முனைவர் எம்.பி. டெரன்ஸ் சாமுவேல் அவர்களிடம் நேர்காணல்
முனைவர் எம்.பி. டெரன்ஸ் சாமுவேல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ந.முத்துமோகன் அவர்களின் மாணவர். மேற்குவங்கத்திலுள்ள சாந்திநிகேதன் பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
நேர்காணல் நிகழ்த்தியவர்கள்: எஸ்.கே.கங்கா & நா.இராமச்சந்திரன்
கே.: கல்விப்புல ரீதியாக மார்க்சியத் தத்துவப் பேராசிரியராக முத்துமோகன் அவர்களது பணியின் பரிமாணங்களும் பங்களிப்புகளும் யாவை?
டெரன்ஸ்: பேராசிரியர் முத்துமோகன் அவர்கள் எனக்கு அறிமுகமானது நான் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தத்துவம் கற்கச் சென்ற போதுதான். அப்போது முதுகலைத் தத்துவப் பட்டப் படிப்பு மட்டுமே பல்கலைக்கழகத்தில் இருந்தது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சமயம், தத்துவம், மனிதநேயச் சிந்தனை என்ற பள்ளியின் கீழ் தத்துவம் மட்டுமல்லாமல் காந்தி மற்றும் வள்ளலார் துறை, Inter-religious Dialogue, சைவ சித்தாந்தம், இஸ்லாம், கிறித்தவம் போன்ற துறைகளும், திருக்குறள், சீக்கியம் போன்ற ஆய்வு இருக்கைகளும் இருந்தன. இந்தத் துறைகளையெல்லாம் ஒருங்கிணைத்துத் ‘தத்துவமும் சமயமும்’ என்ற பாடத்திட்டத்தைக் கொண்டுவந்தது முத்துமோகன் சாருடைய முக்கியமான பங்களிப்பு. அந்தப் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற தாள்கள் மிகவும் முக்கியமானவை. குறிப்பாக, ‘மார்க்சியம், பகுத்தறிவுச் சிந்தனை’ என்பது ஒரு தாளின் பெயர். ‘பெண்ணியம் மற்றும் தலித்தியச் சிந்தனை’ என்பது இன்னொரு தாள். இந்தியாவில் பெரும்பாலும் இவை போன்ற தாள்கள் கல்விப்புலப் பாடத்திட்டத்தில் இடம்பெறுவதைப் பார்க்க முடியாது; அப்படியே இருக்குமானால், அவை விருப்பத் தாள்களாக மட்டுமே இருக்கும். ஆனால் தத்துவத் துறையில் இவை விருப்பத் தாள்களாக இல்லாமல், முக்கியத் தாள்களாகவே இடம் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத் தகுந்தது. இது அவருடைய மிக முக்கியமான பங்களிப்பு.
முத்துமோகன் Cultural studies என்ற ஒரு புதிய பாடத்திட்டத்தினை உருவாக்கினார். அதில் பண்பாடு குறித்த பிரச்சினைகள், கோட்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கினார். தலித்திய ஆய்வாளாராக, செயல்பாட்டாளராகத் திகழும் ஜெகநாதன் இந்தப் பட்டப் படிப்பின் முதல் அணியில் பயின்று பட்டம் பெற்றவர்.
‘சீக்கியம் மற்றும் ஒப்பீட்டுச் சமயம்’ என்ற ஒரு பட்டயப் படிப்பினை, குருநானக் ஆய்வு இருக்கை வாயிலாகத் தொடங்கினார். இதில் சீக்கியம் மட்டுமல்லாமல் சமூகவியல் ரீதியாகச் சமயங்களை எவ்வாறு புரிந்து கொள்வது என்பது முக்கியத் தன்மை பெற்றதாக அந்தப் பட்டயப் படிப்பில் இருந்தது. அந்தப் படிப்பு எடுத்துப் படிப்பவர்களுக்கு இறுதியில் ஓர் ஆய்வேடும் இருந்தது. இந்தப் பட்டயப் படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படிப்பவர்களுக்குக் கல்வி உதவித்தொகையையும் ஏற்பாடு செய்திருந்தார். சீக்கிய அமைப்பு ஒன்று இதற்காக உதவி செய்தது. ஏராளமான மாணவர்கள் இந்தப் பட்டயப் படிப்பில் சேர்ந்தார்கள். சிறந்த ஆய்வேடுகள் உருவாயின. இந்த ஆய்வேடுகள் பெரும்பாலும் சீக்கியச் சமயத்தையும் தமிழ்ச் சூழலையும் ஒப்பீடு செய்வனவாக, மற்றும் சமூகவியல் ரீதியாக சமயங்களை, சமய இயக்கங்களை அணுகுபவையாக இருந்தன; சமூக அக்கறை கொண்டவையாக இருக்கும் விதத்தில் அப்படிப்பட்ட ஆய்வுகளை ஊக்குவித்தார்.
அந்தப் பள்ளியில் பயில்வோருக்கு ஏதுவாக புதன் வட்டம், வியாழன் வட்டம் ஆகியவற்றை அவர் தொடங்கினார். ஆய்வு மாணவர்கள் இக்கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். கல்விப்புலம் சார்ந்த அறிவார்ந்த சூழலை இந்தச் செயல்பாடுகளின் மூலம் முத்துமோகன் உருவாக்கினார். இந்தச் செயல்பாடு, ஆய்வு மாணவர்களை அறிவுப்புல ரீதியாக ஊக்கப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், ஆய்வு மாணவர்களுக்கு இடையில் உரையாடலை உருவாக்கியது; ஓர் ஆய்வு மாணவரின் ஆய்வினைப் பிற மாணவர்கள் அறிந்து கொள்வதற்கும், புதிய விடயங்களை அவற்றின் மூலம் அறிந்து கொள்வதற்கும், மாணவர்களிடையே சமூக அக்கறை சார்ந்த அறிவுப்புலச் சூழல் அமைவதற்கும் அது பக்கபலமாக இருந்தது.
குருநானக் ஆய்வு இருக்கையைக் குருநானக் ஆய்வுத் துறையாக மாற்றியமைத்ததில் முத்துமோகனின் பங்களிப்பு முக்கியமானது. குருநானக் ஆய்வுத்துறையின் வாயிலாகப் பல்வேறு புத்தகங்கள் வெளிவந்தன. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பதிப்புத்துறையின் முக்கியமான வெளியீடாக, சீக்கியமும் தமிழ்ப் பண்பாடும் என்ற நூல் வெளிவந்தது. ஆய்வு மாணவர்களின் ஆய்வுகள் குறுநூல்களாக இத்துறையின் மூலம் வெளிவந்தன. குறிப்பாக, குருமார்களின் கதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தன. தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்த சுர்ஜித் சிங் பர்னாலா எழுதிய தன்வரலாற்று நூலை முத்துமோகன் மொழிபெயர்த்தது முக்கியமானது. ஏனெனில், பர்னாலா ஒரு பணக்காரக் குடும்பத்தில் பிறந்தாலும் எளிமையானவர். ஏழைக் குடிமகனின் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தவர். இந்த அனுபவங்களைத் தம்முடைய தன்வரலாற்று நூலில் அவர் பதிவு செய்திருக்கிறார்.
