படித்துப் பாருங்களேன்...

Kanakalatha Mukund (1999) The Trading World of The Tamil Merchant (தமிழ் வணிகர்களின் வாணிப உலகம், சோழமண்டலக் கடற்கரையில் வணிக முதலாளித்துவத்தின் பரிணாம வளர்ச்சி) 

இங்கிலாந்தில் நிகழ்ந்த தொழிற்புரட்சியானது அந்நாட்டை மட்டுமின்றி, வேறு பல நாடுகளையும் நிலவுடைமைப் பொருளாதாரத்தில் இருந்து முதலாளித்துவப் பொருளாதாரத்திற்கு அழைத்துச் சென்றது என்பது வரலாறு. முதலாளித்துவப் பொருள் உற்பத்தி முறையானது, யந்திரங்களின் துணையுடன் பெரிய அளவிலான தொழிற்சாலைகளில் நிகழும் உற்பத்தியை மையமாகக் கொண்டது. இம்முறையை மேற்கொள்ள அதற்குத் தேவையான மூலதனம் எவ்வாறு திரட்டப்பட்டது என்று ஆராயும்போது வணிக மூலதனம் என்பது குறித்து அறிய நேரிடுகிறது.

வணிக மூலதனம், தொழில் மூலதனம் ஆக மாறியது என்ற கருத்துடையோரும் இதை ஏற்றுக்கொள்ள மறுப் போரும் உள்ளனர்.

முதலாளித்துவத்தின் மூலதனத் திரட்டலுக்கு வணிக மூலதனம் பயன்பட்டதா இல்லையா என்ற விவாதத்திற்குள் நுழையாமல், தமிழ்நாட்டில் வணிக மூலதனம் உருவாகி வளர்ந்தமை குறித்து முதலில் அறிந்துகொள்வது அவசியமாகிறது.

போர்ச்சுக்கீஸ், டச், பிரெஞ்சு, பிரிட்டிஷ் என அய் ரோப்பியர்கள் வருமுன்பு, சோழமண்டலக் கடற்கரையில் வணிக மூலதனம் உருவாகியிருந்ததா? அல்லது இவர்களது வருகைக்குப் பின் உருவானதா என்ற வினாக்களுக்கு விடைதரும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.

***

இந்நூலின் ஆசிரியர் திருமதி கனகலதா முகுந்த், அய்தராபாத் பொருளாதார மற்றும் சமூக விஞ்ஞான மையத்தில் ஆய்வாளராக இருந்துள்ளார். போபால் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். வாணிப வரலாறு, குறிப்பாகத் துணி வாணிபம் குறித்த ஆய்வில் ஆர்வம் கொண்டவர்.

***

நூலின் தொடக்கத்தில் வணிக மூலதனம் குறித்த அறிமுகமும் விவாதமும் இடம்பெற்றுள்ளன. அடுத்து சங்ககால வாணிபம், நகரம் குறித்த செய்திகள் இடம் பெறுகின்றன. இதனையடுத்து மத்திய காலத்தில் (கி.பி.900) இருந்து பதினெட்டாவது நூற்றாண்டில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்காலம் முடிய (1850) நிகழ்ந்த வாணிப நடவடிக்கைகள் (சிறப்பாகத் துணி வணிகம்) ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதன் சாரத்தை இனிக் காண்போம்.

கோவில்கள்-நகரமயமாதல்-வாணிபவளர்ச்சி (கி.பி.900-1300)

நகரங்களின் வளர்ச்சியும், கோவிலானது சமூக பொருளியல் நிறுவனமாக வளர்ச்சி பெற்றதும் மத்திய காலத்தில் பரவலான மாறுதல்களைத் தோற்றுவித்தன. வேளாண்மையே முக்கிய பொருளியல் நடவடிக்கையாக இருந்தமையால், சமூக உயர்நிலையும், அதிகார அமைப்பு நிலஉரிமையுடனும், நிலத்தை மையமாகக் கொண்டே பிணைக்கப்பட்டிருந்தன.

