1917ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரஷ்யாவில் மானுடத்தின் உன்னதக் கனவு ஒன்று அபூர்வ வண்ணங்களால் தன்னை அலங்கரித்துக் கொண்டது. அதன் ஒவ்வொரு வண்ணத்திலும் பாட்டாளி வர்க்கத்தின் விவசாயவர்க்கத்தின் ஏழை எளியவர்களின், இரத்தமும் வியர்வையும் கலந்திருந்தது. மானுடம் அந்தக் கனவை வெகுவெகு காலமாக அடைகாத்துக் கொண்டிருந்தது. அந்தக் கனவிலேயே தன் உயிரை, எதிர்காலத்தை, இந்த உலகத்தை ஏன் இந்தப் பிரபஞ்சத்தையே பொதிந்து வைத்திருந்தது. வரலாற்றின் ஒவ்வொரு பக்கத்திலும் அந்தக் கனவின் சாயல் படிந்திருந்தது. மானுடம் ஒவ்வொரு அடியாக முன்னேறுகிற போது சிந்திய ரத்தத்தின் கோரவாடை இப்போதும் வரலாற்றை திருப்பிப்பார்க்கும் போது வீசுகிறதே. எத்தனை இடர்கள்? எத்தனை துயர்கள்? எத்தனை தியாகங்கள்? இப்படித் துளித்துளியாக சேகரித்த மானிட அனுபவத்தில், அறிவு சாகரத்தில் நெய்த கனவு அல்லவா?

அந்தக்கனவு நனவானபோது உலகெங்கும் விம்மித்தெறித்தது பெருமித உணர்வு. குனிந்து வளைந்த தோள்களும் தலையும் பெருமையுடன் நிமிர்ந்து நின்றன. தன்னைத்தானே மீண்டும் கண்டுபிடித்த அதிசய உணர்வு எங்கும் பொங்கியது. இப்படியும் நடக்குமா? நடக்கவே முடியாது! எப்படி முடியும்? ஒரு போதும் முடியாது! என்றவர்கள் பேரதிர்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் எப்படி? எப்படி? எப்படி? என்று பித்தம் தலைக்கேறி பிதற்றினர். ஆனால் உலகம் முழுவதுமுள்ள, மார்க்சிய விஞ்ஞானத்தைத் தன் கை வாளாகக் கொண்டு சமதர்மத்தை நிலை நாட்டப்போராடிக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட்டுகள் தங்கள் முஷ்டிகளை உயர்த்தி முழங்கினர். பெருமகிழ்வுடன் உறுதியான குரலில், 'இன்குலாப் ஜிந்தாபாத்'. அந்தக் குரலில் இருந்த தோழமையும் நம்பிக்கையும் தங்கள் கனவு உலகம் முழுவதும் கவிந்து வர்க்கபேதமற்ற சமூகம் உருவாகும் நாள் தொலைவில் இல்லை என்று முரசறைந்தது. உலகத்திற்கே முன்னுதாரணமாக சோவியத் தன் செந்நிற கிரணங்களால் ஒளிவீசி சூரியனாய் எழுந்தது. அந்த ரஷ்யாவின் இலக்கிய வெளி எப்படி இருந்தது?

வரப்போகும் புயற்காற்றின் அறிகுறிகள்

நவம்பர் புரட்சிக்கு முன்பாகவே ரஷ்ய இலக்கியம் பல உன்னதப்படைப்புகளை உருவாக்கியிருந்தது. உலகின் எந்த மொழியிலும் ஈடு இணையற்ற இலக்கியச் செல்வங்களையும் எழுத்தாளர்களையும் பெற்றிருந்தது ரஷ்யா. அந்த எழுத்தாளர்கள் தங்கள் தாய்நாட்டின் துயரங்களை, பாட்டாளி வர்க்கமும் கிராமப்புற விவசாயி வர்க்கமும், படும் துன்பங்களைத் தங்கள் எழுத்தில் வடித்தனர். நடுத்தர வர்க்கத்தின் ஊசலாட்டத்தை, வறட்டுக் கௌரவத்தை, மாற்றங்களை ஏற்றுக் கொள்ள டியாத பழமை விருப்பத்தை, பகட்டு வாழ்க்கையை வெளிச்சம் போட்டன. பிரபுக்களின், அதிகாரிகளின், ஆடம்பர வாழ்க்கையையும், அதிகாரத்தின் மமதையில் அவர்கள் செய்யும் கொடூரங்களையும், மனம் பதைபதைக்க எடுத்துரைத்தன.

