“தமிழ் உலகமே இன்று தலைகீழாய் நின்று வருவதற்கு அறியாமையே முதற்காரணம்.  பெரும்பான்மை மக்கள் அறிவியலின் மார்க்கம் இன்னதென்று தெரிந்துகொள்ளாத காரணத்தால் மூட ஒழுக்கங்களாலும்,சாதி சமயக் கெட்ட சடங்குகளாலும் மக்கள் வாடி வதங்குகின்றனர்” - சிங்காரவேலர்.

அறிஞர் அண்ணா அவர்களால் “சிந்தனைச் சிற்பி”என்று அழைக்கப்பெற்ற தோழர். ம. சிங்கார வேலர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர். எனினும் பன்மொழி-தமிழ் தெலுங்கு, மலையாளம்,உருது,ஆங்கிலம்,இந்தி,ஜெர்மன்,பிரஞ்சு, உருசிய - அறிந்த பொதுவுடைமை வாதியாகத் திகழ்ந்த, தேசப்பற்று மிக்க காங்கிரசு இயக்கத் தலைவராக இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். எத்தனை மொழிகளில் சிறப்பு எய்திக் கற்றுத் தேர்ந்திருந்தாலும் தாய்மொழியில் பற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்ற கொள்கையை உடையவர் சிங்காரவேலர். தமக்குப் பல மொழிகள் தெரிந்திருந்த போதிலும் தம் மக்களிடம் - தமிழ் மக்களிடம் - தமிழ் மொழியிலேயே பேசி, எழுதி, விளக்கம் தந்து உறவாடிய -சிங்காரவேலர்,தமிழை எவ்வகையிலும் தாழ்த்தாது அதனை உயர்த்தித் தமிழ் மானம் காத்தவர்.

பிறமொழிகளையும் கற்பது என்பது தம்முடைய சிறப்பை வெளிக்காட்டிக் கொள்வதற்காக அல்ல;பிற மொழிகளிலுள்ள அரிய பல கருத்துக்களை,கலை அறிவியலை, தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வதற்குப் பயன்படுத்துவதுடன்,அச்சீரிய சிந்தனைக் கருத்துக்களைத் தாய்மொழிவழிப் பிறருக்கு எடுத்தியம்புவதற்கும் பயன்படும். அத்துடன், தமது கருத்தைப் பிறமொழியாளரிடம் தயக்கமின்றி அவர்களுக்கு விளங்கும் வண்ணம் எடுத்தியம்பி உரையாடுவதற்கும்,பன்னாட்டு மக்களின் வாழ்க்கைப் பண்பாடு,வரலாறு, பழக்கவழக்கம் போன்றவற்றைச் செவ்வனே அறிந்துகொள்வதற்கும் பன்மொழி அறிவு உற்ற துணையாக அமையும் என்பதையும் சிங்காரவேலர் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.

தோழர் சிங்காரவேலர் பட்டம் பெற்றவராகவும் சட்டம் பயின்றவராகவும் விளங்கியதன் காரணமாக இலக்கியம், வரலாறு, பொருளியல், தத்துவம், உளவியல், அறிவியல், சட்டம் போன்ற பல்துறை களில் ஆழ்ந்த அறிவைப் பெற்றிருந்தார் என்பதுடன்,கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியம், இசை,நாட்டியம் போன்ற நுண்கலைகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதும் புலனாகின்றது. தான் கற்ற கல்வியின் மூலமாக மட்டுமல்லாது,தனது வீட்டில் அமைந்திருத்தநூலகத்திற்கு அவ்வப்போது வெளிநாடுகள் பலவற்றிலும், உள்நாட்டிலிருந்தும் வெளியாகும் பலதரப்பட்ட வானவியல், அறிவியல், நிலவியல், உளவியல், பொதுவுடைமை, தத்துவ இயல் போன்ற நூல்களையும்,இதழ்களையும் பெற்ற அவற்றையெல்லாம் உடனடியாகப் படித்தறிந்ததன் வாயிலாகவும் சிங்காரவேலர் பல்துறையிலும் போதுமான அறிவைப் பெற்றிருந்தார் என்பதை அவருடைய வாழ்வியலிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.

