ஆங்கிலேயர்கள் காலத்தில் பல்கலைக்கழகங்களுக்காண வேந்தராக ஆளுநர் நியமிக்கப்பட்டார். ஆளுநர் என்பதே ஓர் அலங்காரப் பதவி. அதிலும் பல்கலைக்கழக வேந்தர் என்பது எந்த அதிகாரமும் அற்ற பதவி! ஆனால் இன்று அதை வைத்துக் கொண்டு, ஆளுநர் தமிழ்நாட்டில் கல்விக்கூடங்களைக் கவனமாகச் சிதைத்துக் கொண்டிருக்கிறார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் அதிகாரம் உடையது என்றும், அரசின் வழியில்தான் ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும் நீதிமன்றங்கள் திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டன. ஆனாலும் தமிழ்நாட்டில் ஆளுநராக இருக்கும் ஆர் எஸ் எஸ் ரவி திருந்துவதாக இல்லை.
அந்தப் பதவியை பயன்படுத்திக் கொண்டு தன்னால் என்னென்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் அவர் செய்து கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் ஒரு பல்கலைக்கழகத் துணைவேந்தர் மீது குற்றவியல் சட்டங்களின் கீழ் வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவர் இன்னும் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதற்கு, ஆளுநர் துணை புரிகின்றார். சென்னைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட தொன்மையான, புகழ் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் சிலவற்றில், ஆண்டுக் கணக்கில் அப்பதவி நிரப்பப்படாமல் இருக்கிறது. அதை நிரப்புவதற்கும் முட்டுக்கட்டை போடுகின்றவராகவே ஆளுநர் செயல்படுகின்றார்.
இப்போது நெல்லையில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றப் பேரவைக்குக் கவிதா என்பவரை ஆளுநர் நியமித்துள்ளார். அவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சார்ந்தவர் என்பதை எல்லோரும் அறிவர். அப்படி இருக்க அவரை ஒரு பெரும் பொறுப்பில் அமர்த்துவது அடிப்படையிலேயே ஒரு சார்புத் தன்மை உடையதாகவும், முழுக்க முழுக்க அரசியல் செயல்பாடாகவுமே உள்ளது.
ஆளுநரின் இந்தச் செயலைக் கண்டித்து, இன்று அங்கு மாணவர் இயக்கங்கள் போராட்டம் நடத்தி இருக்கின்றன. தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் இதனைக் கண்டித்தும் இருக்கிறார்கள். ஆனாலும் ஆளுநர் தன் பிடிவாதத்தை மாற்றிக் கொள்வதாக இல்லை.
அரசு, நீதிமன்றம், சட்டம் எல்லாவற்றையும் புறக்கணிக்கும் ஆர்எஸ்எஸ் ரவிக்கு இனி மக்கள் இயக்கமே பாடம் கற்பிக்க வேண்டும். நாடு முழுவதும் மக்கள் திரள் போராட்டங்களை ஆளுநருக்கு எதிராக நடத்த வேண்டிய கட்டம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது.
இல்லையானால், இவர் தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் பல் காவிக் கழகங்களாக ஆக்கி விடுவார்.
- சுப. வீரபாண்டியன்