டால்ஸ்டாய் கிராமப்புற விவசாயிகளின் துயரங்களை, புத்துயிர்ப்பு, அன்னாகரீனா போன்ற நாவல்களில் வடித்ததற்காக 'கிராமப்புற விவசாய வர்க்கத்தின் கண்ணாடி'யென்று லெனினால் பாராட்டப்பட்டார். டால்ஸ்டாய் கம்யூனிச எழுத்தாளரல்ல. கிறித்துவ இறையியலின் அறத்தை தன் வாழ்வின் கோட்பாடாகக் கொண்டவர். அதையே தன் எழுத்தில் கொண்டுவர வி ரும்பினார். ஆனால் சமூகத்தை உற்று நோக்கும் கலைஞனால் யதார்த்ததைப் பிரதிபலிக்காமல் இருக்க முடியாது. டால்ஸ்டாய் நேர்மையாக அதை பிரதிபலித்தார். புரட்சிக்கு முந்தைய கிராமப்புற ரஷ்யா எப்படி இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள இன்றும் என்றும் அவரது படைப்புகள் துணைபுரியும்.

ரஷ்யப்பட்டாளி வர்க்கத்தின் முணுமுணுப்பாய், ஆவேசப் பெருமூச்சாய், புலம்பலாய், முழக்கமாய், தன்னை வெளிப்படுத்திய மாக்சிம் கார்க்கி. அந்த முரட்டு எழுத்தாளரின் முதலும் முடிவுமான ஒரே நம்பிக்கை மனிதன்தான். தன்னுடைய பல நாவல்களில் ரஷ்யப்பாட்டாளி வர்க்கத்தின் அன்றைய கையறுநிலை, உதிரிப்பாட்டாளிகளின் கொடூரமான வாழ்நிலை பற்றி எழுதியிருந்தாலும், அவர் சிகரத்தை தொட்டது, இன்றளவும் வாசிக்க வாசிக்க தொழிலாளி வர்க்கத்தின் மீது பெரும் நம்பிக்கையையும், எந்தச் சக்தியாலும் வரலாற்றைப் பின்னோக்கித் திருப்பமுடியாது என்கிற மனஉறுதியையும் தருகிற நாவலான 'தாய்'. 1905ல் வெளியான அந்த நாவல் உலகம் முழுவதும் இன்றும் கூட மீண்டும் மீண்டும் பிரசுரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

யதார்த்தவாத எழுத்தின் உச்சத்தைத் தொட்ட மற்றுமொரு எழுத்தாளர் செகாவ். தன்னுடைய சிறுகதைகளின் மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய செகாவ் ரஷ்ய மத்திய தர வர்க்கத்தின், பிரபுக்குலத்தின் வாழ்க்கையை, அதன் ஒவ்வொரு அம்சத்தையும் நுட்பமாகவும் ஆழமாகவும் சித்தரித்தார். இதேபோல துர்க்னேவ், குப்ரின், புனின், லெர்மன்தேவ், தாஸ்தயேவ்ஸ்கி போன்ற எழுத்தாளர்களின் படைப்புகள் புரட்சிக்கு முந்தைய ரஷ்யாவை அதன் மனசாட்சியை, அதன் வாழ்வின் துடிப்பைத் துல்லியமாகப் பிரதிபலித்தது.

