மொழிபெயர்ப்பை நான் தேரவில்லை. அதுதான் என்னைத் தேர்ந்துகொண்டது. மொழி பெயர்ப்பில் நான் தேரவில்லை. கிடைத்ததைச் செய்தேன். என் நற்சார்பு, எனக்குக் கிடைத்த தெல்லாம் பெரும்பாலும் நல்லதாகவே கிடைத்தது. நற்சார்பு என்று மார்க்சியத்தைச் சொல்லுகிறேன். தவிர ஏது கிடைத்தாலும் அதன்அதன் உணர்வில் ஊறிச் செய்தேன். மொழிபெயர்ப்பாளனாக ஆவதற்கு ‘நான் செய்ததெல்லாம்’, அதைப் பற்றிய கருத்தே இல்லாத இளம் வயதில் இருந்தே கண்ணில் பட்ட - கையில் சிக்கிய எல்லா விதமான எழுத்தையும் வேறுபாடின்றி அள்ளி விழுங்கியதுதான். இப்படிப் பலவிதமான எழுத்துகளையும் வாசித்துத் தள்ளியதும் பலவிதமான மேடை நிகழ்ச்சிகளையும் கண்டு கேட்டு அவை பதிந்ததும் ஒரு அடித்தளமாயின; பின்புலமாயின. இந்த என் கட்டற்ற வாசிப்புக்கும் பார்வையாள பங்கேற்புக்கும், எனக்கிருந்த சூழ் நிலையைக் (வறுமை, குடும்பநிலை, காலகட்டம்...) காரணமாகச் சொல்ல முடியும். தூண்டுதல்

காரணியாக ஒரு சில ஆள் பெயர்களையாவது சொல்ல வேண்டும் என்றால் திரு.ச.ப.தங்கவேலு, திரு.தி.வே.நடராசன், திரு. ஜி.பழனிச்சாமி (கோவை ஞானி), திரு.எஸ்.வி.ராசதுரை ஆகியோரைக் குறிப் பிடலாம்.

வருமானத்துக்காக ஒரு வேலையில் இருந்து கொண்டு தாம் சார்ந்திருக்கும் கருத்தியல் அக் கறையின் அடிப்படையில், தேர்ந்தெடுத்து மொழி பெயர்ப்போர் உண்டு. பதிப்பகங்களின் பணி யாளர்களாக இருந்து மொழிபெயர்ப்போரும் உண்டு. இந்த இரண்டு விதக் காப்பும் இல்லாமல் மொழிபெயர்க்க வந்து, ஒரு சீரான - வரையறுத்த வருவாயும் தொடர்ச்சியான வேலைவாய்ப்பும் வருங்காலப் பாதுகாப்பும் இல்லாமல் உழலும் என்னைப் போன்றோரும் உண்டு (இருந்தும் தப்பித்திருக்க, நண்பர்களின் வள்ளல் தன்மை காரணம்). அரசு செய்தால் எவ்வளவோ செய்யலாம். ஆனால் எந்தக் காலத்தில் ஆதிக்க அரசு நல்லது செய்தது - அதற்கென்றே ரத்தம் சிந்திப் பிறக்கும் மக்கள் அரசுகளைத் தவிர? எனவே இதற்கென்று ‘தொழிற்சங்கம்’ அமைத்தால் தான் உண்டு. 15-8-2004 ஞாயிறு அன்று எழும்பூரில் எழுந்தது அப்படிப் பட்ட ஞாயிறுதானா?.... பார்ப்போம்.

