“காதலிக்கிற, தங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் உரிமை தங்களுக்கு இருக்கிறது என்றும் நம்புகிற ஒவ்வொரு ஆணையும், பெண்ணையும் நோக்கி இந்த எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. நீங்கள் காதலித்தால் சாகடிக்கப்படுவீர்கள் அல்லது உங்களை நீங்களே அழித்துக் கொள்ள நிர்பந்திக்கப்படுவீர்கள். சட்டம், நீதி, ஊடகங்கள் எதை வைத்தும் நீங்கள் தப்ப முடியாது”. இது மாற்று சாதியில் காதலிப்பவர்களுக்கு விடப்படும் எச்சரிக்கை. இதையும் மீறி காதலித்தால் மேற்சொன்ன விளைவுதான் ஏற்படும். குறிப்பாக தலித்துகளைக் காதலித்தால் பின் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும் என்பது மட்டும் கண்டிப்பாக நிச்சயம்.

honour killing 1

சாதி மறுப்புத் திருமணம் செய்யும் தம்பதிகள் கொலை செய்யப்பட்டும் மற்றும் கட்டாயக் கெளரவத் தற்கொலைக்குத் தூண்டப்பட்டும் வருகிறார்கள். சாதி மறுப்புத் திருமணம் செய்ய இளம்தலைமுறையினர் அஞ்சும் அளவிற்கு காவல் நிலையத்தில் வைத்து ஆதிக்கசாதிகளின் கட்சிகள் மற்றும் அமைப்புகள் நடத்தும் கட்டப் பஞ்சாயத்துகள் உள்ளன. “கெளரவக் கொலைகள் அதிக அளவில் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகம் மாறிவிட்டது என்ற தகவல்களும், சில சாதி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலப்புத் திருமணத்திற்கு எதிராக முன்வைத்த முழக்கங்களும் நாம் சாதிக்கொடுமையின் சாப நிழலுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை திரும்பத் திரும்ப எச்சரித்துக் கொண்டே இருக்கின்றன”. தலித்துகளைத் திருமணம் செய்யும் மற்ற சாதிப் பெண்கள் சாதிக் கெளரவம், குடும்ப கெளரவம், சமுதாயத்தில் வாழவே முடியாது போன்ற உளவியல் ஆயுதத்தை வைத்தே மிரட்டப்படுகின்றனர். ஒரு தலித்தை திருமணம் செய்வதற்குப் பதில் தற்கொலை செய்துகொள் என்றும் அதன்மூலம் தங்கள் கெளரவம் காக்கப்படும் என்றும் கட்டாயக் கெளரவத் தற்கொலைக்குத் தூண்டப்படுகின்றனர்.

தலித் அல்லாத பிற சாதிகளுக்கிடையே கலப்புத் திருமணங்கள் நடைபெறும் பொழுது அவை தடுக்கப்படுவதும் இல்லை, கவனம் பெறுவதும் இல்லை. ஆனால் தலித் கலப்புத் திருமணங்கள் பெரும் எதிர்ப்பை சந்திக்கின்றன. அந்த தம்பதிகள் பிரிந்தே ஆகவேண்டிய நிர்பந்தம் ஏற்படுத்தப்படுகிறது. தலித் கலப்புத் திருமணம் என்றால் அதற்கான விலை உயிர் தான். தலித்துகளை மருமகனாகவோ, சம்பந்தியாகவோ, வேறெந்த உறவு முறையாகவோ ஆதிக்க சாதிகள் ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை. இந்தியா முழுமைக்குமே இந்த நிலைதான். தங்களுக்கு தலித்துகள் அடிமைகளாகவோ, ஏவலர்களாகவோ வேண்டுமே தவிர, உறவினர்களாக ஒருபோதும் ஆகவிடமாட்டோம் என்றுதான் சாதி மறுப்புத் திருமணங்களை எதிர்ப்பதும், மீறி நடைபெற்றால் காவல் நிலையத்தில் பெண் கடத்தப்பட்டார் எனப் பொய்ப் புகார் கொடுத்து தம்பதிகளை காவல் நிலையம் வரவழைத்து காவல் துறையின் கட்டப் பஞ்சாயத்தின் மூலமோ, சாதிப் பஞ்சாயத்தின் மூலமோ பிரிக்க நினைக்கின்றனர். முடியாத பட்சத்தில் காதலித்தவர்கள் இருவரையுமோ அல்லது அதில் ஒருவரையோ கொலை செய்கின்றனர். தலித்துகளை திருமணம் செய்வதன் மூலம் தங்கள் சாதியின் கெளரவத்தை கெடுத்துவிட்டதாக தங்கள் பிள்ளைகளையே கொலை செய்ய இந்த சாதிய சமூகம் அவர்களைத் தூண்டுகின்றது. சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற சாதி ஆணவக் கொலைகளே இதற்கு சாட்சி.

