ஸ்ரீலஸ்ரீ சங்கராச்சாரியாரே! பண்டார சந்நிதிகளே! ஜீயர்களே! மெய்வழி ஆண்டகைகளே! ரமண ரிஷிகளே! அரவிந்தர்களே! பாதிரிமார்களே! முல்லாக்களே! பார்ப்பனப் புரோகிதர்களே! அர்ச்சகர்களே! பூசாரிகளே! பண்டாரங்களே! தீக்ஷதர்களே! போத்திகளே! குருமார்களே! மதத்தலைவர்களே! ஓடுங்கள்! ஓடுங்கள்! தாமதிக்காதீர்கள்! நாங்கள் செத்தாலும் பரவாயில்லை. நீங்கள் கடவுளோடு அடிக்கடி பேசுகிறவர்களாச்சே! நீங்கள் செத்துத் தொலைஞ்சால் கடவுளுக்குப் பேச்சு வார்த்தைக்குக்கூட ஆள் இருக்க மாட்டார்களே! கடவுள் தன்னந்தனியே கிடந்து தவிப்பாரே! தனியாயிருக்க பயமாயிருக்குமே அவருக்கு! ஓடுங்கள்! ஓடித் தொலையுங்கள்!- என்று கூச்சல் போட்டேன்! கதறினேன்! பதறினேன்!

kuthoosi gurusamyமூச்சுப் பேச்சில்லை. ஒருவர்கூட நகரவில்லை; நங்கூரம் போட்டு விட்டார்கள்!

ஏன் ஓடச் சொன்னேன்? அவர்கள் சொத்துக்களைக் கைப்பற்றி ஏழைகளுக்குப் பங்குபோட்டுக் கொடுப்பதற்காகவா? அது என்னால் மட்டுமே முடிகிற காரியமா? வாசகர்கள் வசத்தில் அரசாங்கம் வந்த பிறகல்லவா இந்தக் காரியம் முடியும்? ஏன் ஓடச் சொன்னேன், தெரியுமா? காரணத்தோடுதான்.

உலகின் ஊழிக்காலம் (அழிவுவேளை) நெருங்கி விட்டதாகவும் நகரங்கள்தான் முதலில் அழியுமென்றும் கூறிக்கொண்டு ஆஸ்ட்ரேலியாவில் உள்ள மெல்போர்ன், சிட்னி, பிரிஸ்போன் ஆகிய நகரங்களிலிருந்து மத குருவான விக்டேக்கர் என்பவரும், அவரது 10,000 சீடர்களும் ஓட்டமெடுத்து விட்டார்களாம். அணுகுண்டு மூலம் நகரங்கள் அழியலாம்; அல்லது ஏசுநாதர் இரண்டாம் முறை அவதரிக்கலாம் என்று அம் மதகுரு கூறினாராம்.

ஆகையால் நம் குருமார்களும் எங்கேயாவது ஓடிப் பிழைக்கட்டும் என்று கருதியே கூச்சல் போட்டேன்.

"அவர்களா ஓடுவார்கள்? பெரிய பெருச்சாளிகளாச்சே! ஏ குத்தூசியே! அப்படியாவது நாங்கள் தொலையட்டும் என்றுதானே நினைக்கிறாய்? உன் உள் எண்ணம் எங்களுக்குத் தெரியும். இந்த உலகமே அநித்தியமானது; என்றைக்கிருந்தாலும் சாவு நிச்சயம். சாவுக்குப் பயந்தா நாங்கள் ஓடுவோம்? ஆண்டவன் அருள் எதுவோ அது நடக்கும்; நாங்கள் நகரத்திலிருந்தாலும் ஒன்றுதான். கிராமத்திலிருந்தாலும் ஒன்றுதான். ஆஸ்ட்ரேலியாவில் அணுகுண்டு வீழ்ந்தாலும், இந்தப் புண்ணிய பூமியில் விழாது. ஒரு வேளை ப்ளேக், பஞ்சம், காலரா, காய்ச்சல், க்ஷயரோகம் முதலியவை வந்தாலும் வருமே தவிர, அணுகுண்டு வராது எங்களுக்குப் பயமில்லை. அற்ப மனிதர்களாகிய நீங்கள் வேண்டுமானால் எங்கோயாவது ஓடிப் பிழையுங்கள். ஆண்டவன் எங்களைக் காப்பாற்றுவான்,” என்று கூறிவிட்டார்கள், மேற்படி குருமார்கள்.

இவர்களைத் தனித்தனியே கேட்க வேண்டும் என்பது என் ஆசை. நீங்களாவது கேட்டுப் பாருங்களேன். கேட்டால் நிச்சயம் சரியான பதில் கொடுப்பார்கள்!

“நான் இருக்கப் பயமேன்?” என்பார் ஒருவர்.

“கோவர்த்தன கிரியைத் தூக்கி வருவார், கிருஷ்ணன்” என்பார் ஒருவர்.

“அணுகுண்டுக்கெதிராக வர்ணாஸ்திரத்தைப் பிரயோகிப்பார் மகாவிஷ்ணு,” என்பர் ஒருவர்.

“நெற்றிக் கண்ணைத் திறந்து காட்டி அதற்குள் அணுகுண்டை விழும்படி செய்வார்ல, எங்களப்பன் பரமசிவன்,” என்பார் ஒருவர்.

“இந்தக் கன்னத்தில் அணுகுண்டு வீழ்ந்தால் மறு கன்னத்தையும் காட்டுவேன்,” என்பார் ஒருவர்.

“ஒரு சிட்டிகை விபூதியை வீசி, ‘மந்திரமாவது நீறு’ என்ற திருப்பதிகத்தை உரக்கப் பாடுவேன்,” என்பார் ஒருவர்.

இப்படியெல்லாம் சொல்வார்களே ஒழிய, ஓட்டமெடுக்கும் பேச்சு மட்டும் இருக்காது.

உலக மக்களே அழிந்துபோனாலுங்கூட இந்தக் குருமார் கூட்டம் ஆடாது, அசையாது. மிருகங்களையும் புழு பூச்சிகளையும் மிரட்டிக் கொண்டாவது காலந்தள்ளும்! அதுவும் அழிந்துவிட்டால், பிறகு ஒருவரை ஒருவர் ஏமாற்றப் பார்ப்பார்கள்!

பலே பெருச்சாளிகள்! எந்த எலிப் பொறியிலும் அகப்படாதவை!

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It