மாற்றத்தின் துடிப்பை உணர்ந்த இலக்கியம்-

நவம்பர் புரட்சி முற்றிலும் ஒரு புதிய சூழ்நிலையில் ரஷ்யாவை நிறுத்தி வைத்திருந்தது. எந்த முன்னுதாரணமும் இல்லாத ஒரு புதிய சூழல். ஒரு புதிய சமூக ஒழுங்கு, ஒரு புதிய பண்பாட்டுச் சூழல், ஒரு புதிய அரசியல், ஒரு புதிய இசை, ஒரு புதிய இலக்கியம் இப்படி எல்லாவற்றிலும் ஒரு புதிய பாதையில் நடைபழக வேண்டிய கட்டாயம் ரஷ்யாவுக்கு இருந்தது. அதே வேளையில் எதிர்ப்புரட்சியாளர்களின் போர், சர்வதேச நெருக்கடி, அண்டை நாடுகளின் படையெடுப்பு, இவற்றுக்கு மத்தியில் ஒரு புதிய சோசலிச சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு.

உலக மக்கள் அனைவரின் கவனமும் ரஷ்யாவின் மீது குவிந்திருந்தது. இந்த நேரத்தில் சோவியத் ரஷ்யாவில் ஏராளமான இலக்கியப் போக்குகளும், இலக்கியக் கோட்பாடுகளும் வளர்ந்து வந்தன. யதார்த்தவாதம், சிம்பலிசம், ப்யூச்சரிசம், ஃபார்மலிசம், புதிய யதார்த்தவாதம், புரோலிட்கல்ட் என்று உருவாகின. இவையெல்லாவற்றிலும் பங்கு கொண்ட படைப்பாளிகளாக ஜாமியாடின், நிகோலாய் குமிலியேவ், ஓசிப் மாண்டெல்ஷ்டாம், செர்ஜிகோரோடோட்ஸ்கி, மாயகோவ்ஸ்கி, ஜோஸ்செங்கோ, வாலண்டின் கதாயெவ், கான்ஸ்டான்டின் பெடின், லியோனித் லியனோவ், ஐஸக்பேபல், பாஸ்டர்நாக் போன்றவர்கள் இருந்தனர்.

1921ல் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. எதிர்ப்புரட்சி படையினரும், அண்டை நாடுகளின் படையெடுப்பும் முறியடிக்கப்பட்டுவிட்டன. கொஞ்சம் மூச்சுவிட முடிந்தது அப்போதுதான்.

1921 மார்ச் 21ஆம் தேதி லெனின் கட்சியின் 10ஆவது காங்கிரஸில் புதிய பொருளாதாரக் கொள்கையை அறிவித்தார். இதற்குப் பொருத்தமாக கலை இலக்கியத் துறையில் ஓர் நெகிழ்ச்சியான கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது. கலைஞர்கள், எழுத்தாளர்கள் மீது இறுக்கமற்ற நிலைபாடு மேற்கொள்ளப்பட்டன. இப்படிப்பட்ட சாதகமான சூழலில் புதிய புதிய இலக்கியப் போக்குகள் தோன்றிவளர்ந்தன. அவைகளுக்கிடையில் மோதல்களும் இருந்தன. இந்தச்சூழலில் தான் லெனின்,

"தன்னுடைய எண்ணப்படி சுதந்திரமாக, புறநிர்ப்பந்தம்

ஏதுமின்று படைப்பதற்கு ஒவ்வொரு கலைஞனுக்கும்

உரிமையுள்ள போதிலும் பெரும் குழப்பநிலை ஏற்படுவதற்கு

நாம் கையைக் கட்டிக் கொண்டு அனுமதித்து விடக்கூடாது"

என்று எச்சரித்தார். ஆனால் இலக்கியத்தின் மீது சர்வாதிகாரமான கட்டுப்பாடு வேண்டும் என்ற அர்த்தத்தில் அவர் இதைக்கூறவில்லை. இந்த நிலைபாட்டினால் கம்யூனிஸ்ட் எழுத்தாளர்களும், கம்யூனிஸ்ட் அல்லாத- ஆனால் புரட்சியை ஆதரித்த எழுத்தாளர்களும் தங்களுடைய இலக்கியப் பணிகளை மேற்கொண்டனர். 'கிராஸ்நயாநோவ்' என்ற பத்திரிகையில் கம்யூனிஸ்ட்கள், சக பயணிகள், பழைய தலைமுறை எழுத்தாளர்கள் புரட்சியின்போது நாட்டைவிட்டு வெளியேறியிருந்தவர்கள் என்று எல்லோரும் பங்கேற்ற இதழாக கட்சித்தீர்மானத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 'நோவிமிர்' (புதிய உலகம்), ஸ்வெஸ்தா(நட்சத்ரம்), ஜினாமியா(அக்டோபர் பதாகை) போன்ற பத்திரிகைகள் தொடங்கப்பட்டன. பல்வேறு எழுத்தாளர் அமைப்புகளும் அப்போது தோன்றி வளர்ந்தன. பாட்டாளி வர்க்க எழுத்தாளர் சங்கம், எழுத்தாளர் கழகம், ஃப்யூச்சரிஸ்ட் இடது மையம் போன்ற அமைப்புகள் செல்வாக்குடன் திகழ்ந்தன.