தென் இந்திய வேளாண்மைப் பொருளாதாரத்தின் அடிப்படை அலகாக நாடு என்பது இருந்தது. பல்லவர் காலத்தில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இரு நிறுவனங்கள் அறிமுகமாயின. முதலாவது நிலக் கொடையின் வாயிலாக உருவான பிரம்மதேயம் என்ற பிராமணக் குடியிருப்புகள், இரண்டாவது கோவில்.

ஏழாவது நூற்றாண்டுக்குப் பின், ஆளுவோரால், பெரிய அளவில் கோவில்கள் உருவாக்கப்பட்டன. இவற்றின் தேவைக்காக, ‘தேவதானம்’ என்ற பெயரில் விளைநிலங்கள் ஆட்சியாளர்களாலும் அவர்களைச் சார்ந்தோராலும் வழங்கப்பட்டன. சமய நிறுவனமாக மட்டுமின்றி, சமூக ஆதிக்கம், பொருளாதார ஆற்றல் ஆகியனவற்றுடன் இணைந்து, சமூக மதிப்புடைய நிறுவனமாகக் கோவில் விளங்கியது. நாட்டின் பொருளியல் வாழ்வில் குறிப்பிடத்தக்க அளவு கோவில் இடம்பெற்றிருந்தது என்று குறிப்பிட்டுவிட்டு;

எண்ணிக்கை அளவிலும், அமைப்பளவிலும் கோவில்கள் மிகுந்தபோது நிலஉரிமை, வேலைவாய்ப்பு, நுகர்வு என்பனவற்றில் அதன் முக்கியத்துவம் அதிகரித்தது என்கிறார்.

கோவில்களின் செயல்பாட்டிற்காக நன்கொடைகள் பெறப்பட்டன. விளக்கெரிப்பதற்காகக் கால்நடைகள் வழங்குவது பரவலாக இருந்தது. கொடையாகப் பெறப் பட்ட கால்நடைகளை ஆயர்களிடம் கொடுத்து, ஒரு குறிப்பிட்ட அளவு நெய்யைக் கோவில்கள் பெற்றன. இது தவிர தங்கமாகவும் பணமாகவும் கோவில்களுக்குக் கொடை வழங்கப்பட்டது. இவ்வாறு பெற்றதைத் தனி நபர்களுக்கும், ஊராட்சி அமைப்புகளுக்கும், வணிகக் குழுக்களுக்கும் கோவில்கள் கடனாகக் கொடுத்தன.

கோவில்களும், பிரம்மதேயங்களும் பரவலானதை அடுத்து சோழநாட்டின் உள்நாட்டுப் பகுதியில் நகரங்கள் விரிவடைந்தன. சோழர் ஆட்சி வீழ்ச்சியுற்ற பின் பாண்டியர் ஆளுகைக்குட்பட்டிருந்த தென்தமிழகத்தில் நகரங்கள் விரிவடைந்தன.

நகரவளர்ச்சியென்பது வாணிபம், வணிக நிறுவனங்கள் ஆகியனவற்றுடன் தொடர்புடையது. மத்தியகாலத் தமிழகத்தில் கோவில்களின் எண்ணிக்கை, நகரங்கள், வாணிப விரிவாக்கம் என்பனவற்றுக்கிடையே நெருக்க மான தொடர்பிருந்தது.

சோழர்காலக் கல்வெட்டுக்களில், நகரம், நகரத்தார் என்று இடம்பெறும் சொற்கள் வணிகத்துடன் தொடர் புடையவை. வணிகர்கள் குழுக்களாகச் செயல்பட்டு உள்ளனர். மூன்று வகையான வணிகக் குழுக்களை சம்பகலட்சுமி குறிப்பிடுகிறார். மணிக்கிராமம் என்பது உள்ளுர் வணிகக் குழு. அய்ந்நூற்றுவர் உள்நாட்டுப் பகுதி வணிகத்துடன் தொடர்புடைய வணிகக் குழு: அஞ்சுவண்ணம் என்பது அயல்நாட்டு வாணிபம் மேற்கொள்ளும் வணிகக்குழு.

