எல்லா மக்களும் தாங்கள் இருக்கும் நிலையை விட்டு இன்னும் உயர்ந்த நிலையை அடைவதற்கே ஆசைப்படுவார்கள். கீழான நிலையை அடைவதற்கு விரும்புகின்ற மனிதர்கள் உலகில் யாரும் இருக்க மாட்டார்கள். கீழான நிலைக்குச் செல்லவேண்டுமென்னும் கருத்துடையவர்கள் யாராவது இருந்தாலும், அவர்கள் கருத்தும், அதனால் தமக்கு நன்மை உண்டாகும் என்ற நம்பிக்கையைக் கொண்டதாகத் தான் இருக்கக் கூடும். இது மனித சமூகத்தின் இயற்கையாகும். இத்தகைய ஆவலும் முற்போக்குணர்ச்சியும் இருந்த காரணத்தால்தான் மனித சமூகமானது பண்டை காலத்திலிருந்த மிருகப் பிராயத்திலிருந்து முற்றும் மாறுதலடைந்து தற்கால முள்ள நாகரீகமான நிலைக்கு வந்திருக்கின்றது.
“மனிதன் அறிவுடையவனாகவே படைக்கப்பட்டான்” என்னும் மத வாதிகளின் கட்டுக் கதையைத் தள்ளிவிட்டுச் சரித்திர மூலமாகப் பண்டைக் காலத்தில் மக்கள் எந்த நிலையிலிருந்தனர் என்பதை ஆராய்ந்து பார்த்தால் இவ்வுண்மை விளங்கும். மக்கள் உண்டான காலத்தில் அவர்கள் குரங்கு களைப் போலவே மரங்களிலும், மலைகளிலும் வாழ்ந்து பிறகு தழை, மரப் பட்டைகளை எடுத்து, மிருகங்களை வேட்டையாடி உண்டு வாழ்ந்தவர்கள் நாளடைவில், நல்ல உடைகளைச் செய்து அணியக் கூடியவர்களாகவும், ஆகாரங்களைப் பக்குவப்படுத்தி உண்ணக் கூடியவர்களாகவும் இருந்து இடங்களமைத்துக் கொள்ளக் கூடியவர்களாகவும் சிறப்படைந்தனர் என்பது சரித்திர உண்மை.
இத்தகைய மக்கள் எல்லோரும் பண்டை காலத்தில் அறிவுடையவர் களாக இருந்திலர். அறிவுடையவர்கள் சிலரும், அறிவில்லாதார்கள் பலருமாக இருந்தனர். இந்த அறிவுடைய சிலரே மற்ற எல்லா மக்களையும் ஒரு கட்டுக்கு உட்படுத்தி அவர்களையெல்லாம் ஆண்டு வந்தனர். தமது அறிவின் திறமையால் பல சட்டங்களை ஏற்படுத்தி மக்களை அதற்கு கட்டுப்பட்டு ஒழுகும்படி செய்து வந்தனர். அக்காலத்திலிருந்த அறிஞர்களின் எண்ணம் மிகவும் முன்னேற்றமுடையதாகத்தான் இருந்தது. ஆனால் அவர்கள் எண்ணக் கூடிய எல்லாக் காரியங்களையும் செய்து முடிக்கும் ஆற்றல் அவர்களுக்கில்லை. தற்காலத்தில், ஆகாயத்தில் பறக்கவும், இயந்திரங்களால் ஆகிய மோட்டார் ரயில் முதலியவைகளை உபயோகிக்கவும், இயந்திரங்களைக் கொண்டு சண்டை போடவும் மனிதர்கள் கண்டு பிடித்திருப்பது போலவே அவர்களுக்கும் இம்மாதிரியான விஷயங்களின் மேல் ஆசை மாத்திரம் இருந்தது. ஆகையால் சாதாரணமாக நடந்து திரிந்த மனிதர்கள், மாடு, கழுதை, குதிரை முதலியவைகளின் மேல் ஏறிக் கொண்டு சவாரி செய்யவும், பிறகு அவைகளை வண்டிகளில் பூட்டிப் பிரயாணம் பண்ணவும், தண்ணீரில் கட்டைகளை மிதக்கவிட்டுக் கொண்டு அதன்மூலம் நீர்நிலைகளைத் தாண்டவும், பிறகு அவைகளைப் பாய்க்கப்பல்களாகச் செய்து கொள்ளவும் தான் கற்றுக் கொண்டார்கள்.
