டறிவு உணர்ச்சியின் வெளிப்பாட்டில் அமைந்த பாடல்களில் பல்வேறு வகையான இலக்கிய, இலக்கண உத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
l அங்கதம் என்பதனை அடிவரையறையற்ற ‘யாப்பு’ என்றும் ‘கூற்றிடை வைத்த குறிப்பு’ என்றும் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். மேலும் ‘குறிப்பு மொழி’ என்பதையும் அங்கதத்திற்குரிய பெயராகக் குறிப்பிடுகின்றார். எனவே எழுத்தாலும் சொல்லாலும் வெளிப்படையாகக் கூறாமல் குறிப்பால் புலப்படுத்துவதே ‘அங்கதம்’ என்பதை உணரமுடிகின்றது.
l சங்க இலக்கிய அகப்பாடல்களில் 61 பாடல்களில் அங்கதக் குறிப்புகள் உள்ளன. இதில் குறிஞ்சித்திணை சார்ந்தவையாக 10 பாடல்கள் அமைந்துள்ளமை தெரியவருகின்றது.
சான்றெண் விளக்கம்
1. இளம் (உ.ஆ), தொல்.பொருள், நூ.எண்.75:1-2.
2. மேலது, நூ.எண்.158.
3. மேலது, நூ.எண்.172.
4. மேலது, நூ.எண்.120.
5. மேலது, நூ.எண்.121.
6. மேலது, நூ.எண்.122.
7. மேலது, நூ.எண்.124.
8. மேலது, நூ.எண்.125.
9. மேலது, நூ.எண்.110.
10. Gilber Hight, The Anatomy of Satire, p.231.
11. Arthur, Pollard, Satire, p.1.
12. கு.வே.பாலசுப்பிரமணியன் (உ.ஆ), நற்றிணை, குறிஞ்.பா.எண்.136
13. கு.வே.பாலசுப்பிரமணியன் (உ.ஆ), நற்றிணை, குறிஞ்.பா.எண்.365
14. பொ.வே.சோமசுந்தரனார்; (உ.ஆ), ஐங்குநூறு, குறிஞ்;.247.
15. பொ.வே.சோமசுந்தரனார்;(உ.ஆ), குறுந்தொகை, குறிஞ்;.342.
16. பொ.வே.சோமசுந்தரனார்;(உ.ஆ), குறுந்தொகை, குறிஞ்;.78.
- முனைவர் ஆ.பாக்கிய லெட்சுமி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா கல்லூரி, ஆரல்வாய்மொழி.