சிங்காரவேலரும் திரு.வி.க.வும்

1860ஆம் ஆண்டில் பிறந்த சிங்காரவேலர், 1917ஆம் ஆண்டு முதலே நாட்டின் விடுதலைப் போரில் ஈடுபாடு கொண்டிருந்தார் என்றாலும் 1900ஆண்டு முதலே அவர் இங்கிலாந்து, இலங்கை போன்ற வெளிநாடுகள் பலவற்றில் வியாபாரம் காரணமாக அவ்வப்போது சென்று வந்துள்ளார். அந்தக் காலகட்டத்தில் தன் பட்டறிவையும்,படிப் பறிவையும் வளர்த்துக்கொண்டதுடன், புத்தமதக் கொள்கையில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தவராகவும் தெரிய வருகிறார். 1902ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற புத்தமத மாநாட்டில் கலந்துகொண்டார்.  இத்தகைய ஆர்வத்தின் காரண மாக சென்னையில் இலட்சுமி நரசு நாயுடு, அயோத்தி தாஸ் பண்டிதர் ஆகியோருடன் இணைந்து ‘மகா போதி சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி அதன் வாயிலாகச் சென்னையில் பல்வேறு இடங்களில் புத்தமதக் கொள்கைகளைப் பரப்பியதுடன், அறிவியல் முற்போக்குச் சிந்தனைகளையும் ஆதாரங்களுடன் தமிழில் எடுத்தியம்பினார் சிங்காரவேலர். குறிப்பாக,அச்சங்கம் கீழை -மேலை நாட்டுச் சிந்தனைகளின் சங்கமமாக இருந்துள்ளது.

சைவ சமயத்தில் ஆர்வம்கொண்டிருந்த திரு.வி.க. அதன் கொள்கைகளைப் பரப்பிக் கொண்டிருந்த வேளையில் புத்தமதத்தைக் கண்டித்து எழுதியும் பேசியும் வந்தார்.  சிங்காரவேலர் நடத்திய பௌத்தக் கூட்டத்தில் கலகம் செய்யச் சென்ற திரு.வி.க. அந்நிகழ்ச்சிகளில் ஒன்றைத் தம் நூலில் கீழ்க் கண்டுள்ளவாறு குறித்துள்ளார்.

“கோமளீசுவரன் பேட்டைப் பகுதியில் ஒரு பௌத்த சங்கம் கூடிற்று.  அதில் இலட்சுமி நரசு நாயுடு,சிங்காரவேலர் செட்டியார் பேசுகின்றனர் எனக் கேள்வியுற்று நான் கூட்டத்துடன் அங்குச் சென்றேன். அங்கிருந்த சிலர் எம்மை உறுத்து நோக்கியதைக் கண்டு அச்சம் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தேன். சிங்காரவேல் செட்டியார் டார்வின் கொள்கையைத் தமிழில் விளக்கினார். என் உள்ளம் அதில் ஈடுபட்டது. கலகம் செய்யப் போந்த நான் டார்வின் வகுப்பு மாணாக்கனானேன்.  செட்டியார் ஆசிரியரானார்.”

கேட்பவரைப் பிணைக்கும் வகையாக சிங்கார வேலரின் சொற்பொழிவுகள் அறிவு பூர்வமாகவும் அறிவியல் சார்ந்தவையாகவும் தமிழில் அமைந்திருந்தன என்பதை நம்மால் உணர முடிகின்றது.

செய்தி இதழ்கள்

தந்தை பெரியார் அவர்கள் சிங்காரவேலர் வீட்டிற்கு வருகை தந்து கேட்டுக் கொண்டதற்கு இணங்கிப் பெரியாரின் குடியரசு,பகுத்தறிவு போன்ற இதழ்களிலும், தாம் துவக்கி நடத்தி வந்த ‘புது உலகம்’ இதழிலும் தொடர்ந்து அரசியல், பகுத்தறிவு, பொதுவுடைமை, மூடநம்பிக்கை எதிர்ப்பு, அறிவியல் பற்றிய கருத்துகளைத் தமிழில் எழுதி வந்த சிங்காரவேலர் அவ்வப்போது சண்ட மாருதம், புரட்சி, புதுவை முரசு, விடுதலை, திராவிடன் போன்ற இதழ்களிலும் மேற்கண்ட கருத்துகளை உள்ளடக்கிய பல்வேறு கட்டுரைகளைத் தமிழில் படைத்தளித்துள்ளார்.

