மட்பாண்டங்களின் பயன்பாடு மிகவும் குறைந்துவிட்டதால் குடம், தோண்டி, சட்டி, பானை ஆகிய தமிழ்ச் சொற்களும் அருகிய வழக்காகி வருகின்றன.  சுமார் ஐம்பது ஆண்டு களுக்கு முன்னால் எல்லாருடைய வீடுகளிலும் இப்பாத்திரங்களும், சொற்களும் பயன்பாட்டில் இருந்தன.  உணவைச் சமைப்பதற்கும், நீரைச் சேமிப்பதற்கும் இப்பாண்டங்கள் பயன்பட்டன. பொங்கல் பண்டிகை காலங்களில் பெரிய பானை களில் பொங்கலிடுவது வழக்கம். பெரிய பானை களில் சமைப்பதால்தான் ‘பெரும் பொங்கல்’ என்று பெயர் வந்திருக்கலாம். பொங்கல் முடிந்த பிறகு அப்பானைகளை வீட்டில் பாதுகாப்பார்கள். அப்பானைகளில் தானியங்களைச் சேமித்து வைப் பார்கள். விதை நெல், மணிலா போன்றவற்றையும் சாணம் கலந்து எதிர்காலப் பயன்பாட்டிற்கு வைப்பார்கள். பெரும்பானைகள் ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.  அந்த அறைக்குப் பேரே ‘பழங்கலத்து அறை’ என்று சொல்லுவார்கள்.  மட்கலங்களுக்கு நீண்ட வரலாறு உண்டு.  அவற்றைக் குறித்த ஏராளமான சான்றுகள் இலக்கியங்களில் காணப்படுகின்றன.

மண் ஒன்றுதான், அதுவே பல பாத்திரங் களாகச் செய்யப்படுகின்றது என்று திருமூலர் கூறுவார்.  ‘ஒன்றுதான் பல நற்கலம் ஆயிடும்’ என்பது அவரது பாடல் வரி. குயவன் தனது சக்கரத்தில் வைத்த மண்ணைக் கொண்டு தன் மனதிற்கு ஏற்றாற்போல் கலங்களைச் செய்வான் என்றும் திருமூலர் சொல்வார், சைவ சித்தாந்தக் கருத்துக்களை வலியுறுத்த திருமூலர் இவ்வுவமை யினைக் கையாண்டுள்ளார்.

நன்னூலார் கழற்குடம், இல்லிக்குடம் ஆகிய இரண்டு சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.  கழல் என்பது சிறுவர் விளையாடப் பயன்படுத்தும் ஒரு வகைக் காய்.  கழற்காய் போட்ட குடத்தை ஆசிரியர் ஆகாதவருக்கு உவமையாகக் கூறுகிறார் நன்னூலார்.  தன்னுள்ளே போட்ட முறைப்படி இல்லாமல் முன் போடப்பட்டவற்றையும் பின் போடப்பட்டவற்றையும் அம்முறை மாறிப் போகு மாறு கொட்டும்போது விரைவிலே தன்னுள்ளே கொண்ட கழற்காய்களைக் கொடுக்கும்.  இது கழற்காய் குடத்தின் இயல்பு.  இல்லிக்குடம் என்ற ஒன்றையும் நன்னூலார் குறிப்பிடுகிறார்.  இல்லிக் குடம், நீரை ஊற்றுந்தோறும் ஒழுகவிட்டுவிடும்.  அதுபோல் கடை மாணாக்கர் நூற்பொருளைக் கற்பிக்குந்தோறும் மறந்து விடுவர்.  ஆசிரியர், மாணவர் இயல்புகளைத் தெளிவுபடுத்த நன்னூலார் மட்கலங்களை உவமையாகக் கூறியுள்ளார்.

இனி, தமிழிலக்கியத்தில் வரும் மட்கலம் குறித்த ஓரிரு உவமைகளையும். அபபிரம்சா மொழியில் வரும் ஓர் உவமையையும் ஒப்பிட்டுக் காண்போம்.  திருக்குறளில் வினைத்தூய்மை அதிகாரத்தில் ஒரு குறள் பசுமண் கலத்தைக் குறித்து வருகின்றது.

