பொருநை நாடு தென்பாண்டி நாட்டின் நெஞ்சகம் ஆகும். இந்நாட்டில் இயற்கையின் அழகை வெளிக்காட்டும் வகையில், மலைகளும் வளமான அருவிகளும் ஆறுகளும், விளங்குகின்றன. திருநெல்வேலி மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையில் பாய்கின்ற பொருநை ஆறானது இம்மாவட்டத்தின் உயிராகவும் உயர்ந்த செல்வமாகவும் மதிக்கப் பெறுகின்றது. இந்த பொருநை ஆற்றுக்கு தண்பொருநை, தாமிரவருணி என்ற பெயர்களும் உண்டு. இதனை ஆசிரியர் கே.வே. பெருமாள் பொருநை வளம் என்ற நூலில் பொருநை ஆற்றின் சிறப்பு, கம்பராமாயணத்தில் பொருநை, இலக்கியத்தில் பொருநை, பொருநையின் புராணம், பொருநை நாடு ஆகியவை பற்றி மிகச் சிறப்பாக எடுத்துரைக்கிறார்.பொருநை ஆற்றின் சிறப்பு:
பொதிகை மலையில் தோன்றிய பொருநை நதியானது தவழ்ந்து அழகாக ஓடி வருகிறது. இதன் வருணனையை ஆசிரியர் கே.வே.பெருமாள் விளக்குகிறார். அவை,
மந்தமா ருதம் வளர் வதோர் மலைய மென்றயுறையுஞ்
சந்த மால் வரை தவழ்ந்து இழி தரும் தாம்பிர வருணி
அந்தமா நதி தீர முற்றமைவுறு அழகார்
கந்தமா மரவனம் உளதென முகம் கரைந்தாய் (1)
என்ற பாடல் வரிகளில் இளந்தென்றல் வீசுகின்ற அழகிய பெருமலையில் பொருநை ஆகிய தாமிர வருணியானது தரையில் இறங்கி ஓடுகின்ற பேராற்றின் கரையில் மாஞ்சோலை காணப்படுகிறது என்று இடம் பெற்றுள்ளது.
கம்பராமாயணத்தில் பொருநை:
தென்பாண்டி நாட்டில் உள்ள பொதிகை மலையும், பொருநை ஆறும் மிகப் பழமை வாய்ந்தவையாகும். கம்பராமாயணத்தில் பொருநை ஆற்றின் பழமையினை ஆசிரியர்
கே.வே. பெருமாள் எடுத்தாள்கிறார் அவை,
”தென் தமிழ் நாட்டு அகன் பொதியில் திரு
முனிவன் தமிழ்ச் சங்கம் சேர்கிற்றிரேல்
என்றும்
அவன் உறைவிடம் ஆகும் ஆதலால்
அம்மலையை இறைஞ்சி ஏகி,
பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை
எனும் திருநதியும் பின்பு ஒழிய
அகன்று வளர் தடஞ்சாரல் மயேந்திரமா
நெடுவரையும் கடலும் காண்பீர்”.(2)
என்ற பாடல் வரிகளில், சுக்கிரீவன் தலைமையில் தெற்கு நோக்கி சீதையைத் தேடிச், செல்லும் அனுமனிடம், இராமன் "நீ எந்த வேலைக்காக அனுப்பப்படுகிறாய் என்பதை நன்கு உணர்வாய். நீ செல்லும் வழியில் பொருநை ஆறுபாயும் பொதிகை மலை உள்ளது. அகத்தியர் நடத்தும் தமிழ்ச் சங்கமும் உள்ளது. நீ அங்கு போனால் தமிழரின் சுவையில் மனதை பறிகொடுத்து விடுவாய் அதனால் அம்மலையைக் கடந்து, மயேந்திர மலைப்பக்கமாக செல்லுவாயாக" என்று கூறினார்.
இலக்கியத்தில் பொருநை:
சங்க இலக்கியம், சிற்றிலக்கியம், நாலாயிர திவ்யப் பிரபந்தம், திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் போன்றவற்றில் தன் பொருநை ஆறு இடம்பெறும் விதம் பற்றி கே.வே.பெருமாள், மிகச்சிறப்பாக விளக்குகிறார்.
சங்க இலக்கியங்களில் பொருநை என்றும் தண் ஆன் பொருநை என்றும் பெயர் பெற்றுள்ளது.
சேக்கிழார் ஆக்கிய பெரிய புராணத்திலே (திருநாவுக்கரசு நாயனார்) தண் பொருந்தம் புனல் நாடு என்று குறிப்பிடப்பெற்றுள்ளது.
