ஆய்வு நூல்: கறிச்சோறு (நாவல்)

சி.எம்.முத்து

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு, சென்னை.

Cm.muthu 350சி.எம்.முத்து எழுதிய நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ‘கறிச்சோறு’ என்ற நாவலில் காணப்படும் தஞ்சை மாவட்ட வட்டார வழக்கு மொழி இக்கட்டுரையில் வருணிக்கப் படுகிறது, பார்வைக் கிளைமொழி என்ற தொடர் படைப்பாளிகள் தங்கள் படைப்பில் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் புதுமையான மொழிக் கூறுகளைக் குறிக்கும். 

வட்டார வழக்குச் சொற்களையும், வட்டார வழக்கிற்கேயுரிய ஒலியனியல் அமைப்புக் கூறுகளையும் பார்வைக் கிளைமொழி கொண் டிருக்கும்.  அவை மட்டுமில்லாமல் படைப்பாளி தானே மரபு சார்ந்த மொழிக் கூறுகளில் புதுமை காணும் முயற்சியில் புதிய எழுத்துமுறையைப் புகுத்துதல், மீகூறுஒலியன்களை (suprasegmentals) எழுத்தில் கொண்டுவருதல் ஆகிய கூறுகளும் பார்வைக் கிளைமொழியில் இடம்பெறலாம்.  படைப்பின் மொழிக்குப் படைப்பாளியே முழு பொறுப்பாகிறான்.  படைப்பாளி தன் முகத்தைக் காட்டாமல் பாத்திரங்களின் பின்புலத்திற்கேற்ற மொழியைப் படைக்கும்போது படைப்பு சிறப்படைகின்றது.

‘கறிச்சோறு’ நாவல் சாம்பசிவம்- கமலா ஆகிய இருவரின் நிறைவேறாத காதல் கதையாக அமைந்துள்ளது.  அவர்கள் ஒன்று சேருவதற்கு அவ்வூரில் நிலவும் சாதியமைப்பு தடையாக உள்ளது.  கள்ளர் என்கிற சாதியமைப்புக்குள்ளே உட்பிரிவுகள் எவ்வாறு வலுவாகச் சாதியத்தைத் தக்கவைத்து இறுக்கமாகவுள்ளன என்பதை மையமாகக் கொண்டு கதை நகர்ந்து செல்கிறது. 

ஊரில் வாழும் ஒருசில ‘பெரிய’ மனிதர்கள் சுய லாபத்திற்காகச் சாதியை அவ்வப்போது ஊறு காயைப் போல பயன்படுத்துகிற பாங்கினையும் நாவல் நாசூக்காய் வெளிப்படுத்துகிறது, ‘வாகரயோட கவுரதயை’க் காப்பாற்ற சில உயிர்கள் பலியிடப்ப டுகின்றன.  அறுபட்ட ஆட்டுத்தலைகளைப் பார்த்துப் பார்த்துப் பழகிப்போய்விட்ட ஊர்க் காவல் காக்கும் அந்தக் கவுச்சிசாமி இளைய முனீஸ்வர தேவதை மனிதத் தலைகளைக் காவு கேட்கிறதா? என்ற கேள்வியோடு நாவல் முடிகின்றது.

“சமூக நேச உணர்வு இல்லாமை சாமி அளவில் நின்றுவிடவில்லை.  ஆழமாகப் பரவி சாதி உட்பிரிவுகளுக்கு இடையேயும் நல்லுறவைக் கெடுத்துவிட்டது” (சாதி ஒழிப்பு, ப. 44) என்ற அம்பேத்கரின் கூற்றினைப் பிரதிபலிப்பதாக இந் நாவல் அமைந்துள்ளது.  இனி நாவலில் காணப் படும் பார்வைக் கிளைமொழியை விவரிப்போம்.

எழுதும் முறையில் புதுமை

சில சொற்களில் சொல்லின் முதலிடம் வரும் இகரத்தைத் தவிர்த்துவிட்டு எழுதும் முறையைப் படைப்பாளி இந்நாவலில் ஆங்காங்கே கடைப் பிடிக்கிறார்.  இவ்வாறு எழுதும் முறை புதுமை யாக உள்ளது.