1934ல் சோவியத் எழுத்தாளர் சங்க முதல் மாநாடு சோசலிச யதார்த்தவாதத்தைப் பிரகடனப்படுத்தியது. உலகம் முழுவதிலுமுள்ள முற்போக்கு கலை இலக்கிய அமைப்புகளுக்கு இன்றும் உத்வேகத்தை தரக்கூடிய சோசலிச யதார்த்தவாதத்தை அடியொற்றி ஏராளமான படைப்புகளை எழுத்தாளர்கள் எழுதினார்கள். மாக்சிம் கார்க்கி, "நமது புத்தகங்களில் உழைப்பைத்தான் முதன்மையான கதாநாயகனாக்க வேண்டும்" என்றார். சோசலிச யதார்த்தவாதம் என்பது புரட்சிகர யதார்த்தவாதத்தை ஒரு நேர்மையான வரலாற்று ரீதியில் திட்டவட்டமான முறையில் சித்தரிக்குமாறு கோருவதோடு யதார்த்தத்தின் மீதான ஒரு புரட்சிகர அணுகுமுறையை நடைமுறையில் உலகத்தை மாற்றியமைக்கிற ஒரு அணுகுமுறையை ஊக்குவிக்கிறது.

போரும் வாழ்வும்

1941 ஜூன் 21ஆம் தேதி சோவியத் யூனியன் மீது ஹிட்லர் திடீரென்று படையெடுப்பு நடத்தினான். சோவியத் ஒரு மகத்தான போரில் தன் தேசத்தையும் உலகத்தையும் காப்பாற்ற ஈடுபட்டது. எத்தகைய வீரஞ்செறிந்த யுத்தம்! 1941லிருந்து 1945 வரை சோவியத் ஆறுலட்சம் ஜெர்மானிய படை வீரர்களால் முற்றுகையிடப்பட்டிருந்தது. 1942 இலையுதிர்காலத்தில் ஹிட்லரின் படைகள் காகசஸ் மலை அடிவாரங்களுக்கும் வோல்கா நதிக்கரைக்கும், மாஸ்கோ, லெனின் கிராட் நகரங்களுக்கும் நுழைந்துவிட்டன. சோவியத்தின் மக்கள்தொகையில் பாதிப்பேர் ஜெர்மானியப்படைகளின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தனர். அப்போதுதான் சோவியத் தேசமே ஒரே முகமாக தாய்நாட்டைக் காப்பாற்றவும், சோசலிசப் பதாகையை உயர்த்திப் பிடிக்கவும் உயர்ந்தெழுந்தது. சோவியத் மக்கள் எண்ணற்ற தியாகங்கள் செய்தனர். சோவியத்தில் மட்டும் இரண்டரைக்கோடி மக்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர். சோவியத் தாய்நாட்டை காப்போம் என்ற ஒற்றை முழக்கத்தின் கீழ் சோவியத்தின் ஒவ்வொரு குடிமகனும் மொழி, இன, மத, கட்சி, சித்தாத்த, வர்க்க வேறுபாடுகளைக் கடந்து போரிட்ட மகத்தான வீரகாவியக் காலகட்டம். பாசிசத்தை வீழ்த்த கோடிக்கணக்கில் உயிர்களை பலி கொடுத்து உலகத்தைக் காப்பாற்றியது சோவியத்.

