தமிழகத்தில் பிறந்து, பரோடாவில் வளர்ந்து இங்கிலாந்தில் அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, அமெரிக்காவில் பிஎச்.டி முடித்து சென்ற வாரம் வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றார் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். நோபல் பரிசாகக் கிடைத்த பணத்தை என்ன செய்யப் போகிறீர்கள் என ஒரு டி.வி. நிகழ்ச்சியில் கேட்கப்பட்டபோது, 'நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டி இருக்கிறது' என்று சட்டென அவரிடமிருந்து பதில் வந்தது. புத்தகங்களோடு வாழ்பவர்கள்தான் மனித வரலாற்றை முன்னெடுத்துச் செல்லும் வலிமையை பெறுவார்கள் என்பது எவ்வளவு பெரிய உண்மையாக இருக்கிறது பார்த்தீர்களா? இப்படிப்பட்ட ஓர் உந்துதலுடன் சென்னைப் புத்தகக் கண்காட்சியை வலம் வரும்போது மனம் சிலிர்க்கிறது. அயல் நாடுகளில் நடக்கும் வருடாந்திரப் புத்தகக் காட்சிகள் உலகையே உலுக்கும் பேராற்றலுடன் செயல்படுகின்றன. அதற்காகவே பலப்பல சமுதாய அமைப்புகள் கைகோர்க்கின்றன.

சர்வதேசப் புத்தகக் காட்சிகள் நடக்கும்போது மேற்குறிப்பிட்டவற்றைவிட உண்மையிலேயே நாம் சிந்திக்கவும் செயல்படுத்த வழிகாட்டுதலாகவும் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய அம்சத்தைக் கடைபிடிக்கிறார்கள். அங்கீகரிக்கப்படவும் ஆதரிக்கப்படவும் வேண்டிய உலக அளவில் நசுக்கப்படும் ஒரு மக்கள் போராட்டத்தை அம்மக்களின் மொழி இலக்கியத்தை 'சிறப்பு கவனம் பெறவேண்டிய அம்சமாக' அறிவித்து அந்த நூல்கள் லட்சக்கணக்கானவர்களைச் சென்றடைய கவனம்பெற வைக்கிறார்கள்.

அரசின் தலையீடுகள் இன்றி சுதந்தரமாக வைக்கிறார்கள். அவை நடைபெற்றாலும், அரசு தனது அனைத்து துறைகளையும் முடுக்கிவிட்டு அறிவுத் தேடலான அந்தப் புத்தகத் திருவிழாவைத் தயக்கமின்றி ஆதரித்துச் சலுகை விலை, போக்குவரத்து முதல் சிறப்பு பொது விடுமுறை வரை எல்லாம் வழங்கி வெற்றியடைய வைக்கிறது. சென்னைப் புத்தகக் காட்சி மிகப் பிரம்மாண்டமானது.. உலகப் புத்தகக் காட்சிகள் எதற்கும் அது குறைந்ததல்ல என்னுமளவுக்கு அதை நாம் அனைவரும் ஆதரித்து உயர்த்த முயன்று வெற்றிகாண வேண்டும்... தமிழ் கூறு நல்லுலகிற்கு இந்தப் புத்தாண்டு புத்தகங்களின் ஆண்டாக மலர்வது மகிழ்ச்சியூட்டும். இத்தருணத்தில் சென்னைப் புத்தகக் கண்காட்சி பெருவெற்றி அடையப் புத்தகம் பேசுது வாழ்த்துகிறது.

Pin It