“நான் தமிழைப் பள்ளியில் முறையாகப் பயிலவில்லை; என் மனைவிக்கு ஒரு காதல் கடிதம் கூட எழுதியதில்லை. நான் எப்படித் தமிழில் எழுதுவேன்”

என்று தன் அறிவு ஏக்கத்தை வெளிப்படுத்திய பெ.நா.அப்புசுவாமி அவர்கள், தன் எழுத்து வாழ்க்கையில் எழுதிக் குவித்தவை ஏராளம். தான் எழுதிய கட்டுரைகள் ஐயாயிரம் இருக்கும் என்று பெ.நா.அப்புசுவாமியே கணக்கிட்டுக் கூறியுள்ளார். இது விந்தையிலும் விந்தை. இதை எப்படி அவரால் சாதிக்க முடிந்தது?

எழுத வேண்டுமென்ற உந்துதலும், தன் எழுத்துகளால் மக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வை ஊட்ட வேண்டும் என்ற வேகமும், அறிவியலைச் சாதாரண மனிதனுக்கும் கொண்டுசேர்க்க வேண்டுமென்ற அசையா முயற்சியுமே இச்சாதனைக்குக் காரணங்கள்.

appuswamy 450ஓர் ஆத்திகக் குடும்பத்தில் பிறந்து ஆன்மீகத்தை விடவும் அறிவியலையே கூடுதலாக நம்பிய ஓர் அற்புத மனிதர் அவர். “தமிழ் மக்களிடையே தமிழ் மொழியின் மூலமாக மேற்கே மெத்த வளர்ந்து வரும் நவீன விஞ்ஞான அறிவைப் பரப்பிவந்தால் தமிழ் மக்கள் முன்னேறுவார்கள்; தமிழ்நாடும் சிறப்படையும்” என்ற எண்ணத்திற்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டார்.

வாழ்வுயர வளர்தமிழில் அறிவியல்

அறிவியல் ஒன்றுதான் மனித வாழ்வை உயர்த்தும்; மேம்படச் செய்யும். இவ் அறிவியல் அறிவைப் பெற வேண்டுமென்றால் மூட நம்பிக்கையை முற்றிலும் நீக்கியாக வேண்டும் என்பதில் தளராத நம்பிக்கை அவருக்கு இருந்தது. அந்த நம்பிக்கையிலேயே அவர் வாழ்ந்தார். தன் வாழ்க்கை நடைமுறையையும் அவ்வாறே அமைத்துக்கொண்டார். ஆர்ப்பாட்டமில்லாத ஆரவாரமில்லாத, அறிவியல்பூர்வமான சிந்தனை அவருக்கு இருந்ததால்தான் உண்மையாகவும், நிலையாகவும், முழுமையாகவும் இத்தமிழ் இனத்தைப் பற்றி அவரால் சிந்திக்க முடிந்தது. மக்கள் தம் வாழ்வில் முன்னேற வேண்டுமென்றால், மேலை நாட்டு அறிவியல் கருத்தாக்கங்களையும், கருவிகளையும் பயன்கொண்டால் மட்டும் போதாது; உண்மையான அறிவியல் மனநிலையை, அறிவியல் விழிப்புணர்வைப் பெற்றாக வேண்டும். அவ்வாறு பெறும்போது தான் வாழ்வு செம்மை பெறும்; நாடு செழிக்கும். இதனை அவரே,

“மக்கள் அறிவியலைக் கற்று, அறிவியல் மனநிலையைப் பெற்று, அதற்கிணங்க நடந்துவந்தால் அவர்கள் செம்மைப்பண்பு உடையவர்கள் ஆவார்கள்; நாடு செழித்து மேன்மை பெறும்”

என்று கூறுவதையும் நாம் சிந்தித்துப் பார்க்கலாம்.

