இலக்கியமும் மனிதனின் வாழ்வியலும் ஒன்றொடு ஒன்று இணைந்தே காணப்படுகின்றன. இக்கட்டுரை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் இடம்பெற்றுள்ள வேளாண் சார்ந்த அறிவியல் செய்திகளைப் பற்றி ஆராய்வதாக அமைகின்றது.
வேளாண்மை விளக்கம்
“வேளாண்மையின் தோற்றமானது காட்டெரிப்பு வேளாண்மையில் தொடங்கி, எளிய வேளாண்மையாக வளர்த்து, பண்பட்ட வேளாண்மையில் உச்சம் பெற்றுள்ளது. பண்பட்ட வேளாண்மையும் தொடக்கத்தில் பெரிய அளவில் இன்றி இடப்பெயர்வு வேளாண்மையாகவே திகழ்ந்துள்ளது. வேளாண்முறை என்பது உழும் கருவிகளைக் கொண்டு பெரும்பரப்பில் பயிர்வகைகளை விளைவிப்பதாகும். இன்றைய நவீன சமநில வேளாண்முறை தொடக்கத்தில் காட்டெரிப்பு வேளாண் முறையாக இருந்து வளர்ச்சி பெற்றதாகும்.” என சங்ககால திணைப்புன வேளாண்மையில் ஆண்-பெண் உழைப்பும் சமூக மாற்றமும்(பக்:109-110) என்ற நூலில்
மா. பரமசிவன் வேளாண்மை பற்றி விளக்கியுள்ளார்.
நிலம் பகுப்பு முறை
வேளாண் தொழில் செய்யும் நிலத்தினை இருவகைகளாக பிரிக்கப் படுகின்றன. அவை நன்செய் நிலம், புன்செய் நிலம் என்பதாகும். நன்செய் நிலம்ம் என்பது நீர் வசதி நிறைந்த நிலமாகக் காணப்படும். நன்செய் நிலத்தில் வேளாண் தொழில் செய்ய உழுது உரமிட்டு விதைகளை விதைத்து நீர்பாய்ச்சி பயிர்களைப் பாதுகாக்கும் பணி என ஒரு தொடர் வரிசையிலே போகக் கூடியதாகும்.
புன்செய் நிலம் என்பது நீர் வசதியற்ற நிலமாக காணப்படும். புன்செய் பயிரானது மானாவாரி பயிராகும்; பயிர் மழை நீரினையே முதன்மையானதாகக் கொண்டு வளரும் பயிராகும்.
உழவுத்தொழில்
உழவுத்தொழில் என்பது இயற்கையிலே கிடைக்கக் கூடிய சூரிய ஒளியினை தாவரத்தின் இலைகளில் இருக்கும் பச்சையத்தின் உதவியால் கிரகித்துக் கொண்டும், நிலத்திலிருந்து கிடைக்கக்கூடிய நீர் மற்றும் கனிம உரங்களின் சக்தியை மூலாதாரங்களாகக் கொண்டு பயிர்கள் சேமிக்கும் ஆற்றலே தானியங்களாகவும், பயிறுகளாகவும், கிழங்குகளாகவும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பொருள்களை செயற்கை முறையில் இதே ஆற்றலோடு எந்த ஒரு விஞ்ஞான முன்னேற்றத்தாலும் தந்துவிட முடியாது. உழவுத் தொழிலை விரும்பிச் செய்தல் வேண்டும் என திரிகடுகத்தில் கூறப்பட்டுள்ளது.
“உழவின்கட் காமுற்று வாழ்தல்.”(திரி:42-3)
மேற்கூறிய பாடலின் வரிகளின் மூலமாக உழவுத் தொழிலின் சிறப்பினை அறிந்து கொள்ள முடிந்தது.
உழுதல்
வேளாண் தொழிலைச் செய்வதற்கு முதலாவதாக நல்ல நிலத்தினைத் தேர்வு செய்து அதில் மிக குறைவான ஈரப்பதம் இருக்கும் நிலையில் நிலத்தை நன்றாக உழுது பயிரிட ஏற்ற இடமாக மாற்றிட வேண்டும். அதுபோன்றே ஈரப்பதம் இல்லாத நிலத்தை உழுதால் எந்தப் பயனும் பெறுவதும் இல்லை என நாலடியாரில் கூறப்பட்டுள்ளது.