***

அரசகுடும்பத்தினர், பெருநிலக்கிழார்கள் படை யதிகாரிகள், வணிகக்குழுக்கள் ஆகியோர் கோவிலுக்கு நன்கொடை வழங்குவோராய் இருந்தனர். இவற்றைச் சுழற்சியில் ஈடுபடுத்தும் நிறுவனமாகக் கோவில் விளங்கியது. போர் வெற்றிகளின் வாயிலாக ஈட்டிய (கொள்ளையடித்த!) பொருளானது கோவில்கள் வழியாகக் கிராமப்புறங்களைச் சென்றடைந்தது. ஸ்பென்சர் என்பவர் தஞ்சாவூர்க் கல்வெட்டுக்களை ஆய்வு செய்து, கொடை வழங்கியதில் படை சார்ந்தவர் களின் பங்களிப்பு 79.3. விழுக்காடு எனவும், கோவிலில் இருந்து கடன் பெற்றவர்களின் 95.4 விழுக்காடு கிராம சபையினர் என்றும் கூறியுள்ளார் என்றாலும் சோழ மண்டலம் முழுமைக்கும் இதைப் பொதுமைப்படுத்திக் கூறிவிட முடியாது.

விசயநகர ஆட்சிக்காலம் (1400-1600)

கி.பி.1500 வாக்கில் தமிழகம் விசயநகசரப் பேரரசின் ஆளுகைக்குட்பட்டது. இக்காலத்தில் தமிழகத்தின் வடபகுதியில் இருந்து தெலுங்கு பேசும் மக்களின் இடப் பெயர்ச்சி நிகழ்ந்தது. பலிஜா (கவரைநாயுடு) கோமுட்டி, போஜீச்செட்டி என்ற தெலுங்கு பேசும் வணிகக்குழுக்கள் இங்குக் குடியேறினர். நாயக்க மன்னர்கள் தமிழ் நாட்டுக் கோவில் நிர்வாகத்திலும், அவற்றின் சொத்துக்களிலும் ஆதிக்கம் செலுத்தலாயினர்.

இக்காலத்தில் வணிகம் விரிவடைந்தது. கை வினை ஞர்கள், நெசவாளர்கள் மீதான வரியைக் குறைத்தும் சமூக உயர்வைத் தரும் சலுகைகளை வழங்கியும் அவர்களை ஊக்கப்படுத்தினர். உள்ளூர்ப் பேட்டைகளிலும் சந்தை களிலும், கோவில் பயன்பாட்டிற்காக வாங்கப்படும் பொருட்களுக்கும் வரிச்சலுகை வழங்கினர். குறிப்பிட்ட காலம் வரை வரி செலுத்தாது பயன்படுத்திக்கொள்ள, குடியிருப்பு மனைகளை சர்வ மானியமாக வழங்கியும் புதிய குடியிருப்புகளை அமைத்துக் கொடுத்தும் ஊக்கப் படுத்தினர்.

அயல் இனத்தவர் என்ற எதிர்மறையான அடை யாளத்தைப் போக்கிக் கொள்ளவும் சமூக அடையாளத்தைப் பெறவும் தெலுங்கு மொழி பேசும் வணிகர்கள் தாம் வாழும் வட்டாரத்தின் கோவில்களுடன் இணைந்து கொண்டனர்.

வணிக முதலாளிகள் (1600-1670)

பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தின் பெரும்பகுதி மதுரை, தஞ்சை, செஞ்சி நாயக்கர்களின் ஆட்சிக்குள் இருந்தது. இக்காலத்தில் போர்ச்சுக்கீஸ், டச், டேனிஷ், ஆங்கில நாட்டினர் இப் பகுதிகளில் குறிப்பாகக் கடற்கரைப் பகுதிகளில் வாணிப நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். இப்பகுதியில் கிட்டும் பல்வேறு வகையான துணிகள் முக்கிய வாணிபப் பொருளாக அமைந்தன.

தமிழ்நாட்டு வாணிகத்தில் அய்ரோப்பியர் நுழைந்த வுடன் அவர்களுக்கும் ஆளுவோருக்கும் இடையில் உள்ளூர் வணிகர்கள் இணைப்பாகச் செயல்படலாயினர். இக்காலம் தொடங்கி, பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி வரை, வணிகத்தில் ஆதிக்கம் செலுத்திவந்த செல்வாக்கு மிக்க வணிகர்கள் சிலர் அய்ரோப்பியர்களிடம் நெருக்க மானவர்களாக இருந்தனர்.