அறிவியல் கட்டுரை எழுத ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

இவர் நவீன அறிவியலைத் தமிழில் எழுத ஆர்வம் ஏற்படக் காரணம் என்ன என்பதை அவர் மகள் திருமதி அம்மணி சுப்பிரமணியம் விளக்குகிறார். “அந்நாட்களில், சனிக்கிழமை பிற்பகல்தோறும் எங்கள் மயிலைச் சித்திரக்குள இல்லத்தில் திருவாளர்கள் டி.கே.சி., ராஜாஜி, கல்கி, பி.ஸ்ரீ., எஸ்.வையாபுரிப் பிள்ளை, டி.எல்.வெங்கட்ராமய்யர், வாஸன், ஏ.என்.சிவராமன், கி.வா.ஜ., ஆர்.நாராயணஸ்வாமி ஐயர், கி.சந்திரசேகரன், கி.பாலசுப்பிரமணிய அய்யர், மு.ராகவஅய்யங்கார், அ.ராகவய்யங்கார், சீனிவாசய்யங்கார், அ.சீனிவாசராகவன், ரா.பி.சேதுப்பிள்ளை, ஆர்.வி.சாஸ்திரி, கி.ப.ராஜன் மற்றும் பல அறிஞர்கள், தமிழார்வம் கொண்ட நண்பர்கள் தமிழ் இலக்கியங்கள், தமிழ் மொழி வளர்ச்சி இவற்றைப் பற்றிய கருத்துகளைப் பரிமாறிக்கொள்வது வழக்கம். இப்பேர்ப்பட்ட சூழ்நிலையில்தான் ‘கலைமகள்’ பத்திரிகை திரு.ஆர்.நாராயண ஸ்வாமி ஐயரால் தொடங்கப்பெற்று அதற்கு என் தந்தை முதற் பதிப்பாசிரியராகச் சில ஆண்டுகள் பணிபுரிந்தார். அதில் என் தந்தையின் அறிவியல் கட்டுரைகளும் வெளிவந்தன. அவ்வமயம் அநேகர் இவரைப்பற்றி ‘அறிவியலிலும் தமிழிலும் இவ்வளவு ஆர்வமுள்ளவர், எவ்விதம் வக்கீல் தொழிலை மேற்கொண்டார் என்று வியந்ததுண்டு.

அவர் கல்லூரியில் சமஸ்கிருத மொழியைப் பயின்றாலும், தமிழ் மொழிப் பற்றால் பின்னர்த் தமிழ்மொழியை நன்கு கற்றறிந்தார். எங்களின் குடும்ப நண்பர் திரு.வையாபுரிப்பிள்ளையும் என் தந்தையும் தினசரி இரவில் தமிழ் இலக்கியங் களையும், ஏடுகளையும் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்த ஏற்பாட்டிற்காகவே அவர்கள் சொந்தவீடு கட்டும் போது சென்னை அடையாற்றில் அருகருகே நிலம் வாங்கி வீடு கட்டினர். அவருடைய ஆங்கில அறிவும், தமிழ் மொழிப் பற்றுமே பல மொழிபெயர்ப்புகளைச் செய்யத் தூண்டின. சமஸ்கிருதம், ஆங்கிலம், தமிழ் மூன்றிலும் நன்கு புலமை வாய்ந்த அவர் அந்தந்த மொழியில் உள்ள சில சிறப்பான கவிதைகள், நூல்களை மொழிபெயர்த்து அவற்றின் தனிப் பட்ட சிறப்பை மற்றவர்களும் அறிந்து பாராட்ட வாய்ப்பளிக்க வேண்டும் என விரும்புவார்” என்று கூறுகிறார்.

அப்புசுவாமி தம் தாய்மொழியாகிய தமிழை முறையாகப் பயிலாவிட்டாலும், காலப்போக்கில் அதில் பயிற்சி பெற்று, அறிவியல் செய்திகளை அனைவரும் புரிந்துகொள்ளும் நடையில் தெளிவாக எழுதினார். அவரது நூற்றுக்கணக்கான அறிவியல் கட்டுரைகளும், நூல்களும், அறிவியல் தமிழ் வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்துள்ளன. 1917இல் தொடங்கிய தமிழ் நேசன், 1932இல் தொடங்கிய கலைமகள், 1965 முதல் வெளிவரத் தொடங்கிய இளம் விஞ்ஞானி முதலிய இதழ்கள் இவரது பல துறைசார் அறிவியல் கட்டுரைகளை வெளியிட்டன. குழந்தைகளும் அறிவியல் அறிவு பெற்றுத் திகழ வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் மனத்தில் பதியும் வண்ணம் அறிவியல் கண்டுபிடிப்புகள், அவற்றின் பயன்கள், அறிவியல் அறிஞர்கள், அறிவியல் கருவிகள், அறிவியல் வளர்ச்சி எனப் பல பொருள் பற்றிப் பல கட்டுரைகளையும், சில நூல்களையும் வெளியிட்டார். இவர் தன்னுடைய பெயரைத் தவிர பேனா, பேராசிரியர், முத்தண்ணா என்ற புனைப் பெயர்களிலும் கட்டுரைகள் எழுதுவதுண்டு.