தனிப்பட்ட முறையில் முத்துமோகன் அவர்களின் வகுப்புகள் தத்துவங்களை அப்படியே பேசுவது என்பதை விட ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்த அக்கறையோடு, மாணவர்களின் அறிதிறன்களுக்கு ஏற்றவகையில், சமகாலச் சூழலுக்குப் பொருத்திப் பார்த்து மாணவர்களைத் சிந்திக்கத் தூண்டுவதாக இருக்கும். ஒரு தத்துவத்தைப் படிக்கிறோமென்றால் அதை வாலாற்றுப் பூர்வமாக எப்படிப் படிப்பது - காலச் சூழலைப் புரிந்து கொண்டு விளக்குவது என்பது முக்கியமானதாக இருக்கும். இன்னும் அதிகமாக, அந்தத் தத்துவங்களின் பின்னால் ஒளிந்து கிடக்கும் அரசியல் என்ன? அந்த அரசியல் ஆளும் வர்க்கக் கருத்தியல்களை எவ்வாறு சுமந்து நிற்கிறது என்பதை எளிய முறையில் மாணவர்களுக்கு விளக்குவது அவரின் தனிப் பாணியாகும்.
தனிப்பட்ட முறையில் எனக்கு ஓர் அனுபவம் இருக்கிறது. உண்மையிலேயே என்னுடைய வாழ்க்கையை மாற்றிய ஓர் அனுபவம் அது. முதுகலைத் தத்துவப் பாடத்திட்டத்தில் இந்தியத் தத்துவம் என்கின்ற ஒரு பாடப்பிரிவு. அதில் அத்வைதம் குறித்த ஒரு வகுப்பினை இன்னொரு பேராசிரியர் எடுத்தார். அந்தப் பேராசிரியர் அகமே பிரம்மம் என்ற அடிப்படையில் பேசினார். ‘இது நல்லா இருக்குதே...' என்று நான் ஆர்வத்துடன் யோசித்தேன். பேராசிரியர் முத்துமோகன் அவர்களிடம் இது குறித்துப் பேசினேன். புறவுலகம் அமைதியில்லாமல் இருக்கும் பொழுது தனக்கு மட்டும் அமைதி கிடைத்து விடும் என்பது எப்படிச் சாத்தியமாகும்? என்றார். சின்ன கேள்விதான் அது. அதற்குள் நிறைய அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன. தனி மனிதனுக்கும் சமூகத்துக்கும் இடையிலான இயங்கியல் உறவு, அதில்தான் தனி மனிதனுடைய வாழ்வின் அர்த்தங்கள், அவனுடைய அமைதி, சுயம் குறித்த தேடல் போன்றவை உள்ளன. இது மார்க்சிய ரீதியான தேடல். இது என்னுடைய வாழ்வில் மார்க்சிய ரீதியாக, தனிமனிதன்-சமூகம் இரண்டுக்கும் இடையிலான இயங்கியலைப் புரிந்துணர்ந்து சிந்திப்பதற்குரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
தத்துவத்துறையில் அவருடைய பரிமாணங்கள் குறித்துக் கூறுக.
தத்துவவாதிகள் பெரும்பாலும் மேற்கத்தியத் தத்துவங்களைப் பேசுவது, வைதீகத் தத்துவங்களைப் பேசுவது, அவைதீகத் தத்துவங்களைப் பேசுவது, ஆளும் வர்க்கக் கருத்தியல்களை, ஒத்திச்சைவுகளைப் பாடத் திட்டத்தின் மூலமாகப் பேசுவது என்பதையே பெரும்பாலும் நாம் பார்க்க முடியும்; சமூக அக்கறை கொண்ட விமர்சன ரீதியான சுணக்கம் கொண்டவையாகவே இருப்பதைப் பார்க்க முடியும். இதனை அப்படியே புரட்டிப் போட்டவர் முத்துமோகன்.
சமூக அக்கறை கொண்டு தத்துவங்களைப் புரிந்து கொள்வது என்பதுதான் முத்துமோகன் அவர்களின் முக்கியமான பரிமாணம் என்று கருதுகிறேன். அறிவு சீவிகள் அல்லது உயர்ந்தோர் பேசுவதுதான் தத்துவம் என்ற தன்மையை மாற்றி, சாதாரண மக்களின் வாழ்க்கையிலிருந்து, செயல்பாடுகளில் இருந்து, பிரச்சினைகளில் இருந்து, தத்துவத்தை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதை விளக்கியவர் முத்துமோகன். தத்துவத்தைப் பேசும்போது அவரிடம் பல்புல அணுகுமுறை எப்போதும் இருக்கும். தத்துவம் என்பது சாதாரண மனிதர்களின் அறிவுக்கு எட்டாத ‘உயர்ந்த’ அறிவையும் ஞானத்தையும் பேசுவது என்பதை மறுத்து, சாதாரணப் பிரச்சினைகளிலிருந்து தத்துவங்களைப் புரிந்து கொள்வது என்பதை வலியுறுத்தியவர் அவர். இந்தப் பார்வை பேராசிரியர் நா.வா. அவர்களிடமிருந்து அவர் பெற்றது. அதனால் அவர் தமிழுக்கும் தாவுவார், அது போல இந்தியச் சூழலில் இதுவரையிலும் மிகவும் பரிச்சயப்படாத புதிய புதிய உலகளாவியச் சிந்தனைகளுக்கும் தாவிச் செல்வார். இதற்கெல்லாம் அவருக்குத் துணை நின்றது அவர் பெற்றிருந்த மார்க்சியப் பயிற்சிதான். அதாவது, நடைமுறையிலிருந்து தத்துவத்தைப் புரிந்துகொள்வது அவருடைய முக்கியமான பரிணாமம்.
தத்துவங்களைப் புரிந்து கொள்வதில் அவருடைய மார்க்சியப் பயிற்சி துணை நின்றது என்று குறிப்பிட்டீர்கள். மார்க்சியச் சிந்தனைகளைப் பயன்படுத்தி வரலாற்றுச் சூழல்களைப் புரிந்து கொள்வதில் அவருடைய பங்களிப்பு என்ன?