பொதுவாக சாதி மறுப்புத் திருமணம் புரிந்தவர்களை இந்த சாதிய சமூகம் அங்கீகரிக்க மறுக்கின்றது. தலித் கலப்புத் திருமணங்களுக்கு சமூக அங்கீகாரம் கிடைப்பதில்லை. அவர்கள் ஏதோ பெரிய தவறு செய்துவிட்டதாகவே பார்க்கப்படுகின்றனர். அவர்கள் வாழும் சமூகம் அவர்களை தங்களுக்குள் ஒருவராக ஏற்றுக்கொள்வதில்லை. சமூக அந்தஸ்து கிடைக்க வேண்டும் அல்லது சமூகத்தால் மதிக்கப்பட வேண்டும் என்றால் தான் சார்ந்த சாதியிலேயே திருமணம் செய்து, தான் சார்ந்த சாதியிலேயே தங்கள் குழந்தைகளுக்கும் திருமணம் செய்துவைக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர் சமூகத்தில் உயர்ந்தவராக பார்க்கப்படுவார் என்ற மாயை தொடர்ந்து பரப்பப்பட்டு வருகினறது. கல்வியில் உயர்ந்தவர் என்பதைத் தாண்டிய கெளரவமாக இங்கே சாதி பார்க்கப்படுகிறது.

ஆதிக்க சாதிகளின் கட்சிகள் மற்றும் அமைப்புகள் இதுபோன்ற தலித் கலப்புத் திருமணங்களை எதிர்ப்பதும், ஊடகங்களின் நேர்காணலின் போது இது போன்ற திருமணங்களுக்கு மிரட்டல் விடுவதும், இவ்வகைத் திருமணத்தை செய்தாலோ அல்லது அதற்கு துணைபுரிந்தாலோ தங்களிடம் இருந்து எதிர்ப்பு வரும் என்று பொது சமூகத்திற்கு போதித்து வருகிறார்கள். திருமண வயதை 21 ஆக மாற்றக் கோரும் இவர்கள் ஓட்டுப் போடும் வயதை 21 ஆக மாற்ற கோர மறுக்கிறார்கள். காரணம் ஓட்டுக்கள் குறையும் என்பதால். 18 வயதில் நாட்டை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கும் அரசியல் தெளிவு பெறும் அதே பெண் தனக்கான துணையைத் தேர்ந்தெடுக்க மட்டும் 21 வயது ஆக வேண்டுமாம். 18 வயதில் திருமணம் செய்து குழந்தை பெறும் அளவுக்கு பெண்ணின் மனதும் உடலும் பக்குவப்படுவதில்லைதான். ஆனால் அதை விடுத்து சாதி மாறி கலப்புத் திருமணம் செய்வார்கள் என்பதற்காக பெண்ணுடைய திருமண வயதை அதிகரிக்கச் சொல்வதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது. இவற்றையெல்லாம் எதிர்க்க வேண்டிய பொது அமைப்புகள் தங்களுடைய கலப்புத் திருமணத்திற்கு எதிரான நிலைப்பாட்டை மெளனத்தின் மூலம் மறைமுகமாக இந்த சமூகத்திற்கு வெளிப்படுத்துகின்றன.

ஊடகங்கள் சாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிராக நடைபெறும் வன்முறைகளையோ, கெளரவக் கொலைகளையோ வெளியிடாமல் இருட்டடிப்பு செய்து, தங்களுடைய கடமையை முடித்துக் கொள்கின்றனர். கலப்புத் திருமணத்திற்கு எதிராக செயல்படும், அறிக்கைவிடும், கூட்டணி அமைக்கும் கட்சிகளையோ, அமைப்புகளையோ அவை ஒருபோதும் கண்டித்ததுமில்லை. அவர்கள் செய்வது தவறு என் சுட்டிக்காட்டுவதும் இல்லை. மாறாக அவர்கள் விடும் அறிக்கைகளை ஒரு வரி விடாமல் இந்த சமுதாயத்திற்கு தெரியப்படுத்தும் வேலையையே செய்கின்றன. இதன் மூலம் அவர்களின் கொள்கைகளை உலகம் முழுவதும் பரப்புவதில் முனைப்பு காட்டுகின்றனர். மேலும் அவர்களை நேர்காணல் செய்து கலப்புத் திருமண எதிர்ப்பிற்கு நியாயம் கற்பிக்க துணைபுரிகின்றனர். இதன் மூலம் ஊடகங்களும் தங்களுடைய பங்கிற்கு கலப்புத் திருமணத்திற்கெதிரான தங்களுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்துகின்றன.