சிங்காரவேலருடைய கட்டுரைகளும் அறிக்கை களும் இந்து, சுதர்மா, சண்டே அப்சர்வர், சண்டே அட்வகேட், ரிவோல்ட், வான்கார்டு, தி மெயில், லேபர் கிசான் கெசட் போன்ற ஆங்கிலச் செய்தித்தாள் மற்றும் இதழ்களிலும் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளன.

இத்தகு இதழ்களின் வாயிலாக சிங்காரவேலர் பல்வேறு தலைப்புகளில் பல நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார்.  தமிழில் வெளியாகியுள்ள அவருடைய கட்டுரைகள் பலவும் தொகுக்கப்பட்டு அக்காலத்திலேயே சில நூல்களாக வெளிவந்துள்ளன.

கட்டுரைகளும் நூல்களும்

தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்துத் தமிழில் திறனாய்வு செய்யும் திறன் படைத்தவராகச் சிங்காரவேலர் விளங்கியுள்ளார். பொதுவுடைமைத் தத்துவத்தையும், பொருளாதாரச் சிந்தனைத் தெளிவுகளையும், சமதருமப் புரட்சிகரச் சிந்தனைகளையும், பகுத்தறிவுக் கருத்துகளையும் பாமரமக்களும் புரிந்து கொள்ளும் வகையில் தமிழில் எடுத்தியம்பியுள்ளார்.

கார்ல் மார்க்சின் ‘டாஸ் கேப்பிடல் என்னும் பொதுவுடைமைக் கொள்கையின் வேதத்தை “மூலதனம்” என்னும் தலைப்பில் மிக எளிய ஐந்து கட்டுரைகளின் தொகுப்பு நூலாக முதன் முதலில் தமிழில் தந்தவர் சிங்காரவேலர். அதே நூலின் இறுதியில் பொதுவுடைமை அறிக்கையின் சுருக்கமும் தமிழில் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

போல்ஷிவிசம், பாசிசம், நாசிசம் என்னும் கட்டுரைகளின் வாயிலாக உருசியா, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் அன்றைய அரசியல் நிலைமைகளைத் திறனாய்வு செய்துள்ளார் சிங்கார வேலர். ‘சுயராஜ்யம் யாருக்கு?’என்னும் நூலின் வாயிலாக உண்மையான குடியரசு எவ்வாறு அமைய வேண்டும் எனக் கூறியுள்ளார். ‘எதுவேண்டும்?சுயராஜ்யமா சமதர்ம ராஜ்யமா?’,‘காந்தியின் உண்ணா விரதமும் தாழ்த்தப்பட்டோரின் தனித்தேர்தலும்’,‘குருட்டு முதலாளியும் செவிட்டு சர்க்காரும்’போன்ற பல்வேறு கட்டுரைகளின் வாயிலாக நாட்டு அரசியல் போக்கை அவ்வப்போது தமிழ் மக்கள் நன்கறியச் செய்துள்ளார்.

மேற்கண்டவையும் சமூக அரசியல்,சமூகம் சமயம்,சமூகம் பொருளாதாரம் போன்ற நூல்களும் பிறமொழி அரசியல் தத்துவ மேதை களின் அறிவியல் சார்ந்த தத்துவக் கருத்துகளின் அடிப்படையில் இந்தியச் சூழலுக்கேற்ப தொகுத்தளிக்கப் பட்ட சிங்காரவேலரின் சிந்தனைகளாகும்.

உலக அரசியல் சீர்கெட்டு உழல்வதற்கு முக்கிய காரணம் அரசியல் நடத்துவோர்க்குப் போதுமான விஞ்ஞானப் பழக்கம் இல்லாமையே ஆகும். அரசியல் நடத்துவதற்கும், குடும்பத்தை நடத்துவதற்கும் விஞ்ஞானம் அவசியமாகும் என்ற கருத்துடைய வராக விளங்கினார் சிங்காரவேலர்.