சரீர பலத்தால் சண்டை செய்தவர்கள், வில், ஈட்டி, முதலிய ஆயுதங்களைக் கொண்டு சண்டை செய்யவுந் தான் கற்றுக் கொண்டார்கள். அக்காலத்தில் அவர்களுடைய அறிவினாலும் முயற்சியினாலும் இவ்வளவு தூரந் தான் நாகரீகமடைய முடிந்தது. ஆகவே அதற்கு மேல் உண்டான, அதாவது தாங்கள் செய்ய முடியாத எண்ணங்களை எல்லாம் செய்வதற்கு ஏதோ ஒரு பொருள் இருக்க வேண்டுமென்று கருதி விட்டார்கள். அப்பொழுது தான் ‘கடவுள்’, ‘தெய்வம்’, வேறு உலகம் என்ற எண்ணங்களெல்லாம் உண்டாயின. அவ்வெண்ணத்தின் பயனாகவே சாஸ்தி ரங்களும், மதங்களும் ஏற்பட்டு விட்டன. அது முதல் மக்களுடைய மனத்தில் உள்ள தன்னம்பிக்கை குறைந்து தங்களுக்குத் தெரியாத ஒரு பொருளின் சக்தியினால்தான், தங்களால் முடியாத காரியங்களெல்லாம் நடைபெறுகின்றன என்ற நம்பிக்கையில் வீழ்ந்தார்கள்.
பண்டைக் காலத்தில் ஆகாயவிமானம் இருந்ததாகவும், அது பறந்து சென்றதாகவும் இராமாயணத்தில் கூறப்படுகின்றது. ‘மயில் பொறி’ என இயந்திரத்தினால் மயில்போல ஒரு வாகனம் இருந்ததாகவும், அதன் மீது ஏறிக் கொண்டு சென்றதாகவும் சீவக சிந்தாமணி என்னும் நூலில் சொல்லப்படு கிறது. மகாவிஷ்ணு என்னும் தெய்வத்துக்கு விரோதமாக இருந்த ஒருவன் மகாவிஷ்ணுவைப் போலவே சங்கு, சக்கரம், வில், வாள், கதை முதலிய ஆயுதங்களையும், இயந்திரத்தினால் கருடன் போல ஒரு வாகனம் செய்து கொண்டு அதன்மேல் ஏறி ஆகாயமார்க்கமாக பிரயாணம் செய்ததாகவும் பாகவதம் கூறுகிறது. மற்றும் பல புராணங்களில் கோட்டைச் சுவர்களின் மேல் பகைவர்களுடன் தானே சண்டைபோடக்கூடிய அனேக விதமான இயந்திரங் கள் இருந்ததாகவும் சொல்லப்படுகின்றன. ஆனால் இவை யெல்லாம் அக்காலத்தில் உண்மையில் இருந்தனவா என்றால் இல்லை என்று திடமாகக் கூறலாம். அப்படியானால் இவற்றைப் பற்றிய பிரஸ்தாபம் உண்டாவதற்கு காரணம் என்ன என்றால் எண்ணமே காரணம் என்று கூறுவோம். இவ்வாறு இருக்க வேண்டுமென்ற ஆசை அக்காலத்தில் அறிஞர்களுக்கு இருந்தது. அந்த ஆசையினாலும், மனோபாவத்தினாலுமே கதைகள் எழுதி விட்டார்கள் என்பது தான் உண்மை. இவ்வாறே ஓர் இடத்திலிருந்து பேசுவதை நெடுந்தூரத்திலுள்ளவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. இந்த மாதிரியான பல ஆசைகள் இன்றும் சிறு குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை எல்லோருடைய மனத்திலும் இருப்பதைக் காணலாம்.
இவ்வாறு மக்களுடைய மனத்தில் பல காலமாக நிகழ்ந்து வந்த ஆசையே முதிர்ச்சி அடைந்து அதன் பயனாக தற்காலத்தில் அவைகளெல் லாம் நிறைவேறி வருகின்றன. ஆகையால் மக்களுடைய மனத்தில் உண்டா கும் முன்னேற்றமான எண்ணங்கள் நாளடைவில் நிறை வேறாமல் போவ தில்லை.
இது போலவே பண்டைக் காலத்திலேயே எல்லா மக்களுடைய அறிவும் வளர வளரப் பலவகையான அபிப்பிராய பேதங்களும் வளரத் தொடங்கின. மக்களை அடக்கி ஆளும் பொருட்டு அறிஞர்களால் ஏற்படுத் தப்பட்ட தெய்வங்கள், கடவுள்கள், சாஸ்திரங்கள் முதலியவைகளின் உண்மை யற்ற தன்மைகளையும் உணர்ந்து வெளிப்படுத்தவும், மக்களுக்கு அவைகளின் மூலம் உண்டாகி இருக்கும் பயத்தையும் அடிமைப் புத்தியையும் அகற்றி ஒவ்வொருவரையும் தன்னம்பிக்கை உடையவர்களாக வாழச் செய்யவும் முயன்றனர். இதன் பயனாகத் தோன்றியவைகள் தான் நாஸ்திக மதம், புத்த மதம், சித்தர்களின் கொள்கைகள் முதலியவைகள்.
