ஆடி மாதம் வழிபாடு சார்ந்த பல நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடிய மாதமாகும். வேறெந்த மாதங்களிலும் இல்லாத அளவில் ஆடி மாதத்தில் விழாக்களால் தமிழக கிராமங்கள் உற்சாகத்துடன் காணப்படும். குழந்தை களுக்குக் குலதெய்வத்திற்கு மொட்டை இட்டு ‘காது குத்தும்’ வழக்கம் தொடங்கிப் பொங்கல் வைத்துப் பலி கொடுத்து வழிபடும் நிகழ்வு என ஆடி மாதம் முழுவதும் குலதெய்வக் கோவில்களில் வழிபாடு நடந்தவண்ணம் இருக்கும்.

 குலதெய்வத்திற்கு அவரவர் சூழலுக்கேற்ப ஆடு, பன்றி, கோழி ஆகிய இவைகளுள் ஒன்றையேனும் பலிகொடுத்து வழிபட்டு வணங்கும் வழக்கத்தைத் தமிழக மக்கள் கொண்டிருக்கின்றனர். கிராமங்களி லிருந்து புலம் பெயர்ந்து நகரத்தில் குடியமர்ந்தவர்கள் கூட இந்த மாதத்தில் தன் பூர்வீகக் கிராமத்திற்கு வந்து தவறாமல் குலதெய்வ வழிபாட்டை நிகழ்த்துவது உண்டு. கிராமப்புரங்களிலிருந்து நகரத்திற்குச் சென்று பல்வேறு நவீன மரபுகளை உள்வாங்கிக்கொண்ட போதிலும் பூர்வீக மரபிலிருந்து முற்றாக அவர்கள் விடு வித்துக்கொள்ளவில்லை என்பது இவ்வகை வழிபாட்டு முறைகளின் வழியாக வெளிப்பட்டு வருகின்றது.

ஆடி மாதத்தில் குலதெய்வ வழிபாடுகள் பெரு மளவு நடைபெற்றாலும் திருமணம், புதுவீடு கட்டு வதற்கான கால்கோள் நிகழ்ச்சி ஆகிய இரண்டும் கட்டாயம் நடைபெறுவதில்லை. ‘ஆடியில அடிகோளக் கூடாது ஆவணியில குடிபோகக் கூடாது’ என்ற பழமொழி தமிழரிடம் உண்டு (அடிகோளுதல் - புதிய வீடு கட்டுவதற்காகச் செய்யப்படும் சடங்கு முறை).

நெடுநாட்களாக இருந்துவரும் வழக்கம்/நம்பிக்கை இன்றைக்குப் பழமொழியாக வடிவம் பெற்றிருக்கிறது. ஆடி மாதத்திற்கு முன்னர் (வைகாசி, ஆனி) திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதியரும் இந்த மாதத்தில் இணைந்திருப்பதில்லை. புதுமணத் தம்பதியர் சேர்ந்திருக்காமல் பிரிந்திருக்கும் வகையில் மணப் பெண்ணைத் தாய்வீட்டிற்கு அனுப்பிவைத்துவிடுகின்ற வழக்கம் தமிழர்களிடம் உண்டு. புதிய சந்ததி ஆக்கத் திற்குரிய வித்து இம்மாதத்தில் விழக்கூடாது என தமிழர்கள் கருதியுள்ளனர். காலந்தோறும் நாகரிக அளவில் பல்வேறு மாற்றங்கள் பெற்றுவருகின்ற போதிலும் தமிழர்களிடம் தொடர்ந்து வழக்கிலிருக்கும் மரபுகளுள் இதுவும் ஒன்றாகும்.