மொழிபெயர்ப்பின் தேவை பெரிது, மொழி பெயர்ப்பின் முக்கியம் பெரிது; விவரமுள்ள எவருக்கும் இது சொல்லித் தெரிய வேண்டிய தில்லை. இன்றைய உலகின் இன்றியமையாமை களில் ஒன்றாக (காற்று - நீர் - உணவு.... போல்) ஆகி இருக்கிறது மொழிபெயர்ப்பு. (முந்திய காலங் களிலும் இதுதான் நிலவரம் என்பது உண்மை). ஆனால் அதற்கு உரிய மதிப்பு கிடைப்பது இல்லை என்ற குறை பரவலாக உண்டு. ஆனால் மொழி பெயர்ப்பு இல்லாவிட்டால் இன்றைய உலகமய உலகம் ஒரு கணமாவது இயங்க முடியாது என்பதும் இன்றைய அறிவியல் - தொழிலியல், தகவல் பரவல், ஊடகங்கள், பாடநூல்கள், அரசியல், கலை - இலக்கியம் என எதுவுமே மொழிபெயர்ப்பு இன்றி நடைபெறாது என்பதும் ஒரு நடைமுறை மெய்ம்மை. ஆக மொழிபெயர்ப்புக்கு அதற்கு மதிப்புக்கும் அதிகமான மதிப்பு இப்பவும் அளிக்கப்படுகிறது என்பதே எதார்த்தம். (காரணம், அதற்குப் பெருத்த தேவை உள்ளது). ஆனால் மொழிபெயர்ப்பாளருக்கு உரிய மதிப்பு வழங்கப்படுவதில்லை என்பதுதான் சிக்கல்.

மொழிபெயர்ப்பு எதற்கு? மொழி எதற்கோ அதற்குத் தான் மொழிபெயர்ப்பும் : புரிவதற்கு; புரிய வைப்பதற்கு - மக்கள் புரிந்து கொள்ளக் கூடாது என்றால் தொடர்ந்தும் அயல் மொழிகளே ஆதிக்கம் செலுத்தும்படி விட்டுவிடலாம். மக்களுக்கு உண்மை விளங்க வேண்டும் என்றாலோ அயல் மொழிகளைப் பெயர்த்தல் (இடம் பெயர்த்தல் - மொழிபெயர்த்தல்) கட்டாயத் தேவை ஆகிறது. ஆனால் இன்று தாய்மொழியுமே புரியாத் தன்மையை அடைந்து கொண்டு உள்ளது. மக்கள் பேசுவது தமிழாக இல்லை / தமிழில் பேச மக்கள் விரும்புவது இல்லை. எனவே தமிழ் தமிழாக இல்லை. விடு தலையையும் புரிதலையும்விட அடிமைப் பதவி யையும் ஆடம்பரப் பிழைப்பையுமே நாடுவோர் ஆங்கிலத்துக்கும் அமெரிக்காவுக்கும் அடி பணிந்து ஆக வேண்டி உள்ளது; கணினித் தொழிலையும் டாக்டர் தொழிலையும் தேடி நாட்டை விட்டு ஓடவேண்டியே உள்ளது. இதற்காகப் பச்சிளம் பருவத்தில் இருந்தே (ப்ரி.கே.ஜி) மூளையில் ஆங்கிலத்தையும் முதுகில் சுமையையும் ஏற்றுகிறார்கள்.

ஆங்கிலம் கலந்து பேசுவதே தமிழாகவும் முழுக்கவும் ஆங்கிலத்திலேயே பேசுவதே நாகரிக மாகவும் நம்புகிறார்கள். அதே நேரத்தில் ‘சுதந்திர தினமும்’ கொண்டாடிக் கொள்கிறார்கள். வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் மற்றுமுள்ள தொடர்புக் கருவிகள் யாவற்றிலும் தேவை இல்லா விட்டாலும் ஆங்கிலத்தைக் கலந்தே பேசுவது என்பதை ஒரு உறுதிமொழியாகவே வைத்திருக் கிறார்கள். திரைப்படப் பெயர்கள், வணிக விளம் பரங்கள், அறிவிப்புகள், ‘தனியார்’ / வெகுசன புழக்கங்கள், மேல்படிப்புகள்.... எல்லாமே பெரிதும் ஆங்கிலத்தையே அடிப்படையாகக் கொண்டு உள்ளன. அரசு வெளியீடுகள், பாட நூல்கள், மத நடவடிக்கைகள் போன்றவை தமிழில் வலிந்து பெயர்க்கப்பட்டாலும் இயல்பற்றதாக நடப்புடன் ஒட்டாமல் நிற்கின்றன. வட்டார (= சாதிமத) தமிழ்கள் ஒன்று மற்றதை அயலாக வேடிக்கை பார்க்கும் நிலையும் பொதுவான மக்கள் தமிழ் உருவாகாத நிலையுமே இன்றளவும் உள்ளது. இந்தியாவுக்குள் இந்துக்களாக இருக்க ஒப்புக் கொண்டு விட்டு இந்தி மொழி ஆதிக்கத்தை மட்டும் ஒப்புக்கொள்ளமாட்டோம் என்ற நிலை எடுத்த நிலையில் வேறு வழியின்றி உலக ஆதிக்க மொழியாகிய ஆங்கிலத்தைச் சுமக்க வேண்டிப் போன - அதைவிட விரும்பி ஏற்றுக்கொண்ட திருட்டு / முட்டாள் அரசியல்வாதிகளால் விளைந்து உள்ள அவலநிலை இது என்பது பகுத்தறிவை உண்மையாகச் செயல்படுத்தும் அனைவரும் அறிந்ததே.