இந்தக் காலகட்டத்தில் சோவியத் இலக்கியம் முழுக்க முழுக்க போர் இலக்கியமாகவும், தேசபக்த இலக்கியமாகவும் இருந்தது. சோவியத் மக்களின் மிகப்பிரம்மாண்டமான பாசிச எதிர்ப்புப் போர் இலக்கியத்தின் எல்லா வகைகளுக்கும் வேண்டிய விஷயதானங்களை வழங்கியது. ஆவேசமும் உற்சாகமும், உத்வேகமும், தியாக உணர்வையும், உறுதியையும் ஊட்டும் இலக்கியப் படைப்புகள் போர்முனை நடவடிக்கைகளுக்கு நிகரானவையாகப் போற்றப்பட்டன. பரீஸ்பொலவோய் எழுதிய உண்மை மனிதனின் கதை, ஓஸ்திராவ்ஸ்கி எழுதிய வீரம் விளைந்தது, ஷோலகோவ் எழுதிய அவன் விதி, அதிகாலையின் அமைதியில் மற்றும் அலக்ஸி டால்ஸ்டாய், இலியா எஹ்ரன்பர்க், டிகானோவ், வாஸிலி க்ராஸ்மன் ஸிமனோவ் ஆகியோரது படைப்புகள் அந்தக் காலகட்டத்தில் உன்னதமான படைப்புகளாக வெளிவந்து மக்களின் உணர்ச்சிகளைத் தட்டியெழுப்பின. இன்னமும் கூட சோவியத் மக்களுக்கும், மனிதகுலத்திற்கும் உத்வேகமும், உறுதியும் தரக்கூடிய மகத்தான படைப்புகளாக விளங்குகின்றன. இந்த இலக்கியங்களைப் படித்தே உலக முழுவதிலுமுள்ள இளைஞர்கள் இடதுசாரி இயக்கங்களுக்குள் ஈர்க்கப்பட்டனர். 1930களிலிருந்தே சோவியத்தின் கலை இலக்கிய கலாச்சாரக் கொள்கை மற்றும் அதன் நடைமுறைகள் குறித்து வேறு வகையான விமரிசனங்களும் இருந்து வந்தன.

வளர்ச்சியின் சிகரம் நோக்கி...

இரண்டாம் உலக யுத்தம் எப்படி முடிய வேண்டும் என்று யார் விரும்பினார்களோ, யார் பாசிச ஆக்ரமிப்பை நீண்டகாலமாக ஊக்குவித்து வந்தார்களோ அவர்களுடைய விருப்பத்துக்கு மாறாக அது முடிவடைந்தது. ஐரோப்பாவின் பிடியிலிருந்து ஏராளமான காலனி நாடுகள் விடுதலையடைந்தன. அமெரிக்கா பிரம்மாண்டமான பொருளாதாரம் மற்றும் ராணுவபலம் கொண்ட நாடாயிற்று. புதிய காலனியக் கொள்கையை அது பரப்பத் தொடங்கியது. சோவியத்தும் இந்த யுத்தத்தின் முடிவில் ஏராளமான இழப்புகளைச் சந்தித்திருந்த போதிலும், மேலைநாடுகளின் ராணுவ பலத்திற்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் ஒரு வல்லரசாக மாறியிருந்தது. உலகமெங்கும் இடதுசாரி இயக்கங்களின் செல்வாக்கு உயர்ந்தது.

சோவியத்தின் உள்நாட்டு தொழில் வளர்ச்சி விரைந்து வளர்ந்தது. 1940களில் இருந்ததைப்போல இரண்டு மடங்காகியிருந்தது. அறுபதுகளுக்குப் பின்பு புதிய எழுச்சி கலை இலக்கிய முயற்சிகளில் ஏற்பட்டது. விஞ்ஞானப் புனைகதைகள் சோவியத்தின் இலக்கிய அரங்கில் முக்கிய இடம்பிடித்தது. டேனியல் கரானின், ஐவான் எஃப்ரமெவ், ஸ்ட்ரூகாட்ஸ்கி சகோதரர்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். புனைவிலக்கியத்தில் சிங்கிஸ் ஐத்மாத்தவ், வஸிலி ஷுக்தீன், யெவ்கனி யெவ்டுஷெங்கோ, ஆந்ரே வோழ்னெஸென்ஸ்கி, யெவ்கனி வினோ குரோடோவ் போன்றோரும், முக்கியமான எழுத்தாளர்களாக முகிழ்த்தனர். படைப்பாளிகளுக்குரிய பொறுப்புணர்ச்சியோடு படைப்புகளில் சுதந்திரவேட்கையோடு புதிய புதிய வடிவங்களில் தங்கள் படைப்புகளை உருவாக்கினர். வஸிலிஷுக்தீனின் 'வாழவிருப்பம்', சிங்கிஸ் ஐத்மாத்தவின் ஜமீலா, குல்சாரி, அன்னைவயல், லாரி டிரைவர், முதல் ஆசிரியர் போன்ற நூல்கள் உலகம் பூராவும் இருக்கிற வாசகர்களை இன்னும் ஈர்த்துக் கொண்டேயிருக்கின்றன.