பொதுவாக அறிவுடைய மக்கள் அனைவரும் தாமே கடவுள், சாஸ்திரம் இவைகளைப் பற்றிச் சிந்திக்கும் போது அவைகள் பொய்யென உணரத் தொடங்கினர். ஆகவே அவர்கள் அவைகளின் கட்டுப்பாடுகளி லிருந்து விலகிச் சுயேச்சையாகவும், சுகமாகவும், கவலையின்றியும் வாழ முயற்சி செய்தனர். நாளடைவில் ஒருவரை ஒருவர் அடக்கி ஆளுவதற்கும் செல்வமும் சுகமும் உடையவர்கள் எப்பொழுதும் செல்வமும் சுகமும் உடையவர்களாகவே வாழ்வதற்கும், அவையில்லாமல் அடிமையாய் இருந்து துன்புறுவோர்கள் எப்பொழுதும் அடிமையாக இருந்து துன்புறுவதற்குமே, நம்மால் ஒரு காரியமும் ஆகாது என்றிருக்கும் சோம்பேரிகளுக்குமே மதமும், கடவுளும், சாஸ்திரங்களும் என்ற உணர்ச்சி உண்டான பின், அவை கள் சிறிது சிறிதாக ஒழிந்து வருகின்றன.
“மதங்களையும், சாஸ்திரங்களையும், கடவுளுக்குச் செய்யப்படும் காரியங்களையும் அழிக்க ஒரு காலத்திலும் முடியாது. அவைகளுக்கு அழிவு வருகிற காலத்தில் கடவுளே அவதாரம் பண்ணி அவைகளை நிலைநிறுத் துவார்” என்று மதவாதிகள் கூறும் சொல் பொய்யாகப் போகுமாறு ருஷியா போன்ற தேசங்களில் மதங்களும், கடவுள்களும், அவைகளுக்குச் செய்யப் படும் காரியங்களும் இருந்த இடம் தெரியாமல் போய்க் கொண்டிருக்கின்றன. மக்களுடைய முன்னேற்றத்திற்குத் தடையாக இருக்கும் மதங்கள், கடவுள்கள், சாஸ்திரங்கள் இவைகளை அழிக்க வேண்டும் என்ற கொள்கை பரவாத நாடு ஒன்றுமே இல்லை. எல்லா நாடுகளிலும் இக்கொள்கையுடைய மக்கள் இருந்து வருகின்றனர்.
இன்னும் சில ஆண்டுகளுக்குள் உலக முழுவதும் இக்கொள்கைகள் பரவி தற்போது உள்ள மதங்களும் கடவுள்களும் சாஸ்திரங்களும் இவை களின் மூலம் ஏற்பட்டுள்ள உயர்வு தாழ்வு வித்தியாசங்களும் அடியோடு மாண்டொழியும் என்பதற்கு ஐயமில்லை. மக்களுடைய மனதில் உண்டாகும் உணர்ச்சிகள் நாளடைவில் முதிர்ச்சி அடைந்து சித்தி பெறுவதே இவ்வுலகில் இது வரையிலும் நடைபெற்று வரும் இயற்கை நிகழ்ச்சியாக இருந்து வரு கின்றது என்ற உண்மையை அறிந்தவர்கள் எவரும் நாம் கூறுவதைப் பற்றிச் சிறிதும் ஐயமுறமாட்டார்கள் என்பது நிச்சயம்.
இப்பொழுது, கடவுள், சாஸ்திரம், மதம் முதலியவைகளைப் பற்றிய பயமும் நம்பிக்கையும் யாரிடத்திலிருக்கின்றது என்று பார்த்தால் உண்மை விளங்கும். கல்வி அறிவும், உலக நாகரீக உணர்ச்சியும், பகுத்தறிவும் இல்லாத சாதாரண மக்களிடத்தில் தான் இவைகளைப் பற்றிய நம்பிக்கை இருக்கின்றதே தவிர, வேறு படித்தவர்களிடத்திலோ, நாகரீகமுடைய வர்களிடத் திலோ, பகுத்தறிவு உடையவர்களிடத்திலோ இவைகளைப் பற்றிய நம்பிக் கையோ, பயமோ இருக்கிறதென்று கூற முடியவே முடியாது. நம்பிக்கை இருப்பதாகக் காட்டிக் கொண்டு வைதீகர்கள் போல் நடிப்பவர்களெல்லாம் சுயநலத்தினால் பொருளையோ, புகழையோ, பிறரை ஏமாற்றுவதையோ கருதித்தான் அவ்வாறு நடிக்கின்றார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையில் அவைகளில் நம்பிக்கை உடையவர் களாயிருந்தால் அவை களில் சொல்லுகின்றபடி நடக்க வேண்டும். இவ்வாறு சாஸ்திரங்கள் சொல்லு கிறபடியோ மதங்களின் கட்டளையின்படியோ, கடவுள்களின் அபிப்பிராயப் படியோ, முற்றிலும் நடந்து வருகின்ற ஒரு மனிதனாவது இவ்வுலகில் இல்லை. ஆகையால் அவைகள் யாருடைய நம்பிக்கைக்கும் உரியதாக இல்லாமை யால் அடியோடு அழியக்கூடிய காலமும் தூரத்திலில்லை யென்று சொல்லு கிறோம். இவ்வாறு நடைபெறுவது இயற்கையேயாகும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
(குடி அரசு - தலையங்கம் - 14.02.1932)