பாட்டாளி வர்க்கத்திலிருந்துதான் புரட்சி உருவாகும் என்று ஐரோப்பியச் சூழலில் மார்க்ஸ் கருதினார். இந்த இடத்தில் முத்துமோகனுடைய ரஷ்யக் காலக்கட்டம் மிக முக்கியமானது. மார்க்ஸ் ரஷ்யா குறித்துப் பேசும்போது 1877இல் நிக்கலோவ்ஸ்கிக்கு எழுதிய மறுப்புக் கடிதத்தில் தம்முடைய கருத்தைத் தெளிவுபடுத்துகிறார். முதலாளித்துவத்துக்குப் பிறகுதான் சோசியலிசத்துக்குச் செல்ல முடியும் என்ற கருத்தை அவர் விமர்சனம் செய்தார். ஐரோப்பியச் சூழலில்தான் தாம் அவ்வாறு பேசியதாக மார்க்ஸ் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டார். ஐரோப்பியச் சூழலில்தான் தாம் கூறியதை எல்லா நாடுகளுக்கும் பொருந்துவதாகக் கொள்ளக்கூடாது என்று மார்க்ஸ் கூறியிருந்தார். ரஷ்யாவைப் பொருத்தவரையில் அது முதலாளித்துவத்தை முழுமையாக அடைந்த பிறகு கம்யூனிஸத்தை நோக்கி நகரவில்லை. ரஷ்யாவிலிருந்த விவசாயிகள், விவசாயப் போராட்டங்கள், பெண்களின் முக்கியமான பங்கு, ஒடுக்கப்பட்ட தேசிய இனப் பிரச்சினைகள் ஆகியவை ஒன்று சேர்ந்து தான் ரஷ்ய புரட்சி உருவானது. ரஷ்யாவில் தாம் பயின்ற காலத்தில், ரஷ்ய வரலாற்றை ஒரு மார்க்சியனாக முத்துமோகன் நன்கு உணர்ந்திருந்தார். தாம் பிறந்து வளர்ந்த களக்காட்டுப் பகுதியில் விவசாயப் பிரச்சினைகளும் போராட்டங்களும் எவ்வளவு தீவிரமாக இருந்திருக்கின்றன என்பதைத் தனது தந்தை நடராஜன், அவர் மிகவும் மதித்துப் போற்றும் தோழர் நல்லகண்ணு உள்ளிட்ட பிற பொதுவுடைமைவாதிகளின் போராட்ட அனுபவங்களில் இருந்து முத்துமோகன் நன்கு அறிந்திருந்தார். காலனியக் காலகட்டத்தில் விவசாயிகளின் போராட்டங்கள் எவ்வாறு இருந்தன என்பதை அவர் கற்று உணர்ந்திருந்தார். இவை தவிர, பழங்குடி மக்களின் போராட்டங்கள் போன்றவை காலனியத்தை அசைத்துப் பார்த்தவை.
இந்தியச் சூழலில் வளர்ந்து வரும் தொழிலாளி வர்க்கம் முழுமையடைந்து அதன் மூலம் புரட்சி ஏற்பட்டு, பொதுவுடைமை நோக்கிச் செல்லும் என்ற கருத்தினை முத்துமோகன் நம்பிக்கையோடு கொண்டிருந்தார்; என்றபோதிலும், இந்தியச் சூழலில், விவசாயப் போராட்டத்திற்கு அவர் எப்போதுமே முக்கியத்துவம் அளிப்பார். விவசாயப் போராட்டம் புரட்சிக்கு எந்த வகையில் அடித்தளமாக இருக்கிறது என்பதைப் பற்றியும் அவர் யோசித்தார். ஐரோப்பியச் சூழலில் உருவான மார்க்சியத்தை அப்படியே இந்தியச் சூழலுக்குப் பொருத்திப் பார்க்காமல், இந்தியச் சூழல் எப்படி இருக்கிறது என்பதைத் தெளிவாக அவர் உணர்ந்திருந்தார்.
இன்னும் குறிப்பாக, தமிழ்ச் சூழல் எனும் போது தமிழகத்தில் இயங்கிய திராவிட இயக்கங்கள், தலித்திய இயக்கங்கள், தேசிய இனப் பிரச்சனைகள் குறித்த விடயங்கள், பெரு நிலச்சுவான்தார்கள், பெருமுதலாளித்துவம், தமிழகத்தில் உள்ள பொதுவுடைமை இயக்கங்கள், தமிழ்ச் சூழலில் இருக்கும் வைதீக - அவைதீக முரண்பாடுகள், அடையாள அரசியல் குறித்த பிரச்சினைகள், பண்பாட்டு அரசியல் குறித்த பிரச்சினைகள், சிறுபான்மையினர் குறித்த பிரச்சினைகள் ஆகிய எல்லாவற்றையும் குறித்து முத்துமோகன் தெளிவான மார்க்சியப் பார்வை கொண்டவராக இருந்தார். தமிழ்ச் சூழலில் மார்க்சியத்தை எப்படிப் பொருத்திப் பார்ப்பது அல்லது தமிழ்ச் சூழலை எப்படி மார்க்சியப் பார்வையில் அணுகுவது என்ற தீவிரமான அணுகுமுறை அவரிடம் இருந்தது.
மார்க்சியத்துக்கு உள்ளே இருந்த பலவிதமான மார்க்சியக் கோட்பாடுகளை அவர் படித்து அறிந்திருந்தார். கருப்பின மார்க்சியம், அரபு மார்க்சியம், ஃபிராங்ஃபர்ட் மார்க்சியம், ஆஸ்திரிய மார்க்சியம், மேற்கத்திய மார்க்சியம், ஃபிரெஞ்சு மார்க்சியம் போன்ற பலவிதமான மார்க்சியங்களைப் படித்து அவை இந்திய, தமிழக வரலாற்றுச் சூழலையும் சமூகச் சூழலையும் புரிந்து கொள்வதற்கு எந்த அளவுக்குத் துணை செய்யும் என்பது குறித்தும் சிந்தித்தார்.
சிறுபான்மையினர் பிரச்சினையை ஆஸ்திரிய மார்க்சியம் எவ்வாறு கையாண்டது? இந்தியாவில் அதே பாணியைக் கையாள இயலுமா? என்பது குறித்து என்னை அவர் சிந்திக்க வைத்தார். New Left Reviewஇல் வெளிவந்த குறிப்பிடத் தகுந்த கட்டுரைகள் மற்றும் ஜான் பெல்லாமி ஃபாஸ்டர் போன்ற மார்க்சியர்கள் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளை மார்க்சிய ரீதியாக எவ்வாறு அணுகுகின்றனர் என்ற புரிதலோடு, சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகளை ஆய்வு செய்யவும் என்னைத் தூண்டினார். ஒடுக்கப்பட்ட வரலாற்றுச் சூழலில் மார்க்சியத்தின் பல்வேறு ஓட்டங்களை அறிந்து இந்தியச் சூழலுக்கு அவற்றைப் பொருத்திப் பார்த்து விடை காணும் முயற்சியில் ஈடுபட்டார். எந்தத் தத்துவப் போக்குகளையும் கதவடைக்காமல் திறந்த போக்கோடு அணுகுவது என்று அவர் சிந்தித்தார். அவற்றில் சில குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் அவற்றிலிருந்து தாம் கற்றுக்கொள்வதற்கு ஏதேனும் இருக்கிறதா என்று தேடும் வழக்கத்தை அவர் கொண்டிருந்தார். புதிய பிரச்சினைகள் உருவானால் மார்க்சியச் சூழலில் அவற்றைப் புரிந்து தீர்வு காண்பதற்கு அவர் முயன்றார்.