எனவேதான் தமிழ்நாட்டில் தமிழரிடையே தமிழுக்கே முதலில் ஒரு பெயர்ப்பு தேவைப்படுகிறது. தேவையால் வெளியில் இருந்து வெள்ள மாய் வந்து பாயும் பெயர்ப்புகள் ஒருபுறம் ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைந்து திணறுவதும் மற்றபடி பெருவாரி மக்களிடையில் பரவலாக ஒரு நோக்கமாக ‘தமிங்கிலமே’ நாள்தோறும் நடப்பாக இருப்பதுவும் ஆன பிளவுநிலை தகர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் நல்ல நல்ல நூல்களை வெறும் 500 அல்லது 1000 படிகள் மட்டும் அச்சிட்டு அவற்றை 5 ஆண்டுகள், 10 ஆண்டுகள் வரை வைத்து விற்றும், முற்றும் விற்றுத் தீராத இழிநிலை இருப்பது மாறத் தொடங்கும். (இத்தனைக்கும் உலகத் தமிழர் தொகை 10 கோடிக்குப் பக்கமாம்!) நல்ல நல்ல நூல்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே வெளியாகக் காரணம், வெளியிடுவோருக்கும் வாசகர்களுக்கும் பணவசதி குறைவு என்பதை விட, நல்லநூல்களைத் தாய் மொழியில் பரவலாக வாசிக்கும் பண்பாடு பயிற்றுவிக்கப்படவில்லை என்பதுதான் மேலும் அடிப்படையான காரணம்.

கோயில்களும் சினிமா கொட்டகைகளும் ஊருக்கு ஊர் மலிந்துள்ள நாட்டில் ஊருக்கு ஒன்று என்ற குறைந்த அளவில்கூட எல்லா ஊர்களிலும் பள்ளி களிலும் நூலகங்கள் அமைக்கப்படவோ பேணப் படவோ இல்லை என்பது ஆள்வோருக்கு மட்டு மல்ல மக்களுக்கும் மானக்கேடு; நாட்டுக்கு நட்டம். நாட்டில் வெளியாகும் எல்லா நல்ல நூல்களையும் மக்களிடையே பரவச் செய்தல் வேண்டும் என்ற அக்கறை அற்ற அரசின் ஆட்சியில் நாம் இருக்கிறோம். உலகில் வெளிவரும் தகுதி வாய்ந்த - நற்பயனுள்ள நூல்களை எம்மொழியில் இருந்தாலும் இனம் கண்டு அவற்றை விரைந்தும் தொடர்ந்தும் சிறப் பாகவும் பெயர்த்துத் தமிழ் மக்கள் அனைவரின் உணர்விலும் மேன்மை கூட்டும் விருப்பம் இல்லாத வீணர்களின் ஆட்சியில் நாம் இருக்கிறோம். எனவே உலக உடன்பிறப்பு உணர்வையும் பல கலை - பல துறை அறிவையும் தமிழ் மக்கள் எல்லோருக்கும் சமமாகிப் பரப்ப ஒவ்வொரு ஊரிலும் தமிழ்ப் பள்ளியும் தமிழ் நூலகமும் உருவாக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள நல்ல நூல்கள் அனைத்தும் ஒரு நூல் மீதமின்றி விரைவில் தமிழாக்கம் பெறவேண்டும். தமிழ் நாட்டில் தமிழ் படித்தோருக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற நிலை உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அப்படிப்பட்ட கல்வி நிலையங்களையும் நூல் நிலையங்களையும் பயன்படுத்திக்கொள்ள மக்கள் மிகுந்த ஆர்வமுடன் முன் வருவார்கள். அனைவரும் தமிழறிந்து அனைத்து நல்லனவும் தமிழில் வந்தால் மட்டுமே தமிழ்நாடு வளம் பெறும், தமிழ் மக்கள் நலம் பெறுவார்கள். எனவே தமிழ் மக்கள் நலனும் மொழிபெயர்ப்பாளர்கள் நலனும் ஒன்றை ஒன்று சார்ந்ததாகும். அப்படி ஏதும் நல்லது நடந்துவிடக்கூடாது என நினைப் பவர்கள் மட்டும்தான் இன்றுள்ள நிலையை நியாயப்படுத்தவும் நீடிக்கவும் செய்து வருவார்கள் - வருகிறார்கள் என்று கூறினால் அதில் என்ன தவறு இருக்க முடியும்?

