டாக்டர் உ. வே. சாமிநாதையர் இளமைக் கல்வியைப் பல ஊர்களில், பல அறிஞர் பெரு மக்களிடம் கற்றறிந்த பின்னர் 1871இல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் மாணவராகச் சேர்ந்து பயின்று முறையாகத் தமிழ்ப் புலமைபெற்று, பிள்ளையின் இறப்பிற்குப் பின்னர் 1876 முதல் 1880ஆம் ஆண்டுவரையில் திருவாவடுதுறை மடத்தின் ஆதீனகர்த்தராக விளங்கிய சுப்பிரமணிய தேசிகரிடத்திலும் தமிழ் கற்றறிந்திருக்கிறார். தேசிகரிடம் பாடம் கேட்டுக்கொண்டிருந்த காலத்தில் மடத்திலிருந்த இளைய தம்பிரான்களுக்குப் பாடம் சொல்லித்தரும் வித்துவானாகவும் சாமிநாதையர் இருந்து விளங்கியிருக்கிறார்.

u ve saதிருவாவடுதுறை மடத்தில் வித்துவானாக இருந்து விளங்கிய ஒரு காலப்பகுதியில் மடத்தின் ஆதீன கர்த்தராக இருந்து விளங்கிய சுப்பிரமணிய தேசிகர் பல ஊர்களுக்கு யாத்திரை செல்லும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. யாத்திரையின் இடையில் ஒருநாள், பாண்டி நாட்டை ஆண்டுவந்த நாயக்க மன்னர்களின் அதிகாரியாக இருந்த செவந்தியப்ப நாயக்கரென்பவரால் திருவாவடுதுறை மடத்திற்குத் தானமாக விடப்பட்ட கிராமங்கள் எட்டுள் ஒன்றான செவந்திபுரத்திற்கு வந்து, அங்குள்ள திருவாவடு துறை ஆதினத்திற்குச் சொந்தமான மடத்தில் தேசிகர் தங்கியிருக்கிறார்.

செவந்திபுர மடத்தில் அப்போது வித்துவானாக இருந்து விளங்கிய வேணுவனலிங்கத் தம்பிரான் என்பவர் ‘சுப்பிரமணிய தேசிக விலாசம்’ என்ற பெயரில் மடாலயம் ஒன்றை அப்போது அங்குக் கட்டி முடித்திருந்தார். வேணுவனலிங்கத் தம்பிரான், அவ்விலாசத்தில் சுப்பிரமணிய தேசிகருடைய திருவுருவம் ஒன்றை அமைத்துப் பிரதிஷ்டை செய்து பூசை செய்யும்படி ஏற்பாடும் செய்திருந்தார். செவந்திபுரத்திற்கு வந்திருந்த தேசிகர் அங்குக் கட்டிமுடிக்கப்பட்டிருந்த ‘சுப்பிரமணிய தேசிக விலாசத்தைத் திறந்துவைத்துச் சிறப்பித்திருக்கிறார். சுப்பிரமணிய தேசிகர் அங்கு வருகை புரிவதை யட்டி மடாலயத்தைச் சிறப்பித்து வித்துவான்கள் பலர் செய்யுட்களை இயற்றியிருந்தனர். அச்செய்யுட்கள் அனைத்தும் அங்கு வந்திருந்த சுப்பிரமணிய தேசிகர் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. தேசி கருடன் யாத்திரை வந்திருந்த சாமிநாதையர் தான் செய்யுட்களையெல்லாம் தேசிகர் முன்னிலையில் படித்து அரங்கேற்றியிருக்கிறார்.

ஆறுமுக சுவாமிகள், சாமிநாதையர் இருவரும் இணைந்து அந்தச் செய்யுட்களையெல்லாம் தொகுத்துப் பதிப்பித்து வெளியிட்டிருக்கின்றனர். ஆதீனம் பெரியகாறுபாறு வேணுவனலிங்க சுவாமிகள் இயற்றுவித்த சுப்பிரமணிய தேசிக விலாசச் சிறப்பு, வேணுவனலிங்க விலாசச் சிறப்பு எனும் பெயரில் அப்பதிப்பு 1878இல் வெளியிடப்பட்டிருக்கிறது. இதுவே சாமிநாதையர் பதிப்பாசிரியராக இருந்து விளங்கிய முதல் நூலாகும். சாமிநாதையருக்கு அப்போது வயது 23. மிக இளம் வயதில் ஆசிரியராக இருந்ததுமன்றிப் பதிப்பாசிரியராகவும் சாமிநாதையர் இருந்து விளங்கியிருக்கிறார்.

சாமிநாதையர் இயற்றியிருந்த எட்டுச் செய்யுட் களுடன் 86 செய்யுட்கள் அந்நூலில் இடம்பெற்று இருந்தன. நான்கு பகுதிகளாக இந்நூல் அமையப் பெற்றிருந்தது. முதல் பகுதியில் (1-6 பக்கங்கள்) வேணுவனலிங்க சுவாமிகள் சரித்திரச் சுருக்கம், திருவாவடுதுறை ஆதினவித்வான் குமாரசுவாமிச் சுவாமிகளியற்றிய சுப்பிரமணிய தேசிகர் மாலை, சின்னச்சந்நிதானமாகிய நமச்சிவாய தேசிக சுவாமி களைத் துதித்த செய்யுட்கள் இடம்பெற்றிருந்தன. சுப்பிரமணிய தேசிக விலாசச் சிறப்பு, ஆறுமுகச் சுவாமிகள் நிருவாணதீக்ஷ£காலங்களில் இயற்றிய குருதோத்திரங்கள் இரண்டாம் பகுதியிலும் (1-14), வேணுவனலிங்க விலாசச் சிறப்பு மூன்றாம் பகுதியிலும் (1-6) இடம்பெற்றிருந்தன. நான்காம் பகுதியில் (1-3) மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளையவர்கள் மஹாசந்நிதானத்தின்பேரில் ஒவ்வொரு காலங்களில் இயற்றிய பாடல்கள், சூரிய கிரகணத்தின்பொழுது இயற்றிய பாடல்கள் இடம்பெற்றிருந்தன. முகப்புப் பக்கம், பிழைதிருத்தப் பட்டியலோடு மொத்தம் 32 பக்கங்கள் கொண்டதாக அப்பதிப்பு அமைந்திருந்தது.