இவர்கள் பெரிய அளவிலான ஏற்றுமதி வணிகர் களாகவும், சொந்தமாகக் கப்பல்களை உடையவர் களாகவும் இருந்தனர். தென்கிழக்கு ஆசியத் துறைமுகங் களுடன் வாணிபம் நிகழ்த்தி வந்த இவர்கள் சோழ மண்டலக் கடற்கரையின் துறைமுகங்களுடன் நெருக்க மான பிணைப்பைக் கொண்டிருந்தனர். துறைமுகப் பகுதி களில் இருந்து உள்நாட்டுப் பகுதிவரை இவர்களுக்குச் செல்வாக்கிருந்தது. தம் வாணிப ஆதாயத்தாலும் செல்வ நிலையாலும் வட்டார ஆட்சியாளர்களுடன் நெருக்க மான தொடர்புடையவர்களாக விளங்கினர். நகரப் பகுதிகளில் தலைவர்கள் போன்ற நிலையில் இருந்தனர்.

அய்ரோப்பியரின் வருகைக்குப்பின் துணிகளையும் பிற ஏற்றுமதிப் பொருட்களையும் சேகரிக்கவும், இறக்குமதிப் பொருட்களை விற்கவும் வட்டார ஆட்சியாளர்களுக்கும் அய்ரோப்பிய வணிகர்களுக்கும் இடையிலான முக்கிய இணைப்பாளர்களாக இவர்கள் செயல்பட்டனர். வணிக முதலாளிகளாகத் திகழ்ந்த இவர்கள் இரு நூற்றாண்டுக் காலம் சோழமண்டலக் கடற்கரையின், பொருளியலிலும், சமூகத்திலும் அதிகாரம் செலுத்துபவர்களாக இருந்தார்கள். சான்றாக சில வணிக முதலாளிகளைக் குறிப்பிடலாம்.

மல்லையாசெட்டி

1608இல் டச்சுக்காரர்களின் மொழிபெயர்ப் பாளராகவும் அவர்களுடன் வாணிப உறவு கொண்ட வராகவும் இவர் அறிமுகமானார். 1634இல் இவர் இறக்கும் வரை டச்சுக்காரர்களுடனான வாணிப உறவு நீடித்தது. பழவேற்காடு பகுதியில் வாழ்ந்தாலும் அவரது சகோதரர்கள், சகோதரர்மகன் ஆகியோரின் நிர்வாகத்தில் கடற்கரைப் பகுதி முழுமையும் அவரது வாணிபம் நடந்தது. 1624இல் தொழிற்சாலையன்றைக் காரைக்காலில் அமைக்க ஆங்கிலேயர் திட்டமிட்ட போது டச் நாட்டின் பாட்வியா நகரில் இருந்து வந்த அறிவுறுத்தலில், மல்லையாச் செட்டியைப் புகழ்ந்து குறிப்பிடப்பட்டுள்ளது. இவருக்கு உரிமையாகக் கப்பல்கள் பல இருந்தன. கடலூருக்கு அருகிலுள்ள தேவனாம்பட்டினத்தில் கட்டப்பட்டிருந்த இவரது வெள்ளை நிற வீடு, பல மைல் தொலைவில் கடலிலிருந்து பார்த்தால் தெரியும் அளவுக்கு சிதம்பரம் கோவில் கோபுரங்கள் போல் ஓர் அடையாளமாக விளங்கியது. இந்நகரின் ஆளுநரின் குறிப்புகளில் இவர் இடம் பெற்றுள்ளார். கடல் கடந்த நாடுகளுடன் இவரது வாணிபம் நிகழ்ந்தது. ஆங்கிலேயர்களுடன் வாணிபம் செய்ததுடன், அவர்களுக்குக் கடனும் கொடுத்தார்.