அறிவியல் உண்மைகள்

பல்வேறு வகைப்பட்ட அறிவியல்,வானவியல், புவியியல் சார்ந்த கருத்துகளைத் தமிழாக்கம் செய்து சிங்காரவேலரால் உணர்த்தப்படும் விதம்,இந்தியச் சமுதாயத்தில் பரவிக்கிடக்கும் மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்கும் நோக்கில் அமைந்துள்ளன. சிங்கார வேலரின் ‘விஞ்ஞான தத்துவ ஞானக் குறிப்புகள்’ என்னும் கட்டுரை ஞாயிறு, சந்திரன், விண்மீன்கள் ஆகியவற்றின் இயக்கங்களைப் பற்றியும் அவற்றின் இயற்பியல் அமைப்புகளைப் பற்றியும் விளக்கம் தருவதாக அமைந்துள்ளன. ‘தத்துவ ஞானக் குறிப்புகள்’என்னும் கட்டுரைத் தொகுப்பு சார்லஸ் டார்வின்,ஹெர்பர்ட் ஸ்பென்சர் ஆகிய அறிவியல் அறிஞர்கள் தெரிவித்த அறிவியல் உண்மைகளை வியந்து எழுதப் பட்டவையாகும். ‘வெண்மேகச் சித்தாந்தம்’ என்னும் தலைப்பில் மூன்று தொடர் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. ஞாயிறு பற்றி மத நூல்கள் குறிப்பிடும் பொருளற்ற கருத்துகளை மறுத்து அவற்றின் தோற்றம்,அமைப்பு, இயக்கம் குறித்த மேலைநாட்டு அறிவியல் அறிஞர்களின் கருத்துகளைத் தமிழில் விளக்கம் செய்து எழுதியுள்ளார் சிங்காரவேலர்.

அண்டத்தில் பூமி ஒரு திவலை என்பதையும்,உலகில் வாழும் மக்கள் எரிந்துபோன சாம்பலுக்கு ஒப்பாவார்கள் என்று உலகின் நிலையாமையையும் அறிவியல் அடிப்படையில் தமிழில் எடுத்துரைத்தார் சிங்காரவேலர். “பிரபஞ்சமும் நாமும்,சிருஷ்டி வரலாறு, தத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள், தத்துவஞானம், உலகம் சுழன்றுகொண்டே போகிறது” ஆகிய கட்டுரைகளின் வாயிலாக பூமியின் தோற்றம்,உயிரிகளின் தோற்றம்,இயக்கம் ஆகியன குறித்து விவரித்துரைக்கின்றார் சிங்காரவேலர். சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கைக்குப் பல சான்றுகள் தந்து அரண் சேர்த்த சிங்காரவேலர் டார்வினிசமும் அதன் கண்டனக் கருத்தாக்கமும்”என்ற நூலைப் படித்து ஆய்ந்தறிந்து திறனாய்வும் செய்து கருத்துகளை வழங்கியுள்ளார்.

கடவுள் மறுப்புக் கொள்கை

உலக விடுதலைக்கு வழி கடவுள் என்ற வார்த்தை ஒழிய வேண்டும். “சிருஷ்டி வரலாறு, நோய்களும் கடவுள் சக்தியும், கடவுள் என்றால் என்ன? கடவுள் நல்லவரா? கெட்டவரா?” போன்ற கட்டுரைகள் வாயிலாகவும், ‘கடவுளும் பிரபஞ்சமும்’ என்ற நூலின் வாயிலாகவும் கடவுள் மறுப்பு வாதங்களை அறிவியல் வழியில் விளக்கம் தருகிறார் சிங்காரவேலர்.

தெய்வமாடல்,ஆன்மா கற்பனை,பில்லி சூனியம்,குறிபார்த்தல், சோதிடம், மந்திரம் தந்திரங்கள், பூசை பிரார்த்தனை, நைவேத்தியம் போன்ற பல்வேறு சமயம், சமூகம் சார்ந்த பகுத்தறிவுக் கட்டுரைகளின் வாயிலாக மூடநம்பிக்கைகள் சமூக வாழ்வில் உருவாக்கும் இன்னல்களையும், தாக்கங்களையும் ஹெர்பர்ட் ஸ்பென்சர், சார்லஸ் டார்வின், அம்ரோஸ் பிளம்மிங், ஆர்தர் கீத், லேப்லஸ், இமானுவேல் காண்ட், ஹெர்ஷல், எகல், சோபன்யர் பிராட்லே,போன்ற மேலைநாட்டு அறிஞர்களின் ஆய்வுக் கருத்துகளை இந்திய நிலைமைக்கேற்ப சிந்தித்துத் தமிழாக்கம் செய்து வெளியிட்டதன் வாயிலாக, இலக்கியத்தில் சிகரம் தொட்டுள்ள தமது தாய் மொழி அறிவியல், வானவியல், பகுத்தறிவு உள்ளிட்ட புதிய கருத்துகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும் வாய்ப்பைஉருவாக்கிய சிந்தனையாளர்களில் முதன்மையானவராகச் சிங்காரவேலர் திகழ்கின்றார்.