மரபான மார்க்சியத்திலிருந்து அவரது மார்க்சியப் பயணம் குறித்து சில குறிப்பிட்ட விடயங்களைக் கூறுக.
முத்துமோகன் அவர்களின் பல்வேறு கட்டுரைகளைத் தொகுத்து மார்க்சியக் கட்டுரைகள் என்ற தலைப்பில் காவ்யா பதிப்பகம் வெளியிட்டது. அந்த நூலின் முன்னுரையில் மார்க்சியம் என்பது அதன் மூலவர்களான மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் ஆகியவர்களோடு முடிந்துவிடவில்லை. மார்க்சியம் தொடர்ந்து அந்தந்தக் காலகட்டங்களில் மார்க்சுக்குப் பிந்தித் தோன்றிய பல்வேறு தத்துவங்களோடு உரையாடல் செய்து தன்னைச் செழுமைப்படுத்திக் கொண்டே வந்தது. நூற்றைம்பது ஆண்டுக் கால மார்க்சியம் என்ற சொற்ச் சேர்க்கையை முத்துமோகன் பயன்படுத்துவார். இனவாதப் பிரச்சினைகளை மார்க்சிய நோக்கில் கருப்பின மார்க்சியம் அணுகியது. இனம் என்பதை வர்க்கப் பிரச்சினையுடன் குறுக்குவெட்டுப் போக்கில் இணைத்து, ஒரு முக்கியமான காரணியாக அணுகியிருந்தது. இது போன்ற பல்வேறு விடயங்களை அவர் உள்வாங்கினார். மார்க்சியம் என்பது தொடர்ச்சியாகப் பல்வேறு காலச் சூழல்களையும் வரலாற்றுச் சூழல்களையும் சமூகச் சூழல்களையும் எதிர்கொண்டு தன்னைச் செழுமைப்படுத்திக் கொண்டே வந்திருக்கிறது என்பது அவரது ஆய்வுகள் ரீதியான கருத்து.
இருத்தலியம், நிகழ்வியம், அமைப்பியல், பின்னமைப்பியல், பின்காலனியம் போன்ற எல்லாவற்றையும் படித்தறிந்து எந்த அளவிற்கு மார்க்சியத்தைச் செழுமைப்படுத்துவதற்கு இவை உதவக்கூடும் என்று அவர் சிந்தித்தார். மார்க்சியத்துள் ஏற்கெனவே பதிந்துள்ள, வெளியரங்கத்துக்கு வராமல் உட்புதைந்துள்ள விடயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதற்கு, இந்தவிதத் தத்துவப் புலங்கள் எவ்வாறு உதவ முடியும் என்று தீவிர வாசிப்புகளை, ஆய்வுகளை மேற்கொண்டார்.
மரபான மார்க்சியத்திலிருந்து அவருடைய பயணம் எனும்போது மார்க்சுக்குப் பின் வந்த மார்க்சியர்கள் ஜார்ஜ் லூகாச், அன்டோனியோ கிராம்ஷி, அல்தூசர், ஹெர்பர்ட் மார்க்யூஸ், ஹெபர்மாஸ், அன்டோனியோ நெஹ்ரி, சந்தால் மொஃபே, லக்லவ், சி.எல்.ஆர். ஜேம்ஸ், இன்னும் பலர் செய்த மார்க்சிய ரீதியான ஆய்வுகளை, அவர் கற்றறிந்ததோடு எங்களையும் கற்கும்படித் தூண்டினார். அவர்களின் கருத்துகளின் அடிப்படையில் மார்க்சியம் செழுமைப்பட்டுள்ளதை அவர் உணர்ந்தார். இதன் மூலம் இன்றைய சவால்களுக்குப் புதிய வெளிச்சங்கள் அல்லது திறப்புகள் ஏற்படுத்த இயலுமா என்பது குறித்து அவர் சிந்தித்தார். தன்னையும் செழுமைப்படுத்திக் கொண்டார். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்ட தேர்ந்தெடுத்த மார்க்சிய நூல்கள் தொகுப்புக்கு அவர் எழுதிய முன்னுரைகள் முக்கியமானவை. இடதுசாரி வெகுசனவியம் (left populism) போன்ற இடங்களில் சிறப்பாக நகர்ந்து சென்றார். இலத்தீன் அமெரிக்கச் சூழலில் வெகுசனவியம் எப்படிப் பிரபலமானது என்பதுடன் இந்தியச் சூழலைப் புரிந்து கொள்ள இது உதவுமா என்று சிந்தித்தார். இடதுசாரி இயக்கங்களை வளர்ப்பதற்கு இவை உதவ முடியுமா என்று ஆராய்ந்தார். மரபு மார்க்சியத்திலிருந்து தொடங்கிய அவரது பயணம் நீண்ட நெடியது என்று சொல்ல முடியும்.
தத்துவப் பேராசிரியராக மேற்கத்தியத் தத்துவங்கள் குறித்த அவரது பார்வை எப்படி இருக்கிறது?
முத்துமோகனுடைய முக்கியமான நூல்களுள் ஒன்று ஐரோப்பியத் தத்துவங்கள். அந்த நூலில் பழமையான கருத்துமுதல் வாதம், பொருள்முதல் வாதம் ஆகியவற்றிலிருந்து பகுத்தறிவு வாதம், அனுபவவாதம், நிகழ்வியம், இருத்தலியம், அமைப்பியல், பின் அமைப்பியல் போன்ற எல்லா விடயங்களையும் அந்த நூலில் பேசியிருப்பார். அவை குறித்து அந்தந்தத் தத்துவவாதிகள் சொல்லியிருப்பவற்றோடு நிறுத்த மாட்டார் அவர். மார்க்சிய ரீதியாக அந்தத் தத்துவங்களை எப்படி அணுகுவது - அந்தத் தத்துவங்களின் எல்லைகள் யாவை என்பவற்றைப் புரிந்து கொள்வது என்ற இடத்திற்கு நகர்வது அவருடைய தனிப் பாணி. அவற்றிலிருந்து நாம் எவற்றைக் கற்றுக்கொள்ள முடியும் என்பதை அவர் ஆராய்வார். எடுத்துக்காட்டாக, இருத்தலியத்தில் வரும் சுயம் என்பது அத்தத்துவத்திற்கு முந்தைய தத்துவங்களால் புறந்தள்ளப்பட்டது. அதனை எவ்வாறு இருத்தலியம் பேசுபொருளாக்கியது என்பதையும் முத்துமோகன் பேசுவார். மார்க்சிய அடிப்படையில் அத்தத்துவங்களை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதை அவர் எழுதியிருப்பார்.