சாமிநாதையர் தன் முதல் நூற்பதிப்பு அனுபவம் குறித்துப் பின்னாளில் தாம் எழுதிய என் சரித்திரத்தில் இவ்வாறு எழுதி நினைவுகூர்ந்திருக்கிறார்.

‘சுப்பிரமணிய தேசிக விலாசம்’ எனும் மடாலயத்தைப் பற்றி பலர் பாடிய பாடல் களையெல்லாம் அச்சிட வேண்டுமென்று வேணுவனலிங்கத் தம்பிரான் விரும்பினார். அப்படியே செய்ய ஏற்பாடு நடைபெற்றபோது திருவாவடுதுறையில் உள்ள வேணுவனலிங்க விலாசத்தைச் சிறப்பித்த செய்யுட்களையும் சேர்த்து வெளியிடலாமென்று பலர் கூறினர். அவ்வாறே அவ்விரண்டுவகைப் பாடல்களும் வேறு சில பாடல்களும் சேர்த்துத் திருநெல்வேலி முத்தமிழாகரமென்னும் அச்சுக் கூடத்தில் ஒரு புஸ்தகமாகப் பதிப்பிக்கப் பெற்றன. அந்தப் புஸ்தகத்தை ஒழுங்குபடுத்தி எழுதிக் கொடுத்தவன் நானே. பிற்காலத்தில் எவ்வளவோ புஸ்தகங் களைப் பரிசோதித்து வெளியிடும் வேலையில் ஈடுபட்ட நான், முதன் முதலாகப் பதிப்பித்தது அந்தப் பாடல் திரட்டே. அக்காலத்தில் பதிப்பு முறை சிறிதும் எனக்குத் தெரியாது. ஆனாலும் நான் பரிசோதித்து வெளியிட்ட முதல் புஸ்தக மென்ற நினைவினால் அதனிடத்தில் எனக்கு ஒரு தனி மதிப்பு இருந்து வருகிறது... அந்தப் புஸ்தகம் அச்சிட்டு வந்த காலத்தில் நானும் பிறரும் அதை வைத்து அழகு பார்த்துக் கொண்டேயிருந்தோம். சம்பிரதாயத்திற்காக ஆறுமுகத் தம்பிரான் பெயரையும் சேர்த்துப் பதிப்பித்திருந்தாலும் அவர் என்னிடமே ஒப்பித்துவிட்டமையால் நான்தான் முற்றும் கவனித்துப் பார்த்தவன். ஆதலின் எனக்கு அப்புஸ்தகத்தைப் பார்த்தபோதெல்லாம் ஆனந்தம் பொங்கியது. “நான் பதிப்பித்த புஸ்தகம், என் பாடல்கள் உள்ள புஸ்தகம்” என்ற பெருமையோடு மற்றொரு சிறப்பும் அதில் இருந்தது. சுப்பிரமணிய தேசிக விலாசச் சிறப்புச் செய்யுட்களில் தியாகராச செட்டியார் பாடல்கள் பதின்மூன்று இருந்தன (என் சரித்திரம், பக். 449-451).

வேணுவனலிங்க விலாசச் சிறப்பு நூற்பதிப்பு வெளிவந்த இரண்டாண்டுகளுக்குப் பின்னர் சாமி நாதையர் அவர்களுக்குக் கும்பகோணம் கல்லூரியில் தமிழ் ஆசிரியர் பணி வாய்ப்புக் கிடைக்கப் பெற்றிருக்கிறது. ஆசிரியர் பணியைப் பிப்ரவரி 16, 1880இல் ஏற்றிருக்கிறார்.

உ.வே. சாமிநாதையர் கும்பகோணம் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், கும்பகோணத்தின் புதிய முன்சீப்பாக வந்து பணியேற்றிருந்த சேலம் இராமசுவாமி முதலியாரைத் திருவாவடுதுறை ஆதீன கர்த்தர் சுப்பிரமணிய தேசிகர் சந்திக்கச் சொல்லியதன் காரணமாக உ.வே.சா. சென்று சந்திக்கிறார். அந்தச் சந்திப்பு 21-10--1880இல் நடைபெற்றிருக்கிறது. சந்திப்பின்போது சேலம் இராமசாமி முதலியார் சீவகசிந்தாமணி ஏட்டுச் சுவடியை இவருக்கு அளித்த வரலாற்றையும், அச்சுவடியை ஆராய்ந்து அச்சிட்டு வெளியிட வேண்டும் என்று முதலியார் வேண்டிக் கொண்டதையும், அவரின் வேண்டுதலின்படியே அந்நூலை அச்சிட்டு வெளியிடும் பணியை செய்யத் தொடங்கியுள்ளார் என்பதையும் நாம் அறிவோம். இராமசாமி முதலியாரைச் சந்தித்ததின் பயனாகச் சீவகசிந்தாமணி என்ற பெருங்காப்பிய நூலைப் பற்றிய புரிதலும், அந்தவொரு நூலின்வழியே மேலும் பல பழந்தமிழ் நூல்களை அறிந்துகொள்ளும் நல்வாய்ப்பும் சாமிநாதையருக்குக் கிடைக்கப்பெற்றது வரலாற்றின் முக்கிய திருப்பமாகும்.

