kailashஅஞ்சலி

2020 ஜூலை 10-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் அவர்களிடமிருந்து தொலைபேசி வந்தது. ‘கைலாசமூர்த்தி இறந்துட்டாருப்பா...’ அதற்குமேல் அவரிடமிருந்து வார்த்தைகளில்லை. அவரால் பேச இயலவில்லை. சற்று நிதானித்துவிட்டு ‘மதியத்துக்குப் பிறகுதான்... ஹார்ட் அட்டாக்...' நான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நடுங்கிய குரலுடன் அவர் பதிலளித்தார்...

இந்தச் செய்தி கேட்டதிலிருந்து தோழர் கைலாசமூர்த்தி பற்றிய சிந்தனைகள் மீண்டும் மீண்டும் என்னை ஆக்கிரமித்தன. இரவு முழுதும் தூக்கமில்லை. 1979-இல் தோழர் கைலாசமூர்த்தியை, பேராசிரியர் நா.வானமாமலை எனக்கு அறிமுகப்படுத்தினார்.

அப்போது அவர் காங்கிரஸ்காரர். 'இஸ்கஸ்' அமைப்பில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது பேராசிரியரைப் பார்க்க அவரது இல்லத்துக்கு வருவார். மகாகவி பாரதியின் தாடியை நினைவூட்டும் வகையில் தாடி வைத்திருப்பார்.

அவ்வப்போது நடக்கின்ற கூட்டங்களுக்குத் தம்முடைய கையிலிருந்து காசு செலவழிப்பார். இதைப்பார்த்த பேராசிரியர் நா.வா. உட்பட தோழர்கள் பலரும் உங்கள் கைக்காசு போடக்கூடாது என்று கண்டிப்பார்கள். அவரைக் கம்யூனிஸ்ட் ஆக்கியதில் தோழர் எஸ்.எஸ். தியாகராஜன் முக்கியமானவர்.

தோழர் கலைமாமணி கைலாசமூர்த்தி இரண்டு தினங்களுக்கு முன்தான் என்னிடம் தொலைபேசியில் பேசினார். உற்சாகமாகப் பேசினார். எப்போது பேசும்போதும் முதலில் ஒரு சிரிப்புடன்தான் பேசத் தொடங்குவார். நான் வணக்கம் சொல்வதற்குப் பதிலாக 'அய்யா... பல்லாண்டு வாழ்க அய்யா' என்றுதான் பேச்சைத் தொடங்குவேன். அதைக் கேட்பதில் அவருக்கு ஆர்வம் மிகுதி.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நாகர்கோவில் கிளையும் - கோவைக் கிளையும் இணைந்து நடத்திக் கொண்டிருக்கும் மெய்நிகர் சந்திப்பில் அடிக்கடிக் கலந்துகொள்வார். ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது என்னைப் பார்ப்பதற்கும் - என் குடும்பத்தோடு உரையாடுவதற்கும் - வீட்டுக்கு வருவார்.

ஒயிலாட்டம் குறித்து வகுப்பெடுப்பதற்கு ஏதேனும் கல்விக் கூடங்களிலிருந்து அழைப்பு வந்தால்; தாம் பேச வேண்டியவற்றை எழுதி வைத்துக் கொண்டு தொலைபேசி வழியாகவே என்னிடம் வாசித்துக் காட்டுவார். சில நேரங்களில் தூத்துக்குடியிலிருந்து பாளையங்கோட்டைக்குக் கிளம்பி வந்து என்னிடம் விவாதிப்பார்.

மிகவும் அன்பானவர். அவர் கோபப்பட்டு நான் பார்த்ததில்லை. எப்போதும் புன்னகைதான். தம் மனதுக்குப் பிடிக்காததை யாரேனும் செய்தால் அமைதியாகிவிடுவார்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, பல்வேறு முற்போக்கு இயக்கங்கள் ஆகியவற்றின் விழா மேடைகள், அரசியல் பிரச்சாரங்கள் ஆகியவற்றில் கலைமாமணி கைலாசமூர்த்தி நிகழ்த்தும் நாட்டார் பாடல்களும், விழிப்புணர்வுப் பாடல்களும், கவிஞர் பரிணாமன் பாடல்களும், பாரதியார் - பாரதிதாசன் பாடல்களும் மேடைகளில் அதிர்வினை ஏற்படுத்துவன.