இரண்டாவதாக, ஐரோப்பியத் தத்துவங்களின் அரசியல் என்ன என்பதை அவர் புரிந்து கொள்வது. அறம்சார்ந்த ஒரு விடயத்தைப் பேசுவதாக இருந்தால் அதன் பின்னணியிலுள்ள அரசியல் என்ன? எந்த வர்க்கத்தின் நலன்கள் சார்ந்து அந்தத் தத்துவம் பேசுகிறது? என்று பார்ப்பதை முக்கியமான ஒன்றாக அவர் கருதினார். பொருள்கோடலியலுக்கும் அவர் முக்கியத்துவம் கொடுக்கிறார். எம் போன்றவர்களுக்கு அவர் சொல்வது என்னவென்றால் நீங்களாக வாசித்துப் புரிய வேண்டும். நீங்கள் வாசிக்கும் போது உங்களுக்குப் புதிய புதிய அர்த்தங்கள் கிடைக்கக்கூடும். பொருள்கோடலியல் என்பது வாசிப்பவனின் வாசிப்பு அனுபவம் சார்ந்தது என்ற முக்கியமான விடயத்தையும் அந்நூலில் கூறியிருப்பார். சாக்ரடீஸுக்கு முந்திய தத்துவவாதிகளின் காலத்திலிருந்து சமகாலத்தில் பேசப்பட்ட பின் - அமைப்பியல், பின்காலனியம் வரை அவர் பேசியிருக்கிறார். மார்க்சிய நோக்கில் அத்தத்துவங்களைப் புரிந்து கொள்வது என்பதே முக்கியமானது. எதையும் ஒவ்வாததாகத் தூக்கி எறியவில்லை. பின்-காலனியம் குறித்துப் பேசும்போது மேற்கத்திய அறிஞர்கள் கீழைத்தேய மக்கள் மீது கொண்டிருந்த பார்வைகளைக் கேள்விக்குட்படுத்தினார் முத்துமோகன். இந்தவிதக் கருத்தாக்கங்களை இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும் என்ற நூலிலும், சீக்கியம் குறித்த ஆய்வுகளிலும் காணமுடியும். அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், இந்தியச் சூழலில் நிலவும் சாதியக் காலனியம் / சாதிய ஏகாதிபத்தியத்தை, அதன் வழியாக மார்க்சியனாகப் புரிந்து கொள்ளவும் முற்பட்டார் என்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
குருநானக் ஆய்வுத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய போது சமயங்கள் குறித்த - குறிப்பாக, சீக்கியம் குறித்த மார்க்சிய ரீதியான அவரது புரிதல் குறித்துக் கூறுக.
இந்தியச் சூழலில், மதம் குறித்த சமூக ஆய்வுகள் மார்க்சியர்களால் பெரும்பாலும் ஆழமாகச் செய்யப்படவில்லை என்று ஓரிடத்தில் குறிப்பிடுவார். சமயம் குறித்த அவருடைய பார்வை மார்க்சியப் பார்வைதான். குறிப்பாக, மார்க்ஸ் எழுதிய Critique of Hegel’s Philosophy of Right என்ற நூலில் மதம் குறித்து மார்க்ஸ் கூறிய இரண்டு விடயங்களை முத்துமோகன் எப்பொழுதுமே அடிப்படையாக வைத்திருந்தார். மதம் என்பது மனிதத் துயரங்களின் வெளிப்படுத்துதலாகவும், அவற்றிற்கு எதிரான எதிர்ப்பாகவும் இருக்கிறது என்பதை மார்க்ஸ் குறிப்பிடுவார். இரண்டாவதாக, மதம் எப்படி ஒரு கருத்தியலாக இந்தியச் சமூகத்தில் செயல்படுகிறது? குறிப்பாக, கருமவினை மற்றும் ஆன்மா குறித்த கருத்தியல்களில் புதைந்து கிடக்கும் ஆளும் வர்க்க நலன் சார்ந்த கருத்தியல்கள் என்ன என்பதை அவரது ஆய்வுகள் சொல்லுகின்றன. இந்த இரண்டுமே மார்க்சிய அடிப்படைகளைக் கொண்டவை.
இந்த அடிப்படைகளைக் கொண்டு தான் சீக்கியச் சமயம் சார்ந்த ஆய்வுகளை அவர் மேற்கொண்டார். குருநானக் பாடல்கள் துன்பப்படுபவர்களைக் கண்டு இரங்கிப் பாடும் போது மனிதத் துயரங்களின் வெளிப்பாடாகச் சமயம் இருக்கிறது என்பதை முத்துமோகன் எடுத்துக்காட்டுகிறார். குருநானக் பின்வருமாறு கூறுகிறார்: “ஒரு புலியும் இன்னொரு புலியும் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுச் சாவது எனக்குப் பிரச்சினை இல்லை. புலி ஆட்டைக் கொல்வதை என்னால் சகிக்க முடியாது. கடவுளே நீ எப்படி இதை அனுமதிக்கிறாய்?” மார்க்சிய ரீதியாக இதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பார் முத்துமோகன். மனிதத் துயரத்தினுடைய எதிர்ப்பாகவும் சீக்கியம் செயல்படுகிறது என்பதையும் அவர் விளக்குவார்.
மதம் எப்படி ஆதிக்கத்தின் கருத்தியலாகச் செயல்படுகிறது, அதே நேரத்தில் விடுதலைக்கான ஒரு கருத்தியல் ஆயுதமாகவும் அது செயல்படுகிறது என்பதையும் அவர் விளக்குவார். இந்த இரண்டையும் சீக்கியத்தின் வழியாகவே அவர் விளக்குவார். சீக்கியக் குருமார்கள் சாதி, வருணம் போன்றவற்றை முறியடிப்பதற்கு லங்கர் போன்ற அமைப்புகளை உருவாக்கினார்கள். எப்படி கால்சா போன்ற அமைப்புகள் உருவானது என்பதை மார்க்சியத்தின் அடிப்படையில் புரிந்து விளக்குகிறார். சமயத்தின் சமூகவியல் (sociology of religion), துர்க்கைம், மாக்ஸ் வேபர் ஆகியோரை வாசித்து எந்தெந்த இடங்களில் அவர்களைப் பயன்படுத்த முடியுமோ அந்தந்த இடத்தைப் பயன்படுத்தியுள்ளார்.
இந்தியச் சூழலில் சீக்கியத்தைப் பற்றிப் பேசும் போது வைதீகம் - அவைதீகம் என்ற இருமைகள் இந்தியச் சமயங்களில் எவ்வாறு முரண்களாகச் செயல்படுகின்றன என்பதை விவரிப்பார். வைதீகப் போக்குக்கு எதிராக சீக்கியம் எவ்வாறு உருவாயிற்று, சீக்கியத்திற்குள் தோன்றிய அகாலி இயக்கம், குருத்துவாரா சீர்திருத்த இயக்கம் போன்றவை வைதீகத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டு எவ்வாறு தோன்றின என்பது குறித்து ஆராய்கிறார். அடித்தள மக்கள் பார்வையில் சீக்கிய சமயம் குறித்து எழுதும் போது, வைதீகம் - அவைதீகம் என்ற இருமை எதிர்வுகளுக்குள் இந்தியச் சமயங்கள் எவ்வாறு இயங்குகின்றன, அவை ஒன்றின் மீது ஒன்று எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தின, எவ்வாறு சமரசம் செய்து கொண்டன என்ற விடயங்களை அவர் விளக்குகிறார்.