இவ்வகை முறைகளைத் தவிர்த்துப் பார்க்கின்ற போது, நிலத்தில் விதை விதைப்பதற்கு ஏற்ற பருவ நிலையைக் கொண்ட மாதமாக ஆடி மாதம் இருந்து வருகின்றது. தானிய வகைகள் அனைத்தையும் உழுது விதைப்பதற்கு ஏற்ற பருவநிலை இந்த மாதத்தில் இயற்கையாக அமைந்திருக்கின்றது. இதனால்தான் ‘ஆடியில தேடி விதை’ என்ற சொல்வழக்கு உழவர்களிடம் வழங்குகின்றது.

ஆடி மாதத்தில் விதைத்து வளர்ந்த நெல் நாற்று களை ஐம்பது, அறுபது நாட்கள் கடந்த பிறகும், எடுத்து நடவு செய்யும் வழக்கம் தமிழக உழவர்களிடம் உண்டு (பொதுவாக நெல்லை நாற்றாங்காலில் விதைத்த பின்னர் முப்பது நாட்களுக்குள் எடுத்து நடவு செய்துவிடுவது வழக்கம்; முப்பது நாட்களைக் கடந்துவிட்டால் நாற்று முற்றிப்போய், நன்றாக வளர்வதற்கு ஏற்ற தன்மையை இழந்துவிடும் என்பது உழவர்களின் அனுபவக் கணக்கு). இந்த மாதத்தில் வளரும் நாற்றானது பருவநிலைக்கு ஏற்ற தகவமைப்பைக் கொண்டிருப்பது இயற்கையின் சிறப்புகளுள் ஒன்றாகும். இதை அறிந்து வைத்துள்ள தமிழக உழவர்களின் அனுபவச் சிந்தனை இன்றைய நவீன விஞ்ஞானிகளுக்கும் வியப்பளிக்கக்கூடியதாகும். இந்த வகையில் வேளாண் குடிகளுக்கு ஆடி மாதம் சிறப்பான மாதமாக இருந்து வருகிறது.

வருடம் முழுவதும் உழைத்துக் களைத்திருக்கும் உழவர்களுக்கு ஆடி மாதம் உற்சாகத்தை அளிக்கக்கூடிய மாதமாக இருந்திருக்கிறது. புதுமழையையும், அதன்வழி உண்டாகும் ஆற்றின் புது வெள்ளத்தையும் உழவுக்குடிகள் வழிபட்டு வரவேற்றுள்ளனர். இந்த மாதத்தில் மற்றொரு வழிபாட்டு வழக்கமும் உழவர்களிடம் இருந் திருக்கிறது. அது ‘ஊரணிப் பொங்கல்’ எனும் வழிபாட்டு முறையாகும். வேளாண் தொழில் செய்கின்ற மக்கள் தங்கள் வேளாண் தொழிலின் தொடக்கமான விதை விதைப்பிற்கு முன்னர் தெய்வத்தை வணங்கியுள்ளனர்.

குலதெய்வத்திற்கு அவரவர் விருப்பத்தைச் சார்ந்து பலிகொடுத்து வழிபடுவர். அவ்வாறில்லாமல், ஒரு ஊர் முழுவதும் ஒருங்கிணைந்து ஒன்றுகூடித் திரண்டு அந்த ஊரில் உள்ள தெய்வத்திற்குப் (பெரும் பாலும் அம்மன் கோவிலாக இருக்கும்) பலிகொடுத்து வழிபடுகின்ற வழக்கம் வேளாண் குடிகளிடம் இருந் திருக்கிறது. இன்றும் எங்கள் ஊரில் (திருவண்ணாமலை வட்டம், கோட்டாங்கல் கிராமம்) ஆடிமாதத்தில் இந்த வழிபாட்டு வழக்கம் நடைமுறையில் இருந்து வருகின்றது.