ம்புட்டு > இம்புட்டு (ப.4)

ந்தடே  > இந்தடே (ப. 18)

ல்லாட்டி > இல்லாட்டி (ப. 19)

ப்டி > இப்டி (ப. 40)

ப்பக்கூட > இப்பக்கூட (ப. 40)

தமிழ்மொழியில் உயிர் அல்லது உயிர்மெய் எழுத்துக்களே சொல்லுக்கு முதலில் வரும்.  தனி மெய் வருவதில்லை.  ஆனால் நாவலாசிரியர் தனி மெய்கள் இடம்பெறுமாறு சொற்களை அமைத் துள்ளார்.  இது புதுமை.  பொதுவாகத் தனிமெய் களை உச்சரிக்கும்போது இகரத்தைச் சேர்த்தே உச்சரிப்பர்.  ப் என்ற தனிமெய்யை உச்சரிக்கும் போது (ip) என்றே நாம் அனைவரும் உச்சரிப்போம்.  இதனை ஆதாயமாக எடுத்துக்கொண்டு ‘இந்த’ என்பதனை ‘ந்த’ என்றும் இப்படி என்பதனை ‘ப்படி’ என்றும் எழுதும் முறையைச் சி.எம். முத்து பின்பற்றுகிறார்.  மெய், உயிர்நீட்சியை (அளபெடை) உணர்த்த தனி என்பதனை தனிஉலகம் (ப. 12) என்றும், ‘ஊர்ந்து’ என்பதனை ‘ஊர்ர்ந்து’ என்றும் எழுதும் முறையில் மாற்றங்களை ஏற்படுத்துகிறார்.  கி. ராஜநாராயணன் படைப்புகளில் இத்தகைய மாற்றங்களை அதிகம் காணமுடிகின்றது.

ஒலிநிலையில் மாற்றங்கள்

சில சொற்களில் மொழிக்கு இடையில் வரும் உயிரொலிகள் கெடுகின்றன.  கெடுதல் என்றால் மறைதல் என்று பொருள்.  இகரமும் உகரமும் கெடுவதனைக் காணமுடிகின்றது.

எடுத்துக்காட்டு

தெரியாது     >    தெர்யாது (ப. 55)

ஒருத்தரும்    >    ஒர்த்தரும் (ப. 77)

சரிதான்       >    சர்த்தான் (ப. 140)

பிரமன்         >    விர்மன் (ப. 126)

அசைகெடுதல்

சொல்லுக்கு இடையில் வரும் அசைகள் கெட்டு உச்சரிப்பு முயற்சி மேலும் எளிமைப் படுத்தப்படுகின்றது.  எடுத்துக்காட்டு

போகும்போதே   >   போம்போதே (ப. 86)

கூப்பிடாதே        >   கூப்டாதே (ப. 87)

கூட்டில்              >    கூட்லெ (ப. 88)

திருவிழா           >    திருளா (ப. 128)

அகப்படுமா       >    ஆப்டுமா (ப. 129)

அகப்படுமா என்ற சொல்லில் ககரம், பகரம் ஆகிய அசைகள் கெடுவதோடு முதலில் வரும் அகரம் நெடிலாகவும் நீட்சிபெற்றுள்ளது.

மொழிமுதல் யகரம் தோன்றுதல்

அகர ஏகாரத்துடன் தொடங்கும் சொற்கள் சில யகர மெய் சேர்த்து ஒலிக்கப்படுகின்றன.

ஏன்         >    யா (ப. 30)

ஏன்டா     >    யாண்டா (ப. 30)

அண்ணி  >    யண்ணி (ப. 30)

அம்மா     >    யம்மா (ப. 31)

மொழிமுதல் வகரம் கெடுதல்

விழவில்லை என்ற சொல்லில் வரும் மொழி முதல் வகரம் கெட்டு இகரம் உகரமாக மாறுகிறது.