தமிழ் மொழிக்கு - மக்களுக்கு - மொழி பெயர்ப்பாளர்களுக்கு, வட்டாரப் பேச்சுத் தமிழ், இதுவரை பதிவாகி உள்ள ஏட்டுத் தமிழ், பலதுறை அறிவுத் தமிழ், புதியன படைப்போரின் புதுமைத் தமிழ் யாவும் ஒருங்கே கொண்ட புத்தம் புதிய (‘அப்ட்டுடேட்’) அகராதி உடனடியாகத் தேவை. இதைச் செவ்வனே தொகுக்க இந்தக் கால வசதி யாகிய கணினி எளிதில் உதவ முடியும். அதன் உதவியால் இப்பணி எளிதாக முடியும். சொற் களுக்குப் பொருள் துல்லியமாய் வரையறுக்கப் படுவதும் புதுக்கருத்துகளுக்குத் தக்க புதுச் சொற்கள் ஆக்கப்படுவதும் முறைப்படுத்தப்பட வேண்டும். இதற்குத் தமிழ் வேர்ச்சொற்களே போதுமான அளவுக்கு உள்ளன.

செம்மொழி அறிவிப்பைவிட, திருக்குறளை சமஸ்கிருதம் என்ற செத்த மொழியில் பெயர்த்து பெருமைப்படுவதை விட மேற்சொன்னது மாதிரியான செயல்களே தமிழ் மக்களின் தரம் மேம்பட அவர்கள் ஏற்றம் பெற உதவும். உச்சரிப்பில் தமிழைக் கெடுக்கும் ஊடகக்காரர்கள் உதைக்கப் படவேண்டும். தமிழ் மொழிக்கு 247 எழுத்து என்ற சுமையைக்கூடக் குறைத்துச் சமகாலத் தன்மையும் அறிவியல் சீரமைப்பும் கொண்டதாக ஆக்குதல், மக்கள் நூற்றுக்கு நூறு பேரும் எழுத்தறிவு பெறவும் பிறமொழி மக்களும் தமிழை எளிதில் பயிலவும் வாய்ப்பாக அமையும். இது, தன் பங்குக்கு, படிப்பின் அளவையும் அதன் மூலம் நூல்கள் வெளிவரும் அளவையும் பெருக்கும்.

தமிழுக்கு - தமிழ், தமிழுக்கு - ஆங்கிலம், ஆங்கிலத்துக்கு - தமிழ் மட்டுமல்லாமல் தமிழுக்கு - மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் நம்மைச் சூழ்ந்துள்ளவையும் நமக்குத் தேவையான வையும் ஆன உலக மொழிகள் அனைத்துடனும் ஆன இருபுற அகராதிகளும் அம்மொழிகள் அனைத்தையும் தமிழ் வழி எளிதில் பயிற்றுவிக்கும் கல்வி நிலையங்களும் இங்கு வேண்டும். இணைய வசதியைப் பரவலாக்கி / பொதுவாக்கி, மொழி பெயர்ப்பாளர்கள் தாம் பெயர்க்கும் மூலமொழி சார்ந்த விளக்கங்களை அறிய இடம் உண்டாக்கி வைத்தல் வேண்டும். பல்கலைக்கழகங்களுக்கு இத்துறையில் உள்ள பொறுப்பு பெரிது. மொழி பெயர்ப்புக்கான இதழ்களும், மொழிபெயர்ப் பாளர்களுக்கான செயலூக்கமுள்ள அமைப்பு களும், சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்குப் பரிசுகளும், முழுநேர மொழிபெயர்ப்பாளர்களுக் கான குறைந்தபட்ச ஊதிய வரைமுறையும் காப்பு ஏற்பாடுகளும் நடப்புக்கு வருவது உடனடித் தேவை யாகும்.  

சிங்கராயர் எனும் மொழிபெயர்ப்பாளர்

அமரந்த்தா

“மொழிபெயர்ப்பு இல்லாவிட்டால் இன்றைய உலகமய உலகம் ஒரு கணமாவது இயங்க முடியாது என்பதும் இன்றைய அறிவியல் - தொழிலியல் - தகவல் பரவல் - ஊடகங்கள் - பாடநூல்கள் அரசியல் - கலை இலக்கியம் என எதுவுமே மொழிபெயர்ப்பு இன்றி நடைபெறாது என்பதும் நடப்புண்மை. ஆனால் மொழிபெயர்ப்பாளருக்கு உரிய மதிப்பு வழங்கப்படுவதில்லை என்பதுதான் சிக்கல்” - சிங்கராயர்.

வெற்றி பெற்றவர், தோல்வி கண்டவர் என்று மனிதர்களை எந்த அடிப்படையில் அடையாளம் காண்கிறது இந்தச் சமூகம்? இந்தக் கேள்விக்கு விடையளிப்பது கடினம். பெரும் செல்வந்தர்களும் அதிகாரத்தில் இருந்து ஆண்டோரும் வெற்றியடைந்தவர் எனலாமா? செல்வத்தைக் கொண்டும், அதிகாரத்தைக் கொண்டும் காய்நகர்த்தி பேரும் புகழும் பெறலாம் - ஆனால், அதுதான் மனிதனின் வெற்றியா? அடுத்தடுத்த தலைமுறையினர் பயனுற வேண்டி இருந்தவிடம் தெரியாமல் கடுமையான சமூகப் பணி செய்து கால வெள்ளத்தில் மறைந்துபோன பலரும் வெற்றி பெற்றவர்கள் இல்லையா? அப்படியானால், சிங்கராயரும் அப்படித்தான். காலம் கடந்து நின்று மக்கள் சிந்தையில் வளமேற்றும் பொதுவுடைமைத்தத்துவத்தின் சாத்தியப்பாடுகளையும், அதன் தாக்கத்தில் உலகில் விளைந்த புரட்சிகர மாற்றங்களையும் விவரிக்கும் நூல்களைத் தமிழுக்குக் கொண்டு வரும் பணியில் சிங்கராயரின் பங்களிப்பு ஏராளம்.

கொள்கைப்பிடிப்பும், மனித குலத்தின்பால் இருந்த நம்பிக்கையும் மட்டுமே அவரைச் செயல்பட வைத்தன. வெற்றிகரமாக வாழ நினைத்திருந்தால் அவர் மொழிபெயர்க்க வேறுவிதமான நூல்களைத் தேர்ந்தெடுத்திருப்பார். ஆனால், ரஷ்யப் புரட்சியும், சீனப் புரட்சியும் பின்னர் கியூப் புரட்சியும் அளித்த நம்பிக்கையின் தெம்பில் அவர் ஏராளமான மார்க்சிய நூல்களை மொழிபெயர்த்தார். இந்தியத்திற்கு எதிரான தேசிய இனப் பிரச்சினைக்கு முன்னுரிமை அளித்த சி.ஆர்.சி. கட்சியில் அவர் நீண்ட காலம் செயல்பட்டார். அவர் மொழிபெயர்த்த நூல்கள் சில மொழிபெயர்ப்பாளரின் பெயர்கூடக் குறிப்பிடப்படாமல் வெளிவந்தன. அக்கால கட்டத்தில் அவர் மொழிபெயர்த்தவையாவும் முக்கியமான அரசியல் நூல்கள்.

தொண்ணூறுகளில் கட்சி அமைப்பிலிருந்து விலகிய பின்னர் மொழிபெயர்ப்பு அவருடைய பிழைப்பிற்கான வேலையாகிப் போனது. பல்வேறு வகையான நூல்களை அவர் மொழிபெயர்க்கத் தொடங்கினார். அப்போது அவர் ஓஷோவின் நூல்கள் பலவற்றை மொழிபெயர்த்தார்.