பரஞ்சோதி முனிவர் ஆக்கிய திருவிளையாடற்புராணம், பொதிகை என்னும் மலை மடந்தை பெருகு தண் பொருநை என்றும் புனைந்துரைத்துள்ளது.
கம்பராமாயணத்தில் பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை என்னும் திருநதி என்று காட்டுகின்றது.
நம்மாழ்வார் அருளிய திருவாய் மொழியிலே இந்த ஆறு பொருநல் என்று வழங்கப் பெற்றுள்ளது.
முக்கூடற்பள்ளு என்னும் சிற்றிலக்கியத்திலே பொருநை ஆறு பெருகி வர புதுமை ஆடும் பள்ளீரே! என்று புலப்படுத்தப் பெற்றுள்ளது.
கலிங்கத்துப் பரணி என்னும் நூல் பொருநைக் கணவனை வாழ்த்தினவே என்று போற்றுகின்றது.
இராசராச சோழன் உலா பொருநை என்று புகழ்ந்துள்ளது.
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பொருநைத் துறைவன்,
பொற்பாவாய், புதுநீர் ஆடி அருளுகவே என்று புகன்றுள்ளது.
பகழிக் கூத்தர் வழங்கியுள்ள திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் என்னும் நூல் தண்பொருநைப் பேராற்றிலே, தமிழ் நாகரிகம் மணக்கும் கருத்து புனைந்துரைக்கப் பெற்றுள்ளது.
இவ்வாறு பேரிலக்கியங்களும் சிற்றிலக்கியங்களும் தண் பொருநை ஆற்றினையும் நாட்டினையும், தமிழ் நாகரிகத்தின் பிறப்பிடமாக தமிழ் நாகரிகத்தின் பிறப்பிடமாக வரைந்து பறைசாற்றுகின்றன.
புறநானூற்றில் பொருநை:
புறநானூற்றில் பொதிகை மலையின் சிறப்பினைப் பற்றி முரஞ்சியூர் முடிநாகராயர் விளக்குகிறார் அவை,
“நடுக்(கு) இன்றி நிலையரோ....
பொன்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே"! (3)
என்று ஆசிரியர் கே.வே. பெருமாள் புறநானூற்றுப் பாடலில் இடம்பெறும் பொதிகை மலையினைப் பற்றி எடுத்துரைக்கிறார்.
பாரதியார் பாடலில் பொருநை:
பொருநை நதியினைப் பற்றி பாரதியார் கூறியதை ஆசிரியர் கே.வே. பெருமாள் கூறுகின்றார், அவை,
“காவிரி தென்பெண்னை பாலாறு-தமிழ்
கண்டதோர் வைகை பொருநைநதி -என”(4)
என்ற பாடல் வரிகள் ஆகும்.
பொருநையின் புராணம்:
பொருநை வளத்தின் ஆசிரியர் பொருநை நதி உருவான புராணக் கதையினை விளக்குகிறார். அகத்திய முனிவர் சிவபெருமானிடம் திருமணக் கோலத்தைக் காண வேண்டும் என்று வேண்டினார். அகத்தியரே தென்திசையில் உள்ள பொதியமலையில் தவம் புரிக, யாமே அங்கு வந்து எம் திருமணக்கோலத்தைக் காட்டுவோம் என்று கூறினார். தமக்கு தீர்த்தம் அருளுமாறு வேண்டிய அகத்தியருக்கு கங்கையின் தண்ணீரை கமண்டலத்தில் நிறையச்செய்தார் சிவபெருமான். அந்நீரோடு பொதிகை மலைக்கு வந்து தவம் புரிந்தார் அகத்தியர். பொதிகைமலைச் சாரலில் உள்ள பாபநாசத்திலே, சித்திரை முதல் நாளிலே” இறைவன் அகத்திய முனிவருக்கு தம் திருமணக்கோலக் காட்சி அருளினார். கமண்டலத்தில் உள்ள நீரைப் பொதிகை மலையில் விடுமாறு பணித்தார். அதுவே தண்பொருநை ஆறாக மலைச்சாரல்களின் வழியே பாய்ந்து ஓடியது.”(5)
இந்த ஆற்று நீரில் மூழ்குகின்றவர்களின் பாவங்கள், கரும வினைகள் முதலிய தீமைகள் நீங்கிவிடும். இதுவே பொருநை நதி தோன்றிய புராணக்கதை ஆகும்.