சீவகசிந்தாமணிப் பதிப்பு முயற்சியில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இயற்றிய திருக்குடந்தைப் புராணத்தைத் தியாகராச செட்டியாருடன் இணைந்து பதிப்பித்து வெளியிடும் பணியையும் சாமிநாதையர் செய்திருக்கிறார். 1883இல் திருக்குடந்தைப் புராணம் வெளிவந்திருக்கிறது. இது, சாமிநாதையர் பதிப்பாசிரியராக இருந்து விளங்கிய இரண்டாவது நூலாகும். சாமிநாதையர், தியாகராச செட்டியாருடன் இணைந்து மேற்கொண்ட பதிப்பு அனுபவத்தைப் பிற்காலத்தில் இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்.

பிள்ளையவர்கள் இயற்றிய நூல்களில் அச்சில் வராதவற்றை வெளியிட வேண்டுமென்பது தியாகராச செட்டியாரது விருப்பம். முதலில் திருக்குடந்தைப் புராணத்தை வெளியிடும் பொருட்டுக் கும்பகோணத்திலிருந்த சில கனவான்களிடம் சொல்லி ஏற்பாடு செய்திருந்தார். அவர் திருவானைக்காவுக்குப் போன பிறகு அதைப் பற்றி அடிக்கடி ஞாபகப்படுத்திக் கடிதம் எழுதினார். அதற்குப் பொருளுதவி செய் வதாகச் சொன்னவர்களை நான் அணுகிப் பணம் வாங்கிச் செட்டியாருக்கு அனுப்பி வந்தேன். செட்டியார் முதலில் தஞ்சாவூர் சதாவதானம் சுப்பிரமணிய ஐயர் சென்னையில் வைத்திருந்த அச்சுக்கூடத்தில் அச்சிட ஏற்பாடு செய்து சிறிது முன்பணமும் கொடுத்திருந்தார். ஆனால் அது நிறைவேறவில்லை. பிறகு சென்னையில் இருந்த சூளை சோமசுந்தர நாயகர் அச்சிட்டு அனுப்புவதாக ஒப்புக்கொண்டமையால் அவருக்கே புராணப் பிரதியை அனுப்பினார். அவ்வப்போது அவரிடமிருந்து ‘புரூப்’ செட்டி யாருக்கு வரும். அவருக்குக் கண் ஒளி குன்றி வந்தமையால் அதை அவர் பார்த்து விட்டு எனக்கு அனுப்புவார். நான் அதைப் பார்த்துத் திருத்திச் சென்னைக்கு அனுப்புவேன். புராணத்தை அச்சுக்கு ஸித்தம் செய்தவனும் நானே. மூலத்தை மாத்திரம் ஒழுங்கு செய்து அச்சிட்டு வந்தோம். குறிப்புரையுடன் வெளியிட்டால் தான் படிப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கு மென்ற கருத்து அப்போது எனக்கு எழவில்லை (என் சரித்திரம், ப. 548).

பிற்காலத்தில் பல பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டு வரலாற்றில் பெருமை பெற்ற சாமிநாதையர் பதிப்புத்துறை அனுபவங்களை அறிஞர்களுடன் இணைந்து பணியாற்றிப் பெற்றிருப்பது சிறப்புக்குரியதாகும். தியாகராச செட்டியாருடன் இணைந்து பதிப்பித்த திருக்குடந்தைப் புராணப் பதிப்பின் முகப்புப் பக்கம் இவ்வாறு அமையப் பெற்றுள்ளது. இந்த முகப்புப் பக்க அமைப்பில் ஒரு வரலாற்று மாற்றம் நிகழ்ந்திருப்பதைக் கண்டுணர முடிகிறது.

சிவமயம், திருச்சிற்றம்பலம், திருக்குடந்தைப் புராணம், திருக்கைலாயநாத சைவசமயாசாரிய பீடமாய் விளங்கா நின்ற திருவாவடுதுறை ஆதீனவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களாற் செய்யப்பட்டது. இஃது மேற்படி ஆதீனத்து ஸ்ரீலஸ்ரீ. சுப்பிரமணிய தேசிகசுவாமிகள் கட்டளையிட்டருளியபடி, கும்பகோணம் பேட்டைத் தெருவிலும், மகாதளம் பேட்டைத் தெருவிலும் வசிக்கும் சைவர்கள் பொருளுதவியால் மேற்படி கும்ப கோணம் காலேஜ் தமிழ்ப் பண்டிதர் சாமிநாத ஐயராலும், திரிசிரபுரம் சி. தியாகராஜ செட்டி யாராலும் சென்னை மெமோரியல் அச்சுக் கூடத்திற் பதிப்பிக்கப்பட்டது

1878இல் பதிப்பிக்கப்பட்ட சுப்பிரமணிய தேசிக விலாசச் சிறப்பு, வேணுவனலிங்க விலாசச் சிறப்பு என்ற அச்சுப் பதிப்பில் சாமிநாதையரின் பெயர் ஆறுமுகசுவாமிகள் பெயருக்குக் கீழே அமைக்கப் பெற்றிருந்தது. ஆனால் 1883இல் பதிப்பிக்கப்பட்ட திருக்குடந்தைப் புராணப் பதிப்பில் தியாகராச செட்டியாரின் பெயருக்கு மேலே அமைக்கப் பெற்றிருந்தது வரலாற்று மாற்றமாகக் கருதக் கூடியதாகும். இந்த மாற்றம் பதிப்புத்துறையில் அவர் வேகமாக வளரத்தொடங்கிய குறிப்பைப் புலப் படுத்துகிறது.