அறிவியலைத் தமிழ் வழிப் பரப்புதல், அறிவியல் துறையில் தமிழை வளர்த்தல் என்ற இரண்டையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார். தமிழில் அறிவியல் கருத்துகளை வெளியிட்டு மொழியையும், அறிவியல் அறிவையும் வளர்க்க வேண்டும் என்றார்.

“விஞ்ஞானம் என்பது புதிதாகத் தமிழ்நாட்டில் மலர்ந்த துறையாதலால் விஞ்ஞானக் கருத்துகளை வெளியிடவும், விஞ்ஞான அறிவைப் புகட்டவும் போதிய சொற்கள் தமிழில் முன்னால் இல்லை. அண்மையில் பல சொற்கள் படைக்கப்பட்டுள்ளன” என்று எழுதினார். இக்கட்டுரை 1976இல் வெளிவந்தது.

“விஞ்ஞானம் என்றால் சிறந்த அறிவு என்று பொருள். அவ்வாறு வழங்கி வந்த சொல்லுக்கு ஈடாக இந்நாளில் ‘அறிவியல்’ என்னும் சொல் வழங்கப்பட்டு வருகிறது’’ என்று குறிப்பார். விஞ்ஞானத்துக்கு நிகரான அறிவியல் என்ற சொல் 1920களில் வந்ததாகத் தெரிகிறது. என்றாலும் இச்சொல் தமிழியக்கம் முனைப்புடன் செயல்பட்ட காலத்தில் (1930-40) பெரு வழக்கில் இடம்பெற்றது எனலாம். விஞ்ஞானம் புதியது என்பதில் கருத்து வேறுபாடு உண்டு. தமிழர் பண்டு தொட்டுத் தமது மண் சார்ந்த வாழ்க்கை சார்ந்த அறிவியல் தொழில்நுட்பத்தை வளர்த்து வந்தனர். கணிதம், வேளாண்மை, கட்டடக்கலை, மருத்துவம், படகுத் தொழில் எனப் பல துறைகளில் அவர்களது செயல்பாடு இருந்து வந்தது. இதை எடுத்துக்காட்டும் வகையில் எண்ணற்ற கலைச்சொற்களையும் உருவாக்கி யுள்ளனர். ஆனால் அப்புசுவாமி கருதுவதும், எழுதுவதும் மேலைத்தேய தொடர்பால் ஏற்பட்ட நவீன விஞ்ஞான அறிமுகமும் வளர்ச்சியுமாகும். அந்த விஞ்ஞானத்தைத் தமிழில், தமிழ் மக்கள் பயனுறும் வண்ணம் தர வேண்டும் என்கிற தளராத வேட்கையால் அவர்தம் வாழ்நாள் முழுதும் பாடுபட்டார். நவீன விஞ்ஞானத்தைச் சொல்லும்போது, அதற்கான கலைச்சொற்கள் தேவை என்பதை உணர்ந்தார். அவ்வகைக் கலைச்சொற்களை உருவாக்குவதோடு பிறமொழிக் கலைச்சொற்களையும் எடுத்தாளத் தயங்கக்கூடாது என்பார்.

“நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இலக்கணப் பற்று போன்ற மனநிலைகளால் அறிவியல் சொல்லாக்கம் நேர் வழியில் செல்லவில்லை என்பது என் கருத்து”

என்றும்,

“பிறமொழிச் சொற்களை ஏற்பதால் தமிழின் சீர்மை குன்றிவிடாது”

என்றும்,

“உலக மொழிகள் பலவும் தத்தம் மொழி மரபுக்கேற்ப சிற்சில மாறுதல்களோடு பிறமொழிச் சொற்களை ஏற்று வழங்கி வருகின்றன”

என்றும் தெளிவுபடுத்துவார். கலைச்சொற்கள் மட்டுமின்றிப் பல பண்பாட்டுச் சொற்களும் பண்டு முதல் தமிழில் கடன் பெறப்பட்டு வந்துள்ளதை, ‘மொழித்துறை பண்டமாற்று’ என்ற சொல்லால் குறிப்பிடுவார்.

இன்றும்கூட தமிழில் தக்க கலைச்சொல் உருவாகவில்லை எனில் பிறமொழிக் கலைச் சொற்களைக் கடன் பெற்றுப் பயன்படுத்துவதில் தவறில்லை என்கிற கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதைக் கவனத்தில் கொண்டால் அப்புசுவாமியின் கருத்து அறிவியல் தன்மையானதே என்பதை உணர முடியும்.