மேற்கண்ட மேடைகளிலும் தெருக்களிலும் திடல்களிலும் அவரும் அவருடைய குழுவினரும் நிகழ்த்தும் புதுமையான ஒயிலாட்ட நிகழ்ச்சிகள் மேலும் விழாக்களை மெருகூட்டின.

மரபுவழியிலான ஒயிலாட்ட நிகழ்வுகளில் முக்கியமாக இராமாயணக் கதையும் மகாபாரதக் கதையும் பாடல்களாகப் பாடப்பட்டன. ஆனால், கலைமாமணி கைலாசமூர்த்தியின் ஒயிலாட்டத்தில் காந்தி, நேரு, வ.உ.சி., ஜீவா, பாரதி ஆகியோரைப் பற்றிய பாடல்களும்; பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பரிணாமன் ஆகியோருடைய கவிதைகளும் பாடல்களாகப் பாடப்பட்டன.

தாமே எழுதிய பாடல்களையும், பூதப்பாண்டி நல்லதம்பித் தாத்தா பாடல்களையும், தோழர் கே.ஏ. குணசேகரன் பாடிய பாடல்களையும், பிற முற்போக்கு இயக்கங்களைச் சார்ந்த பாடகர்கள் பாடிய பாடல்களையும் பொருத்தமான இடங்களில் அமைத்துப் பாடி ஒயிலாட்டத்தை நிகழ்த்த வைப்பதில் கைலாசமூர்த்திக்கு நிகர் அவரே.

தோழர் பரிணாமன் கவிதைகளைத் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்துப் புகழ் பரப்பியதில் தோழர் கைலாசமூர்த்தியின் பங்கு முக்கியமானது.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மிகப் பெரிய எண்ணிக்கையில் மாணவர்களுக்கு ஒயிலாட்டப் பயிற்சி அளித்து அரங்கேற்றம் செய்விப்பார். தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் ஏறத்தாழ 600 மாணவிகளுக்கு ஒரே நேரத்தில் ஒயிலாட்டப் பயிற்சி கொடுத்த அனுபவமும் கைலாசமூர்த்தி அவர்களுக்கு உண்டு.

ungal kailashஒயிலாட்டப் பயிற்சியளிக்கும் போது தன்னை மறந்த நிலையில் அக்கலையோடு ஒன்றி, மாணவர்களின் ஆற்றலை உணர்ந்து பொறுமையாக அவர் பயிற்சியளிப்பதை நான் அருகிருந்து பலமுறை பார்த்திருக்கிறேன்.

அவரைப் பொறுத்த வரையில் ஒயிலாட்டக் கலையை வளர்த்தெடுப்பதில் அவர் கொண்டிருந்த ஆர்வம் மற்றும் தாம் கற்ற கலையை முற்போக்கு இயக்கங்களின் கொள்கைகளைப் பரப்புவதற்கு எவ்வாறெல்லாம் பயன்படுத்துவது ஆகிய இரண்டு பற்றியே அவருடைய சிந்தனை இருக்கும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்கள், தேர்தல் காலத்தில் பிரச்சாரங்கள், மாநாடுகள் - விழாக்கள் ஆகியவற்றில் ஒயிலாட்டக் கலையை முற்போக்கு நோக்கமுடன் கைலாசமூர்த்தி நிகழ்த்தும்போது உணர்ச்சிமிக்க அவரது நிகழ்த்துகை முழு ஆற்றலுடன் விளங்கும் என்பதை தோழர்கள் அனைவரும் நன்கு அறிவர்.

தமிழக முதல்வராகக் கலைஞர் இருந்த காலத்தில்; மாநில ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா அவர்கள் தோழர் கைலாசமூர்த்தியின் கலைப்பணியைப் பாராட்டி கலைமாமணிப் பட்டம் வழங்கிச் சிறப்புச் செய்தார்.

நாட்டார் கலைஞர்கள் நிகழ்த்துகையின்போது பார்வையாளர்களையும் தமது கலையை நிகழ்த்தச் செய்வர். தோழர் கைலாசமூர்த்தியும் அவர்களோடு இணைந்து செய்வதை நான் கண்டிருக்கிறேன். நிகழ்த்துகையின்போது நாம் பார்க்கும் கைலாசமூர்த்தி வழக்கமாகப் பார்க்கும் கைலாசமூர்த்தியாக இருக்கமாட்டார்.