சாமிநாதையர், திருக்குடந்தைப் புராணப் பதிப்பைத் தொடர்ந்து 1885இல் ஸ்ரீமத்தியார்ச்சுன மான்மியம் எனும் நூலை எழுதிப் பதிப்பித்து வெளி யிட்டிருக்கிறார். கும்பகோணம் மகாமகம் நடந்து முடிந்த பின்னர் சுப்பிரமணிய தேசிகரைப் பார்க்க வந்திருந்த, திருவாவடுதுறை ஆதீனக்காறுபாறும், திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க சுவாமி ஆலய விசாரணைக் கருத்தருமாகிய சுப்பிரமணியத் தம்பிரானென்பவர் திருவிடைமருதூர் தலப் பெருமையைச் சுருக்கமாக வசன நடையில் எழுதித் தர வேண்டுமென்று தேசிகர் முன்னிலையிலேயே சாமிநாதையரைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர் கேட்டுக்கொண்டபடி மத்தியார்ச்சுன மான்மியம் என்ற நூலை சாமிநாதையர் எழுதி முடித்திருக்கிறார். இவர் வசனநடையில் எழுதிப் பதிப்பித்த முதல் நூல் இதுவேயாகும். நூலினை அச்சிடும் முழுச் செலவையும் தம்பிரான் அவர்களே ஏற்றிருக்கிறார்.

சிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய புராணத்தைத் துணையாகக் கொண்டு திருவிடை மருதூர் தலச் சிறப்பை விளக்கியுரைக்கும் நூலாக அது இருந்தது. அந்நூலில், மூர்த்தி, தலம், தீர்த்தங்களின் சிறப்பு, வழிபட்டோர் வரலாறு, திருவிடைமருதூர் விழா மூர்த்தியாகிய ஏகநாயகர் பொருட்டு ஓர் ஊசல், தாலாட்டு ஆகியன அடங்கியிருந்தன.

திருவிடைமருதூர் கோயில் திருவிழாவை முன்னிட்டு இந்நூலை விரைந்து அச்சிட்டு முடிக்கும் பொருட்டுச் சென்னைக்கு ஆட்களை அனுப்பி அச்சுப் பணியை முடிப்பதென அப்போது முடிவாயிற்று. உ.வே.சா. அவர்களையே அனுப்பி அச்சுப் பணியை முடித்துவர வேண்டும் என்று தம்பிரானும் தேசிகரும் இணைந்து தீர்மானித்தனர். உ.வே. சாமிநாதையர் தேசிகர் கட்டளையின்படி பதிப்புப் பணிக்காகக் கும்பகோணத்திலிருந்து சென்னைக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். உ.வே.சா. மேற்கொண்ட முதல் சென்னைப் பயணம் இதுவேயாகும். சென்னைக்கு வந்த பின்னர் ஜீவரக்ஷ£மிர்த அச்சுக் கூடத்தில் நடைபெற்ற அச்சுப் பணியைக் கவனித்துக்கொண்டு இடையிடையே எழும்பூரிலிருந்த சேலம் இராமசாமி முதலியாரைச் சந்தித்துச் சீவகசிந்தாமணி நூலாராய்ச்சி குறித்த உரையாடலை நிகழ்த்தி வந்திருக்கிறார். சந்திப்பின் போதெல்லாம் சீவகசிந்தாமணியை அச்சிட்டு முடித்துவிடுங்கள் என்று உ.வே.சா. அவர்களை இராமசாமி முதலியார் கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறார்.

மத்தியார்ச்சுன மான்மியம் பதிப்பு வேலை தொடர்பாகச் சென்னைக்கு மேற்கொண்ட பயணம் பற்றிப் பின்னாளில் இவ்வாறு எழுதி மகிழ்ந்திருக் கிறார் சாமிநாதையர்.

மத்தியார்ச்சுன மான்மியம் பதிப்பிப்பதை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு சென்னைக்கு வந்தாலும், என்னுடைய நோக்கம் அந்நகரத்தையும் அங்குள்ள அறிஞர்களையும் பார்த்துத் தெரிந்து கொள்ளவேண்டுமென்பதே. இராமசுவாமி முதலியாருடைய பேருதவியால் அந்நோக்கம் மிக எளிதில் கைகூடியது. ஒவ்வொரு நாளும் முதலியார் பிற்பகலில் தம் கோச்சு வண்டியில் என்னை அழைத்துக் கொண்டு புறப்படுவார். பிரஸிடென்ஸி காலேஜ், காஸ்மொபாலிடன் கிளப் முதலிய இடங்களுக்குப் போய் அங்கு உள்ளவர்களும் வருபவர்களுமாகிய கனவான் களில் ஒவ்வொருவரையும் எனக்குப் பழக்கம் பண்ணி வைப்பார். அவர்கள் கௌரவத்தை எனக்கு எடுத்துரைப்பதோடு என்னைப் பற்றியும் அவர்களிடம் சொல்வார். அவருடைய உதவியினால் நான் ஜட்ஜ் முத்துசாமி ஐயர், ஸர்.வி. பாஷ்யமையங்கார், ஸ்ரீநிவாச ராக வையங்கார், பம்மல் விஜயரங்க முதலியார், ரகுநாதராயர் முதலிய பல கனவான்களுடைய பழக்கத்தைப் பெற்றேன்.

பிரஸிடென்ஸி காலேஜிற்குச் சென்று பூண்டி அரங்கநாத முதலியாரையும், தொழுவூர் வேலாயுத முதலியாரையும் பார்த்தேன். அவ்விருவரும் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்களானார்கள், வர்னாகுலர் சூபரிண்டெண்டெண்டு சேஷகிரி சாஸ்திரியாரையும் தமிழ்ப் பண்டிதர் கிருஷ்ண மாசாரியரையும் கண்டு பேசினேன். புரசபாக்கம் அஷ்டாவதானம் சபாபதி முதலியார், சோடசாவ தானம் சுப்பராய செட்டியார், கதிர்வேற்கவி ராயர், காஞ்சீபுரம் இராமசுவாமிநாயுடு, கோமளீசுவரன் பேட்டை இராசகோபால பிள்ளை, சூளை அப்பன் செட்டியார், சூளை சோமசுந்தர நாயகர், திருமயிலை சண்முகம் பிள்ளை முதலிய வித்துவான்களைப் பார்த்துப் பேசி இன்புற்றேன். அஷ்டாவதானம் சபாபதி முதலியார் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர் களுடைய சகபாடியாதலின் அவருடைய புலமையைப் பற்றிப் பேசினார். சோடசாவ தானம் சுப்பராய செட்டியார் தாம் பிள்ளையவர் களிடம் பாடம் கேட்ட விஷயத்தையும் அப் புலவர் பிரானுடைய சிறப்புக்களையும் எடுத்துச் சொன்னார். நான் கண்ட வித்துவான்கள் பல பழைய பாடல்களைச் சொன்னார்கள். அவற்றைக் கேட்டுக் குறித்துக் கொண்டேன். நானும் எனக்குத் தெரிந்த செய்யுட்களைச் சொன்னேன்.