தமிழ்ச் சூழலில் குருநானக் ஆய்வுத் துறையை நடத்துவது பெரும் சவாலாக இருந்தது. ஏனெனில், தமிழர்களிடம் சீக்கியம் குறித்த பெரிய புரிந்துணர்வு ஏதும் இல்லை. பேராசிரியர் முத்துமோகன் தமிழ்ச் சமய ஆய்வுகளுடன் சீக்கிய ஆய்வினை ஒப்பீடு செய்யும் முறையை வளர்த்தெடுத்தார். மாணவர்களுக்கு அதில் ஈடுபாடு ஏற்படச் செய்து சிறந்த ஆய்வேடுகள் உருவாகுவதற்கு அவர் காரணமாக இருந்தார். ஆய்வேடுகளைக் கட்டுரைகளாக உருவாக்கி அவற்றை நூல்தொகுதிகளாக வெளியிட்டார்.
சீக்கியத்துக்குள் எப்படி இஸ்லாமிய, சூஃபியத் தாக்கங்கள் இருக்கின்றன என்பதை அவர் ஆய்வு செய்யத் தூண்டினார். பெரும் அக்கறையோடு ஆழமான ஆய்வுத் தரத்தோடு அவர் ஈடுபட்டதால் சீக்கிய அமைப்புகள் அவரைப் பெரிதும் மதித்தன. சீக்கியர்கள் பேராசிரியர் முத்துமோகன் மீது பெரு மதிப்பு வைத்திருந்தார்கள். கருத்தரங்குகள், மாணவர் உதவித்தொகை போன்றவற்றிற்கு ஏராளமான பண உதவிகளை வழங்கினார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலிருந்து பணி நிறைவு பெற்ற பின்னர் பஞ்சாப்பிலுள்ள குருநானக் பல்கலைக்கழகம் அவரை மதிப்புறு (emeritus) பேராசிரியராகப் பணியமர்த்தி ஆய்வுகள் மேற்கொள்ளச் செய்தது.
மேலே சொன்ன, வைதீக - அவைதீக இருமைகள் எவ்வாறு சமயங்களில் ஊடாடி நின்றன என்பது குறித்த அவருடைய மார்க்சியப் பார்வை குறித்துச் சொல்ல முடியுமா?
வைதீக - அவைதீகச் சமயங்கள் குறித்த மார்க்சியப் பார்வை எனும் போது அதற்கு முன்னோடியாக இருந்தவர் தேபி பிரசாத் சட்டோபாத்யாய. மார்க்சிய அடிப்படையில் இந்தியத் தத்துவங்களை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதை அடிப்படையாக விளக்கியவர் அவர். அவர் பொருள் முதல்வாதம் - கருத்து முதல்வாதம் என்ற சட்டகத்தைப் பயன்படுத்தினார். நாத்திகம் எவ்வாறு இந்தியத் தத்துவங்களுக்குள் இருந்தது என்பதையும் அவர் விளக்கினார். பின்னாளில் ஆத்திகப் போக்குகளாக இந்தியத் தத்துவங்கள் மாறியதையும் அவர் சுட்டிக்காட்டுவார்.
முத்துமோகன் இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும் என்ற தமது நூலின் முன்னுரையில் தியோடர் வைஸ்மேன் என்ற மாஸ்கோவின் தத்துவ அறிஞர் ஒருவரை எடுத்துக்காட்டுகிறார். வரலாற்றுரீதியாகத் தத்துவப் பிரச்சனைகள் என்பது அவருடைய நூல். அந்நூலில் சமயத்தை அணுகுவதற்குக் கருத்துமுதல்வாதம், பொருள்முதல்வாதம் ஆகியவை அடிப்படையாக இருந்தாலும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சமயங்கள் பல்வேறு பரிமாணங்களை அடைந்துள்ளன என்பதை வரலாற்றுரீதியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார். பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட தத்துவப் பிரச்சினைகள் வெவ்வேறு வடிவங்களை அடைகின்றன. எனவே புதிய தெளிவுகளைத் தர வேண்டிய தேவை இருந்தது.
இந்தியச் சூழல் என்று பார்க்கும் போது வைதீக - அவைதீகத்துக்குள் காணப்படக் கூடிய பல இருமைகளை முத்துமோகன் வெளிக்கொணர்ந்துள்ளார். உலகத்தின் உண்மைத் தன்மை, அதற்கு எதிரான மாயை, ஏகம்-அனேகம் என்ற இருமை ஆகியவற்றை அவர் விளக்கினார். ஏகம் எப்படி அதிகாரத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது. அதற்கு இணையாக அனேகம் எப்படி சனநாயகத் தன்மையோடு தொடர்புடையதாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டினார். இவை முக்கியமான தத்துவப் பிரச்சனைகளாக அவரால் முன்வைக்கப்படுகின்றன.
இது போலவே ஆன்மா - அனான்மா என்ற எதிர்வும். எவ்வாறு ஆன்மா என்பதை வைதீகத் தத்துவங்கள் இறுக்கின, அனான்மா என்ற தத்துவம் அந்தவித வர்ண-சாதி ரீதியான இறுக்கங்களில் இருந்து மனிதச் சுயத்தை விடுபட வைப்பதற்கு உதவின என்பதைப் பேசுகிறார். தத்துவப் பிரச்சினைகள் பல்வேறு வகையானவை. அவற்றைப் பலவாறு அணுகி விளக்க வேண்டும். இந்த இருமைகளை ஊடாடவிட்டு மார்க்சிய இயங்கியல் அடிப்படையில் இந்தியத் தத்துவங்களை அவர் விளக்கினார்.