சாந்தோம், பழவேற்காடு ஆகிய துறைமுகங்களின் வரிகளைக் குத்தகையாய் எடுத்தார். போர்ச்சுக்கீசியரின் முக்கிய துறைமுகமாக விளங்கிய சாந்தோம் வாயிலாக வாணிபம் செய்வதில் டச்சுக்காரர்களுக்கு இது உதவியாய் அமைந்தது. தரங்கம்பாடிக் கோட்டையைப் பாது காக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அதற்குப் பதிலாக தரங்கம்பாடியின் வருவாயை டேனசியர்களிடமிருந்து மல்லையாச்செட்டி பெற்றுக்கொண்டார். டச்சுக்காரர் களைவிடக் குறைந்த விலையில் துணிகளை ஆங்கிலேயருக்கு விற்பனை செய்தார். இது டச்சுக்காரரின் வாணிபத்தைப் பாதித்தது.           

இவ்வாறு தமது வாணிப ஆதாயத்திற்கேற்ப, தமது நெருக்கத்தை ஆங்கிலேயர், டச்சுக்காரர் என்ற இரு தரப்பினருக்கும் இடையே அவ்வப்போது மாற்றி யமைத்துக் கொள்வதில் இவர் வல்லவராயிருந்தார்.

சின்னண்ணா

மல்லையா செட்டியின் சகோதரரான இவர் 1630 தொடங்கி, 1640 வரை டச் நாட்டினரின் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தினார். டச்சுக்காரரின் வாணிபத் தரகராகச் செயல்பட்டதுடன், கப்பல் உரிமையாளராகவும், ஏற்றுமதியாளராகவும் விளங்கினார். தன் உடன்பிறப்பான மல்லையாவை விடப் பெரும் வணிகராக விளங்கினார்.

ஒரு கட்டத்தில் பண நெருக்கடிக்கு ஆளாகி, தேவனாம் பட்டினத்தை டச்சுக்காரர்களிடம் ஒப்படைத்துவிட்டு, அவர்கள் பாதுகாப்பில் வாழலானார்.

பேரிதிம்மண்ணா

ஆங்கிலேயர்களுடனான இந்திய வணிகர்களின் உறவானது, முகவர்கள் அல்லது துபாஷிகள் (மொழி பெயர்ப்பாளர்கள்) என்பதாக இருந்தது. திம்மண்ணா ஆங்கில மொழிபெயர்ப்பாளராக மட்டுமின்றிப் பெரு வணிகராகவும் விளங்கினார். சென்னகேசவ பெருமாள் கோவில், சென்னமல்லிகேஸ்வரர் கோவில் என்ற இரு கோவில்களைச் சென்னையில் கட்டினார்.

தம் சமூகத் தகுதியை நிலைநாட்டும் வழிமுறையாகக் கோவில்களைக்கட்டுவதும், அதன் நிர்வாகத்தையும், நிதியையும் தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வதும் பெருவணிகர்களின் வழக்கமாயிருந்தது. அவர்களுடைய பொருளியல் வளர்ச்சி, சமூகத் தலைமைக்கான கருவியாக அமைந்தது.

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் துணி வணிகத்தில், திம்மண்ணாவும் அவரது வியாபாரக் கூட்டாளி காசிவீரண்ணாவும் முக்கிய பங்கு வகித்தனர். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்குக் கடனும் கொடுத்தனர். ‘ஆற்றல் மிக்க கறுப்பு வேலையாள்’ என்று கம்பெனியின் ஆவணங்கள் இவரைக் குறிப்பிடுகின்றன.

***

காசி விரண்ணா, வெங்கடாத்திரி சகோதரர்கள், சிக்க செரப்பா, சுங்கு ராமசெட்டி, தம்புச் செட்டி, லிங்கிச் செட்டி என்போர் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி யுடனான துணிவணிகத்தில் முக்கிய பங்கு வகித்தனர்.