விழவில்லை    >             உளுவலை (ப. 77)

விடுங்க          >             உடுங்க (ப. 84)

மொழியிடை இகரம் உகரமாதல்

இல்லை என்ற சொல்லில் இருக்கும் முதல் இகரம் மொழிக்கு இடையில் வரும்போது உகர மாக மாற்றமடைகின்றது.  எடுத்துக்காட்டு

ஒண்ணுமில்லை     >             ஒண்ணுமுல்ல (ப. 27)

நியாயமில்லை       >             நாயமுல்ல (ப. 131)

நேரமில்லை           >             நேரமுல்ல (ப. 187) என்றைக்கும்

இல்லாமல்             >             என்னக்கிமுள்ளாம (ப. 130)

ழகரம்-ளகரமாதல்

ழகரத்துடன் வரும் சொற்களில் அவ்வொலி ளகரமாக மாற்றம் பெறுகின்றது.  எடுத்துக்காட்டு

புழு      >             புளுவு (ப. 26)

எழவு  >             எளவு (ப. 26)

திருவிழா       >   திருளா.

பதில் > வதிலு

பதில் என்ற சொல்லில் வரும் மொழி முதல் பகரம் கெட்டு வகரமாகத் திரிவதனைக் காண முடிகிறது.  வீணா என்ற சொல் பீணா என்றும் விஸ்வாஸ் என்ற சொல் பிஸ்வாஸ் என்றும் (வகரம் பகரமாதல்) வங்காளம் போன்ற கிழக்கு வடஇந்திய மொழிகளில் இயல்பாகக் காணலாம்.  அத்தகைய ஒலிமாற்றத்தை இச்சொல்லில் காண முடிகிறது.  பதிலாக என்பது பதுலா என்றும் ஓரிடத்தில் வந்துள்ளது.

யோக்கியதை           >             ரோக்கிதி

யோக்கியதை என்ற தமிழில் வழக்கும் வட சொல் ரோக்கிதி என்று திரிந்து வழங்குகிறது.  அவ்வாறே யோசனை என்ற சொல் ரோசனை என்று வந்துள்ளது.  யகரம் ரகரமாக இச்சொற் களில் மாற்றமடைந்துள்ளது.  பிற கிளைமொழி களில் ஓசனை, ஓக்கியதெ என்று வருவதைக் காணலாம்.

திமிர்  >  துமுரு

சில சொற்கள் மாற்றமடைவது மிகவும் விநோதமாகக் காணப்படுகின்றன.  திமிர் என்ற சொல் துமுரு என்று திரிந்துள்ளது.  பேச்சு வழக்கில் இறுதியில் வரும் மெய்யோடு உகரம் சேர்ப்பது இயல்பு.  இதனால் திமிர் என்ற சொல் திமிரு என்று மாற்றமடையும்.  கட்டுரையாசிரி யரின் கிளைமொழியில் திமிரு என்றே இச்சொல் வழங்குகிறது.  ஆனால் படைப்பாளியின் மொழியில் திமிரு என்பது துமுரு என்று வந்துள்ளது.  இறுதியில் வரும் உகரத்தின் தாக்கத்தால் முதலில் வரும் இகரங்கள் உகரமாகத் திரிந்துள்ளன.

திமிர் > திமிரு > திமுரு > துமுரு

நாவலில் ஆங்கிலச் சொற்கள்

கிராமச் சூழலில் கதைப் பின்னணி அமைந் துள்ளதால் நாவலில் ஆங்கிலச் சொற்கள் மிகவும் சொற்பமாகவே காணப்படுகின்றன.  படித்தவர் களின் மொழியில் கலக்கும் ஆங்கிலச் சொற் களைக் களைய வேண்டுமானால் கிராமத்து மக்கள் பேசும் தமிழ்மொழியை ஆராய்ந்து முன் மாதிரியாகக் கொள்ளலாம்.  தவிர்க்கமுடியாத சில ஆங்கிலச் சொற்களை அவர்கள் தமிழ்ப்படுத்தி உச்சரிப்பது மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.  வயல்களுக்குப் பூச்சிமருந்து தெளிக்கும் கருவியின் பெயர் ஸ்பிரேயர் ((sprayer) என்பதாகும்.  இச் சொல் பெரயரு (ப. 48) என்று தமிழ்ப்படுத்தப் பட்டுள்ளது.  மொழிமுதல் மெய்மயக்கம் தவிர்க்கப் படுதலை இங்குக் கவனிக்கலாம்.  கவர்மெண்ட் என்ற சொல் கெவுருமுண்டு என்றும் கலெக்டர் என்ற சொல் கலைட்டரு என்றும் வழங்குகின்றன.  மொழி இறுதியில் மெய்யொலிகள் வரும்போது உகரம் சேர்க்கப்படும்.  இதனை ஏற்கனவே குறிப் பிட்டுள்ளோம்.