பிறமொழிகளிலிருந்து பெறப்படும் சொற்கள் மக்கள் வழக்கில் ஒன்றிக் கலந்தாலன்றி, அவற்றுக்கு வாழ்வில்லை என்பதை, “எவ்வகைச் சொற்களும் மக்களிடையே பயின்று வந்தாலன்றி அவை மொழியில் நிலைநிற்க மாட்டா… ஆகவே, அவைகளை எல்லாம் நிரம்ப வழங்கி, நூல்களை எழுதி, மக்களுக்குத் தாம் தாமாக அளித்து வரவேண்டும். மக்களும் ஆவலோடு அவற்றை விரும்பிப் படிக்குமாறு தூண்டப்பட வேண்டும். ஆதாரமே இல்லாத மூடநம்பிக்கைகள் அழிந்தாலன்றி, புதிய நல்லறிவுக்கு இடமே இல்லை. அறிவு வளர்ந்தால் மடமை நீங்கிவிடும். அறிவு மணம் எங்கும் பரவும்” என்று கூறுவார். தமிழில் சொல்லில்லையே என்பதைக் காரணம் காட்டி அறிவியல் அறிவு பரப்புதலை நிறுத்திவிடக்கூடாது என்கிற ஆவல் இவ்வரிகளில் இழையோடக் காணலாம். ஒரு கருத்தமைவை (Concept) மக்கள் மனத்தில் பதியும்படி கூறினால் அக்கருத்தமைவும் அதற்கான கலைச்சொல்லும் பதியும். இன்று பல கலைச் சொற்களும் அவற்றுக்கான கருத்தமைவும் பரவலாக வழக்கில் இருக்கக் காரணம் அவற்றின் பயிற்சியும் பழக்கமும்தான்.

அறிவியல் விழிப்புணர்வு பெற்று அறிவியல் மனநிலை பெறுதல் வேண்டும் என்பதை வலியுறுத்தும் அப்புசுவாமி இந்த நிலை எய்தத் தமிழ் வழி அறிவியலைக் கற்க வேண்டும் என்பதை வற்புறுத்துவார். மாணவர்கள் மட்டு மின்றி அவர்தம் பெற்றோரும் எளிய விஞ்ஞான நூற்களை – நமது தாய் மொழியில் எழுதப்பட்ட நூல்களை விரும்பிக் கற்க வேண்டும் என்பார். படிப்பது ஒரு பக்கம் என்றால், பேருரைகள் மூலம் கேட்டுப் பலன் பெறுவது மறுபக்கம் என்பார். நூல்கள் மட்டுமன்றி, இதழ்களும் இதில் நல்லதொரு பங்காற்ற வேண்டும் என்னும் அப்புசுவாமி அதைச் செயல்படுத்தியும் காட்டினார்.

பகுத்தறிவாளர் அப்புசுவாமி

தனது முதல் கட்டுரையில் “செவ்வாயில் உயிர் இருப்பதாகக் கருதுகின்றனர். நம்மைப் போன்ற உயர்ந்த உயிர் இருக்கிறதென்பதும், நம்முன் யாரேனும் ஒரு மதத்தைச் சார்ந்தவர் தம் மதத்தினரே கடவுளின் கருணைக்குரியவரென்பதும் எவ்வளவு மதியீனம்! செவ்வாயிலுள்ளோர் எம்மதத்தினர்? அவர் கடவுளை அறிந்துளரோ? அவர் உண்டானது எப்பொழுது? பூமியிலிருக்கும் நாம் ஒரே சிருஷ்டிக்குட்பட்டும், ஜாதி மத வர்ணங்களால் பேதமடைந்தும் நாம் அனைவரும் பூமியோரே என்பதை மறந்து, சிறிய நாடுகளுக்கே உரிமை பாராட்டி, தன்னலங்கருதி ஒருவரோடொருவர் சச்சரவு செய்து வருவது அவருக்குத் தெரியுமோ?” எனப் பகுத்தறிவுச் சிந்தனைகளை அடுக்கிச் செல்கிறார்.

அப்புசுவாமி குறித்த தொ.மு.சி.ரகுநாதன் பார்வை

புகழ்பெற்ற எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், பெ.நா.அப்புசுவாமியின் நண்பருமான தொ.மு.சி.ரகுநாதன், அப்புசுவாமி அவர்களுக்கு எப்படி அறிவியலைத் தமிழில் எழுத நாட்டம் ஏற்பட்டது என்பதைக் கூறும்போது,