இந்திய இடதுசாரி சிந்தனையாளர்களான தேவி பிரசாத் சட்டோபாத்யாயா, டி.டி.கோசாம்பி, ஜோதிராவ் புலே, ஆனந்த் தெல்லும்டே, இர்ஃபான் ஹபீப் ஆகியோரது எழுத்துக் களையும் சிங்கராயர் மொழிபெயர்த்துள்ளார். அவரது மொழிபெயர்ப்புகளான உலகாயதம், புரட்சிகர மக்களை ஆயுதபாணியாக்குவது எவ்வாறு, புரட்சிக்குள் புரட்சி, இஸ்லாத்தின் பிரச்சினைகள், சிலுவையில் தொங்கும் சாத்தான் ஆகிய நூல்களை வாசகர்கள் என்றும் நினைவில் கொள்வார்கள்.

‘மொழிபெயர்ப்புக் கலை இன்று’ என்ற தலைப்பில் 2005 ஆகஸ்டில் வெளியான (பாவை பதிப்பகம், தொகுப்பாசிரியர்கள் - அரண முறுவல் & அமரந்த்தா) நூலில் சிங்கராயர் எழுதியிருக்கும் கட்டுரை மொழிபெயர்ப்புத் துறையில் கவனம் உள்ளோர் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை.

“வருமானத்துக்காக ஒரு வேலையில் இருந்து கொண்டு தாம் சார்ந்திருக்கும் கருத்தியல் அக்கறையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து மொழிபெயர்ப்போர் உண்டு. பதிப்பகங்களின் பணியாளர்களாக இருந்து மொழி பெயர்ப்போரும் உண்டு. இந்த இரண்டுவிதக் காப்பும் இல்லாமல் மொழிபெயர்க்க வந்து, ஒரு சீரான வரையறுத்த வருவாயும் தொடர்ச்சியான வேலைவாய்ப்பும் வருங்காலப் பாதுகாப்பும் இல்லாமல் உழலும் என்னைப் போன்றோரும் உண்டு.”

-என்று தனது நிலையை வெளிப்படையாகக் கூறி, அதிகாரத்திலுள்ள தமிழ் மொழி உணர்வாளர்களை அவர் நியாயம் கேட்கிறார். தமிழ்மொழிக்காகக் கடுமையாக உழைத்த தோழர் சிங்கராயர் எந்தவித நியாயமுமின்றி வறுமையிலும் அதனால் ஏற்பட்ட உளவியல் பாதிப்பு களுடனும் வாழ்ந்து அண்மையில் ஜனவரி 25 அன்று அதிகாலையில் தனது 53வது வயதில் காலமானார்.

எவ்விதக் காப்புமின்றி வாழ்ந்த சிங்கராயருக்கு அரவது நற்சார்பு (அவருடைய மொழியில்) காரணமாக பல நண்பர்கள் இருந்தார்கள். நண்பர் சௌந்தரன் நீண்ட காலமாக பொருளுதவி அளித்தும், விடியல் பதிப்பகம் சிவஞானம் தொடர்ச்சியாக மொழிபெயர்ப்புப் பணியை அளித்தும் சிங்கராயரின் சிரமங்களைச் சற்றே குறைத்திருக் கிறார்கள். ஆயினும், அவர் தனது மனைவி ராஜத்தை எவ்விதக் காப்புமின்றி தனியாக விட்டுச் சென்றுவிட்டார்.

சிங்கராயரின் மனைவி கௌரவமாகத் தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள தமிழ் உணர்வாளர் களிடம் நிதி திரட்டி உருவாக்கும் வைப்புநிதியிலிருந்து மாத வட்டி வருமானம் பெறச் செய்வதென முடிவெடுக்கப் பட்டுள்ளது. சிங்கராயர் மனைவி ராஜத்தின் எதிர் காலத்திற்கு நிதியளிக்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

த.வே.நடராசன்,

மனை.எண்.27, 3வது தெரு,

ராஜேஸ்வரி நகர், தையூர் சாலை,

கேளம்பாக்கம் - 603 103

கைபேசி எண் : 9445125379

காசோலை / வரைவோலை மூலம் நிதியளிப்போர் மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். பணம் அனுப்புவோர் பாரத் ஸ்டேட் வங்கியின் கணக்கில் செலுத்தலாம். வங்கி விவரம் கீழே தரப்பட்டுள்ளது.”

A/C NO. 20000390136

D.V.Natarajan

STATE BANK OF INDIA

(04308) - PB, BESANT NAGAR

Pin It