சென்னை நகரத்தில் பார்க்க வேண்டிய பொருட் காட்சிச் சாலை, கடற்கரை, கோயில்கள், புத்தக சாலைகள், சர்வகலாசாலை முதலியவற்றையும் பார்த்தேன். வித்துவான்களையும் அறிஞர் களையும் பார்த்துப் பழகியது கிடைத்தற்கரிய பெரிய லாபமாகத் தோன்றியது. சிறந்த உத்தியோக பதவியை வகித்த பெரியவர் களெல்லாம் அடக்கமாகவும், அன்பாகவும் இருப்பதைக் கண்டு நான் வியந்தேன். கும்ப கோணத்தில் பதினைந்து அல்லது இருபது ரூபாய் சம்பளம் பெறும் குமாஸ்தா செய்யும் அட்டகாஸத்தையும் ஆடம்பரத்தையும் கண்ட எனக்கு அப்பெரியவர்களுடைய நிலை மிக்க ஆச்சரியத்தை உண்டாக்கியது (என் சரித்திரம், பக். 565 - 566).

சாமிநாதையருக்கு முதல் சென்னைப் பயணம் பல வகையிலும் பயனுள்ளதாக அமைந்தது. மத்தியார்ச்சுன மான்மிய அச்சுப் பணிகளை முடித்துக்கொண்டு சென்னையிலிருந்து புறப்பட்டுத் திருவிடைமருதூருக்குச் சென்று சுப்பிரமணிய தேசிகரிடம் புத்தகப் பிரதிகளை ஒப்பித்துவிட்டு நிகழ்ந்தவற்றைப் பகிர்ந்து மகிழ்ந்திருக்கிறார். நூற் பதிப்பு வேலையைச் செவ்வனே முடித்தது பற்றித் தேசிகர் இவரை மிகவும் பாராட்டிப் பேசியிருக் கிறார்; திருவிடைமருதூர் கோயில் திருவிழாவும் மிகச்சிறப்பாக நடந்தேறியிருக்கிறது. விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு மத்தியார்ச்சுன மான்மிய அச்சுப் புத்தகம் வழங்கப்பட்டிருக்கிறது.

சாமிநாதையர் சீவகசிந்தாமணி பதிப்புப் பணிகளுக்கு இடையிடையே இவ்வகையான சிறுசிறு பணிகளையும் செய்துவந்திருக்கிறார்.

சாமிநாதையர் அவர்களின் ஏழாண்டுகால உழைப்பின் வழியே 1887இல் சீவகசிந்தாமணி மூலமும் நச்சினார்க்கினியர் உரையும் அச்சுருவாகி வெளிவந்தது. உ.வே.சா. பதிப்பாசிரியராக இருந்து விளங்கிய நான்காவது நூல் இதுவாகும். முதல் இரண்டு நூல் பதிப்பைப் பிறருடன் இணைந்தும், மூன்றாவதாகத் தாமே ஒரு நூலை இயற்றிப் பதிப் பித்தும் இருந்த சாமிநாதையர் நான்காவதாகச் சீவக சிந்தாமணி நூலைப் பல சுவடிகளைத் திரட்டி ஆராய்ந்து பதிப்பித்து வெளியிட்டிருக்கிறார். சேலம் இராமசாமி முதலியார் கொடுத்த பிரதி உள்ளிட்ட கீழ்வரும் பத்தொன்பது பிரதிகளை ஒப்பிட்டு ஆராய்ந்து சிந்தாமணிப் பதிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார்.

  1. சேலம் இராமசுவாமி முதலியார்
  2. திருவாவடுதுறையாதீனத்து சுப்பிரமணிய தேசிகர்
  3. திருவாவடுதுறையாதீனத்து மஹாவித்துவான் மீனாக்ஷிசுந்தரம் பிள்ளை
  4. திரிசிரபுரம் சி. தியாகராசசெட்டியார்
  5. யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரம்பிள்ளை
  6. சென்னை, மழவை மகாலிங்கையர்
  7. சென்னை, அஷ்டாவதானம், சபாபதி முதலியார்
  8. சென்னை, தி. க. சுப்பராய செட்டியார்
  9. சென்னை, திரு. சின்னசாமிப்பிள்ளை
  10. உடையூர், சுப்பிரமணிய பிள்ளை
  11. திருநெல்வேலி, ஸ்ரீ சாலிவாடீசுவர ஓதுவார்
  12. திருநெல்வேலி, ஈசுவரமூர்த்திக் கவிராயர்
  13. தூத்துக்குடி, குமாரசாமிபிள்ளை
  14. சிதம்பரம், தருமலிங்கசெட்டியார்
  15. தஞ்சை, மருதமுத்து உபாத்தியாயர்
  16. தஞ்சை, விருஷபதாசமுதலியார்
  17. கூடலூர், விசயபாலநயினார்
  18. வீடூர், சந்திரநாதசெட்டியார்
  19. இராமநாதபுரம், பொன்னுசாமித் தேவர்

சேலம், இராமசாமி முதலியார், சென்னை, நியூயிங்க்டன் பள்ளிக்கூட மதபோதகாசிரியர் தி. அ. கிருஷ்ணையர் ஆகிய இருவருடன், கும்ப கோணம், தஞ்சை, கோட்டூர், திரிசிரபுரம், யாழ்ப் பாணம், சென்னபட்டணம், திருநெல்வேலி, ஊற்று மலை, சோழன்மாளிகை முதலிய இடங்களிலுள்ள பல செல்வந்தர்களும் சிந்தாமணிப் பதிப்பிற்குப் பொருளுதவி செய்திருக்கின்றனர்.

