tha pandian3தோழர் தா.பாண்டியனின் இழப்பு அரசியலுக்கும் பொதுவுடைமை இயக்கத்துக்கும் மட்டுமேயான இழப்பல்ல. தேசிய சிந்தனையுடனும், சர்வதேசக் கண்ணோட்டத்துடனும் பிரச்சனைகளைப் பார்க்கும் ஆக்கபூர்வ சிந்தனாவாதி ஒருவரின் மறைவும் கூட. இலக்கியத்தில் ஆழங்காற்பட்ட புலமையுள்ள ஓர் அரசியல் தலைவரின் மரணம் என்றும் நாம் உணர வேண்டும்.

அற்றை நாள்களில் மதுரை ஆரப்பாளையம் நாற்சந்தியில் தொழிற் சங்கக் கூட்டங்கள் நடக்கும். அந்தப் பொதுக்கூட்டத்தில் மாநில, தேசிய தொழிற்சங்கத் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றுவார்கள்.

அப்படி ஒரு பொதுக்கூட்டத்தில் தா.பாண்டியன் பேசும்போது நான் கல்லூரி மாணவன். தோழர் கே.டி.கே.தங்கமணி தலைமையில் நடந்த அந்தப் பொதுக் கூட்டத்தில் தோழர் பாலதண்டாயுதமும் கலந்து கொண்டதாக நினைவு.

அந்தப் பொதுக்கூட்டம் நடந்த சில நாள்களுக்குப் பிறகு ஒருநாள் தோழர் தா.பாண்டியனை மதுரை ரயில் நிலைய நடைமேடையில் பார்த்தேன். ‘கல்லூரி மாணவன்’ என்று என்னை நானே அறிமுகப்படுத்திக் கொண்டு, என்னிடம் இருந்த ஏதோ ஒரு புத்தகத்தில் அவரது ‘நினைவுக் கையப்பம்’ (ஆட்டோகிராஃப்) விழைந்தேன்.

சிரித்துக் கொண்டே தனது பையிலிருந்து ஃபவுன்ட்டன் பேனாவை எடுத்து அதில் கையெழுத்திட்டுத் தந்தார். அதற்குப் பிறகு எத்தனையோ தடவை அவரைச் சந்தித்திருக்கிறேன்; பேசியிருக்கிறேன்; விவாதித்திருக்கிறேன்; பேட்டி எடுத்திருக்கிறேன். வள்ளுவமும் பாரதி இலக்கியமும் தோழர் தா.பா.வுக்குத் தண்ணீர் பட்டபாடு.

அவர் மக்களவை உறுப்பினராக இருந்தபோது தில்லியிலும், தில்லிக்குச் செல்லும், திரும்பும் ரயிலிலும் நாங்கள் பலமுறை சந்தித்ததுண்டு. நிறைய விவாதித்ததுண்டு. மார்க்ஸ், ஏங்கல்ஸ் குறித்த எனது பல ஐயப்பாடுகளுக்கும், கருத்து வேறுபாடுகளுக்கும் தோழர் தா.பாண்டியன் விளக்கங்கள் தந்ததுண்டு. ஆணித்தரமாகவும், அழுத்தமாகவும் தனது தரப்பு வாதங்களை முன்வைக்கும் அபார ஆற்றல் அவருக்கு உண்டு. சிந்தனைத் தெளிவை தோழர் தா.பாண்டியனிடம் தான் பார்க்க வேண்டும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் கிராமப்புற செவிலியர்கள் சங்கத் தலைவி நிர்மலாவுக்கு ஒரு பாராட்டு விழா நடந்தது. அந்த நிகழ்வில்தான் நான் தோழர் தா.பாண்டியனை கடைசியாகச் சந்தித்தேன். என் கரங்களைப் பற்றிக்கொண்டு அவர் சுமார் பத்துப் பதினைந்து நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தார்.

கடந்த ஆண்டு தீபாவளி மலரில் தோழர் ஜீவா குறித்த அவரது நினைவுகளை கட்டுரையாக்கித் தரவேண்டும் என்று அவரிடம் கேட்டோம். நான் இப்போது தோழர் தா.பாண்டியனை நினைவு கூர்வது போல, அவர் தோழர் ஜீவாவுடனான முதல் சந்திப்பில் தொடங்கி, அவரது இறுதிக்காலம் வரையிலான நிகழ்வுகளை எழுத்தில் வடித்துத் தந்தார். அது தான் அநேகமாக அவர் எழுதிய கடைசி கட்டுரையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

கடந்த பத்தாண்டுகளாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் எதிர் கொண்ட உடல் ரீதியான வேதனைகளைச் சொல்லி மாளாது. ஆனால், அது அவரது பொதுவாழ்க்கை அர்ப்பணிப்பை சற்றும் பாதிக்கவில்லை என்பதுதான் தோழர் தா.பாண்டியனிடம் நான் வியக்கும் மன உறுதி.