வாழ்வியல் சிந்தனைகள்

சிங்காரவேலர் ஏட்டறிவோடு நின்றுவிடாமல் நடைமுறை வாழ்க்கையின் அங்கங்களையும் பற்றிச் சிந்தித்தவர்.  அவர் தாம் அறிந்த - உணர்ந்த கருத்து களை, தாம் வாழ்ந்து வந்த சுற்றுப்புறச் சூழலுடன் ஒப்பிட்டு,கூர்ந்து நோக்கி, அச்சூழலில் மனித சமுதாயம் மேம்பாடு அடையத்தக்க கருத்துகளையும் பல்வேறு தமிழ் இதழ்களின் வாயிலாகக் கட்டுரைகளாகவும் ‘வாழு வாழவிடு’, ‘வாழ்வு உயர வழி’ போன்ற நூல்களின் வாயிலாகவும் எடுத்தியம்பியுள்ளார்.

குடும்ப வாழ்வு, குழந்தை வளர்ப்பு, கல்வி மற்றும் அறிவு வளர்ச்சி, உளப்பாங்கு, கலப்பு மணம், மகளிர் உரிமை மற்றும் நலன்கள், சமூக ஒழுக்கம், களவொழுக்கம் போன்றன குறித்த கருத்துக் களை “கல்யாணம் என்றால் என்ன? மகளிர் நலம், நமது சந்ததியாருக்கு நாம் செய்ய வேண்டிய திருப்பணி, பிறந்தது வளர்க, மக்கள் வாழ்க்கை, கிராம வாசிகள்” போன்ற பல்வேறு கட்டுரைகளால் விளக்கம் செய்துள்ளார் சிங்காரவேலர். ‘பழக்கத்தின் ஆர்வம், மூப்பு அல்லது கிழத்தனம்’ போன்ற உடலியல் குறித்த கட்டுரைகள் மெட்சினியே என்ற சோவியத் நாட்டு அறிவியல் அறிஞரின் விளக்கத்தைச் சுருக்கித் தமிழில் தந்துள்ளனவாகும்.

சாதி முறை,சாதி மத வேறுபாட்டின் விளைவுகள், தீண்டாமையின் கொடுமைகள் போன்றனவற்றைக் குறித்த கருத்துகளை ‘சாதி மதம் ஒழிவதற்கு இனி வரும் சந்ததியினர் கற்பிக்க வேண்டியதன் அவசியம், மனோ ஆலய உள்ளங்கள், மதங்களின் மூடக் கோட் பாடுகள், ஜர்டனோ புருனே’ போன்ற கட்டுரை களின் வாயிலாக எடுத்துக் காட்டியுள்ளார் சிங்கார வேலர் ‘தத்துவ ஞான விஞ்ஞானக் குறிப்புகள்’ என்னும் கட்டுரையின் வாயிலாக சங்கராச்சாரியார், மத்துவாச்சாரி, இராமானுசர் போன்ற மதவாதி களின் தத்துவங்கள் அனைத்தும் பொருளற்றவை எனச் சிங்காரவேலர் விளக்குகிறார்.

‘உலக பாஷைகளின் உற்பவம்’ என்னும் கட்டுரையின் வாயிலாக மொழிகளின் தோற்றத்திற்கான விளக்கங்களை மேலை நாட்டு அறிஞர்களின் அறிவியல் துணைகொண்டு எடுத்தியம்பியவர் சிங்காரவேலர். ‘லாஸ்கி அம்மையாருக்கு’என்னும் கட்டுரையின் மூலம் குடும்ப நலத் திட்டத்தைப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் ஆய்ந்து அதற்கான தீர்வைத்தந்துள்ளார்.