காவல் துறை, சாதி மறுப்புத் திருமணத் தம்பதிகளை காப்பதை விட்டுவிட்டு, கட்டப் பஞ்சாயத்து செய்து அவர்களைப் பிரிப்பதற்கு துணையாக இருக்கின்றன. சாதி ஆணவக் கொலைகள் நடைபெறும் போதும் சாதிக் கொலைகாரர்களுக்கு சார்பாக அதை தற்கொலை வழக்காக பதிவு செய்து, தாங்களும் கலப்புத் திருமணத்திற்கு எதிரானவர்கள் என்று காட்டிக் கொள்கின்றனர். “கலப்புத் திருமணங்களுக்கு எதிரான வன்முறை தமிழ்ச் சமூகத்தில் நீண்டகாலமாக இருந்துவரும் ஒன்றுதான். கலப்புத் திருமணங்கள் செய்பவர்கள் வலுக்கட்டாயமாகப் பிரித்து அறுத்துக் கட்டுவது, அவர்களை கொலை செய்வது, தற்கொலைக்குத் தூண்டுவது இதெல்லாம் நமது சாதிய சமூகங்கள் செய்து வரும் அன்றாடத் தொழில்கள்தான்”. இதற்கு உதாரணம் தமிழகத்தில் ஒரு சாதி மறுப்புத் திருமணத்திற்காக மூன்று கிராமங்கள் தருமபுரி அருகே எரிக்கப்பட்டதே ஆதாரம். எப்பொழுதும் தமிழகம் முழுவதும் சாதிகடந்த காதலர்களுக்கு எதிரான மிகப்பெரிய வன்முறை நடந்துகொண்டிருக்கிறது.

இங்கு கவனிக்கப்பட வேண்டியது ஒரு தனி நபரின் பிரச்சனை தன்னுடைய குடும்பத்தையும் தாண்டி ஒரு சாதிக் குழுவின் பிரச்சனையாக பார்க்கப்படுகின்றது. இது ஏன் அவ்வாறு மாற்றப்படுகின்றது? காதலிப்பது என்பது தனிநபர் சார்ந்த விஷயம் இதில் சம்மந்தப்பட்ட குடும்பத்தைத் தவிர மற்றவர்களுக்கு பிரச்சனை இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால் அதை தன்னுடைய ஒட்டுமொத்த சாதியின் பிரச்சனையாக மாற்றுவதில் அந்த சாதி முனைகின்றது. இதன் மூலம் தங்கள் சாதிப் பெண்கள் தங்களுக்கு மட்டுமே செந்தமாக வேண்டும் என்று நிறுவுகின்றனர். இங்கு தனிமனித உரிமை பறிபோகின்றது.

சட்டப் பாதுகாப்போ, காவல் துறையின் பாதுகாப்போ இல்லாத காரணத்தினால் கலப்புத் திருமணத் தம்பதிகள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத நிலையே இருக்கிறது. கலப்புத் திருமணம் செய்வோரில் ஒருவரோ அல்லது இருவருமோ செத்தாக வேண்டிய சூழ்நிலை இங்கே நிலவிக் கொண்டிருக்கிறது. இதற்காகவே இளம் தலைமுறையினர் சாதிகடந்து காதல் செய்வதற்கு அஞ்சி நிற்கின்றனர். காதலித்துக் கொண்டிருப்பவர்களும் தங்களுக்குள் பேசி பரஸ்பரம் பிரிந்து போக முடிவெடுக்க வேண்டியுள்ளது. மனதைப் பார்த்து வரவேண்டிய காதல், சாதிச் சான்றிதழ் பார்த்து வரவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.