“புல்லீரப் போழ்தின் உழவேபோன் மீதாடிச்
சேல்லாவாம்,நல்கூர்ந்தார் சொல்.”(நால 115:3-4)
நிலத்தினை நன்றாக ஏர் கொண்டு ஆழமாக உழுதல் வேண்டும். நிலத்தினை மட்டும் மேல் போக்கில் உழுதல் கூடாது என பழமொழி நானூறு நூலில் கூறப்பட்டுள்ளது.
“.... ....... ....... ..... .... ..ஆகுமோ
நத்தை உழுத எல்லாம் கணக்கு.”(பழ93:3-4)
“ஏருடையான் வேளாண்மை தானினிது.”(இனி:3:3)
“..... ...... ....... ... ... ... வழிசித்து
உளம் தொட்டி உழுவயல் ஆக்கி....”(சிறு:64:1-2)
உடல் வலிமை கொண்ட மாடுகளைக் கொண்டு நிலத்தினை உழுது பக்குவப்படுத்தியுள்ளனர் என பழமொழி நானூறு நூலில் சமண முனிவர் கூறியுள்ளார்.
“மூரி உழுது விடல்.”(பழ:168:4)
மேற்கூறிய பாடல்களின் மூலமாக நிலத்தினை எவ்வாறு உழுது உழவுத் தொழிலுக்குப் பயன்படுத்தினர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
உரமிடுதல்
உழுத நிலத்திற்கு உரமிட்டுப் பண்படுத்தினாலே அதிக விளைச்சலைப் பெற முடியும். உழவுத் தொழில் செய்வதற்கு ஏற்றாற் போன்று உழப்பட்ட நிலத்திற்கு எருதின் உரம் போடாவிட்டால், அது துன்பத்தையே தரும் எனவும், உழுத நிலத்தில் எருது உரம் போட்டு வேளாண்மை செய்தால் விளைச்சல் அதிக அளவில் கிடைக்கும் எனவும் இன்னா நாற்பதில் கூறப்பட்டுள்ளது.
“எருதி லுழர்க்குப் போகீர மின்னா.”(இன்:4:1)
என்ற பாடலின் அடியின் மூலமாக உரத்தின் முக்கியத்துவம் பற்றி தெரிக்கின்றது.
விதை விதைத்தல்
விதைகள் நிலத்தின் தன்மைக்கேற்றாற் போல் விதைக்கும் முறைகளும் மாறுபடுகின்றன. நன்செய் நிலங்களுக்கும் புன்செய் நிலங்களுக்கும் என தேர்வு செய்யப்பட்ட தரமான விதைகளே பயன்படுத்தப்பட்டன. நன்செய் நிலத்தில் பயிரிடுவதற்காக நாற்றங்கால் அமைத்து நாற்றுப்பாவி நடவு செய்யப்பட்டது. மனிதனின் வாழ்வில் கைப்பொருள் இல்லை என்றால் எதையும் வாங்க முடியாது. இதனைப் போன்றே உழவுத் தொழிளிலும் விதை இல்லை என்றால் விளைச்சலும் பெற முடியாது. எனவே உழவுத் தொழிலில் விதைவிதைத்தல் மிகவும் முக்கியமான ஒன்றாகவே உள்ளது. இது பழமொழி நானூறு நூலில் கூறப்பட்டுள்ளது.
“... ...... ........ ....... ........-பேணுங்கால்
ஐகத்ததுஇன்றி ஆகா கருமங்கய்,காரிகையாயா!
வித்து இன்றிச் சம்பிரதம் இல்.”(பழ.328:2-4)
மேற்கூறிய பாடலின் வரிகளின் மூலமாக உழவுத் தொழில் விதை விதைத்தலின் முக்கியத்துவத்தை அறிந்துக்கொள்ள முடிந்தன.