சமூகம்,பொருளாதாரம்,வாழ்வு உயரவழி என்ற நூல்களின் வாயிலாகவும், குற்றமும் தண்டனையும், சமதர்மத்தில் பெண்கள், பழக்கத்தின் ஆர்வம், வாழ்வு உயர, வேசித்தனமும் போக்கும் மார்க்கமும், பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட சமதர்ம கட்டுரைகளின் வாயிலாகத் தொழில் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன், குற்றங்களைத் தடுப்பதற்கான வழிமுறைகளையும், குடிப்பழக்கத்தை அறவே நிறுத்த வேண்டியதன் அவசியத்தையும், பெண்களின் அவலத்தைப் போக்குவதற்கான வழி முறைகளையும், சிறுபான்மையோர் நலன், மனித நேயம், சமுதாயப் புரட்சி, விழிப்புணர்ச்சி, போராட்ட உணர்வுகள் போன்ற அனைத்து வகையான செயல் பாடுகளிலும் மேலைநாடுகள் உள்ளிட்ட பிறநாடுகளில் நிகழும் நடப்புகளை, வெளியாகும் கருத்துகளைப் பிறமொழி நூல்கள், செய்தி இதழ்கள் வாயிலாக உடனுக்குடன் அறிந்து, அவற்றின் தன்மைகளைச் சீர்தூக்கி ஆய்ந்து, சிந்தித்துத் தீர்வுகளுடன் கருத்துகளைத் தமிழில் தந்தோரில் முதல்வராகச் சிங்காரவேலர் திகழ்கின்றார்.

சென்னை மாநகராட்சி

இந்திய நாட்டிலேயே முதல் மாநகராட்சியாக விளங்கிய சென்னை மாநகரமன்றத்தில் அந்நாளில் ஆங்கிலத்திலேயே உரை நிகழ்த்தி விவாதிக்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்ட நடைமுறை நிலவியிருந்தது. 1925ஆம் ஆண்டு சென்னை மாநகர மன்ற உறுப் பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதில் பணியாற்றிய சிங்காரவேலர் தமது கன்னிப் பேச்சைத் தமிழிலேயே நிகழ்த்திப் புரட்சி செய்தார். 

ஆங்கிலத்தில் மிகச் சிறந்த திறனைக் கொண்டிருந்த போதும்,தமிழக ஆட்சியமைப்பில் தமிழுக்கு இட மில்லாத அவல நிலையைப் போக்கிட அவருள் எழுந்த புரட்சிகர எண்ணத்தைச் செயல்படுத்தி தமிழ்மானம் காத்தவர் சிங்காரவேலர். மாநகராட்சி மன்ற உறுப்பினர் பதவியேற்பு நிகழ்வில் அனைத்து மன்ற உறுப்பினர்களும் ஆண்டவன் பெயரால் ஆங்கிலத்தில் உறுதிமொழி எடுத்துக் கொண்ட நிலையில்,சிங்காரவேலர் மட்டும் மனசாட்சியின் அடிப்படையில் உறுதிமொழியைத் தமிழில் எடுத்துக் கொண்டார் என்பது அரசியல் ஆட்சி வரலாற்றில் தமிழுக்கு முதன்முதலாகக் கிடைத்த முதல் மரியாதை என்பதைத் தமிழுலகு அறிந்தின்புறல் வேண்டும்.

தமிழில் தாம் உரையாற்றிய நிகழ்வோடு நில்லாது மாநகர மன்ற விவாதங்களும் நிர்வாக நடைமுறைகளும் சிங்காரவேலரின் தொடர் முயற்சியினால் ஆங்கிலத்துடன் தமிழிலும் அரங்கேற்றம் பெற்றன என்பது குறிப்பிடத் தக்கதாகும். 

அதே மன்றத்தில் கல்வி நிலைக்குழுத் தலைவராக விளங்கி,மாநகராட்சிப் பள்ளிகளில் தொடக்கக் கல்வியைப் பயின்ற ஏழை எளிய மாணவர்களுக்கு மதிய உணவும்,உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகையும் மாநகராட்சி நிர்வாகத்தால் வழங்கச் செய்த நடைமுறையும் அவரால் ஆசியக் கண்டத்தில் முதன்முதலாக எடுத்துக் காட்டிய நிகழ்வுகளாகும்.  இவற்றால் பெரிதும் பயன் பெற்றவர்கள் முதல் தலைமுறையாகக் கல்வி கற்க முனைந்த,தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஏழை எளியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மகாகவி பாரதியாரும் பாவேந்தரும்

தொன்தமிழ்ச் சீர்வாய்ந்த இலக்கியங்களின் வாயிலாகச் செவ்வியல் மொழியாக வலம்வரும் தீந்தமிழில் புத்துணர்வும் புத்தாக்கமும் புகுத்தி மொழிக்குப் புதுப்பொலிவைத் தோற்றுவித்த பெருங்கவிஞர்கள் மகாகவி பாரதியாரும் அவர் வழிவந்த பாரதிதாசன் என்னும் பாவேந்தரும் என்பதைத் தமிழுலகு நன்கறியும்.