காதல் என்பது இயற்கையானது. அதை விலங்குகளிடமும், பறவைகளிடமும் பார்க்க முடியும். ஆனால் அவை குறிப்பிட்ட கால அளவுள்ளது, அத்துடன் அது முடிந்துவிடும். அதே வேலை மனிதனின் காதல் மட்டும்தான் நீண்டகாலம் தொடரும். இளம் பருவத்தில் ஆரம்பித்து திருமணத்தின் மூலம் இறப்புவரை தொடர்கின்றது. இதில் சாதி என்பற்கு எந்த விதமான் வேலையும் இல்லை. குறிப்பிட்ட சாதிகளின் காதல் மட்டும் சிறந்தது என்றோ, மற்ற சாதிகளின் காதல் மோசமானது என்றோ எதுவுமே கிடையாது. காதல் குறிப்பிட்ட பருவத்தில் வரத்தான் செய்யும். அதுதான் இயற்கையின் நியதி. இதில் சாதியைப் புகுத்துவது இயற்கைக்கு எதிரானதே. ஆனால் மனிதனால் இயற்கையின் நியதியை மாற்ற முடியாது என்பது இந்த சாதிக் காவலர்களுக்கு தெரியாது போலிருக்கிறது.

காதலின் அடுத்த படிநிலையான திருமணம் பற்றி சமூகவியலாளர்களின் கூற்றானது, ஒரு ஆணையும் ஒரு பெண்னையும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையில் கணவன் மனைவியாக இணைப்பதுதான் திருமணம். இது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சமூக நிறுவனமாகும். திருமணம் மனித சமூகத்தால் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றது. மேலும் மனிதனுடைய பாலியல் தேவையை கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துகிறது. இத்திருமணமே குடும்பம் எனும் நிறுவனத்தை உருவாக்கக்கூடியது. திருமணமும் குடும்பமும் ஒன்றை ஒன்று சார்ந்தே உள்ளது. மனித இனம் தொடர்ந்து நிலைபெற நல்ல சமுதாயம் வேண்டும். எனவே பல குடும்பங்களின் கூட்டான சமுதாயத்தை உருவாக்க குடும்பங்கள் உருவாக வேண்டும். குடும்பம் திருமணத்தின் மூலமே உருவாகிறது. ஆக திருமணம் என்பது ஏற்றத்தாழ்வற்ற குடும்பத்தின் மூலம் சிறந்த மனித சமுதாயம் தோன்ற கருவியாக உள்ளது.

திருமணத்தின் தேவை என்பது மனித இனத்தின் குறிப்பிட்ட நோக்கங்களுக்காகதான் இதில் சாதியை வைத்து பிரிவினையாற்ற அல்ல. சமூகவியலாளர்கள் திருமணத்தின் தேவையாகக் குறிப்பது, மனிதனின் பாலியல் தேவையை ஒழுங்குபடுத்துதல், குடும்பத்தை உருவாக்குதல், பொருளாதாரக் கூட்டுறவை குடும்பத்தில் உருவாக்குதல், தம்பதிகளுக்குள் உணர்ச்சிகளைப் பகிர்ந்துகொள்ளுதல், மற்றும் சமூக ஒருமைப்பாட்டை உருவாக்குதல் ஆகியவையே. இங்கே தான் சார்ந்த சாதிக்குள் திருமணம் செய்ய வேண்டும் என்பது நோக்கமாக வரையறுக்கப்படவில்லை. ஆகவே திருமணமானது சமுதாயத்தை மேம்படுத்த மட்டுமே. இங்கே ஒரு ஆணும் பெண்ணும் தான் தேவையேயொழிய சாதிகள் அல்ல.

இந்தியாவில்தான் பெண்ணை ஒரு சொத்தாகப் பாவித்து அவர்கள் மேல் தொடர்ந்து அடக்குமுறையைத் திணித்து அவர்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கின்றனர். இங்கு பெண்களின் உடல் ஒரு நிலம்போல் பார்க்கப்பட்டு அந்த நிலத்தின் மீதான உரிமை தான் சார்ந்த் சாதிக்கே உள்ளது என்ற ஆணாதிக்க மனநிலையே நிலவி வருகின்றது. எப்படி ஒரு குடும்பத்தின் சொத்துக்கள் அதன் வாரிசுகளுக்குப் போய்ச் சேர வேண்டுமோ அதே போல் ஒரு சாதியில் பிறந்த பெண் அந்த சாதியிலேயேதான் திருமணம் முடிக்க வேண்டும் என்று சாதிய சமூகம் நிர்பந்திக்கிறது. இங்கே பெண் என்பவள் ஒரு மனித இனமாகப் பார்க்கப்படாமல் ஆண்கள் பங்கு போட்டுக் கொள்ளும் நிலமாகப் பார்க்கப்படுகிறாள். 21ஆம் நூற்றாண்டில்கூட தனக்கான துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை அவளுக்கு இன்னும் வழங்கப்படவே இல்லை. இங்கே நிலம் (பெண்) எந்த சாதி வாரிசுகளின் சொத்தாக வேண்டும் என்று அந்த சாதிதான் தீர்மானிக்க முடியும்.