இலக்கணச் சிறப்பியல்புகள்

முதலாவதாக.  மூவிடப் பெயர்களைக் காண் போம்.

நம்ப   (நம்) (ப. 155)

நம்பளுக்கு  (நமக்கு) (ப. 152)

ஒம்மை            (உம்மை) (ப. 151)

ஒமருக்கு        (உமக்கு) (ப. 152)

இவுனுக்கு     (இவனுக்கு) (ப. 60)

இவுளுக்கு     (இவளுக்கு) (ப. 119)

இவுரு                (இவர்) (ப. 27)

அதுங்க           (அவை) (ப. 47)

இவற்றில் ஒமருக்கு என்ற மூவிடச்சொல்லில் வரும் ருகரத்திற்கு விளக்கம் சரியாகத் தெரிய வில்லை.  அவருக்கு என்ற சொல்லுக்கு இணையாக இச்சொல் உருவாக்கப்பட்டிருக்கலாம் (analogical creation)).  ஒருமை-பன்மையில் பன்மையை உணர்த்த இரு விகுதிகள் காணப்படுகின்றன.  ஊரான் என்பது ஒருமை.  ஊராரு என்பது பன்மை.  சற்று மரியாதை குறைவாகக் குறிப்பிட ஊரானுங்க என்று பன்மை இருப்பதைக் காணலாம்.  இவுனுங்க, அவுனுங்க போன்ற பன்மைச் சொற்களையும் கவனிக்கலாம்.  பய (பயல்) என்பது ஒருமை.  பயலுவ (பயல்கள்) என்பது பன்மை.

வேற்றுமை உருபுகளில் - ஆக என்பதை (purposive case) என்பர்.  எழுத்து வழக்கில் எனக்காக, உனக்காக என்று வரும்.  தஞ்சை மாவட்ட வட்டார வழக்கில் - ஆவ என்று மாறி வருகிறது.

ஒனக்காவ (ப. 184)

எனக்காவ (ப. 184)

எதுக்காவ (ப. 102)

மச்சானுக்காவ (ப. 130)

அந்தப் பக்கம் என்பது அந்தண்ட (ப. 3) என்று வழங்குகிறது.  ஒரு பக்கமும் ஒரண்டயும் என்று திரியும்.  வினைச்சொற்களிலும் சில மாற்றங் களைக் காணமுடிகிறது.  எடுத்துக்காட்டு.

சொன்னிச்சி (சொல்லிற்று)

பேசிகிட்டிருந்தம் (பேசிக்கொண்டிருந்தோம்) (56)

வச்சிருப்பன் (வைத்திருப்பேன்) (ப. 84)

போட்டிருப்பன் (போட்டிருப்பேன்) (ப. 84)

நா மாட்டன் (நான் (வர) மாட்டேன்) (ப. 16)

இடப்பொருளையும் நேரப்பொருளையும் உணர்த்தும் ஏழாம் வேற்றுமை உருபு-இல் என்பது ல என்று திரிகிறது.

மூஞ்சில (ப. 27)

நேரத்துல (ப. 27)

இந்தூர்ல (இந்த ஊரில்) (ப. 147)

உறவுமுறைச் சொற்கள்

தஞ்சை வட்டார வழக்கிற்கேயுரிய உறவு முறைச் சொற்கள் சிலவற்றை இந்நாவலில் காணமுடிகிறது.

ஒண்ணன்     (உன் அண்ணன்) (ப. 6)

ஒம்மாள         (உன் அம்மாவை) (ப. 7)

ஒப்பாரு          (உன் அப்பா) (ப. 101)

அப்பாரு         (அப்பா) (ப. 31)

ஒக்காள          (உன் அக்காளை) (ப. 159)

மருவப்பிள்ளை       (மருமகப்பிள்ளை) (ப. 56)

மவங் (மகன்)

ஒண்ணன், ஒப்பாரு, ஒம்மா போன்ற சொற்கள் இம்மாவட்டத்திற்கான தனித்துவமானவை.  ஙொண்ணன், ஙொக்கா போன்ற சொற்கள் பிற வட்டார வழக்கில் காணலாம்.  யாய் (உன் தாய்), ஞாய் (என் தாய்).  எந்தை (என் தந்தை), நுந்தை (உன் தந்தை) போன்று பழந்தமிழில் உறவுமுறைச் சொற்கள் இருந்தன.