உலகப் பேரிலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்தவர்களில் தோழர் தா.பாண்டியன் குறிப்பிடத்தக்கவர். ஆங்கிலப் பேராசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய தோழர் தா.பா.வின் மக்களவை உரைகளைக் கேட்டவர்களுக்குத்தான் தெரியும், அந்த மனிதரின் ஆற்றல் எந்த அளவுக்குப் பரந்து விரிந்தது என்பது.

அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு இழப்பு. அவர் சார்ந்த இயக்கத்துக்குப் பேரிழப்பு. தமிழகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

கலாரசிகன், தினமணி

28-.02-.2021

நெல்சன் மண்டேலா குறித்த எத்தனை எத்தனையோ புத்தகங்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் வந்துவிட்டன.ஆனால், காலத்தைக் கடந்தும் நிலைத்திருக்கும் மண்டேலா குறித்த சுவாரசியமான ஆவணப் பதிவு ஒன்று இருக்கிறது. அது தோழர் தா.பாண்டியன் எழுதிய நெல்சன் மண்டேலா என்கிற புத்தகம்.

நெல்சன் மண்டேலா சிறையில் இருந்தபோது எழுதிய புத்தகம் ‘லாங் ரோட் டு ஃப்ரீடம்’ (விடுதலையை நோக்கி நெடும் பயணம்). அதை சிறைச் சாலையிலிருந்து ரகசியமாக வெளியில் அனுப்பி அச்சிட்டார். அது அவரது சுயசரிதையும்கூட. அந்தப் புத்தகத்தை அப்படியே மொழியாக்கம் செய்யாமல், அதை அடிப்படையாகக் கொண்டு தோழர் தா.பாண்டியன் எழுதியிருக்கும் புத்தகம்தான் ‘நெல்சன் மண்டேலா.’

‘நெல்சன் மண்டேலாவின் வரலாறு ஒரு தனிமனிதனின் வரலாறு அன்று.ஒரு நாட்டின் வரலாறுகூட அன்று. மனித சமுதாயத்தின் நீண்ட வாழ்வில் இன, நிறவெறி ஆதிக்கத்தினர் தம் ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்ள நடத்திய போரின் இறுதி அத்தியாயம்.

தா.பாண்டியன் நல்ல தமிழில், எளிய நடையில் ஒரு வரலாற்று இலக்கியம் படைத்திருக்கிறார் என்பது அணிந்துரை வழங்கி இருக்கும் வா.செ.குழந்தைசாமியின் பதிவு.

வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்கிற அடிப்படையில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த முதல் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றுக் குடியரசுத் தலைவரானார் நெல்சன் மண்டேலா. பதவிக்காலம் முடிந்தது. மீண்டும் தேர்தலுக்கு நிற்க வேண்டும். போட்டியிட மறுத்து விலகிக் கொண்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்தான் நெல்சன் மண்டேலாவை ஒட்டுமொத்த உலகத்தையும் நிமிர்ந்து பார்க்க வைத்தது.

‘இனி அடுத்த சந்ததி தொடர வேண்டிய கடமை, பொறுப்பு இருக்கிறது’ என்று கூறி, தனது சக போராளி ஒருவர் பெயரை முன்மொழிந்து போட்டியிடாமல் விலகிக் கொண்டார். கடைசி மூச்சு வரை பதவிப்பித்து பிடித்து அலைவதும், தன் பிள்ளை, பெயரன் என்று குடும்ப ஆட்சியை நிலை நிறுத்துவதுமான உலகில், இப்படியும் தலைவர் ஒருவர் நம்மிடையே வாழ்ந்து மறைந்தார் என்பதை நினைத்தாலே சிலிர்க்கிறது.

‘நெல்சன் மண்டேலாவின் வரலாற்றைத் தமிழில் ஆவணப்படுத்த வேண்டும்’ என்று தோழர் தா.பாண்டியன் முடிவெடுத்ததன் காரணம் புரிந்தது.

கலாரசிகன், தினமணி

07-.03.-2021

- ‘தினமணி' கி.வைத்தியநாதன்