விதையின் தன்மைக்கு ஏற்றாற் போன்று விதையை விதைக்கப்படுக்கின்றன. விதைகளை விதைப்பதற்காகவே பாத்திகட்டப்பட்டு விதைக்கும் விதையும், பாத்தியமைக்காமல் சாதாரணமாக விதைக்கும் விதையும் உண்டு என்பதை சிறுபஞ்சமூலத்தில் கூறப்பட்டுள்ளது.
“....... ......... .......... ........-தாவா
விதையாமை நாறுவ வித்துஉள.....”(சிறு:20:2-3)
“........ .......... ............ ...........-பாத்திப்
புதைத்தாலும் நாறாத வித்துஉள.....”(சிறு:21:2-3)
மேற்கூறப்பட்டுள்ள பாடலின் வரியின் மூலமாக விதையின் தன்மையைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது.
களையெடுத்தல்
பயிர்களுக்கிடையே வளரும் தேவையற்ற செடிகள் களை எனப்படும். இக்களைகள் பயிர்களுக்கு வேண்டிய நீரினையும் உரச்சத்துகளையும் எடுத்து விடுவதால் தேவையான பயிர்களை செழித்துவளரவிடுவதில்லை. இவ்வாறு களையை அகற்றுவது களையெடுத்தல் எனப்படும். களையெடுத்தலைப் பெண்களே செய்து வந்துள்ளனர். நன்செய் நிலத்தில் வளரும் பயிரில் உள்ள களையைக் கைகளினால் பறித்து அகற்றுவர். புன்செய் நிலத்தில் உள்ள களையைக் களைக் கொத்தும் கருவிகளின் மூலமாக அகற்றுவர். நான்மணிக்கடிகையில் அறிவற்றவர்களை களைகளுடன் ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது.
“.... ....... ........ ...... பிணிபயிலும்
புல்லன்னா புல்லறிவின் ஆடவர்.”(நான் 34:2-3)
என்ற பாடலின் வரிகளின் மூலமாக களையெடுக்கும் அறிவு இருந்ததை அறிந்து கொள்ள முடிந்தது.
நீர்ப்பாய்ச்சுதல்
நீர்ப்பாசனம் என்பது பெரும்பாலும் வாய்க்கால் அமைத்துப் பாய்க்கப்பட்டது. நன்செய் பயிர்களுக்கு நீர்ப்பாய்க்க குளம், ஆறு, கிணறு போன்றவற்றிலிருந்து வாய்க்காலில் நீரைப் பிரித்துப் பாசன வசதி ஏற்படுத்த வேளாண்மை பராமரிக்கப்பட்டுள்ளது. பாக்கு மரத்தினை நன்கு பராமரித்து தினமும் தண்ணீர் விட வேண்டும். தென்னை மரத்திற்கு விட்டு விட்டு தண்ணீர் விட வேண்டும். புன்னை மரத்திற்கு எந்த பராமரிப்பும் இல்லாமலே தானே வளரும் தன்மை கொண்டது.
“குடையாயார் நட்பிற் கமுகனையர்:ஏனை
இடையாயார் தெங்கினனையர்:தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே,
தொன்மை யுடையார் தொடர்பு.” (நாலடி:216)
என்ற பாடலின் மூலமாக மரங்களை எப்படி பராமரித்து நீர் பாய்ச்சிட வேண்டும் என்பதை அறிந்துக் கொள்ள முடிந்தன.
பயிர்ப் பாதுகாப்பு
வேளாண் தொழிலில் நிலத்தினை உழுது உரமிட்டு விதையினை விதைத்து, நீர்ப்பாய்ச்சி களையெடுத்து பயிர்களைப் பராமரித்தாலும் பயிர்களைப் பாதுகாப்பதன் மூலமாகவே இவை அனைத்திற்கான பயனையும் அடைய முடியும். எனவே பயிர்ப் பாதுகாப்பு என்பது வேளாண் தொழிலில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. பயிர்களைப் பாதுகாக்கும் பணியினை ஆண் பெண் இருவரும் மேற்கொண்டு வந்துள்ளனர். பயிர் விளையும் காலத்தில் பயிரினைப் பாதுகாத்தல் வேண்டும். அப்படி பாதுகாக்காதவன் உழவு தொழிலில் நின்று நிலையாக இருக்க முடியாது என திரிகடுகத்தில் கூறப்பட்டுள்ளது.