ஆடி மாதத்தின் ஒரு நல்வெள்ளிக் கிழமையில் இந்த ஊரணிப் பொங்கல் நிகழ்வு நடத்தப்பெறும். ஊர் கூடிப் பேசி முடிவெடுத்து, ஊரார் அனைவரிடமும் ஒரே சமஅளவில் பணம் வசூல் செய்யப்படும். ஊரிலுள்ள வண்ணார், நாவிதர், ஆச்சாரி (தச்சர்) குடும்பங்கள் மட்டும் பணம் வசூல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப் படும். வசூலிக்கப்பட்ட பணத்தில் சிறுதொகை மட்டும் கோவில் பூசை பொருட்களுக்குச் செலவு செய்யப்படும்; மீதம் உள்ள பணத்தில் ஆடுகளை விலைக்கு வாங்கி வருவர். ஊர் மக்கள் அனைவரும் ஊரின் நடுவே அமைந்துள்ள கோவிலைச் சுற்றியுள்ள இடத்தில் வந்து தனித்தனியாக அடுப்பமைத்துப் பொங்கல் வைப்பார்கள்.

பொங்கல் வைப்பதற்கு, முந்தைய ஆண்டில் தம் நிலத்தில்  விளைந்த  நெல்  அரிசியை  மட்டுமே பயன்படுத்துவர் (இப்போது கடையில் வாங்கி வந்தும் பயன்படுத்துகிறார்கள். வழக்கம் - வெறும் நம்பிக்கையாக மாறிப்போனதன் விளைவாக இதைப் பார்க்கலாம்).

பொங்கல் வைத்து  முடித்ததும்  அவற்றைக் கோவிலின் முன் கொண்டுவந்து பூசைப் பொருட்களுடன் சேர்த்து வைத்துவிடுவர். அப்பொழுது பொழுது சாய்ந்து மாலை நேரம் வந்திருக்கும். ஊர்ப் பெரியவர்கள் வந்திருக்க, பூசாரி பூசையைத் தொடங்குவார். முதலில் தெய்வத்திடம் குறி கேட்கப் படும். கூட்டத்தில் உள்ள ஒருவர் மூலமாகத் தெய்வம் வந்து ‘உங்களின் வேண்டுதலை ஏற்றுக்கொள்கிறேன்’ என்று குறி சொல்லும். நல்குறி கிடைத்த உற்சாகத்தில், கூடியுள்ள மக்கள் தெய்வத்தின் பெயரைச் சொல்லி குலவை இடுவர். பின்னர் தெய்வத்திற்குப் பூசை நிறை வேற்றப்படும். அடுத்து, ஆட்டுக் கிடாய்களை ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாய் பலிகொடுத்தல் நடைபெறும்.

தெய்வம் பலியை ஏற்றுக்கொண்டு நம்மைக் காத்திடும் என்ற நம்பிக்கையில், ஊர் மக்கள் அங்கு வைத்திருந்த அவரவர் பொங்கல் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கோவிலைச் சுற்றிவந்து தெய்வத்தை வணங்கிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிடுவர்.

பலி கொடுக்கப்பட்ட ஆட்டுக் கிடாய்களைக்‘கரை’ வாரியாக (‘கரை’ என்பது சில குடும்பங்களின் பகுப்பு; பழைய கிராம நிர்வாக முறைகளுள் ஒன்று; நிதி வசூல் செய்வதற்கும், பங்கிட்டுக் கொடுப்பதற்கும் ஏதுவாக இருக்கும் வகையில் ஊரில் உள்ள குடும்பங் களைச் சிறுசிறு பகுதியாகப் பகுத்துக்கொள்ளும் முறை) எடுத்துச் சென்றுவிடுவர். கரைக்கு இத்தனை ஆடு என்று முன்னரே கணக்கிட்டு வைத்திருப்பர். அதன்படி ஆட்டுக் கிடாய்களை அறுத்துப் பங்கிட்டுக் கொடுப்பர். இன்றும், இந்தப் பங்கீட்டு முறை எந்த நவீனக் கருவியைக் கொண்டும் கணக்கிடப்படாமல் கையாலேயே கணக்கிட்டுக் கொடுக்கப்பட்டு வருகிறது. அவரவர் பங்கைப் பெற்றுக்கொண்டு வீட்டிற்குச் சென்று சமைத்து உண்பர். அப்பொழுது இரவு உணவு உண்ணும் நேரம் வந்திருக்கும். நண்பகலில் தொடங்கிய நிகழ்ச்சி முன் இரவுப் பொழுதில் நிறைவடைந்திருக்கும்.

