புத்தக வரலாற்றில் முதன் முறையாக ஒரே மேடையில் புத்தகம் பேசுது ஆசிரியர் இரா. நடராசன் எழுதிய ஐந்து புத்தகங்களை மழலைகள் வெளியிட பெரியவர்கள் பெற்றுக்கொள்ளும் புதுமையான நிகழ்ச்சியை கோவை தமுஎகச வடக்கு கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர். நிகழ்ச்சி மாலை 4.00 என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் மதியம் 3.00 மணியிலிருந்தே குழந்தைகளும் பெற்றோருமாய் வரத்துவங்கிவிட்டனர். குழந்தைகள் நிகழ்ச்சி என்பதால் விசாலமான மைதானத்தில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, வருகை தந்த குழந்தைகள் அனைவருக்கும் தமுஎகச தோழர் நசீர் ஊதிய பலூன்களை கொடுத்த வண்ணம் அங்குமிங்கும் நடந்து கொண்ருந்தார். நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னமே மழலை பட்டாளங்கள் பலூனை கையில் பிடித்தபடி மகிழ்ச்சி கடலில் மிதந்து கொண்டிருந்தனர்.

சற்று நேரத்தில் மழை நின்று போது நிர்வாகிகள் உட்பட சிலர் கடகடவென வெளி அரங்கிலேயே மீண்டும் நிகழ்ச்சிக்கு தயார் செய்தனர். சற்று நேரத்தில் ஆர்தர் பிரதீப்-ன் தபேலா நிகழ்ச்சியுடன் மீண்டும் வெளி மைதான மேடையில் நிகழ்ச்சி தொடங்கியது. திரு மு. நசீரின் வரவேற்புரையுடன் துவங்கிய தபேலா தர்பார் குழந்தைகளின் ஆரவாரத்துடன் களைகட்டத் துவங்கியது. குழந்தைகளுக்கும், தபேலா கலைஞருக்கும் போட்டி வைக்கலாம் என கேட்டவுடனேயே குழந்தைகள் கையை தட்டத் துவங்கி விட்டனர். ராகத்திற்கும் தாளத்திற்கும் ஏற்ப குழந்தைகள் கைகளை தட்ட, தபேலா கலைஞர் வாசிக்க கைத்தட்டலின் ஓசை அடங்க வெகுநேரமாகிப் போனது. ஒரு கட்டத்தில் குழந்தைகள் அருகிலிருந்த புல்வெளியில் கும்மாளத்துடன் குதித்து விளையாடியதைப் பார்த்து அனைவரும் ஆர்ப்பரித்தனர். தலைமையேற்றுப் பேசிய சக்திவேல் மழலையர் கொண்டாட்டம் சிறிய அளவில் திட்டமிட்ட நிகழ்ச்சி என்ற போதும் கடந்த வாரம் நடத்திய ஓவியம், பாட்டு, கதை, விடுகதை போட்டிகளில் 560 குழந்தைகள் பங்கேற்றது தங்களை மேலும் உற்சாகத்துடன் பணியாற்ற வைத்தது.

வாழ்த்துரை வழங்க வந்த கோவை மாவட்ட துணைத் தலைவர் தி.மணி மறைமுகமாக குழந்தைகள் மத்தியில் திணிக்கப்படும் சுமைகளை அகற்ற விழிப்புடன் செயல்பட வேண்டும் எனக் கூறினார். ஈகை பண்பு குறித்து ரோகிணியும், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து அகல்முருகன், தனிநபர் நடிப்பு நடித்து காட்டி பார்வையாளர்களின் கண்களை விழாமேடையை நோக்கி கூர்மையடைய வைத்தனர்.

புத்தக வரலாற்றில் நான்கு புத்தகங்கள் ஒரே மேடையில் குழந்தைகளால் வெளியிடப்படும் பதிவை கோவை தமுஎகச பதிவு செய்ய துவங்கும் போது கொஞ்சம் இருட்டாகி வெள்ளைநிலாவும் விழாவில் பங்கெடுக்க தென்னை மர ஓரத்தில் அமைதியாய் எட்டிப்பார்த்தது.