சிறப்பான பொதுச் சொற்கள்

நாவலில் காணப்படும் தஞ்சை மாவட்டத் திற்கேயுரிய சிறப்பான வழக்குச் சொற்களைக் காணலாம்.  அவை கீழே தரப்படுகின்றன.

பம்பல்         -              கரையில் பத்தடி தூரத்துக்கு தள்ளி பம்பல் விட்டு நின்றுகொண்டிருக் கிற ஆலமரத்திலிருந்து காக்காய் ஒன்று...  (ப. 2)

கும்மாளி       -              ஒரு விடலைப் பயல்...  சந்தோஷப் பட்டு கும்மாளி போடுகிறான் (ப. 3).

வாகரை         -              நம்ம வாகரயில அங்கல்லாம் போகணு முனா செத்த யோசிக்கணும்.

மித்த  -              வேலை செய்கிற நேரம் தவிர மித்த நேரங்களில் வெள்ளை சள்ளைக்கு குறைவில்லை (ப. 9)

வாமடை        -              வாமடையிலிருந்த பொந்துகளில் சர்வ அலட்சியமாக கைநுழைத்து...  (ப. 17) குட்டி

கொடாப்பு   -              ஆட்டுக்குட்டிகளை அடைக்கும் குட்டி கொடாப்பு இவற்றை வாரி சுமந்து கொண்டு...

தண்டட்டி      -              காதில் தண்டட்டி ஆட கனத்த ஜோடுகளோடு நடந்து...

ஒத்தகம்          -              அவளது சம்மதமும் ஒத்தகமும் இல்லாமல் எப்படி முடியும் (ப. 20)

மித்தது            -              மித்தது மூணும் பொண்ணு (ப. 29)

வெங்காரி    -              நெட்டைப் பக்கம் வெங்காரி பாய்ந்து கொண்டிருந்த வயல்களில் (ப. 17)

உள்ளாந்         -              அவருக்கு உள்ளாந்திரத்தில்

திரத்தில்                        தோன்றியது (ப. 29)

வெகுசா         -              கம்பரிசி அடிச்சி வெகுசா குமிச்சி கெடக்கு (ப. 31)

நருளு                -              இம்புட்டு நருளு எங்கேருந்துதான் பெருச்துச்சோ தெரிய (ப. 32)

முச்சூடும்      -              ராமுச்சூடும் பருத்திக் கொல்லையில் மாடு வெட்றதும் (ப. 32)

ரெண்டாங்   -              ரெண்டாங்கட்டிப் பயல் மூணு

கெட்டி                              களுதை வயசாயி (ப. 45)

ஒடிசல்             -              சற்று ஒடிசலான உருவந்தான் (ப. 46)

கடுசு -              என்னாம்மா ம்புட்டு கடுசு காத்தாலயே (ப. 50)

பொக்கு          -              வீட்டுப்பக்கம் வருகையில் பயித்தம் பொக்கு மறப்பில் (ப. 50)

நெகுர்               -              ஆறுலயும் சாவு நூறுலயும் சாவு

பண்ணு                          அதைப்பத்தி நா நெகுர் பண்ணல (ப. 60)

குடாப்பு          -              குடாப்பிலிருந்து கோழிகளை இன்னும் மேச்சலுக்கு விடவில்லை (ப. 62)

அசங்காத     -              எதற்கும் அசங்காத கட்டை (ப. 62)

ஏளுசத்து       -              அவர்கள் ஏளுசத்திற்கு ஆளாகப் பிரியமில்லை (ப. 64)

வா வச்சிப்   -              தூற்றுதல், குறைசொல்லுதல் (ப. 68) பேசறது           

ரோசிச்சி      -              யோசித்து, யோசனை செய்து (ப. 67)

வலிக்கன்      -              கெடையாட்லேருந்து தனியா ஒதுங்கிப்போன வலிக்கன் குட்டி மாறி (ப. 68)

பொரணி       -              அறுத்து விடுகிறதிலோ பொரணி சொல்  சொல்கிறதிலோ பலே கில்லாடி... (ப. 70)

தண்டுபடும்               -              அப்படி அவர் கண்ணில் தண்டு படும் பச்சத்தில்...  (ப. 71)