ஸ்தெப்பியின் வெளிகளில் அலைந்து திரிய....

உலக இலக்கியத்திற்கு ஒரு பெரும் பங்களிப்பை செய்துள்ளது ரஷ்ய இலக்கியம். புரட்சிக்கு முன்பான இலக்கியமாக இருந்தாலும் சரி, புரட்சியின் காலகட்டத்தில் வெளியான இலக்கியமாக இருந்தாலும் சரி, போர்க்கால இலக்கியமாக இருந்தாலும், போருக்குப் பிந்தைய இலக்கியமாக இருந்தாலும் சரி உலகம் முழுவதுமுள்ள எழுத்தாளர்கள், படைப்பாளிகளை பாதித்த ஒரே இலக்கியம் ரஷ்ய இலக்கியம். மாறிக் கொண்டிருக்கிற இன்றைய சூழலில், அதுவும் உலகம் முழுவதும் இடதுசாரி இயக்கங்கள் புத்தெழுச்சியுடன் வீறுகொண்டு எழுந்து நடைபோட்டு வருகிற இன்றைய சூழலில் ரஷ்ய இலக்கியங்களை மீண்டும் வாசிக்கிற போது உத்வேகமும், தார்மீக ஆவேசமும் பொங்குகிறது. பீட்டர்ஸ்பர்க் நகரம் நமது நகரமாகிறது. அந்த தெருக்களின் வழியே நடந்து கொண்டிருக்கிறோம். லெனின் கிராடின் செஞ்சதுக்கத்தில் படையணிவகுப்பைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பாசிச ஹிட்லரின் படைகளை விரட்டி வெற்றிக் களிப்புடன் நமது கிராமங்களை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கிறோம். 

நமது உள்ளம் பெருமிதத்தால் விம்முகிறது. கண்களில் கர்வம் மின்னுகிறது. உலகை மாற்றுகிற ஒரு விந்தை உணர்வு நம்மிடம் பொங்குகிறது. இதோ பாப்ளார் மரங்களிலிருந்து கிளம்பி ஸ்தெப்பி புல்வெளியைத் தழுவிக் கொண்டு வீசுகிற ரஷ்யக் காற்றை நாம் சுவாசிக்கிறோம். ரஷ்ய இலக்கியத்தைப் போல வேறெந்த நாட்டு இலக்கியமும் இத்தனை நுட்பமாக, இத்தனை ஆழமாக ரஷ்ய மக்களின் வாழ்வை, மனித மனதின்ஆழத்தைப் பதிவு செய்திருக்குமா என்பது சந்தேகம்தான். அதோ குளிர் நிலவின் வெள்ளொளியில் சிங்கிஸ் ஐத்மாத்தவ் தன்னுடைய கரகரத்த குரலில் கீதமிசைக்கிறார். அதைக் கேட்டுக் கொண்டே ஜமீலா தன் கனவுகளை நெய்து கொண்டிருக்கிறாள். ஸ்தெப்பியின் இளம்காற்று முணுமுணுக்கிறது. கடந்த கால ஏக்கமும் எதிர்கால நம்பிக்கையும் அதில் கலந்திருக்கிறது. நம் காதிலும் வந்து ஏதோ சொல்கிறது. புரட்சி!.... மகத்தான புரட்சி!... கேட்கிறதா உங்களுக்கு!

- உதயசங்கர்

Pin It