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்

கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று (660)

பிறரை வஞ்சனை செய்து சேர்க்கப்பட்ட செல்வம் பச்சை மண் பாத்திரத்தில் நீரைச் சேகரித்து வைத்தலுக்குச் சமம்.  சுடாத பச்சை மண் சட்டியில் தண்ணீர் நிற்காது.  அதுபோல் வஞ்சத்தால் சேர்த்த செல்வமும் நிற்காது.

இனி, குறுந்தொகையில் வரும் ஓர் உவமையைப் பாருங்கள்.

நல்லுரை இகந்து புல்லுரை தாஅய்

பெயல்நீர்க் கேற்ற பசுங்கலம் போல

உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி

அரிது அவாவுற்றனை நெஞ்சே நன்றும்

பெரிதால ம்மநின் பூசல் உயர்கோட்டு

மகவுடை மந்தி போல

அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே  (குறுந். 29)

இப்பாடல் ஒளவையார் பாடியது.  தலைவன் தலைவியை இரவு நேரத்தில் சந்திக்க விரும்பு கிறான்.  அதனைத் தோழி மறுத்து விடுகிறாள். திருமணம் செய்துகொள்ள (வரைந்து கொள்ள) வேண்டும் என்று கூறுகிறாள். தலைவன் அமைதி கொள்ளவில்லை.  மீண்டும் இரவுக் கூட்டத்தையே விரும்புகிறான்.  அந்நிலையில் தலைவன் தன் நெஞ்சை நோக்கிக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

நெஞ்சே! நல்ல உரைகளை ஒழித்து பயனற்ற உரைகளைப் படரவிட்டாய்! பெய்கின்ற மழை நீரை ஏற்றுக்கொண்ட சுடப்படாத கலம் அந்நீரைத் தாங்க முடியாமல் வெளியேற்றிவிடும்.  அதுபோலவே உள்ளத்தினால் தாங்கமுடியாத ஆசை வெள்ளத்தில் நீந்திச் சென்று பெறுதற்கு அரியதைப் பெற விரும்பினை, உயர்ந்த மரக்கிளையிலுள்ள குட்டி யால் தழுவப்பெற்ற பெண்குரங்கு போல என் கருத்தறிந்து நிறைவேற்றுவோரைப் பெற்றால் உனது பூசல் மிகவும் பெருமையுடையது.  பசுமண் கலத்தில் நீர் தங்காதது போல காதலியைச் சந்திக்க விரும்பும் அளவுகடந்த ஆசையையும் மனம் தாங்காது என்பது போல உவமை வந்துள்ளது. இதே உவமை அபபிரம்சா பாடலில் வேறு விதமாக வந்துள்ளது.

நீண்ட நாட்களாகத் தலைவியைச் சந்திக்க முடியவில்லை தலைவனால். மனதில் கட்டுக் கடங்காத ஆசை.  அவ்வாறு சந்தித்துவிட்டால் மீண்டும் பிரியக்கூடாது.  பிரிவைத் தாங்கி உயிர் வாழ்தல் இயலாது.  என்ன செய்வது? ஏதாவது அற்புதங்கள் நிகழ்த்தி அவளோடு ஒன்று கலந்து விடவேண்டும் என்று தன் அளவுகடந்த ஆசையை வெளிப்படுத்துகிறான்.

நான் காதலியை எவ்வாறேனும்

சந்தித்தால்

கேள்விப்படாத ஓர்

அற்புதத்தை நிகழ்த்துவேன்

பசுமண் கலத்துப்

புகுந்த நீர்போல

அவளுடைய உடலில்

என்னைக் கரைத்துக் கொள்வேன்1

‘பசுமண் கலத்துப் பெய்த நீர்போல’ என்ற இந்த உவமை தமிழிலும். அபபிரம்சா பாடல் களிலும் காணப்படுவது சற்று வியப்பாக இருக் கிறது.  அரிது அவாவுற்ற இரு காதலர்களை இப் பாடலில் காணமுடிகிறது.

1.  If ever (somehow) I happen to meet my beloved. I will workout an unheard of miracle, as water permeates a will fresh earthern dish so shall I enter (my love) with all my being (Apabhramsa Grammar, p. 101)

Pin It