சிந்தாமணிப் பதிப்புப் பணிகள் நடைபெற்ற காலத்தில் கும்பகோணம் கல்லூரியில் முதல்வராக இருந்த பில்டெர்பெக் என்ற ஆங்கிலேயரும் சாமி நாதையருக்குப் பெரும் ஊக்கத்தை அளித்திருக்கிறார்.

வீடூர், சந்திரநாத செட்டியார், தேரெழுந்தூர், சக்கரவர்த்தி இராஜகோபாலாசாரியர், திருமானூர் கிருஷ்ணையர் முதலியோர் இந்நூல் ஆராய்ச்சிக்கு உடனிருந்து உதவியிருக்கின்றனர். சீவகசிந்தா மணியைப் பல சுவடிகளை ஒப்புநோக்கி ஆராய்ந்து வெளியிட்ட அனுபவத்தின் பயனாக மேலும் பல பழந்தமிழ் நூல்களைப் பற்றி அறிந்துகொள்ளும் வாய்ப்பும், நூல் பதிப்பு குறித்த பெருமளவு அனுபவமும் சாமிநாதையர் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது என்பதை அவர் கூற்றின் வழியே நோக்கிப் புரிந்துகொள்ளலாம்.

சீவகசிந்தாமணியை மாத்திரம் படித்து ஆராய் வதனால் அந்த நூலைப் பதிப்பிக்க இயலா தென்றும் மற்றப் பழைய நூல்களையும் படித்துத் தெரிந்து கொண்டால்தான் சிந்தாமணியின் பொருள் விளக்கமாகுமென்றும் நான் உணர்ந்தேன். சிந்தாமணி உரையில் காணப்பட்ட மேற்கோள் களைத் தனியே எழுதி வைத்துக்கொண்டு திருப்பித் திருப்பிப் பார்த்து வருவேன். அதனால் அவை மனப்பாடமாகவே இருந்தன. அவற்றிற் சில அந்தப் பழைய ஏடுகளில் காணப் பட்டன. அவற்றைக் கண்டபோது பெரிய புதையல் கிடைத்தது போன்ற சந்தோஷம் எனக்கு உண்டாயிற்று. மேலும் படிக்கத் தொடங்கினேன்.

படித்தால் எளிதில் விளங்கக்கூடிய நூல்களாக அவை தோற்றவில்லை. அவற்றில் உள்ளது வேறு ஒரு தனிப்பாஷை போலவே இருந்தது. ஆனாலும் நான் விடவில்லை. படித்துப் பார்த்தேன். தொல்காப்பிய உரைகளில் வரும் பல செய்யுட்கள் அவற்றில் இருந்தன. ‘இந்த நூல் தொகுதியே ஒரு தனிப் பிரபஞ்சம்’ என்ற எண்ணம் எனக்கு வரவர வலிவடைந்தது.

அகநானூற்றைப் படித்து அதில் உள்ள செய்யுட் களுக்கு இலக்கமிட்டு அவற்றிலுள்ள அரும் பதங்களையும் தொடர்களையும் தொகுத்து அகராதி வரிசையில் எழுதி வைத்துக் கொண்டேன். நச்சினார்க்கினியர் எங்கெங்கே ‘என்றார் பிறரும்’ என்று எழுதுகின்றாரோ அங்குள்ள மேற்கோட் பகுதிகளிலுள்ள பதங்களையும் தொடர்களையும் அந்த அகராதியிலே பார்ப்பேன். ஒன்று இரண்டு கிடைக்கும். அந்தப் பாட்டை எடுத்துப் பார்ப்பேன். சிந்தாமணியில் நச்சினார்க்கினியர் எழுதியிருக்கும் உரையால் அந்தச் செய்யுள் ஒருவாறு விளங்கும். அதிலே ஈடுபட்டு ஒரு முறை இரண்டு முறை மூன்று முறை படித்துப் பார்ப்பேன். சங்க நூல்களாகிய புதிய உலகத்தின் காட்சிகள் பனிமூடிய மலைபோல என் கண்ணுக்குத் தோற்றலாயின. பனிப்படலம் படர்ந்திருந்தாலும் மலையினுடைய உயரமும் பருமையும் கண்ணுக்குப் புலப்படுதல் போலத் தெளிவாக விளங்காவிட்டாலும் அந்தச் சங்க நூற் செய்யுட்கள் பொருளமைதியால், ‘நிலத்தினும் பெரியனவாகவும், வானிலும் உயர்ந்தனவாகவும், கடல் நீரினும் ஆழமுடையனவாகவும்’ தோற்றின (என் சரித்திரம், பக். 556 - 557).

சீவகசிந்தாமணி பதிப்பு வெளிவந்த பின்னர் தமிழகத்தில் ஒரு புதுவகை கிளர்ச்சி உண்டாகி யிருந்தது. அதுவரையில் அப்படியரு நூலையும், பதிப்பையும் பார்த்தறிந்திராத பலர் உ.வே.சா. அவர்களின் அரும் பணியைப் பாராட்டி, கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர்.

தமிழகம் கொண்டாடி மகிழ்ந்த சிந்தாமணிப் பதிப்பிற்காக சாமிநாதையர் சந்தித்த இன்னல்கள் ஏராளமாகும். சிந்தாமணி அச்சுப் பணியில் ஈடுபட்டிருந்த காலத்தில் வேண்டிய பொருள் வசதியுமின்றி, அதைத் திரட்டுவதற்குரிய வழியுமறியாது எவ்வாறு துயர்பட்டுள்ளார் என்பதை என் சரித்திரத்தில் உள்ள ஒரு குறிப்பு மிகவும் வருத்தச்செய்கிறது.

சிந்தாமணியைச் சேர்ந்த முகவுரை, கதைச் சுருக்கம் முதலியன அச்சிட்டு நிறைவேறின. அச்சுக் கூடத்தில் புத்தகத்தைப் பைண்டு செய்வதற்கு வேண்டிய ஏற்பாடு இல்லை. விசாரித்ததில் முருகேசமுதலியார் என்பவர் திறமை உடையவ ரென்றும் நாணயமாக நடப்பவரென்றும் தெரிந்தமையால் அச்சிட்ட பாரங்களையெல்லாம் அவரிடம் அச்சுக்கூடத்தாரைக் கொண்டு ஒப்பிக்க நினைத்தேன். அச்சுக்கூடத்திற்கு அப்போது பணம் கொடுக்க வேண்டியிருந்தது. அதைக் கொடுத்துவிட்டே பாரங்களைப் பைண்டரிடம் ஒப்பிக்கச் செய்வதுதான் நலம் என்று தெரிந்தது. ஆனால், கையிற் பணமில்லாமையால் திருவல்லிக் கேணி சென்று, என் நண்பரும் நார்ட்டன் துரை குமாஸ்தாவுமான விசுவநாத சாஸ்திரிகளைக் கண்டு ரூபாய் முந்நூறு கடனாக வேண்டு மென்றும் சில வாரங்களில் வட்டியுடன் செலுத்தி விடுவேன் என்றும் விஷயத்தைச் சொல்லித் தெரிவித்தேன். அவர் அங்ஙனமே அந்தத் தொகையைக் கொடுத்து உதவினார். உடனே அச்சுக்கூடத் தலைவருக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தேன். அவர் அச்சிட்ட பாரங்களையெல்லாம் பைண்டரிடம் ஒப்பித்து விட்டார்...

அன்று சனிக்கிழமையாதலால் திருவல்லிக்கேணியிலுள்ள பார்த்தசாரதிப் பெருமாள் தரிசனம் செய்து கொண்டு ஜாகைக்குப் போய் மனக்கவலையின்றித் துயின்றேன்... அச்சிட்ட சிந்தாமணிப்பிரதிகள் ஐந்நூறு. அவற்றிலும் ஏறக்குறைய நூறு பிரதிகள் அச்சுக் கூடத்தாருடைய கவனக்குறைவால் வீணாகி விட்டன... மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பைண்டர் மாதிரிக்காக ஒரு பிரதியைப் பைண்டு செய்து கொடுத்தார். அதைக் கையில் எடுத்துக் கொண்டு இராமசுவாமி முதலியாரிடம் சென்றேன்... அவரிடம் புஸ்தகத்தைக் காட்டின போது அவர் அடைந்த ஆனந்தம் இவ்வளவென்று சொல்லி முடியாது. “பெரிய காரியத்தை மேற்கொண்டு நிறைவேற்றி விட்டீர்கள். இனி, சிலப்பதிகாரம் முதலியவற்றையும் இப்படியே அச்சிட்டுப் பூர்த்தி செய்ய வேண்டும்” என்று சொன்னார்... “எல்லாம் செய்யலாம், எல்லா வற்றிற்கும் பணம் வேண்டியிருக்கிறதே, அதற்கு நான் எங்கே போவேன்! நேற்று நான் விசுவநாத சாஸ்திரிகளிடம் முந்நூறு ரூபாய் கடன் வாங்கிச் சிந்தாமணிப் பிரதிகளை அச்சுக் கூடத்திலிருந்து எடுத்துச் செல்ல வேண்டி யிருந்தது” என்று முதல் நாள் நிகழ்ச்சிகளை விரிவாகச் சொன்னேன்... முதலியார் மிகவும் வருந்தி, “கையப்பமிட்ட கனவான்களிடம் கொடுக்க வேண்டிய பணத்தைக் கேட்டால் கொடுப்பார்கள். அதை வாங்கிக் கடனுக்கு ஈடுசெய்து விடலாமே” என்றார் (என் சரித்திரம், பக். 614 - 615).

இராமசாமி முதலியார், பூண்டி அரங்கநாத முதலியாரைச் சென்று சந்தியுங்கள்; அவர் வேண்டிய வசதியைச் செய்து தருவார் என்று கூறவே, பைண்டான ஒரு சிந்தாமணி அச்சுப்புத்தகத்தை எடுத்துக்கொண்டு முதலியாரைச் சந்திக்கச் சாமிநாதையர் சென்றிருக் கிறார். வேறொரு முக்கியமான வேலையில் ஈடுபட்டிருந்த அரங்கநாத முதலியார் இன்று சந்திக்க நேரமில்லை; நாளை வந்தால் சந்திக்கலாம் என்று சொல்லிவிடவே, சந்திக்கமுடியாத வேதனையோடு திரும்பிவந்து, நடந்தவற்றை இராமசாமி முதலி யாரிடம் விவரித்துச் சொல்லிவிட்டு, கல்லூரிக்கு மறுநாள் போகவேண்டியிருந்த காரணத்தால் அன்றிரவே சென்னையிலிருந்து புறப்பட்டுக் கும்பகோணம் வந்தடைந்திருக்கிறார்.

கும்பகோணம் வந்தடைந்த சில நாட்களில் பூண்டி அரங்கநாத முதலியார் ஒரு கடிதத்துடன் ஐம்பது ரூபாய் பணத்தையும் அனுப்பியிருந்தார். முதலியாரின் பேருதவியைப் பெற்றுக்கொண்டு உச்சிமகிழ்ந்து நன்றிபாராட்டி அவருக்குப் பதில் கடிதம் எழுதியிருக்கிறார் சாமிநாதையர். அரங்கநாத முதலியார் உள்ளிட்ட பல அன்பர்களின் உதவியுடன் சிந்தாமணி அச்சுருவாகி வெளிவந்திருக்கிறது என்பது வரலாறாகும்.