“அப்புஸ்வாமி அவர்களுக்கு இந்த விஞ்ஞானத் தேட்டமும் நாட்டமும் அவரது இறுதிக்காலம் வரையில் இருந்தன என்பதற்குப் பின்னரும் கூட அவர் நான் பணியாற்றி வந்த சென்னை சோவியத் செய்தித்துறை அலுவலகத்துக்கு அடிக்கடி வருவதை வழக்க மாக்கிக் கொண்டிருந்தார். அங்கு வந்து சோவியத் செய்தித்துறை மற்றும் கண்டுபிடிப்புகளைப் பற்றிய வெளியீடுகளையும், பிற விஞ்ஞான நூல்களையும் பெற்றுச் செல்வார். அப்போது விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட கலைச்சொற்களின் தமிழாக்கம் குறித்தும் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த நாங்கள் அவரோடு விவாதித்ததுண்டு. அந்த வயதிலும் கூட அவர் டீக்காக சூட்டும், கோட்டும், டையும் அணிந்துதான் வருவார். அவரை முதியவர் என்றே கருதத் தோன்றாது. ஏனெனில் அந்த வயதிலும் அவர் திடகாத்திரத்தோடும், நல்ல ஆரோக்கியத்தோடும் அத்துடன் மிகுந்த சுறுசுறுப்பும் அபாரமான நினைவாற்றலும் கொண்டவராகவே விளங்கினார். இதனால் வயதில் அவரைவிட இளையவர்களாகவிருந்த எங்களுக்கெல்லாம் அவர் மீது பொறாமையுணர்ச்சிதான் ஏற்படும். அந்த அளவுக்கு அவருக்கு விஞ்ஞானத் தேட்டத்தின், நாட்டத்தின் காரணமாகத்தான் அவர் தமது இறுதிக்காலம் வரையில் நாத்திகராக இருந்தார் என்றும், நாத்திகராக இருந்த காரணமாகத்தான் இந்த விஞ்ஞானத் தேட்டமும், நாட்டமும் அவருக்கு இருந்தன என்றும் எனக்குத் தோன்றிற்று” என்று தொ.மு.சி.ரகுநாதன், பெ.நா.அப்புசுவாமியைப் பற்றி நினைவுகூர்ந்துள்ளார்.

இறுதி மூச்சு வரை எழுத்துப்பணி

அறிவியல் தொடர்பான புத்தகங்களைத் தனித்தும், ஜெ.பி.மாணிக்கம் போன்றோருடன் இணைந்தும் எழுதினாலும் கூட, இதழ்களில் கட்டுரைகளாக எழுதுவதன் மூலம் பரவலான வாசகர் கூட்டத்தைச் சென்றடைய முடியும் என்று நம்பியதால் அவர் தொடர்ந்து 70 ஆண்டுகள் எழுதிக்கொண்டே இருந்தார். 1986ஆம் ஆண்டு மே மாதம் கோடை வெயிலில் ‘தி இந்து’ நாளிதழுக்கு ஒரு கட்டுரையை அனுப்புவதற்குத் தபால் நிலையம் சென்றுவிட்டுத் திரும்பும்போது தனது 95ஆவது வயதில் மயங்கி விழுந்து காலமானார். இறுதி, மூச்சு வரை இதழ்கள் அவரது உயிர்மூச்சாக இருந்ததை இதிலிருந்து தெரிந்து கொள்ள முடியும்.

நூற்றாண்டு விழா சோகம்

அப்புசுவாமியின் மருமகன் நெல்லை வழக்குரைஞர் எஸ்.ஜி.சுப்பிரமணியம், பெயர்த்தி சு.ஆனந்தி, பெயரன் சு.குமார், மருமகள் திருமதி ஜானகி நாராயணன் ஆகியோர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து அப்புசுவாமி நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாக ஒரு கருத்தரங்கை நடத்தினர். அப்போது பெ.நா.அப்புசுவாமி பெயரில் ரூ.50,000/- முக மதிப்பில் ஓர் அறக்கட்டளையையும் நிறுவி, அவருடைய அறிவுக் கருவூலங்களாகிய அரிய நூல்களையும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு 2003ஆம் ஆண்டு திசம்பர் 31ஆம் நாள் வழங்கினர். அப்போது அப்புசுவாமியின் படம் அவர் மருமகனால் திறந்து வைக்கப்பட்டபோது, திடீரென்று மயங்கிவீழ்ந்து உயிர் துறந்தார். இதனை நான் அக்கருத்தரங்கில் கட்டுரை வழங்கியவன் என்ற முறையில் பார்த்து, கலக்கமடைந்து கண்ணீர் சிந்தியது இன்றும் என் நினைவில் நிழலாடுகிறது.

- டாக்டர் சு.நரேந்திரன், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர்