மனித வரலாற்றின் தொடக்ககாலத்தில் ஒரு மொழி என்பது உருவாகி, மிக நீண்டகாலம் பேச்சு வழக்கில் இருந்த பின்னரே, அதற்கான எழுத்து உருவாகிறது. தொடக்ககாலத்தில் ஒருமொழிக்கான எழுத்து உருவாக, மிக நீண்ட நெடியகாலம் ஆகிறது. ஆக தொடக்க காலத்தில் மொழிகளுக்கு எழுத்து உருவாகும் முன்னரே, பாடல் வடிவில் பழமொழிகளும், கதைகளும், புராணங்களும், தொன்மங்களும், மதம்சார்ந்த புனிதப் பாடல்களும், ஓரளவு இலக்கியங்களும் கூட உருவாகி, மொழி ஓரளவு முழு வடிவம் பெற்று விடுகின்றது.  எனினும் எழுத்து உருவான பின்னரே ஒரு மொழி முழுமை அடைகிறது. அதன் பின்னரே அது வளர்ச்சி அடைந்து செழுமை அடைந்து செவ்வியல் இலக்கியங்களைப் படைக்கும் திறன் பெறுகிறது. எழுத்து வடிவம் இன்றி ஒரு மொழி செவ்வியல் இலக்கியங்களைப் படைக்க இயலாது. கிரேக்கம், இலத்தீன், சீனம் போன்ற  செவ்வியல் மொழிகள் அனைத்துமே எழுத்து வடிவத்தைப் பெற்ற பின்னரே செவ்வியல் இலக்கியங்களை உருவாக்கின. ஒரு மொழி செவ்வியல் இலக்கியங்களைப் படைக்க எழுத்து உருவாவது ஓர் அடிப்படைத்தேவை. ஆனால் அது மட்டும் போதுமானதல்ல. வேறு பல பின்புலங்கள் இருந்தாக வேண்டும்.

செவ்வியல் காலகட்டமே ‘வரலாற்றுகால உயர்நிலைச் சமூகம்’:

            ஒரு மொழியில் செவ்வியல் இலக்கியங்கள் உருவாக அரசியல், பொருளாதாரம், வணிகம், தொழில், கலை, பண்பாடு ஆகிய பல துறைகளிலும் அம்மொழிக்கான சமூகம் ஓர் உயர் வளர்ச்சியை எட்டிய சமூகமாக இருந்தாக வேண்டும். ஒரு சமூகத்தின் பல துறையிலும் உயர் வளர்ச்சியடைந்த ஒரு காலகட்டத்தைப் பொற்காலகட்டம் என்று வரலாற்றில் குறிப்பிடுவர். நாம் இந்த பொற்காலகட்டம் என்பதை வரலாற்றுக்கால உயர்நிலைச் சமூகம் எனலாம். அதாவது ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக்காலகட்டத்தில் ஒப்பீட்டளவில் ஒரு மிக முன்னேறிய சமூகத்தையே இது குறிக்கும். அதுபோன்ற ஒரு வரலாற்றுக்கால உயர்நிலைச் சமூகத்தில் பல துறைகளோடு இலக்கியமும் வளர்ச்சியடைந்து செவ்வியல் தரத்தை அடைகிறது. இதையே வேறு விதத்திலும் குறிப்பிடலாம். ஒரு மொழியின் இலக்கியம் செவ்வியல் தரத்தை எட்டியுள்ளது என்றாலே, அக்காலகட்டத்தில் அம்மொழிக்கான சமூகம், அரசியல், பொருளாதாரம், வணிகம், தொழில், கலை, பண்பாடு,  ஆகிய பல துறைகளிலும் ஒரு உயர் வளர்ச்சியை எட்டிய, ஒரு வரலாற்றுக்கால உயர்நிலைச் சமூகமாக அது இருந்துள்ளது என்பதாகிவிடும்.

            ஆகவே பல துறைகளிலும் உயர் வளர்ச்சியடையாத ஒரு மொழிச்சமூகம் செவ்வியல் தரமுடைய ஓர் இலக்கியக் காலகட்டத்தைப் படைக்க முடியாது. எனவே வரலாற்றுக்கால உயர்நிலைச் சமூகங்களே செவ்வியல் தரமுடைய இலக்கியங்களைப் படைத்துள்ளன என்பதுதான் வரலாற்று விதியாக இருந்துள்ளது. செவ்வியல் இலக்கியங்களைப் படைத்த வரலாற்றுக்கால உயர்நிலைச் சமூகங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

வரலாற்று எடுத்துக்காட்டுக்கள்:

            கிரேக்க மொழியின் செவ்வியல் இலக்கியக் காலகட்டம் என்பது கிரேக்க நகர அரசுகளின் வரலாற்றுக்கால உயர்நிலைச் சமூகமாகக் கருதப்படும் கி.மு. 5ஆம், 4ஆம் நுற்றாண்டுகளாகும். இலத்தீன் மொழியின் செவ்வியல் இலக்கியக் காலகட்டம் என்பது உரோமப் பேரரசின்  வரலாற்றுகால உயர்நிலைச் சமூகமாகக் கருதப்படும் (சீசர் முதல் மார்க்கஸ் அரேலியஸ் காலம் வரை) கி.மு. 1ஆம் நுற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரையான கால கட்டமாகும். சமற்கிருத மொழியின் செவ்வியல் இலக்கியக் காலகட்டம் என்பது வைதீக இந்துக்களாலும் இந்திய வரலாற்று அறிஞர்களாலும்  வரலாற்றுக்கால உயர்நிலைச் சமூகமாகக் கருதப்படும் குப்தர்கள் மற்றும் அவர்களுக்குப் பின் வந்தவர்களின் காலமான கி.பி. 4ஆம் நுற்றாண்டு முதல் கி.பி. 8ஆம் நூற்றாண்டு வரையான காலமாகும். சீன மொழியின் செவ்வியல் இலக்கிய காலகட்டம் என்பது “சௌ” பரம்பரை ஆண்ட சீனாவின் வரலாற்றுகால உயர்நிலைச் சமூகமாகக் கருதப்படும் கி.மு. 8ஆம் நுற்றாண்டு முதல் கி.மு. 3ஆம் நூற்றாண்டு வரையான காலகட்டமாகும்-(1).    

வரலாற்றுப் படிப்பினை:

            ஆகவே மேற்கத்திய கிரேகக, உரோம பேரரசுகளின் வரலாற்றுக்கால உயர்நிலைச் சமூகங்களில் படைக்கப்பட்டவைகளே கிரேக்க, இலத்தீன் செவ்வியல் இலக்கியங்களாகும். சீனாவின் சௌ பேரரசின் வரலாற்றுக்கால உயர்நிலைச் சமூகத்தில் படைக்கப்பட்டவைகளே சீனச் செவ்வியல் இலக்கியங்களாகும். இந்திய குப்தர்கால வரலாற்றுக்கால உயர்நிலைச் சமூகத்தில் படைக்கப்பட்டவைகளே சமற்கிருத செவ்வியல் இலக்கியங்களாகும். மேற்கண்ட வரலாற்று எடுத்துக்காட்டுக்கள் நடந்து முடிந்த நிகழ்வுகள் ஆகும். ஆகவே அவைகள், “பல துறைகளிலும் உயர் வளர்ச்சியடைந்த, ஒரு வரலாற்றுக் கால உயர்நிலைச் சமூகமே, ஒரு செவ்வியல் இலக்கியக் காலகட்டத்தைப் படைக்க முடியும்”  என்கிற ஒரு வரலாற்று விதியினை, ஒரு வரலாற்றுப் படிப்பினையை உறுதி செய்கின்றன.

தமிழ்-ஒரு செவ்வியல் மொழி:

            இந்த வரலாற்று விதியினை, இந்த வரலாற்றுப் படிப்பினையை, நமது தமிழ் மொழியின் செவ்வியில் இலக்கிய காலகட்டமான நமது சங்ககால கட்டச் சமுதாயத்துக்குப் பொருத்திப் பார்ப்போம். உலக மொழியியல் அறிஞர்கள் அனைவரும், சங்ககால இலக்கியங்களை செவ்வியல் இலக்கியங்களாக ஏற்று அங்கீகரித்துள்ளனர். தமிழின் சங்ககால இலக்கியம் குறித்த ஒரு சில மொழியியல் அறிஞர்களுடைய கருத்துக்களைக் காண்போம். இந்த அறிஞர்கள் அனைவரும் தமிழ், சமற்கிருதம், போன்ற செவ்வியல் இலக்கியங்களையும் ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற நவீன இலக்கியங்களையும் கற்றுத்தேர்ந்த உலகப் புகழ்பெற்ற மொழியியல் அறிஞர்கள் ஆவர்.

சியார்ஜ் எல் ஆர்ட்:

            சான்றாக இங்கு ஆறாவது மதிப்புரையை வழங்கிய திரு சியார்ஜ் எல் ஆர்ட் அவர்கள் ஆர்வார்டு பல்கலைக்கழகத்தில் சமற்கிருதம் படித்து விட்டு, விசுகான்சின் பல்கலைக்கழகத்தில் சமற்கிருதப் பேராசிரியராகப் பணியாற்றியவர். காளிதாசர், மாகா, பாரவி, சிரீஅர்சர், ஆதிசங்கரர் ஆகியவர்களின் நூல்களையும், இரிக்வேதம், உபநிடதங்கள், மகாபாரதம் போன்றவைகளையும் சமற்கிருத மூலத்திலேயே படித்தவர். 1963 முதல் சமற்கிருத மூல நூல்களைப் படிக்கத் தனது நேரத்தில் பெரும்பகுதியைச் செலவிட்டவர். அது போன்றே கிரேக்க, இலத்தீன் செவ்வியல் நூல்களை, அவைகளின் மூலத்திலேயே நிறையப் படித்தவர். இரசியன், பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற நவீன மேற்கத்திய மொழிகளைக் கற்று அவைகளின் இலக்கியங்களையும் விரிவாகப் படித்தவர். நவீன இந்திய மொழிகளான தெலுங்கு, இந்தி மொழி இலக்கியங்களை மொழிபெயர்ப்பு மூலம் விரிவாகப் படித்தவர். தற்பொழுது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர்-(2).

1. பெஞ்சமின் கை பாயிங்டன்.

            “பழந்தமிழ் எழுத்துக்களைப் பற்றிக் கூறும்பொழுது அவற்றின் மிகுந்த எளிமையைத்தான் நான் முதலில் குறிப்பிட வேண்டும். அந்த எளிமையும் வேறு சில தன்மைகளும்தாம் தமிழ்மொழி அளவிறந்த தொன்மை வாய்ந்தது என்பதை நிறுவுகின்றன. தமிழி வரிவடிவத்திலிருந்து (லிபியிலிருந்து) உருவாக்கப்பட்ட கிரந்த லிபியில்தான் தென்னிந்தியாவில் சமற்கிருதம் எழுதப்படுகிறது. தமிழ்மொழி, சமற்கிருதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட மொழி அமைப்பைக் கொண்டது. சமற்கிருதம் உருவான காலகட்டத்திலேயே உருவான தொன்மை உடையது.”  என்கிறார் பெஞ்சமின் கை பாயிங்டன்-(3).

 2. என்றி ஒய்சிங்டன்.

            “செந்தமிழைவிடச் செறிவு, சொல்வளம், எக்கருத்தையும் வெளியிடும் ஆற்றல், இனிமை ஆகிய தன்மைகளைக் கொண்ட மொழி வேறு எதுவும் இருக்க இயலாது. தென்னிந்தியாவில் மொத்தம் ஏறத்தாழ இரண்டு மூன்று கோடி பேர் பேசும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் மற்றும் சில மொழிகளைத் தோற்றுவித்தது தமிழே என்று கருதப்படுகிறது. ஆகவே தமிழைத் தென்னிந்தியத்(தொன்) மொழியாகவே கருதலாம்.” என்கிறார் என்றி ஒய்சிங்டன் அவர்கள்-(4).

 3. ஆர்.ஈ.ஆசர்

            “இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடைய மிகச்சில மொழிகளில் தமிழ் ஒன்று. தமிழ் இலக்கியச் செல்வத்தை விட வளமான இலக்கியம் உலகில் வேறு எம்மொழியிலும் இல்லை. எனவே தமிழ் இலக்கியச்சிறப்பை உலகம் அறிந்துகொள்ள மொழிபெயர்ப்புப் பணி தேவை. சங்க இலக்கியம் முதல் கம்பராமாயணம் வரை உள்ள செவ்வியல் தமிழ் இலக்கியம், மனித இனச்சாதனைகளுள் மிகச்சிறந்தவைகளுள் ஒன்று. கருத்துக்கள், இலக்கிய அமைப்பு, சொற்களஞ்சியம் ஆகியவைகளுள் சங்க இலக்கியம், இன்றைய தமிழ்ப் படைப்புலகத்துக்கு ஒரு வற்றாத கருவூலமாக உள்ளது. தங்கள் படைப்பாற்றலை வியக்கத்தக்க அளவுக்கு மேம்படுத்தக் கூடிய செழுமையான பல்துறை வளங்கள் சங்க இலக்கியக் கருவூலத்தில் உள்ளன என்பதை இன்றைய தமிழ்ப் படைப்பாளிகள் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.” என்கிறார் ஆர்.ஈ.ஆசர்(5).

4. ஏ.கே. இராமானுசன்.

            “தொன்மையானவையே எனினும் இன்றும் உயிரூட்டம் உள்ளவையாய் இலங்கும் இந்தச் சங்க இலக்கிய அகப்பாடல்களைப் போன்ற நயம் வாய்ந்தவை இந்திய இலக்கியங்கள் வேறு எவற்றிலும் இல்லை. அப்பாடல்கள் கூறும் வாழ்க்கை நெறியிலும், விளக்கும் நிகழ்ச்சிகளிலும் சிறந்த செம்மொழி இலக்கியத்தின் பின்வரும் கூறுகள் உள்ளன: காதலோடு கனிவும் பண்பாடும்; வெளிப்படைக் கூற்றுக்களோடு உள்ள உள்ளுறை இறைச்சி, அங்கதம் ஆகியவை; தலைவன், தலைவி பெயர் சுட்டப்படாவிடினும் ஓவியம் போன்ற வர்ணணை; அடிகள் சில, அவை சுட்டும் பொருளோ பெரிது; தமிழர் அறிவுத்திறனின் மிகத் தொன்மையான எடுத்துக்காட்டு இவ்வகப் பாடல்கள்; அது மட்டுமன்று கடந்த ஈராயிரம் ஆண்டு தமிழ் இலக்கியப் படைப்பில் இவற்றை விஞ்சுவன இல்லை.” எனச் சங்க இலக்கியத்தின் பெருமையை வெளிப்படுத்துகிறார் உலகப் புகழ் பெற்ற மொழியியல் அறிஞர், இலக்கிய ஆய்வாளர் ஏ.கே. இராமானுசன்(6).

            சங்ககாலம் என்பது வீரயுகக்காலம் எனக்கூறிய கைலாசபதி அவர்களின் கூற்றை, ஏ.கே இராமனுசன் அவர்கள், தனது காதலும் வீரமும் பற்றிய கவிதைகள் எங்கிற ஆங்கில நூலின் பின்னுரையில் அதனை மறுக்கிறார். கைலாசபதி ஒரு கவிதையையாவது கவிதையென்ற முறையில் விளக்கமாகப் பார்க்கவில்லையே என்று இராமனுசன் வருந்திக்காட்டுவார். பல புறநானூற்றுப்பாடல்கள் மறைந்துவிட்ட ஒரு காப்பியத்திலிருந்து பெறப்பட்ட துண்டுகள் (   FRAGMENTS FROM THE LOST EPIC)) என்ற கைலாசபதியின் கருத்தை மறுக்கும் இராமானுசன் ஒவ்வொரு புறநானூற்றுப் பாடலும் கலை நுட்பத்தோடு முழுமை பெற்றவை என்பார்(THE SINGLE POEMS ARE WELL-FORMED AND ARTISTICALLY TO BE FRAGMENTED. ப-294). இவைகளை எடுத்துக்கூறும் முனைவர் ப.மருதநாயகம் அவர்கள், “கலித்தொகை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகியவற்றை நீக்கிவிட்டுப் பார்த்தோமானால் எஞ்சிய 2209 பாடல்களும் சங்ககாலத்தைச் சேர்ந்தவை என்பதில் ஐயமில்லை. இவற்றுள் 1705 அகப்பாடல்களாகும். கைலாசபதியின் கணக்குப்படியும் 391 பாடல்களே வீரர்களையும், வள்ளல்களையும் மற்றையோரையும் குறிப்பவை. இது சங்கப்பாடல்களில் 70 சதவீதத்துக்கும் மேலானவை வீரர்களைப் பற்றியவையன்று என்பதைத் தெளிவாக்கும். புறநானூற்றுப்பாடல்கள் மதிநுட்பம் நூலோடுடைய பெரும்புலவர்களால் எழுதப்பெற்றவை, அவை வாய்மொழி மரபைச் சேர்ந்தவை அல்ல. மனித வாழ்வின் எல்லாக் கூறுகளையும் நுட்பமாகப் பார்த்து அவை பற்றி ஆழமாகச் சிந்தித்துக் கலை நுணுக்கத்தோடு முதிர்ந்த அறிஞர்களால் எழுதப்பட்டவற்றை வாய்மொழிப்பாடல்களின் ஓரிரு கூறுகள் இருப்பதால் வீரயுகப்பாடல்கள் என அடையாளம் காண்பது தவறாகும். தமிழ்ச் சமுதாய, இலக்கிய வரலாற்றில் வீரயுகம் என்பது சங்க இலக்கியங்களுக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக இருந்திருக்க வேண்டும் என்பதைப் புறநானூற்றுப் பாடல்களும் ஏனைய சங்க இலக்கியங்களும் காட்டும் பண்பாட்டு முதிர்ச்சியிலிருந்து அறியலாம்” என்கிறார்-(7).

5. டாக்டர் கபில் சுவெலபில்;

            இரசிய மொழியியல் அறிஞர் டாக்டர் கபில் சுவெலபில் அவர்கள், தொல்காப்பியம், “மனித அறிவாற்றல் எவ்வளவு வியத்தகு உச்சநிலை எய்தக்கூடும்”(one  of  the finest  monuments of human intelligence) என்பதைக் காட்டும் சிறந்த சான்றுகளுள் ஒன்று. இலக்கியக் கொள்கையில் வேறு எந்தப் பண்டைய மொழிகளிலும் இல்லாத சிறந்த கருத்துக்களைத் தொல்பொருள் செய்யுளில் தொல்காப்பியம் கூறுகிறது-(8).

            எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்கள் (மொத்தம் 2300 பாடல்கள்) அச்சிட்டு உலகின் பார்வைக்கு முதலில் 1880-1910 காலஅளவில் வந்தது. அவை வெளிவந்த அக்கணமே உலகின் சிறந்த செம்மொழிகளில் ஒன்றாகத் தமிழ் ஆகிவிட்டது. பிரெஞ்சு ஆசியவியல் அறிஞர் “பியர் மெய்ல்”அவர்கள், “கிரேக்க உணர்ச்சிப் பாடல்களின் தலைசிறந்த நவ மணிகளுக்கு இணையானவை இச்சங்க இலக்கியப் பாடல்கள்; இந்தியாவில், ஏன் உலகிலுள்ள இலக்கியப் படைப்புக்களின் சிகரங்களில் ஒன்று சங்க இலக்கியம்” என்று செய்துள்ள மதிப்பீட்டைச் சங்க இலக்கியப் பாடல்களை ஆழ்ந்து பயின்றுள்ள எவரும் ஏற்றுக் கொள்வர்.

            இந்தியாவின் பிற எந்த மொழி இலக்கியத்திலும் இல்லாத சிறப்புக் கூறுகளைக் கொண்டது என்பது மட்டுமின்றி பண்டையத் தமிழ் இலக்கியம் உயரிய இலக்கிய நயமும் வாய்ந்தது. இந்திய மொழி இலக்கியங்களிலேயே தமிழ் இலக்கியம் மட்டுமே செவ்விலக்கியமாகவும், நிகழ்கால இலக்கியமாகவும் ஒரே நேரத்தில் இலங்கும் சிறப்பு வாய்ந்தது; அது சமற்கிருத இலக்கியம் அளவு தொன்மை வாய்ந்தது; பண்டைய கிரேக்க மொழிச் செய்யுள்களை எப்படிச் செவ்வியல் இலக்கியம் என உலகம் கருதுகிறதோ அதே தன்மை வாய்ந்தது தமிழ்க் கழக இலக்கியம்.

            தமிழ்ச் செவ்விலக்கியம்(சங்க இலக்கியம்) மக்களைப் பற்றிய இலக்கியம்; மக்கள் உருவாக்கியது. ஆனால் “நாட்டுப்புற” இலக்கியமன்று. கழக இலக்கியங்கள் எக்காலத்துக்கும் பொருந்தும் அழகியல் கூறுகள், விழுமியங்கள் ஆகியவற்றை நிரம்பக்கொண்டவை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யாத்த அவ்விலக்கியங்கள், பிற்காலத்தில் (அண்மைக்காலத் திறனாய்வாளர்) வகுத்துள்ள இலக்கிய நயக்கோட்பாடுகளின் படியும் உயர்நிலையில் ஏற்கப்படுபவனவாக உள்ளன. பழந்தமிழ் இலக்கியமும் பண்பாடும் படைத்த, “அகம்-புறம்” கோட்பாடுகள் உலகிலேயே தனித்தன்மையும் சிறப்பும் வாய்ந்தவை. இவை இரசிய அறிஞர் டாக்டர் கபில் சுவெலபில் அவர்களின் கருத்துக்களாகும்-(9).

6. சியார்ஜ் எல். ஆர்ட்.

            முதலாவதாகத் தமிழின் தொன்மை குறிப்பிடத்தக்கது. இக்காலத்திய பிற இந்திய மொழி இலக்கியங்களுக்கு ஓராயிரம் ஆண்டு முன்னர் உருவான இலக்கியத்தைக் கொண்டது தமிழ்.

            இரண்டாவதாகத் தமிழ் இலக்கியமரபு மட்டும்தான் சமற்கிருதத்திலிருந்து பெறப்படாத, இந்திய மண்ணுக்குரிய இலக்கிய மரபு ஆகும். தமிழ் தனக்கு எனத் தனி இலக்கியக்கொள்கை, இலக்கண மரபு, முருகியல்(aesthetics) உடையது; இவைகளின் அடிப்படையைக் கொண்டத் தமிழ் செம்மொழி இலக்கியம், வேறு எம்மொழி இலக்கியத்துக்கும் இல்லாத தனித் தன்மைகளைக்(unique) கொண்டது.

            மூன்றாவதாக சமற்கிருதம், சீனம், பாரசீகம், அரபு ஆகிய மொழிகளின் இலக்கியங்களில் சிறந்தவற்றுக்கு இணையான தரம் வாய்ந்தது தமிழ்ச் செம்மொழி இலக்கியம். அது நுண்மாண்நுழைபுலம் மிக்கது; பல்வேறு பாடுபொருள் கொண்டது(முற்கால இந்திய இலக்கியங்களில் பொது மக்களைப் பற்றி நிறையப் பாடியது தமிழிலக்கியம் மட்டுமே); மாந்த இனத்துக்குப் பொதுமையான விழுமியங்களைக் கூறியது. அவ்விலக்கியம் பாடித்துலக்கம் தராத மாந்த இனப்பட்டறிவு என ஒன்றும் இல்லை.

            இறுதியாக இக்கால இந்தியப் பண்பாட்டையும் மரபையும் உணர்வதற்குப் பயிலவேண்டிய இலக்கியங்களில் தமிழ் இலக்கியம் முதன்மை வாய்ந்தது. உலகத்தின் சிறந்த செம்மொழிகளில் தமிழும் ஒன்று என்பது இத்துறையில் வல்ல அறிஞருக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரிந்த உண்மை ஆகும் என்கிறார் சியார்ஜ் எல்.ஆர்ட்-(10).

