ramasundramஅறிவியல் தமிழின் தாத்தா என்று மருத்துவர் சு.நரேந்திரன் அவர்களால் மதிப்புடன் அழைக்கப்படும் பேராசிரியர் இராம.சுந்தரம் அவர்கள் இன்று நம்முடன் இல்லை.

அவர் கொடுத்துச்சென்ற சிந்தனை உள்ளது. அவரின் நூல்கள் வாயிலாகவும் கட்டுரைகள், உரைகள், அரங்கப்பேச்சுகள் வாயிலாகவும் வாழ்கிறார்.

பன்மொழியறிவு கொண்ட மொழிபெயர்ப்பாளராக, மொழியியல் வல்லுநராக, சமூக சிந்தனையாளராக, செயற்பாட்டாளராக இயங்கியவர்.  திராவிட இயக்கச்சிந்தனையில் இருந்து, மார்க்சியத்திற்கு நகர்ந்து அவ்விரு கொள்கைகளையும் தமிழ்த்தேசியத்திற்குப் பயன்படும்படி இயங்கியவர்.

அவர் ஓர் இயக்கம். அவர் இருக்கும் இடத்தில் இயக்கம் இருக்கும். இயக்கம் இருக்கும் இடத்தில் அவர் இருப்பார்.

என் முதல் நூலிற்கு அவரிடம்தான் அணிந்துரை வாங்கினேன். அளவற்ற மகிழ்ச்சியுடன் அதனை செய்து தந்தார். பாசாங்கு அற்ற அணுகுமுறை, எவ்வளவு பெரிய எதிரியினையும் எதிர்க்கும் துணிச்சல், அனைவரையும் மதிக்கும் மாண்பு, எல்லா கருத்துகளையும் உட்செரித்து உண்மை காணும் நேர்மை - இவையே அவரது பலம். 

ஒதுக்குதல் என்ற கொள்கை அவரிடம் இல்லை. இணைத்தல் என்பதே அவரின் வாழ்முறை. அவருடைய சொல்புதிது சுவை புதிது' நூலில் அவருள் இருந்த ஒரு வரலாற்று ஆசிரியருக்கான பகுப்பாய்வு முறையினைக் கண்டு வியந்தேன்.

சிலப்பதிகாரத்திற்கு அவர் செய்த காலவரையறை அறிவியல் பூர்வமானது.  அவருடைய பேராசிரியர் வ.ஐ.சுப்பிரமணியம் அவர்களின் கருத்திலிருந்தும், பேராசிரியர்.ச.வையாபுரிப்பிள்ளை அவர்களின் கருத்திலிருந்தும் மாறுபட்டு துணிச்சலான, அழுத்தமான சான்றுகளுடன் தம் காலவரையறையினை உறுதிப்படுத்தியிருப்பார்.

பவுத்த, சமண தத்துவநூல்களைக் கற்றபோது அக்கட்டுரைகளை எழுதியதாகக் கூறுவார். அனைவரையும் அன்பால் வசீகரிக்கும் தன்மை கொண்ட அவர் சாதிப்பற்றறுத்த உண்மையான மார்க்சியவாதியாவார்.

1990களில் தமிழ்ச்சூழலில் நிகழ்ந்த, ஆய்வுப்போக்குகளில் உருவான உடைத்தல் கூறுகளைப் பற்றி பல சுற்றுகள் அவருடன் வாதித்திருக்கிறேன். உடைத்தல் போக்குகள் எதிர்காலத்தில் அடிப்படைவாதிகளுக்கு உரமாகும் என்று கூறியதை ஒரு தலையசைப்புடன் ஏற்றுக்கொண்டார்.

தமிழ்த்தேசியவாதிகள் மாநில எல்லைப்பகுதி மக்களுடன் கலந்துபேசி தம் கோட்பாடுகளை வகுப்பதற்கு சொல்லுங்களேன் என்றபோது, அது இயலும் என்றார். இளையதலைமுறையினர் அதனைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பார். மூத்த தலைமுறையினர் வழிகாட்டுங்கள் என்றேன்.  

1990களில் பெரியார் குறுக்கும் நெடுக்குமாக பகுப்பாய்வு செய்யப்பட்டபோது அப்போக்கு எதிர்காலத்தில் சமயவாதிகளுக்கு வலுசேர்க்கும் என்ற என் கருத்தினை உற்றுக்கேட்டார். அதனை அவர் மறுக்கவில்லை.

உங்கள் நூலகத்திலும் சமூக விஞ்ஞானத்திலும் வெளிவரும் என் ஒவ்வொரு கட்டுரையினையும் படித்தபின் தொலைபேசியில் கருத்துடன் விமர்சனத்தையும் முன்வைப்பார். ஊக்கப்படுத்துவார். சிலவற்றை சுட்டிக்காட்டுவார். 

தோழர் தேவ.பேரின்பன் தலைமையில் நிகழ்ந்த கலந்தாய்வுக் கூட்டங்களில் என் கருத்துகளை தயக்கமின்றி பதிவிட ஊக்கினார். பிற துறை பயில்வினை  வளர்த்துக்கொள்வதற்கு இரு மானிடவியல் நூல்களைப் பரிசளித்தார்.

ஆர்.எஸ்.சர்மாவும் டி.என்.ஜாவும் வெளியிட்ட டி.டி.கோசாம்பியின் நினைவுமலரினை அன்பளிப்பாக அவரிடம் பெற்றது பெரும் பேறு.  ஆர்.எஸ்.சர்மாவின் ஆரியரைத்தேடி' நூலினை மொழிபெயர்ப்பதற்கு எனைப்பெரிதும் ஊக்கப்படுத்தி, மெய்படியும் சரிபார்த்து திருத்தம் செய்தளித்தார். 

ஒவ்வொருமுறையும் நானும் சண்முகம் சரவணனும் மாறி மாறி அவரைச் சந்திக்கிறபோது என்னை சரவணன் என்றும் அவரை சங்கரன் என்றும் அழைப்பார்.

நாங்கள் திகைக்கிறபோது ரெண்டுபேரும் ஒன்னுதானப்பா என்பார். முகத்தில் சிரிப்பு கொப்பளிக்கும். நாங்கள் இருவரும் அவரை பேட்டியெடுக்கவேண்டும் என்று பலமுறை முயன்றும் இயலாமல் போனது.

தம் ஆசிரியர் வ.ஐ. சுப்பிரமணியன் அவர்களுடனான ஆய்வு அனுபவத்தினை பகிர்ந்தபோது  ஒரு முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக நாமும் பிறந்திருக்கலாமே என்று தோன்றும். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பல துணைவேந்தர்களை நல்வழியில் இயக்கினார் என்றே சொல்லவேண்டும்.

அவர்கள் எடுத்த நல்லதிட்டங்களுக்கு இவர்தான் காரணியாக இருந்தார். தலைமுறை இடைவெளியின்றி இளம் ஆசிரியர்கள் வளர்வதற்கும், மாணவர்கள் கற்பதற்கும் முன்மாதிரி ஆசிரியராக இருந்தார்.

ஓராண்டிற்கு முன்பு தஞ்சாவூரில் இல்லத்தில் சந்தித்தபோது ஒரு மகாசிரிப்புடன் வரவேற்றார். பெரும் பூரிப்புடன் வழியனுப்பி வைத்தார். அவரை வழியனுப்பி வைக்க என்னால் செல்லமுடியவில்லை என்பது ஒரு வரலாற்றுப் பிழை.

- கி.ரா.சங்கரன்

Pin It