இரா. நடராசன் எழுதிய பூமா புத்தகத்தை சிந்துமதி வெளியிட திரு. பெரியசாமி பெற்று கொண்டார். உலக கல்வியாளர்-புத்தகத்தை மழலை ஆதவன் வெளியிட மருத்துவர் பரமசிவம் பெற்றுக் கொண்டார்.

ஆதவன் ஒருகையில் சாக்லெட்டும் மறுகையில் புத்தகத்தையும் பிடித்திருந்ததை பார்த்து மேடையில் நின்றிருந்த மாவட்ட நிர்வாகிகள் உட்பட இரா. நடராசன் பூரிப்புடன் புகைப்பட கலைஞருக்கு போஸ் கொடுத்தனர், தொழில்நுட்ப முன்னோடிகள்- புத்தகத்தை குழந்தை அஷ்வத்தாரிகா வெளியிட திரு. வேலாயுதம் பெற்று கொண்டார். ஒரு தோழியின் கதை புத்தகத்தை குழந்தை அர்ஷாபாத்திமா வெளியிட வெள்ளிங்கிரி பெற்றுக் கொள்ளவும் ஒரே மேடையில் நான்கு புத்தகங்கள் வெளியிடப்பட்டது.

புத்தக வெளியீட்டை தொடர்ந்து புத்தகத்தை குழந்தைகளே விமர்சனம் செய்தனர். குழந்தைகளின் புத்தக விமர்சனத்தை புத்தக ஆசிரியர் இரா.நடராசன் உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்ததை பார்வையார் பலரும் ஆச்சரியத்தோடு பார்த்து கொண்டிருந்தனர். ஏற்புரை நிகழ்த்திய இரா.நடராசன் பேசும் போது குழந்தைகளின் விருப்பத்திற்கேற்ப நாம் செயல்பட வேண்டும். அவர்களையே புத்தகங்களை தேர்வு செய்ய வைத்து அதனை பெற்றோர்கள் வாங்கி தருதல் வேண்டும். இதற்கான சுதந்திரத்தை பெற்றோர்கள் வழங்கவேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தார். இன்றைய கல்விச் சூழல் குறித்து பேசுகையில் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை சிங்கம் போல் கம்பீரமாக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால் சிங்கமோ கூண்டில் அடைப்பட்டு செக்குமாடு போல் ஒரே இடத்தில் சுற்றி வருகிறது. ஆனால் ஒரு சிட்டுக் குருவி சுதந்திரமாக சுற்றுகிறது. ஆகவே சிங்கமாக வரவேண்டும் என நினைத்து கூண்டில் அடைப்படுவதை விட சிட்டுகுருவிபோல் சுதந்திரமாக பறப்பதற்கான வாய்ப்பையும் அதற்கான சூழலையும் பெற்றோர்கள் உருவாக்கி தர வேண்டும். கல்வி மேல் தவறில்லை கல்விச் சூழலில் தான் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என சொல்லி முடித்தார். அடுத்ததாக நடந்த பரிசளிப்பு விழாவில் சுமார் 45 மாணவர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. இது தவிர சுமார் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.

இரவு வரை காத்திருந்து நிகழ்ச்சியை கண்டு களித்தனர். மழலை கொண்டாட்டம் மிகப் பெரும் அதிர்வுகளை குழந்தைகளிடத்திலும் பெற்றோர்களிடத்திலும் ஏற்படுத்தியது. மீண்டும் ஒருமுறை தமுஎகச தனது தனித்தன்மையை வெளிப்படுத்தியது. எனக்கு தெரிந்து 15 வருடங்களில் குழந்தைகளுக்காக இப்பகுதியில் யாரும் இது போன்ற நிகழ்ச்சியை நடத்தவில்லை என்று இருவர் முணுமுணுத்து கொண்டே நகர்ந்தனர்.

Pin It