“......... ....... ........ ...... பைங்கூழ்
விளைவின் கண் போற்றான் உழவும்.”(திரி:59:1-2)
என்ற பாடலின் வரிகளின் மூலம் பயிரில் பாதுகாப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி அறிந்துக் கொள்ள முடிந்தது.
அறுவடை
அறுவடை என்பது வேளாண் தொழிலின் மொத்த உடைப்பின் பயனாக அமைகின்றது. பயிர்கள் முற்றிய பிறகு அறுவடை செய்து சேகரிக்கப்பட்டுள்ளன. பயிர்கள் அறுவடை செய்யும் காலத்தை இயற்கை நிகழ்வுகளைக் கொண்டும் அறிந்துள்ளனர். திணை முதிரும் காலத்தை வேங்கை மரம் பூக்கும் காலத்தைக் கொண்டும் அறிந்து கொள்ள முடிந்தது என திணைமாலை நூற்றைம்பதில் கூறப்பட்டுள்ளன.
“என்னாங்கொல் ஈடில்இளவேங்கை நான் உரைப்பப்
போன்னாம் போர் வேலவர் தாம் புரிந்தது ... ...” (தி.மா.நூ:18:1-2)
என்ற பாடலின் வரிகளின் மூலமாக நெல் அறுவடை காலம் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது.
ஊடுபயிர்
ஊடுபயிர் என்பது ஏற்கெனவே பயிரிட்ட நிலத்தில் அந்தப் பயிர் அறுவடைக்கு நெருங்கும் காலத்தில் அதில் அடுத்த பயிரினை இடையே முளைக்க விடுவது ஊடுபயிர் ஆகும். திணைகளைப் பயிரிட்ட நிலத்தில் திணைகள் அறுவடை செய்ய முற்றிய நிலையில் அதற்கு இடையே அவரைக் கொடிகளைப் பயிரிட்டதை ஐந்திணை எழுபதில் கூறப்பட்டுள்ளது.
“ஆவரை பொருந்திய பைங்குரல் ஏனல்.”(ஐ.எ:1:1)
“வேறிகமழ் தண் சுனைத் தெண்ணீர் துளும்பக்
குறிவளர் தேமா.”(ஐ.எ:8:1-2)
ஊடுபயிர் மூலமாக இரட்டைப் பயன் அடையலாம் என்பதை ஐந்திணை எழுபதில் மாமரத்தின் இடையே மிளகுக்கொடிகள் பயிரிட்டு வளர்க்கப்பட்டன என்பதை அறிந்து கொள்ள முடிந்தன.
நம் முன்னோர்கள் பின்பற்றிய வேளாண் அறிவியலை முன்மாதிரியாக கொண்டே இன்றைய வேளாண் முறையும் பின்பற்றப் படுகின்றது என்பதை இக்கட்டுரையின் மூலமாக உணர்ந்து கொள்ள முடிகின்றது.
பார்வை நூற்கள்
1. பரமசிவன் மா. -“சங்ககாலத் தினைப்புன வேளாண்மையில் ஆண் - பெண் உழைப்பும் சமூக மாற்றமும”; அன்னம் பதிப்பகம்.
2. வரதாசன் மு. - “பதினெண் கீழ்க்கணக்கு மூலம்”; சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
3. சிதம்பரனார் சாமி. -“பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்”; அறிவுப் பதிப்பகம்.
4. மாணிக்கவாசகன் ஞா. -“பழமொழி நானூறு மூலமும் தெளிவுரையும்” மூன்றாம் பதிப்பு, பயிர்வரி-2021, உமா பதிப்பகம்.
கட்டுரையாளர்கள்:
த.சங்கீதா, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் உயராய்வு மையம், விவேகானந்தா கல்லூரி, அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி - 629 701, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.
& முனைவர் சு.ஜெயக்குமாரி, உதவிப்பேராசிரியர், தமிழ் உயராய்வு மையம், விவேகானந்தா கல்லூரி, அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி- 629 701, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.