சமூக வர்க்கமாக வணிகமுதலாளிகள்

பதினேழு பதினெட்டாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சமூகமானது சாதிகளையும் சாதிப்பிரிவினைகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. இச்சாதிகள் இருபெரும் பிரிவுகளாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டன. வலங்கை என்ற பிரிவின் கீழ்ச் சில சாதிகளும் இடங்கை என்ற பிரிவின் கீழ்ச் சில சாதிகளும் இடம்பெற்றிருந்தன. கிராமப்புறங்களில் நிலஉடைமையாளர்களும், வேளாண் தொழிலாளர்களும் வலங்கைப் பிரிவிலும், கம்மாளர் நெசவாளர் போன்ற கைவினைஞர்கள் இடங்கைப் பிரிவிலும் இடம்பெற்றிருந்தனர். வாணிபத் தலமான நகரங்களில் வாழ்ந்த வணிகர்கள், வலங்கை, இடங்கை என்ற இரு பிரிவுகளிலும் இடம்பெற்றிருந்தனர். கோமுட்டிகள், பலிஜர் (துவரை), வெள்ளாளர் (முதலியார், பிள்ளை) பிரிவில் இருந்து வணிகர்களானோர், வலங்கைப் பிரிவில் இருந்தனர். போஜீச்செட்டியார்கள் இடங்கைப் பிரிவில் ஆதிக்கம் செலுத்தினர். நகரத்தார் என்ற நாட்டுக் கோட்டைச் செட்டியார்களும் இடங்கைப் பிரிவினரா யிருந்தனர். ஆனால் 1750 வரை சென்னை, புதுச்சேரி மற்றும் முக்கிய நகரங்களில் குறிப்பிட்டுச் சொல்லு மளவுக்கு இவர்கள் இல்லை.

இக்காலத்தில் சமூக உயர்மதிப்பென்பது பல குறியீடுகளால் தீர்மானிக்கப்பட்டது. இவற்றுள் முக்கியமான ஒன்றாக ‘இடம்’ அமைந்தது.

திருமணம் அல்லது இறப்பு ஊர்வலங்களை, வாத்தியங்கள், நடனமாடும் பெண்களின் துணையுடன் தெருக்களில் வலங்கையர் நடத்திவந்தனர். இது இடங்கைப் பிரிவினருக்கு மறுக்கப்பட்ட நிலையில் இதை மையமாகக் கொண்டு இரு பிரிவினருக்குமிடையே மோதல்கள் உருவாயின.

பொருள்வளம், அதிகாரம் என்பனவற்றால் வணிக முதலாளிகள் தம் சுயசாதியினரால் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர். இதனால் இவர்களை மையமாகக் கொண்டு மோதல்கள் நிகழ்ந்தன. 1652-53இல் மல்லையாசெட்டி குடும்பத்தைச் சேர்ந்த, கோனேரி செட்டி, பேரிசெட்டி என்பவரால் அவமதிக்கப்பட்டதாகக் கூறி சென்னை நகரில் கலகத்தைத் தூண்டினார். இவர் களால் தூண்டப்பட்ட வலங்கைப் பிரிவினர் ஆயுதமேந்தி இடங்கைப் பிரிவினரையும் அவர்களது வீடுகளையும் தாக்கினர். சென்னையின் முத்தியாலுப்பேட்டை இடங்கையரின் கட்டுப்பாட்டுக்குரியதாகவும், பெத்த நாயக்கன்பேட்டை வலங்கையரின் கட்டுப்பாட்டுக் குரியதாகவும் விளங்கின. ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியிடம் வாங்கிய ஆயிரம் பக்கோடாக்கள் கடனைத் திருப்பித் தரவேண்டியதைத் திசை திருப்பும் வகையில் முக்கிய வணிகர்கள் இக்கலகத்தை உருவாக்கினர் என்பது ஜார்ஜ்கோட்டையின் முகவராயிருந்த ஆரோன் பேக்கர் என்பவரது கருத்தாகும்.