அணவாய்    -              கதவோரம் போய் அணவாய் சாய்ந்தபடிக்கு கமலாவிடம்... (ப. 75)

நைச்சிய        -              அப்பா வென்று நைச்சியமாகக்மாக கூப்பிடுகிறான் (ப. 77)

உத்தியம்       -              கலைட்டரு உத்தியம் பாக்கப் போற (ப. 86)

நடுவாந்தி    -              நடுவில் (ப. 100)

ரத்தில்   அக்குசு    -   சாதிகெட்ட பயவூ ட்லல்லாம் போயி கொள்வன கொடுப்பன வச்சுக்கணும்னு ஒண்ணும் அக்குசு வந்துரல (ப. 118)

அசமடக்கு    -              அவர்களை ஒருவழியாய் அச மடக்கினார் (ப. 122)

சுள்ளாப்         -              நம்பப் பயலுவ ரொம்ப சுள்ளாப்பானபான ஆளுங்கதான் மச்சா (ப. 137)

சூவேறுதல்  -              இதற்குள் கால்கள் ரெண்டும் சூவேறி விடுகிறது (ப. 140)

ஆலோடி        -              ஆலோடியிலும் வராந்தாவிலும் ஜமுக்காளம் விரித்து (ப. 142)

மென்னி         -              மென்னியை பிடித்துக் கொண் டான் (குரல்வளை) (ப. 148)

எதிரொலிச் சொற்கள்

எளப்பம்         -              பையனுவளும் எளப்பம் சளப்பமா

சளப்பமா                     இல்லை.  நல்ல சூட்டி கையாருக் கானுவ (ப. 34)

கடங்கப்பி    -              குடும்பத்துல கடங்கப்பி ஏதாச்சும் இருப்பான்னு (ப. 34)

ஜோருபாரு  -              யாண்டா சம்மதிக்காது ஆளு ஜோரு பாரா இல்லன்னா? (ப. 56).

வளக்கம்        -              கோனான்ல இப்டி வளக்கம் சளக்க சளக்கம் முல்ல (ப. 57)           

கட்டு சட்டு   -              ஊர்ல கட்டுசட்டுன்னு ஒண்ணுருக் கப்ப (ப. 58)

நிலநீச்சு         -              நிலநீச்செல்லாம் ஏக தடபுடல்ல  (ப. 64)

வெறப்பு         -              சம்மந்தி வீமஞ்சூரனாட்டம் வெறப்பு

சறப்பு                              சறப்பாருக்கணும் (ப. 101)

நெரக்க            -              சபையில வந்து குந்துனா நெரக்க

சரக்க                               சரக்கருக்கணும்... (ப. 101).

நாற    -              போங்கடி நாற நொள்ளியோளா நொள்ளி  (ப. 119)

நய்யாண்டி -              சிரிப்பில் தொனித்த நய்யாண்டியும் 

நமுறு  - நமுறும் விசுவராயருக்கு கேட்டுத் தானிருக்கும் (ப. 131).

குணம்              -              ஒங்க குண மணத்த தெரிஞ்சி

மணம்                             வச்சிருக்கிற எனக்கு (ப. 138).

நச்சா                -              இப்படி நச்சா பிச்சாவாய் பேசிக்

பிச்சாவாய்                கொண்டிருப்பார்கள் (ப. 147).

அங்காளி       -              எனக்கு இந்தூருலே எந்த அங்காளி

பங்காளி     -                  பங்காளிருக்கான் நா இம்புட்டு கெடா வெட்ட (ப. 175).

“சாதாரண மேம்போக்கான பொதுமொழி நடையைவிட வட்டார வழக்கு நடைமொழி ஆழமானது.  அது மக்களின் ஆன்மாவிலிருந்து உதிப்பது.  அதற்கே ஒரு மொழிச் சிறப்பு உண்டு” என்று கி. ராஜநாராயணன் கூறுவார் (கோபல்ல புரத்து மக்கள், ப. 272).  வட்டார வழக்கு மொழியில் கதையை வாசிக்கும்போது மொழிக்கே யுரிய ஆன்மாவை உணரலாம்.  வட்டார மொழியில் எழுதப்படும் படைப்புக்கள் தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் துணைபுரிகின்றன.

Pin It