அவர் எழுதிய முக்கியமான ஓர் ஆங்கில நூல் Post Modernism in Indian Philosophy. அது சிறிய நூல்; அதிகம் பேசப்படாதது. மிக அடர்த்தியான நூல் அது. அந்த நூலின் முக்கியமான கருத்துகள் வேதாந்தத்தின் கலாச்சார அரசியல் என்ற நூலில் உள்ளன. Post Modernism in Indian Philosophy என்ற அந்த நூலில் ஃபூக்கோ மற்றும் பின் அமைப்பியல்வாதிகள் கூறும் கருத்துகளையும் மார்க்சியத்தையும் இணைத்து வைதீகத் தத்துவங்கள் - குறிப்பாக, அத்வைதத்துக்குள் ஆதிக்கம் தொடர்ந்து எவ்வாறு செயல்படுகிறது என்பதை விவாதிக்கிறார். உலகம் மற்றும் பிற பொருள்களும் உயிர்களும் மாயை எனும்போது, மனித உழைப்பு பலவீனப்படுத்தப்பட்டு மன உழைப்பு எவ்வாறு உயர்ந்ததாகக் காட்டப்படுகிறது. அதாவது, ஆன்மாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து உடம்புக்கு, உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காது தொழிலாளர்கள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற சிந்தனைப் போக்கினை அந்நூலில் விளக்குகிறார். இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்தியத் தத்துவங்களுக்கு உள்ளே இருக்கும் அரசியல் என்ன என்பதை மிக அழுத்தமாகவே தொடர்ந்து அவர் பேசினார். வைதீகத் தத்துவங்களின் அரசியல் என்ன? அவைதீகத் தத்துவங்களின் அரசியல் என்ன? ஆகியவற்றைத் தொடர்ந்து பேசினார். தத்துவங்கள் யாருடைய நலம் குறித்துப் பேசுகின்றன? ஒடுக்கப்பட்டோரின் நலத்தைப் பேசுகின்றனவா? ஆதிக்க வர்க்கத்தின் நலனைத் திடப்படுத்த முயல்கின்றனவா? என்ற அவருடைய விவாதங்கள் முக்கியமானவை என்று கருதுகிறேன்.
தமிழ்த் தத்துவங்கள் குறித்த அவருடைய அணுகுமுறை எவ்வாறு உள்ளது?
தமிழ்த் தத்துவங்கள் குறித்த முத்துமோகன் அவர்களின் கட்டுரைகளுள் பல மார்க்சியக் கட்டுரைகள் நூலில் இடம் பெற்றுள்ளன. பாரதி, பாரதிதாசன், வள்ளலார், அயோத்திதாசப் பண்டிதர், சிங்காரவேலர், பெரியார் போன்றோர் பற்றிய கட்டுரைகளில் அவற்றைக் காணலாம். சங்க இலக்கியக் காலம் முதல் இன்றைய காலம் வரை காணப்படும் தத்துவச் சிந்தனைகள் குறித்த கட்டுரைகள் இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும் நூலில் இடம்பெற்றுள்ளன.
இந்த நூலில் தமிழருடைய பண்பாட்டு வேர்களை எவ்வாறு புரிந்து கொள்வது? அப்பண்பாட்டு வேர்கள் கொஞ்சமாகவோ அதிகமாகவோ, தொடர்ச்சியாகவோ எச்சங்களாகவோ சங்க காலத்திலிருந்து இன்றைய காலக்கட்டம் வரை தொடர்ந்து வந்திருக்கின்றன. சங்கப்பாடல்கள், காப்பியங்கள் போன்றவற்றிலிருந்து அவற்றை மீட்டுருவாக்கம் செய்கிறார் அவர். தொல்காப்பியம் குறிப்பிடும் நிலமும் பொழுதும் என்பதை புவியியல் சார்ந்த ஆதிப் பொருள்முதல்வாதம் என்ற இடத்திலிருந்து அவர் விவரிக்கிறார். சங்க இலக்கியத்தில் காணப்படும் அகம் - புறம் என்ற கருத்தாக்கங்கள், திருக்குறள் கூறும் பொருளும் இன்பமும் அறம் சார்ந்த விடயங்களாகப் பார்க்கப்படுதல், அறம் என்பது தத்துவங்களாகப் பரிணமித்தல் ஆகியன எல்லாவற்றையும் அவர் பேசுவது முக்கியமானவை.
தமிழர் தத்துவ மரபுகளை மிகவும் ஆழமாக மார்க்சிய ரீதியாக விசாரணை செய்தது முத்துமோகன் அவர்களின் தனிச் சிறப்பாகும். தமிழர் மரபைத் தத்துவ ரீதியாக அணுகுவது குறித்து ஏற்கெனவே சில நூல்கள் வந்துள்ளன. குறிப்பாக, பேராசிரியர் முப்பால்மணி, ஆசீவகம் குறித்துப் பேராசிரியர் நெடுஞ்செழியன் போன்றோர் எழுதியுள்ளனர். ஆனால் தமிழ்த் தத்துவங்களை மார்க்சிய நோக்கில் எப்படி அணுகுவது என்பதற்கு முத்துமோகன் எடுத்துக்காட்டாக விளங்குகிறார். இயங்கியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாத அடிப்படையில் சங்க இலக்கியம் தொட்டு தற்காலம் வரையுள்ள தத்துவம் குறித்த மிகப்பெரும் பரப்பைத் தொட்டுப் பேசியவர் முத்துமோகன் மட்டுமே.
தமிழ் நாட்டில் உள்ள முக்கியமான தத்துவப் போக்கு சைவ சித்தாந்தம். சைவ சித்தாந்தம் குறித்தும் அவர் ஏராளம் எழுதியுள்ளார். ஆழ்வார்கள், ஆண்டாள், நாயன்மார்கள், சித்தர்கள் குறித்து அவர் ஆய்வு செய்து எழுதியுள்ளவை ஏராளம். நவீன காலம் என்று வரும்பொழுது இராமலிங்க வள்ளலார், அயோத்திதாசப் பண்டிதர், பாரதியார், பெரியார், சிங்காரவேலர் போன்றவர்கள் குறித்தும் அவர்களின் தத்துவப் போக்குகள் குறித்தும் தீவிரமாக முத்துமோகன் ஆய்வு செய்தார்.
அவருடைய இந்த ஆய்வின் தொடக்கமாக அப்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைப் பேராசிரியராக இருந்த தமிழண்ணல் அவர்கள் தமிழ் சார்ந்த தத்துவப் போக்குகளைப் படிக்க வேண்டும், ஆய்வு செய்ய வேண்டும் என்று ஊக்கமூட்டினார் என்று முத்துமோகன் கூற நான் கேட்டிருக்கிறேன்.
மார்க்ஸ் அம்பேத்கர் தொடரும் உரையாடல் என்ற நூலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா அவர்களுடன் இணைந்து எழுதினார். சாதி குறித்தும் அம்பேத்கர் குறித்தும் பேராசிரியர் முத்துமோகன் அவர்களின் புரிதல் குறித்துக் கூறுக.
இந்தியச் சூழலில் காலங்காலமாக இருக்கிற பிரச்சினை வர்க்கமா? சாதியா? எது முக்கியம்? என்பது. இந்த இடத்தில் மார்க்ஸ் அம்பேத்கர் தொடரும் உரையாடல் என்பது முக்கியமான புத்தகம். அதற்கு முன்னால் மார்க்ஸ் அம்பேத்கர் புதிய பரப்புகளுக்கான தேடுகை என்ற நூல் வெளிவந்தது.