            தமிழ் மொழி ஒரு செவ்வியல் மொழி என்பதற்கு, சங்ககால இலக்கியம் ஒரு சான்றாதாரமாகத் திகழ்கிறது என்பதற்கு மேலே தரப்பட்ட மொழியியல் அறிஞர்களின் மதிப்புரைகளே போதுமானவைகளாகும். தமிழின் சங்கச் செவ்வியல் காலம் என்பது கி.மு. 6ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 1ஆம் நூற்றாண்டு வரையான  6 நூற்றாண்டுகள் ஆகும்-(10).

தமிழ்ச் சமூகம்:

            நமது வரலாற்று விதிப்படி இவை படைக்கப்பட்ட கி.மு 6ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 1 ஆம் நூற்றாண்டு வரையான சங்கச் செவ்வியல் காலத் தமிழ்ச் சமூகம் பல துறைகளிலும் உயர் வளர்ச்சி அடைந்த ஒரு சமூகமாக இருந்திருக்க வேண்டும். அரசியல், பொருளாதாரம், தொழில், வணிகம், கலை, பண்பாடு ஆகிய பல துறைகளிலும் உயர் வளர்ச்சி அடைந்த சமூகமாகத் தமிழ்ச் சமூகம் இருந்த காரணத்தால் மட்டுமே இது போன்ற உன்னதமான, உயர் தரமான, உலகளாவிய மனித விழுமியங்களைக் கொண்ட செவ்வியல் இலக்கியங்களைப் படைத்திருக்க இயலும் என்பதே நமது வரலாற்று விதி கற்பிக்கும் பாடமாகும்.

செவ்வியல் மொழிகளும் எழுத்தும்:

            ஒரு மொழியில் செவ்வியல் இலக்கியங்கள் உருவாவதற்கு இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே அம்மொழிக்கான எழுத்து முறை உருவாகி இருக்க வேண்டும் என்பதைப் பிற செவ்வியல் இலக்கியங்களின் வரலாறுகள் நமக்குக் கற்பிக்கின்றன. கிரேக்கச் செவ்வியல் இலக்கியங்களின் கால கட்டம் கி.மு 5ஆம், 4ஆம் நூற்றாண்டு என்றால், அதன் எழுத்து கி.மு 8ஆம் நூற்றாண்டில் தோன்றிவிட்டது. இலத்தீன் செவ்வியல் இலக்கியங்களின் கால கட்டம் கி.மு முதல் நூற்றாண்டு முதல் கி.பி 2ஆம் நூற்றாண்டு வரை என்றால், அதன் எழுத்து கி.மு 6ஆம் நூற்றாண்டில் தோன்றிவிட்டது-(11).

            சீனச் செவ்வியல் இலக்கியங்களின் கால கட்டம் கி.மு 8ஆம் நூற்றாண்டு முதல் கி.மு 3ஆம் நூற்றாண்டு வரை என்றால், அதன் எழுத்து கி.மு 15ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தோன்றிவிட்டது. சமற்கிருத செவ்வியல் இலக்கியங்களின் கால கட்டம் கி.பி 4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 8ஆம் நூற்றாண்டு வரை என்றால், அதற்கான எழுத்தான அசோகன் பிராமியை, கி.பி 2ஆம் நூற்றாண்டின் நடுவிலேயே பயன்படுத்துவது துவங்கி விட்டது(அசோகன் பிராமி என்பது மௌரிய அரசர் அசோகரின் கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்ட எழுத்து முறை ஆகும். இதன் காலம் கி.மு 3ஆம் நூற்றாண்டு. இதற்கு முன் இந்திய மொழிகளுக்கு வேறு எழுத்து முறை இல்லை எனக் கருதப்படுகிறது).