மகாகவி புதுவையிலிருந்த வரையில் முற்போக்குப் பொதுவுடைமைத் தாக்கத்தை அவ்வளவாகப்பெற்றிருக்கவில்லை என்பது அவரது படைப்புகளை ஆய்ந்தறிந்தவர்களுக்குத் தெற்றெனப் புலப்படும். ஆன்மிக நெறிகளையும், இயற்கை வனப்புகளையும், காதல் இலக்கியங்களையும், பொதுமக்கள் வாழ்க்கை நடைமுறைப் போக்குகளையும், இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் பாடல்களாக வடித்து வந்துள்ளார். அவரைப் பின்பற்றியே பாவேந்தரும் தமது கவிகளை வார்த்தளித்துள்ளார்.

புதுச்சேரி வாழ்வைத் துறந்து பாரதி சென்னையில் வசித்த காலத்தில், சிங்காரவேலரின் நூல் நிலை யத்தில் பயின்றதுடன், குடியரசு, பகுத்தறிவு, புது உலகம் போன்ற இதழ்களில் வெளியான சிங்காரவேலரின் புரட்சிகரக் கட்டுரைகளைப் படித்தறிந்த பின்னரே முற்போக்குச் சிந்தனையில் ஆழ்ந்தார்.  அதன் பின்னரே,

“ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று சொல்லும் அறிவிலிகாள்!”

“பார்ப்பானை அய்யரென்ற காலமும் போச்சே! வெள்ளைப்
 பரங்கியரை துரையென்ற காலமும் போச்சே!”

“சூத்திரனுக்கொரு நீதி, தண்டச் சோறுண்ணும்
 பார்ப்புக்கொரு நீதியெனில் அது
 சாத்திரமல்ல! சதியென்று கண்டோம்!”

“தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில்
 ஜகத்தினை அழித்திடுவோம்.

என்றெல்லாம் பாடினார்.

இரசியப் புரட்சியைப் பற்றி முதலில்
‘இலெனின் ஒரு மூடன்’ என்றுரைத்த
 மகாகவி, சிங்காரவேலரின் சந்திப்புக்குப் பின்

“ஆகாவென்று எழுந்ததுபார் யுகப்புரட்சி” என்று பாடினார்.

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் 1932இல் சிங்காரவேலர் வீட்டில் குடியிருந்தபோது அங்கிருந்த சிங்காரவேலரின் நூலகத்தைக் கண்டு வியந்தார். அதில் பயின்றார். சிங்கார வேலர் முன்னின்று நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு “இன்று முதல் நான் ஒரு நாத்திகன்”என்று பதிவேட்டில் எழுதிக் கையொப்பமிட்டுத் தன் இறுதிக்காலம் வரை அப்படியே வாழ்ந்தார் என்பதுடன் அவரது பாடல்களிலும் பகுத்தறிவும் சமூகச் சீர்திருத்தமும் பொதுவுடையும் பூத்துக் குலுங்கின.

இவ்விரு பெரும் படைப்பாளர்கள் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலருடன் தொடர்பு கொண்டு முற் போக்குச் சீர்திருத்தப் பொதுவுடைமைப் பூங்காவைத் தமிழிலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியதன் விளை வாகவே பிற்காலக் கவிஞர்களுக்கும் படைப்பாளர் களுக்கும் முன்னோடிகளாக விளங்குகின்றனர்.  இதன் காரணமாகவே தற்காலத் தமிழிலக்கிய உலகம் சமதருமப் புரட்சிகரச் சிந்தனைகளை, கருத்துகளை இன்றைய தமிழ்ப் படைப்பாளிகளின் வாயிலாகப் பெற்று முற்போக்குச் சிந்தனையுடன் விளங்கி வருகிறது.