ஊர்மக்கள் ஒன்றாகச் சேர்ந்து தெய்வத்தை வழிபட்டு,  ஆட்டுக்  கிடாயைப்  பலிகொடுத்து, அறுத்துப் பங்கிட்டு உண்ணும் வழக்கம் தொல்குடிச் சமூகத்தின் எச்சம் என்பதைச் சங்க இலக்கியங்கள் வழியாக அறியமுடிகிறது. பண்டைத் தமிழர்கள் தெய்வ வழிபாட்டின்போது தாம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களைக் கடவுளுக்கு அளித்துள்ளனர் என்பதைச் சங்க இலக்கியங்களில் பரவலாகக் காணமுடிகின்றன (குறு. 133, 362, 263, நெடு. 42, அகம். 35).

வெட்சி மறவர்களை வீழ்த்திய கரந்தை வீரர்கள், வெட்சி வீரர்களிடமிருந்த ஆனிரைகளைக் கவர்ந்து கொண்டு வருகின்றனர். இந்த வெற்றிக்கும் தம் வலிய ஆண்மைக்கும் அறிகுறியாகக் குன்றின் மேலுள்ள நடுகல் தெய்வத்தை வழிபடுகின்றனர். அப்பொழுது துடியை முழக்கி நெல்லால் ஆக்கிய கள்ளோடு செம்மறிக் குட்டியைப் பலி கொடுத்தது பற்றிய குறிப்பு அக நானூற்றுப் பாடலொன்றில் (35) வருகின்றது. இன்னொரு அகநானூற்றுப் பாடல் (309) ‘ஆனிரைகள் கவர்ந்து வந்த மகிழ்ச்சியில் வெட்சி வீரர்கள் தெய்வத்தை வணங்கி, கவர்ந்துவந்த ஆனிரைகளுள் கொழுப்புள்ள ஆனிரை ஒன்றைக் கொன்று பலியிட்டு அந்தப் புலாலைச் சமைத்து உண்டுள்ளனர்’ என்ற குறிப்பைத் தருகின்றது.

வீரர்கள் தாம் பெற்ற வெற்றிக்குத் தெய்வம் துணை இருந்ததாகக் கருதி அத்தெய்வத்திற்குப் பலிகொடுத்து வழிபட்டிருக்கின்றனர். உழுவுத் தொழில் செய்கின்ற வேளாண் குடிகளும் தன் உழவுத் தொழிலுக்குத் தெய்வம் துணை இருந்ததாக நம்பி வணங்கி வழிபடுகின்றனர்.

குறிஞ்சி நில மக்கள் வேலன் வழிபாடு நிகழ்த்துகின்ற போது பலிகொடுத்து வழிபட்டுள்ள குறிப்புகளைச் சங்க இலக்கியங்களில் காணமுடிகின்றன.   இவ்வகை வழி பாட்டுமுறை எல்லா நில மக்களிடத்தும் இருந்திருக் கிறது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

தொல்குடி சமூகத்திலிருந்த பல வழிபாட்டு முறைகள் இன்றளவும் நீடித்து நிற்கின்றன. உழவுத் தொழில் செய்யும் வேளாண் குடிகளிடம் ஆட்டுக் கிடாய்களை அறுத்துப் பலிகொடுத்து வழிபடுகின்ற ‘ஊரணிப் பொங்கல்’ எனும் நிகழ்வு அந்த நீட்சியில் ஒன்றாகவே வைத்தெண்ணத் தோன்றுகிறது. தொல்குடி மரபின் எச்சங்கள் நம் காலத்திலும் நீடித்து வருவதை‘ஊரணிப்  பொங்கல்’  என்ற  வழிபாட்டுக்  கூறு வெளிப்படுத்துகின்றது.

Pin It