தாம் பாடும் பாட்டு - கலைஞர்களின் அடவு முறைகள் - பார்வையாளர்களின் ஊடாட்டம் - தாளக் கலைஞர்களின் ஒத்திசைவு ஆகியவற்றைக் கவனித்துக் கொண்டே இருப்பார். பாடல்களின் உள்ளடக்கத்திற்கு ஏற்றவாறு அவருடைய முகபாவம் மாறிக் கொண்டே இருக்கும். பாட்டின் வேகத்திற்கு ஏற்றவாறு அவருடைய உடலசைவு அமையும். தம்முடைய கலைஞர்களுக்கு அவரே ஒப்பனை செய்து விடுவதையும் நான் கண்டிருக்கிறேன்.

நான் பணியாற்றும் தூய சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் துறை - ஆய்வு மையம் ஆகியவற்றின் நிகழ்வுகள் அனைத்திலும் - அவருடைய நிகழ்ச்சி இல்லாவிட்டாலும் - தோழர் கைலாசமூர்த்தி ஆர்வத்துடன் கலந்துகொள்வார்.

கருத்தரங்குகள், பயிலரங்குகள், மாநாடுகள், சொற்பொழிவுகள், கலைப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் அனைத்திலும் தோழர் கைலாசமூர்த்தியைக் காணலாம். கல்லூரியில் நடைபெறும் கலை நிகழ்வுகள் அனைத்திலும் அவர் பார்வையாளராக வந்துவிடுவார்.

கல்லூரி நடத்தும் கலைப் போட்டிகளில் அவரை நடுவராக அழைப்பது வழக்கம். ஒருசில வேளைகளில் நடுவராக அவரை அழைக்காவிட்டாலும் கூட அந்நிகழ்வுகளில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து, மாணவர்களை உற்சாகப் படுத்துவார். நாட்டார் வழக்காற்றியல் பயில்வோருக்கும் பயிலரங்குகளில் பங்கேற்போருக்கும் களஆய்வு ஒரு பகுதியாக இருக்கும்.

சில களஆய்வுகளைத் தோழர் கைலாசமூர்த்தி மூலம் நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம். அப்போதெல்லாம் அவரும் எங்களோடு வருவார். இரவு முழுக்கக் கண்விழித்திருந்து எங்களுக்கு வேண்டிய உதவிகளையும் செய்வார். கடந்த ஜூன் மாதம் 10ஆம் தேதிவாக்கில் அவரிடமிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு. எல்லா கல்லூரிகளும் மெய்நிகர் கருத்தரங்குகளைப் பல்வேறு நிறுவனங்களுடன் சேர்¢ந்து நடத்துகின்றன. நாமும் அதுபோல் ஏதேனும் ஒரு கல்லூரியோடு சேர்ந்து நடத்த வேண்டும் என்று சிந்தித்தோம். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தூத்துக்குடி கிளை, கன்னியாகுமரி மாவட்டம் விவேகானந்தர் கல்லூரியின் தமிழ்த் துறையுடன் இணைந்து 17-06-2020ஆம் நாள் மெய்நிகர் கருத்தரங்கம் நடத்தத் தீர்மானித்துள்ளோம். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் முனைவர் காமராசுவும் தாங்களும் உரை நிகழ்த்த வேண்டும் என்றார். நாங்கள் இருவரும் மகிழ்ச்சியோடு ஒத்துக் கொண்டோம். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அந்தச் சான்றிதழ்களில் தம்முடைய கையெழுத்து இடம்பெற வேண்டாம் என்று சாதித்தார்.

தோழர் கைலாசமூர்த்தி, அப்போது தமிழ்நாடு கலை இக்கியப் பெருமன்றத்தின் மாநிலத் துணைத் தலைவர். இந்நிலையில் அவருடைய கையெழுத்தும் வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். கூச்சத்தோடு அவர் ஒத்துக் கொண்டார்.