இந்தியச் சூழலில், முக்கியமான இடதுசாரி இயக்கங்களாகப் பொதுவுடைமை இயக்கங்களையும், தலித்திய இயக்கங்களையும் நாம் காண முடியும். மார்க்சியர்களின் வேலைத்திட்டம் வேறு; அம்பேத்கரியர்களின் வேலைத்திட்டம் வேறு என்ற தோற்றம் இருக்கிறது. தமிழ்ச் சூழலில், முக்கியமான இடதுசாரி இயக்கங்களாக பொதுவுடைமை இயக்கம், தலித்திய இயக்கம், திராவிட இயக்கம் ஆகியவற்றை அடையாளம் காண முடியும். இவற்றிற்கு இடையே கொடுக்கல் வாங்கல்கள் இருந்தாலும், அவற்றுக்கு இடையே பாலங்களை உருவாக்கி இணைந்து செயல்பட்டு மக்களாட்சி சோஷலிசச் சமூகத்தை உருவாக்குவது என்ற எத்தனிப்போடும், எதிர்பார்ப்போடும் இந்தப் புத்தகம் வெளிவந்தது.
மார்க்சையும் அம்பேத்கரையும் விலக்கி வைத்துப் பார்க்காமல் அவர்களுடைய கருத்துகளும் கோட்பாடுகளும் எந்தெந்த இடங்களில் ஒன்றிணைகின்றன, அந்தப் புள்ளிகளைத் தேடுவது முக்கியமான விடயமாகும். இதனை முத்துமோகன் அவர்களும் தோழர் ராஜா அவர்களும் கவனப்படுத்தினார்கள். எப்படி வர்க்கமும் சாதியும் இந்தியச் சமூகத்தில் செயல்படுகின்றன என்பதை இந்தப் புத்தகம், மார்க்ஸ் மற்றும் அம்பேத்கர் வழிநின்று கோட்பாட்டு ரீதியாக விளக்குகிறது. சாதி என்பது பொதுவுடைமை நோக்கிய நகர்வுக்கு எவ்வாறு தடையாக இருக்கிறது என்ற ஆதங்கத்தோடு சாதியையும் வர்க்கத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டும்; மார்க்சியர்களும் அம்பேத்தரியர்களும் எவ்வாறு இணைந்து செயல்பட முடியும்; வர்க்கமற்ற சாதியற்ற சமூகத்தை எவ்வாறு உருவாக்குவது போன்ற அடிப்படை விடயங்களாக மார்க்ஸ் அம்பேத்கர் உரையாடலை மாற்றுவது என்று இரு அறிஞர்களும் சிந்தித்தனர்.
மார்க்சையும் அம்பேத்கரையும் படிக்கும் பொழுது அவர்கள் இருவரும் இணையும் புள்ளிகளை எளிமையாக அடையாளப்படுத்திக் காட்டுவதை நாம் உணர முடியும். குறிப்பாக, கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்ஸ் ஒடுக்குவோர், ஒடுக்கப்படுவோர் குறித்துப் பேசுவார். இந்தப் புள்ளிகளையெல்லாம் இணைக்கும் பொழுது இந்தியாவில் சாதியால் ஒடுக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள்; ஒடுக்குவோரும் இருக்கிறார்கள். இவர்கள் சார்ந்து மார்க்சிய ரீதியாக இந்தியச் சூழலைப் புரிந்து கொள்வது என்ற முயற்சியை இந்தப் புத்தகத்தில் பார்க்க முடியும்.
இரண்டாவதாக, வெறுமனே வர்க்கம் சார்ந்தோ சாதி சார்ந்தோ நிறுத்திக்கொள்ளாமல் அவை இரண்டும் ஒன்றோடொன்று இணைந்து, பிணைந்து எவ்வாறு இயங்குகின்றன என்பது முக்கியமானது. அம்பேத்கர் மிகவும் தெளிவாக இதனை வலியுறுத்துகிறார். அம்பேத்கர், சாதி என்பது கதவடைக்கப்பட்ட வர்க்கம் என்று கருதினார். சாதி எங்கே முன்னெழும்பும், வர்க்கம் எங்கே முன்னெழும்பும் என்பதை அம்பேத்கர் தெளிவாகக் குறிப்பிடுகிறார். 1938-ஆம் ஆண்டு அம்பேத்கர் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மன்மத் எனும் இடத்தில் இரயில்வே தொழிலாளர்களிடம் பேசியது முக்கியமானது. இந்தியாவின் முக்கிய எதிரிகள் முதலாளித்துவமும் பார்ப்பனியமும் என்று அவர் பேசினார். இது போன்ற இடங்களில் மார்க்ஸும் அம்பேத்கரும் ஒருமித்த கருத்தினைக் கொண்டிருந்தனர் என வெளிப்படையாகத் தெரிகிறது.
மூன்றாவதாக, இந்த உரையாடல் பல பரப்புகளை நோக்கி நம்மை நகர்த்துவதாக இருக்கிறது. மார்க்ஸ் இந்தியா குறித்து எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்ட நூல்களாக வெளிவந்துள்ளன. மார்க்ஸ் சாதி குறித்தும் சாதி அமைப்புக் குறித்தும் அந்தக் கட்டுரைகளில் பல்வேறிடங்களில் பேசியிருக்கிறார். அவை ஏறக்குறைய அம்பேத்கர் குறிப்பிடும் நிலைப்பாட்டை ஒட்டி வருகின்றன. இவை பெரும்பாலும் மிக அதிகமாகப் பேசப்படாத விடயங்களாகவே இன்றுவரை உள்ளன. மேலதிகமாக, மார்க்ஸ் 1870க்குப் பிறகு சமூகம் சார்ந்து, பண்பாடு சார்ந்து, இனவியல் சார்ந்து ஏராளமான நூல்களைக் கற்றார். அப்போது அவர் எடுத்த குறிப்புகள் Ethnological Notebooks என்ற நூலாக வெளிவந்து அரை நூற்றாண்டு ஆகிவிட்டது. அவை குறித்த தீவிர ஆய்வுகள் தமிழ்ச் சூழலில், இந்தியச் சூழலில் இன்னும் இல்லை என்பதை அவதானிக்க முடியும். அக்குறிப்புகளில் ஓரிடத்தில், சாதி எப்படி அகமண முறையிலிருந்து உருவானது என்பது குறித்துப் பேசியிருக்கிறார். இது குறித்து அம்பேத்கர் கூறுவதையும் இந்த இடத்தில் ஒப்பு நோக்கலாம். இவையனைத்தும், மார்க்ஸ் - அம்பேத்கர் உரையாடலை முன்னெடுத்துச் செல்ல பல கோட்பாட்டு இணைவுகளைச் சுட்டுவனவாக இருக்கின்றன.
அம்பேத்கரியர்களும் மார்க்சியர்களும் சோசலிசச் சமுதாயத்தையோ ஒரு ஜனநாயக அமைப்பையோ உருவாக்குவதற்கு இணைந்து செயல்பட வேண்டும் என்பதற்கு முக்கிய அடித்தளமாக அந்நூல் விளங்குகிறது என்று நான் புரிந்து கொள்கிறேன்.