பொருநையில் மோட்சம்:
அத்தாள நல்லூரில் உள்ள கஜேந்திர வரதர் பெருமாள் கோயிலில் பொருநை ஆற்றங்கரையில் கஜேந்திரன் என்ற யானைக்கு மோட்சம் அளித்த திருமாலின் பெருமைகளைப் பற்றி கீழே காணலாம். அகத்திய மன்னரால் சாபமேற்ற இந்திரத்துய்மன் என்ற பாண்டிய மன்னன் யானையாக மாறினார். தேவலோகமுனிவர் சாபத்தால் கந்தருவன் முதலையாகி விட்டார். அத்தாள நல்லூரில் உள்ள பொருநை ஆற்றங்கரையில் இந்திரத்துய்மன் என்ற யானை குளித்துக் கொண்டிருக்கும் பொழுது, கந்தருவன் என்ற முதலை கவ்வியது, இதனை,
"குஞ்சர ராசன் வந்து குழும்பிய பிடிகளோடு
மஞ்சன மாடி விழுந்து வண்டினம் மிழற்றும் செய்ய
பஞ்சத காலம் ரண்ணப் பற்றி திடங்கள் மாதோ(6)
என்ற பாடல் வரிகள் விளக்குகிறது. யானையானது வேதனையால் பெருமாளை “ஆதிமூலமே” என அழைத்தது. உடனே பெருமாள் கருட வாகனத்தில் தோன்றி முதலையினை கொன்று யானைக்கு மோட்சம் அளித்தது. இதனை,
"வட்டமாய் நேமி தன்னை மலர் கணால் நோக்க மாயோன்
விட்டிகழ் ஒளியிற் சென்று விறல் கர(வு) இரு துண்டாக
வெட்டியே விடவாய்ச் செய்ய வெந்நிறல் முதலையாகப்
பட்ட அவ்வுருவம் நீங்க பழம் படியாகிற்றன்றே(7)
என்ற பாடல் வரிகள் விளக்குகிறது.
பொருநை நாடு:
பொருநை ஆறு புறப்படும் முதல் வட்டத்தை அம்பாசமுத்திரம் வட்டம் என்பர். இவ்வட்டத்தின் தெற்கு மேற்கு எல்லையாக மேற்குத் தொடர்ச்சி மலைகள் அமைந்துள்ளன. பெருங்கடல் போல நீரை உடைய குளத்தை சமுத்திரம் என்றனர். நாயக்க மன்னர் காலத்திலே இங்கு வந்து குடியேறிய “படைத் தலைவர்கள் பெயர்களால், பெருங்குளங்கள் பல ஆங்காங்கே அமைந்தன. இராவணன், அம்பா என்பவர்களுடைய பெயரால் தென்பாண்டி நாட்டிலே ஊர்கள் அமைந்தன. அவை முறையே இரவணசமுத்திரம், அம்பாசமுத்திரம் என வழங்கப் பெற்று வருகின்றன”.(8) இவ்வூர்களைச் சுற்றி பொருநை நதி பாய்கிறது என்று ஆசிரியர் கே.வே. பெருமாள் கூறுகிறார்.
கம்பராமாயணம், சங்க இலக்கியம், சிற்றிலக்கியங்கள் போன்றவற்றில் பொருநை நதி இடம் பெற்றுள்ளதையும், மேலும் இவ்விலக்கியங்களில் பொருநை நதியின் பங்கு அதிகளவில் இருந்துள்ளதையும், நதியின் சிறப்புகளையும், நாட்டின் சிறப்புகளையும் கே.வே. பெருமாளின் பொருநை வளம் என்ற நூலின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. ஒரு நதி பல பெருமைகளோடு விளங்கியதையும், திருநெல்வேலி, தென்காசி மாவட்ட மக்களுக்கு பொருநை நதியாகிய தாமிரபரணி தண்ணீர் குடிநீராக விளங்கியதையும் இப்பகுதியின் மூலம் உணர முடிகின்றது.
துணை நின்ற நூல்கள்
1. மதுரகவியின் அத்தாள நல்லூர் ஸ்தல மான்மியம் ப.எ.13
2. கம்பராமாயணம் நாட விட்ட படலம் பா.எ. 4477
3. பொருநை வளம் ப.எ.11
4. மேலது ப.எ.27
5. மேலது ப.எ.34
6. மதுரகவியின் அத்தாள நல்லூர் ஸ்தல மான்மியம் பா.எ.152
7. மேலது பா.எ.172
8. பொருநை வளம். ப.எ.72
- மீ.பார்வதி, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, குற்றாலம் (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இணைவு பெற்றது)
நெறியாளர்: முனைவர் மு.கலாமாரி, உதவிப்பேராசிரியர் (சு/பி), தமிழ்த்துறை, ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, குற்றாலம் (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இணைவு பெற்றது)