தாம் ஒருங்கிணைக்கும் நிகழ்வுகளில் தன்னை முன்னிறுத்தாத பெரிய மனது படைத்தவர் தோழர் கலைமாமணி கைலாசமூர்த்தி என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் பல வகைகளில் வளர்வதற்கும், மக்களுடைய ஆதரவிற்கும் தோழர் கைலாசமூர்த்தியின் பங்களிப்பு மிகவும் மகத்தானது. குறிப்பாக, குமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் தோழர் கைலாசமூர்த்தி இல்லாமல் கலை இலக்கியப் பெருமன்ற விழாக்கள் எப்பொழுதும் நடந்ததில்லை.

இதுபோலவே குமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறும் பேராசிரியர் நா.வா. கலை இலக்கிய முகாம்களில் தோழர் கைலாசமூர்த்தி கலந்து கொள்வார். தமது பாடல்களைப் பாடுவார். தோழர்களை உற்சாகப்படுத்துவார். தென்மாவட்டக் கலை இலக்கியப் பெருமன்றத் தோழர்களின் இல்ல நிகழ்வுகள் அனைத்திலும் தோழர் கைலாசமூர்த்தி பங்கெடுத்துள்ளார்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்திற்குத் தோழர் கலைமாமணி கைலாசமூர்த்தியின் மகத்தான பங்களிப்பைப் பாராட்டியும், அவருக்கு நன்றி செலுத்தும் நோக்கத்திலும் 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் நடைபெற்ற இலக்கியப் போட்டி பரிசளிப்பு விழாவில் 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கிச் சிறப்பு செய்யப்பட்டது மறக்க முடியாத நிகழ்வாகும்.

கலைகளைச் சிறப்புடன் வளர்த்தெடுக்க வேண்டுமென்றால்; நாட்டார் கலைஞர்கள் நலமுடன் வாழவேண்டுமென்பதிலும் தோழர் கைலாசமூர்த்தி ஈடுபாட்டுடனும் அக்கறையுடனும் செயல்பட்டார். தம்முடைய உயிர் பிரியும் வரையில் அதற்காக உழைத்த மானுட நேயமிக்க மகத்தான கலைஞர். தூத்துக்குடிப் பகுதியில் வாழும் நாட்டார் கலைஞர்கள் ஊரடங்கின் காரணமாக நிகழ்ச்சிகள் ஏதுமின்றி வறுமையில் வாடுவதைக் கண்ட தோழர் கைலாசமூர்த்தி நிதி திரட்டி உயிர் வாழ்வதற்குத் தேவையான பொருட்களாகவும், அத்தியாவசியத் தேவைகளுக்காகப் பணமாகவும் அக்கலைஞர்களுக்குக் கொடுக்கத் தீர்மானித்தார்.

பெரு முயற்சியுமெடுத்தார். ஜூலை மாதம் 11ஆம் நாள் காலையில் கட்சித் தோழர்களோடு சென்று அக்கலைஞர்களைச் சந்திக்க முடிவெடுத்து தூத்துக்குடிக் கட்சி அலுவலகத்திற்குச் சென்று, மாவட்டச் செயலாளரையும் தோழர்களையும் சந்தித்துப் பேசிவிட்டு, வீட்டுக்கு மதியம் (10ஆம் தேதி) வந்து சேர்ந்தபோதுதான் தோழருக்கு மரணம் நிகழ்ந்துவிட்டது.

தலை சுற்றுகிறது என்று சொன்னார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதயம் செயலிழந்துவிட்டது......

தோழர் கலைமாமணி கைலாசமூர்த்தியின் மரணச் செய்தி அவருடைய குடும்பத்தாரையும், அவருடைய கலைக் குழுவினரையும், தமிழக நாட்டார் கலைஞர்களையும், நண்பர்களையும், கட்சித் தோழர்களையும், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத் தோழர்களையும், கலை ஆர்வலர்களையும், பண்பாட்டு ஆய்வாளர்களையும், அவரிடம் ஒயிலாட்டப் பயிற்சியெடுத்த மாணவர்களையும் பெருந்துயரத்தில் ஆழ்த்தியது.

அற்புதமான ஒரு கலைஞரை - தோழரை - மனிதரை - மானுடச் செயல்பாட்டாளரை - போராளியை நாம் இழந்து நிற்கிறோம். அவருடைய நினைவு நம் எல்லாருடைய உணர்விலும் நிலைத்து நிற்கும். அவருக்கு நமது செவ்வணக்கம்.

- நா.இராமச்சந்திரன்

Pin It