சாமிநாதையர் கும்பகோணம் வந்தடைந்த ஒரு வாரத்துக்குள் அச்சான சிந்தாமணி பிரதிகள் இவருக்கு வந்து சேர்ந்துள்ளன. அவற்றைப் பெற்றுக்கொண்டு பெற்றோரிடம் வாழ்த்துப் பெற்று மகிழ்ந்திருக்கிறார் என்பதை அவரின் கீழ்வரும் குறிப்பு புலப்படுத்துகிறது.

ஒரு வாரத்துக்கெல்லாம் சென்னையிலிருந்து பைண்டர் நூறு பிரதிகள் வரையில் பைண்டு செய்து ஒரு பெட்டியில் அனுப்பியிருந்தார். அதைப் பிரித்துப் புஸ்தகங்களை எடுத்துக் கோலம் போட்ட ஒரு பலகையின் மேல் வைத்து மாலை சாத்திக் கற்பூர நீராஞ்சனம் செய்து மஞ்சள் நீர் சுற்றி என் தாயார் என் கையில் எடுத்து அளித்து ஆசீர்வாதம் செய்தார். என் தந்தையார் கண் குளிரக் கண்டு மகிழ்ந்தார் (என் சரித்திரம், ப. 618).

ஏழாண்டு காலம் தம் பேருழைப்பைச் செலுத்திச் சீவகசிந்தாமணியை அச்சிட்ட சாமிநாதையருக்குப் பலரும் பாராட்டுக்களை நேரிலும் கடிதத்திலும் தெரிவித்திருக்கின்றனர். சிந்தாமணிக்கு அடுத்துப் பத்துப்பாட்டுப் பதிப்பு முயற்சியில் ஈடுபட்டிருந்ததை அறிந்த அன்பர்கள் பலரும் சிந்தாமணியைப் போன்றே பத்துப்பாட்டு நூலையும் அச்சிட்டு வெளியிட வேண்டுமெனவும் வேண்டிக்கொண்டுள்ளனர்.

சிந்தாமணிப் பதிப்பால் பெற்ற பலரின் பாராட்டு களுடன் சிலரின் கண்டனங்களையும் சாமிநாதையர் பெற நேர்ந்திருக்கிறது. கண்டனங்களை அவர் ஒரு காலத்திலும் பொருட்படுத்தி நோக்காமல், பதிப்புப் பணியில் முன்பைவிட இன்னும் முனைப்பாக ஈடுபடவே செய்திருக்கிறார் என்பதை அவர் வரலாறு வெளிப்படுத்துகிறது. தம் பதிப்புப் பணிகளுக்கு எதிராக எழுந்த கண்டனங்களைக் கடந்துசென்றது குறித்து ஓரிடத்தில் இப்படி எழுதியிருக்கிறார்.

கண்டன அலைகளுக்கிடையே நான் பத்துப் பாட்டு ஆராய்ச்சியை நடத்தி வந்தேன். குடந்தை மித்திரனென்னும் ஒரு பத்திரிகை கும்பகோணத்தில் சிலநாள் நடந்து வந்தது. அதில் ஒரு சமயம் என்னைப் புகழ்ந்தும் அடுத்த இதழில் இகழ்ந்தும் கட்டுரைகள் வரும். என் அன்பர்கள் இத்தகைய கண்டனங்களைக் கண்டு என்பாற் சிறிதும் அவமதிப்பு அடைந்ததாகத் தெரியவில்லை. கண்டனம் செய்தவர்களுக்கு யாரையேனும் கண்டிப்பதே நெடுங்காலப் பழக்கமென்பதையும், கண்டனத்தில் வழங்கிய பாஷையின் போக்கையும் அறிந்தவர்களுக்கு அக்கண்டனத்தில் உண்மை இருந்தாலும் மதிப் பளிக்க மனம் வராது (என் சரித்திரம், ப.654).

சீவகசிந்தாமணி அச்சுப் பதிப்பிற்கு எதிராக வெளிவந்த கண்டனங்கள் பல யாழ்ப்பாணத்தி லிருந்து எழுதப்பட்டது என்பது சாமிநாதையர் வரலாற்றுவழியே தெரிகிறது. கண்டனங்களை யெல்லாம் உழைப்பால் கடந்து சென்று, புகழ்பெற்று விளங்கிய சாமிநாதையர் அவர்களைப் பிற்காலத்தில் யாழ்ப்பாண அறிஞர்கள் பலரும் புகழ்ந்து பாராட்டியுள்ளனர் என்பது வரலாறாகும். 6-3-1936இல் சென்னையில் நடைபெற்ற சாமிநாதையரின் எண்பதாம் ஆண்டு நிறைவு விழா நினைவாக, 10-3-1936இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு பாராட்டுக் கூட்டத்தில் யாழ்ப்பாண அறிஞர் கு.முத்துக்குமார சுவாமிப் பிள்ளை இவரின் பெருமையை இவ்வாறு பாராட்டிப் பேசியிருக்கிறார்.

உ.வே.சா. காலத்திலிருந்த யாழ்ப்பாணப் புலவர்கள் பெரும்பாலும் கண்டனஞ் செய்வதிலேயே காலங்கழித்து வந்தனராகையால், பெரிய வேலை செய்தவர்கள் மிகச் சிலரே யாவர். ‘இலங்கைநேசன்’, ‘உதயபானு’, ‘உதய தாரகை’ முதலியவற்றின் பழைய இதழ்களைப் பார்க்கும்போது யாழ்ப்பாணப் புலவர்கள் கண்டனம் எழுதுவதில் அடைந்துள்ள திறமை நன்கு விளங்கும். சாமிநாதையர் கண்டனங் களைக் கவனியாது தாம் ஈடுபட்ட வேலையைச் செய்து பெருமையடைந்தவர். சுன்னாகம் முருகேச பண்டிதரும், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும் அவரை வாதுக்கு வலிந்து இழுத்தும் அவர் முன்வரவில்லை (சதாபிஷேக வரலாறு, 1936, ப. 103)

- தொடரும்...

Pin It