சமற்கிருதமும் எழுத்தும்:

            கி.பி 2ஆம் நூற்றாண்டுக்கு முன் சமற்கிருத மொழிக்கு எழுத்து இல்லை என்றும், கி.பி 2ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய இந்தியாவில் உள்ள கல்வெட்டுகள், நாணயங்கள், செப்பேடுகள், இன்ன பிற எழுத்துச் சான்றுகள் ஆகிய அனைத்திலும் சமற்கிருதம் இல்லை என்பதும்தான் வரலாற்று ஆய்வு முடிவு ஆகும். இந்தியாவெங்கும் தமிழ், பாலி, பிராகிருதம் ஆகிய மொழிகளே அரசு மொழிகளாக, மக்கள் மொழிகளாக இருந்தன. ஆனால் சமற்கிருதம், அன்றைய காலகட்டத்தில் அரசு மொழியாகவோ, மக்கள் மொழியாகவோ இருக்கவில்லை. கி.பி 150இல் தான் முதல் முதலாக சமற்கிருத மொழி எழுதப்பட்ட கல்வெட்டுகள் கிடைக்கிறது-(12). அந்த சமற்கிருத எழுத்தும் அசோகன் பிராமியில் தான் எழுதப்பட்டது. சமற்கிருதத்திற்கான தென்னிந்திய எழுத்து முறையான கிரந்த எழுத்து கி.பி. 3ஆம் நூற்றாண்டில் உருவானதாகும். அதுபோன்றே சமற்கிருதத்திற்கான வட இந்திய எழுத்து முறையான தேவநாகிரி என்பது அதற்குப் பின் நான்கைந்து நூற்றாண்டுகள் கழித்துத் தான் உருவாகியது.

(தொடரும்)

பார்வை

1.விக்கிபீடியா-Ancient_ Greek_language,  Classical_Latin,  Sanskrit_literature;    கிரீஸ் வாழ்ந்த வரலாறு, சீன வரலாறு-சாமிநாத சர்மா

2. www.karkanirka .org/2008/09/18/tamil_classical). 

3.Benjamin Guy Baprngton(1830),An account of the sculptures and inscriptions at Mahamalaipur. TRANSACTIONS OF THE  ROYAL ASIATIC SOCIETY. VOL  2.(paper  read on 12.07.1828) & உலக அறிஞர்கள் பார்வையில் தமிழ்-பி.இராமநாதன், தமிழ்மண், 2009, பக்: 7, 8.

4.Reverend Henry Hoisington(1853); Brief notes on the Tamil Language. JOURNAL OF THE AMERICAN ORIEANTAL SOCIETY III Article (ix) (paper read on 9.05.1852) & உலக அறிஞர்கள் பார்வையில் தமிழ்-பி.இராமநாதன், தமிழ்மண், 2009, பக்: 8, 9.     

5.NEGOTIATIONS  WITH  THE  PAST:   CLASSICAL TAMIL  IN CONTEMPORARY  TAMIL;  Edrs Kannan M and carlos  Mena  Institute  Francais  de  Pondichery. 2004 & உலக அறிஞர்கள் பார்வையில் தமிழ்-பி.இராமநாதன், தமிழ்மண், 2009, பக்: 16, 74.

6.உலக அறிஞர்கள் பார்வையில் தமிழ்-பி.இராமநாதன், தமிழ்மண், 2009, பக்:75

7.தமிழ்ச் செவ்வியல் இலக்கியம் மார்க்சிய ஆய்வுகள், கோவை வாணன், செப்டம்பர் 2011, பக்:129-131.

8, 9. உலக அறிஞர்கள் பார்வையில் தமிழ்-பி.இராமநாதன், தமிழ்மண், 2009, பக்:64, 68-71.

10.உலக அறிஞர்கள் பார்வையில் தமிழ்-பி.இராமநாதன், தமிழ்மண், 2009, பக்:72, 73

11.விக்கிபீடியா: Greek_alphabet,  Latin_alphabet

12.இந்திய வரலாற்று அறிஞர் டி.டி.கோசாம்பி, ‘பண்டைய இந்தியா’ தமிழில் ஆர்.எசு. நாராயணன், NCBH பதிப்பகம், செப்டம்பர்-2006, பக்.350.   

கணியன் பாலன்,  ஈரோடு