1707-1708 இல் நிகழ்ந்த சாதிப் பிரச்சினையிலும், பெருவணிகர்களின் தூண்டுதல் இருந்ததாக ஆளுநர் பிட் கருதியுள்ளார். 1750இல் தம்புச் செட்டியின் சகோதரரான தௌசிங்க செட்டி, சென்னை கச்சாலீஸ்வரர் கோவிலுக்கு வலங்கையர் வாழும் தெருக்களின் வழியாகப் பல்லக்கில் சென்றபோது கலகம் நடக்கும் சூழல் உருவானது. இடங்கை சாதியினர் முழுமையாக இவருக்கு ஆதரவாக நின்றனர். இதைத் தனிப்பட்டவரின் கௌரவமாகப் பார்க்காமல், மொத்த சமூகத்தின் கௌரவப் பிரச்சினை யாகப் பார்த்தனர். கடலூரின் முன்னணி வணிகர்களில ஒருவரான அரசப்ப செட்டியார் என்பவரது மகள் திருமண ஊர்வலம் தொடர்பாக 1740இல் கலவரம் நடந்தது. இதில் அருணாசலம் பிள்ளை என்பவரது மனைவி இறந்து போனார். வெங்கடாசலம் என்ற துபாஷி பறையர் சமூகத்தினருடன் நகரை விட்டு வெளியேறினார். ‘ஓர் ஊரைவிட்டு வெளியேறுவதென்பது இப்பகுதியின் வெகுசன எதிர்ப்பின் ஓர் வடிவமாகும்’. அவர் சார்ந்திருந்த சமூகப்பிரிவினர் அவருக்கு ஆதரவாக நின்றதால் அவர் ஆங்கிலக் கிழ்க்கிந்தியக் கம்பெனியாரால் தண்டிக்கப்பட வில்லை.

கோவில்கள் கட்டியும் அக்கிரகாரங்கள் அமைத்தும் சமுதாயத்தில் தங்கள் சமூக உயர்மதிப்பை வணிகர்கள் நிலைநிறுத்திக் கொண்டனர். துபாஷியாகவும் வணிகராகவும் விளங்கிய ஆனந்தரங்கப் பிள்ளை தம் தந்தை திருவேங்கடம் பிள்ளையின் பெயரில் பிராமணக் குடியிருப்பு ஒன்றை நிறுவினார். சுங்கு வெங்கடாசலம் செட்டி சென்னை சிந்தாரிப்பேட்டைப் பகுதியில் சுங்குவார் அக்கிரகாரம் ஒன்றை நிறுவினார். குறுநில மன்னர்களைப் போல் வணிகர்களைப் பாட்டுடைத் தலைவர்களாகக் கொண்டு சிற்றிலக்கியங்கள், தமிழ், தெலுங்கு, வடமொழி ஆகிய மொழிகளில் உருவாயின.           

இவ்வாறு தம் வாணிப ஆதாயத்தால் சமூக உயர்மதிப்பை வணிகர்கள் தேடிக் கொண்டாலும் காலனியம் மற்றும் தொழில் முதலாளித்துவமானது அவர்களது பொருளாதார வலுவைச் சிதைத்தது.

***

காலனிய ஆட்சியின் போது அய்ரோப்பிய ஆட்சியர் மற்றும் வணிக நிறுவன அதிகாரிகள் ஆகியோரின் துபாஷிகளாகவும், வாணிப முகவர்களாகவும் விளங்கியும் பெரிய அளவிலான முதலீட்டில் வாணிபம் செய்தும் வணிக முதலாளிகள் என்போர் உருப்பெற்ற வரலாற்றை இந்நூல் அறிமுகம் செய்துள்ளது.

சமூக உயர்மதிப்பை ஏற்கனவே பெற்றிருந்த நில வுடைமையாளர்களுக்கு நிகரான சமூக உயர்மதிப்பை வணிக முதலாளிகள் அடைந்ததையும், அதன் பொருட்டு அவர்கள் மேற்கொண்ட வழிமுறைகளையும் இந்நூல் பதிவு செய்துள்ளது.

வலங்கை, இடங்கை, என்ற சாதிப்பிரிவுகளைச் சார்ந்து தம்முள் முரண்பட்டு நின்றாலும், காலனிய வாணிப நலனுடன் மோதும் சூழ்நிலைகளில் ஒன்று பட்டு நின்றதையும் ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். வாணிப முதலாளித்துவம், தொழில் முதலாளித்துவமாக மாறத்தவறியது தொடர்பான செய்திகளுக்குள் இவர் புகவில்லை.

Pin It