இந்தியாவில் ஒரு கிருத்துவர் இன்னொரு கிருத்துவரைத் திருமணம் செய்துகொள்ள முடியும். ஒரு இஸ்லாமியரை இன்னொரு இஸ்லாமியர் திருமணம் செய்து கொள்ள முடியும். அப்படி கிருத்துவராகவோ, இஸ்லாமியராகவோ இல்லை என்றால், அந்தந்த மதங்களுக்கு மாறிக்கொள்வதன் மூலம் அவர்களைத் திருமணம் செய்துகொள்ள முடியும். ஆனால் ஒரு இந்து இன்னொரு இந்துவைத் திருமணம் செய்து கொள்ள முடியாது. காரணம் இந்து சமூகத்தில் சாதிதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் காரணியாகவும் முக்கிய இயங்குகோளாகவும் உள்ளது. குறிப்பிட்ட சாதி அதே சாதியில் மட்டும்தான் திருமணம் செய்ய முடியும், இருவருமே இந்துவாக இருந்தாலும்கூட. இங்கு சாதிய வட்டத்தில்தான் இந்திய சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றிலும் தாங்கள் முன்னோடிகள் என்று மார்தட்டிக் கொள்ளும் நாம் கலப்புத் திருமணத்திற்கு எதிராக கெளரவக் கொலை செய்வதிலும் முன்னோடிகளாகத் திகழ்கிறோம்.

இந்த சமூகத்தில் நிலவும் சாதி ஆணவக் கொலை எனும் இழிவைத் தடுக்க முடியாத சூழ்நிலையே உள்ளது. காரணம் “கெளரவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் ஏதும் இல்லை. அதுவே இவ்வாறான சம்பவங்கள் தொடர்வதற்குத் துணையாக உள்ளன. காரணம் கெளரவக் கொலைகள், கொலை வழக்காகவே பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் கடுமையான தண்டனைகளுடன் கூடிய தனிச் சட்டமே இதற்கு மிக முக்கியம். வெறும் கொலை வழக்காக பதிவு செய்யப்படும் போது நாட்டில் கெளரவக் கொலையே நடைபெறாதது போல் காட்டப்படுகின்றன. கெளரவக் கொலையாக இருந்தாலும் அது கொலை வழக்கு புள்ளி விவரங்களுடன் சேர்ந்துகொள்கிறது. எனவே கெளரவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம்”. சாதி ஒழிப்பாக மாற வேண்டிய சாதி மறுப்புத் திருமணங்கள் இன்று கெளரவக் கொலைகளின் மூலம் மனித ஒழிப்பாக மாறிவருகின்றது.

மேற்கத்திய கலாச்சாரத்தையும், நாகரீகத்தையும் ஏற்றுக்கொள்ளும் நமது சமூகம் கலப்புத் திருமணத்தை மட்டும் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்க்கின்றது. ஒரு கிரகத்திலிருந்து வேற்றுக்கிரகத்திற்கு சந்திராயன் அனுப்பி இரு கிரகங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்த நினைக்கும் இந்திய சாதிய சமூகம் இரு சாதிகளுக்குள் தொடர்பை ஏற்படுத்த விரும்பாதது விந்தையான நிதர்சனம்தான். இயற்கையாகத் தோன்றும் காதலை சாதி ஆணவக் கொலை செய்வதன் மூலம் அழித்துவிட முடியும் என்று நினைப்பது முட்டாள்தனமே.

துணை நூல்கள்

1. C.N.Shankar Rao, Sociology, 1990, S.Chand&Company Ltd, New Delhi.

2. The Hindu Marriage Act, 1955.

3. தலையங்கம், கெளரவக் கொலைகளும் அரசின் கெளரவமும், காலச்சுவடு. மே 2012, பக்:3-4.

4. மனுஷ்யபுத்திரன், எதிர்குரல், நக்கீரன், 2013 ஜுன் 10-12, பக்:18-20.

5. மனுஷ்யபுத்திரன், எதிர்குரல், நக்கீரன், 2012 நவ 14-16, பக்:18-20.

- சி.வெங்கடேஸ்வரன்

Pin It