இத்தகு சீரும் சிறப்பும் தீந்தமிழ் இலக்கிய உலகிற்குக் கிடைத்திடச் செய்ததில் பெருந் தொண் டாற்றிய பெருமகனார்களில் மாமேதை சிங்கார வேலர் முன்னோடியாக உள்ளார் என்பதைத் தமிழுலகு நன்றியுடன் நினைவு கூர்ந்திடல் வேண்டும்.

தொல்தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள் போன்றவற்றை ஆய்ந்து அவற்றின் வழியே அக்கால மக்களின் வாழ்க்கை முறைகளையும்,அரசாட்சித் தன்மை களையும், ஆன்மிக ஒழுக்க நெறிகளையும் இலக்கியச் சுவை சொட்டச் சொட்ட எடுத்தியம்பும் புலவர்கள், தமிழறிஞர்கள், தமிழாசிரியர்கள் போன்றவர்கள் தமிழுக்குத் தொண்டு செய்பவர்களாக ஏற்றுக் கொள்வதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இட மில்லை. அதே போன்று தமிழ்மொழியின் வளர்ச்சிக் காகவும் அதனை வளப்படுத்துவதற்காகவும் பணி செய்துவரும் தமிழார்வலர்களையும் தமிழ்த் தொண்டர்களாகக் கருதிப் போற்றலாம். நற்றமிழ் வளர்ச்சியில் கவிதை,பாக்கள், கட்டுரைகள், புதினம், நாடகம், சிறுகதை போன்றன படைப்போரும்,இசைத் தமிழ் வித்தகர்களும் தமிழிலக்கியப் படைப் பாளர்களாகப் போற்றிச் சிறப்பு செய்யப்படுவது பாராட்டுக்குரியதாகும்.  இவ்வாறே,

“சென்றிடூவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!”

என்ற மகாகவியின் வாக்குக்கொப்ப,பிறமொழிக் கலைகள் அனைத்தையும் தமிழுக்குக் கொண்டு வருதலையும்,தொல்தமிழின் சிறப்புகளைப் பிற மொழியாளர் அறிந்துகொள்ளச் செய்தலையும் தலையாய தமிழ்த்தொண்டாக மேற்கொள்ளுதலின்அவசியத்தை அனைவரும் அறிந்துள்ளனர். இவ்வகைப் பணிகளில்கூட பிறமொழி இலக்கியக் கருத்து களைத் தமிழுக்குக் கொணர்தலையும் தமிழ் மொழியிலுள்ள இலக்கியச் சிறப்புகளைப்  பிறமொழிகளுக்கு எடுத்துச் செல்வதையுமே இன்றைய தமிழறி ஞர்கள் தமிழ்த்தொண்டாகக் கருதும் போக்கைக் கொண்டுள்ளனர். இந்நிலை மாற்றப்பட வேண்டும். 

அதாவது, பிறமொழிகளிலுள்ள அறிவியல், கல, தத்துவம், உளவியல், மருத்துவம், தொழில்நுட்பம் போன்ற அனைத்து வகையான அரிய சிறப்புகளையும் தமிழில் கொண்டுவருதலையும்,இதுபோன்று நம்மிடமுள்ள சிறந்த கலைகளைப் பிறமொழியினர் அறிந்துகொள்ளச் செய்தலையும் தமிழுக்குச் செய்யும் நற்பணியாக அங்கீகரித்து அவர்களையும் தமிழுணர் வாளர்களாகப் போற்றுதல் வேண்டும்.

அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்த நூல்கள் ஏதும் தமிழ்மொழியில் இல்லாத காலகட்டத்தில் வாழ்ந்த சிங்காரவேலர் அவர்கள் ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், உருசியன் மொழிகளில் வெளிப்பட்ட அறிவியல், வானவியல், மானிடவியல் பொருளியல், பகுத்தறிவுத் தத்துவக் கருத்துகளைத் தமிழாக்கம் செய்து நாட்டு மக்களின் வாழ்க்கைச் சூழலுக்கேற்ப வழங்கிய தமிழ்த்தொண்டராக விளங்கினார். இத்தகைய சிறந்ததொரு தமிழ்த்தொண்டை இன்றைக்குச் சுமார் 80ஆண்டுகளுக்கு முன்னரே சமதருமப் புரட்சியாளர் சிங்காரவேலர் மேற் கொண்டிருந்தார் என்பதைத் தமிழ்கூறும் நல்லுலகம் நினைவுகூர்ந்து போற்றுதல் வேண்டும்.

Pin It