சாதாரண மேம்போக்கான பொதுமொழி நடையை விட வட்டார வழக்கு நடைமொழி ஆழமானது, அது மக்களின் ஆன்மாவிலிருந்து உதிப்பது, அதற்கே என்று ஒரு மொழிச் சிறப்பு உண்டு என்று பேச்சு மொழியில் எழுதப்படும் நடை குறித்து கி. ராஜநாராயணன் குறிப்பிடுகிறார்.  (கோபல்லபுரத்து மக்கள், 2014 பக்.272) தமிழ்த்தாய்க்குச் செட்டிநாட்டில் ஒருமுகம், கொங்கு நாட்டில் ஒருமுகம், சோழ நாட்டில் ஒன்று, நெல்லைச் சீமையில் ஒன்று, கரிசல்காட்டில், தொண்டைநாட்டில், நாஞ்சில் நாட்டில், மதுரை மண்ணில், இன்னும் பல, இப்படி வட்டாரந்தோறும் அவளுக்குத் திருத்தமான முகங்கள் இருக்கின்றன. முகத்துக்கு ஒரு நாக்கு இருக்கிறது. நாக்குக்கு ஒரு பேச்சு இருக்கிறது என்று வட்டார வழக்குகளைக் குறித்தும் எழுத்துவழக்கை நிஜமான நடை அல்ல சக்களத்தி நடை என்றும் குறிப்பிடுகிறார்.  பேச்சு நடையில் பல சௌகரியங்கள் உண்டு. தோன்றுகிற கருத்துக்களைப் பொய்யில்லாமல் பூச்சு இல்லாமல் மொழி அழகு என்கிற பேரில் விருதாச் சிங்காரிப்பு இல்லாமல் அப்படியே தரமுடியும்.  மொழியின் இனிமை பேச்சு நடையில்தான் புலப்படும்.  (கி. ராஜநாராயணன் கட்டுரைகள் 2011, 416)

அவரது மேற்கண்ட கூற்றுக்களுக்குத் தக்கவாறு படைப்பாளர் கி.ராஜநாராயணன் அவர்கள் தாம் படைத்த நாவல், சிறுகதைகளானாலும் சரி, கட்டுரை, கடுதாசிகளானாலும் சரி எல்லாவற்றிலும் பேச்சு மொழியையே பெரிதும் கையாண்டுப் படைப்புகளைத் தந்துள்ளார்.  பேச்சு மொழியில் பிறமொழிச் சொற் கலப்பு அதிகமிருக்குமே.  அதற்கும் அவர் பதில் சொல் கிறார். பிறமொழிகளிலிருந்து உணவு, உடை, வாகனாதிகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைப் பெறுவதைப் போலவே பிறமொழிச் சொற்களையும் பெற்று பயன்படுத்தலாம் என்பது கி.ராவின் கருத்து.  இவையே கி. ராஜநாராயணனின் படைப்பு மொழிக் கொள்கை என்று கொள்ளலாம்.  அவர் கதை சொல்லத் துணியும்போது தேர்ந்தெடுக்கும் மொழித்தேர்வு இதனடிப்படையிலே அமைவதனை அவரது படைப்பு களில் காணமுடிகிறது.  அவரது படைப்புகளில் காணப் படும் வேறு சில நடையியல் கூறுகளை இனி இக் கட்டுரையில் காணலாம்.

எழுத்து ஊடகத்தில் மீக்கூறுகள்

பொதுவாக மீக்கூறுகள் (suprasegmentals)  பேச்சு மொழியிலேயே இடம்பெறுகின்றன. நாம் பேசும் போது இசையோட்டத்தோடே பேசுகிறோம். ஒரே வாக்கியத்தின் இசையோட்டத்தைக் கூட்டியோ, குறைத்தோ, இயல் பாகவோ உச்சரித்து அவ்வாக்கியத்தின் பொருளை வேறுபடுத்திவிட முடியும்.

அவன் வந்தான் (தெரிவித்தல்)

அவன் வந்தான்? (வினாவுதல்)

அவன் வந்தான்! (பயன் ஏதுமில்லை)

இவ்வாறு இசையோட்டம் பேச்சு மொழியில் அமைவதனைக் காணலாம். பேச்சுமொழியில் கதை சொல்லும்போது கி. ராஜநாராயணன் இசையோட்டத்தை எழுத்தில் தருவதற்குச் சில உத்திகளைக் கையாளுகிறார். சொற்களுக்கிடையே இடைவெளி (pause) விட்டு எழுதுவது தான் எழுத்து மொழியின் மரபாகும். ஆனால் சொற்களை அசைகளாகப் பிரித்து அசைகளுக்கு இடையே இடைவெளிகளை விட்டு இசையோட்டத்தை உணர்த்த முயற்சி செய்கிறார் கி. ராஜநாராயணன். அதாவது ஒரே சொல்லை இரண்டாகப் பிரித்தும், சொல்லுக்கு இடையில் புள்ளிகளிட்டும், சொல்லில் வரும் ஒரு மெய்யலியையோ, உயிரொலியையோ (அளபெடையாக) கூட்டியும் இசையோட்டத்தை உணரச் செய்கிறார்.  நல்ல என்ற சொல்லை ந...ல்ல என்றும், சிறிய என்பதனை சிறிய்ய என்றும் தனி என்பதனைத் தனீ என்றும் பல்வேறு உத்திகளைக் கையாண்டு மீக்கூறுகளை கி,ராஜநாராயணன் வெளிப் படுத்துகிறார். சில எடுத்துக்காட்டுக்கள் காண்போம் (கோபல்லபுரத்து மக்கள்)

நல்...ல நல்...ல நிலாவும் லேசான குளிரும் இருக்கணும் (ப.8)

கொஞ்...சம் இன்னும் கொஞ்...சம் (ப.9)

தூர...த்துலெ தூ...ரத்துலெ எங்கோ இவரு மாடு ஞா... என்று (ப.106)

நீ...ளமாக சூத்திரக் கயிற்றை நீ...ளமாக விட்டு (ப.137)

நிறைய்ய செம்பு நிறைய்ய பால் (ப.6)

பெரிய்ய போதையினால் சிவந்த பெரிய்ய கண்கள் (ப.128)

வரீசையாக இப்படி வரீசையாக சொல்லிக் கொண்டே போவார் (ப.95)

சரீ ம், சரீ, பயலே எப்படி இருக்கே (ப.57)

நல்ல என்பதற்கும் நல்...ல என்பதற்கும் இடையே இசையோட்ட வேறுபாடு(intonation variation) உள்ளதனை ஒரே சொல்லைப் பிரித்துக் காட்டி உணர்த்துகிறார்.  இத்தகைய உத்தியைக் கி.ராவின் படைப்புகளில் அதிகமாகக் காணமுடிகிறது.

உச்சரிப்பை எழுத்தில் கொண்டுவருதல்

இரண்டு உயிரொலிகளுக்கு இடையில் வரும் சில மெய்யெழுத்துக்கள் மென்மையாக உச்சரிக்கப்படுவது தமிழ் உச்சரிப்பின் இயல்பு. பகல் என்ற சொல்லை உச்சரிக்கும் போது (pahal) என்று தான் உச்சரிப்போம்.  (pakal) என்று உச்சரிப்பதில்லை, வேகம் என்ற சொல்லை  உச்சரிக்கும்போது (veekah)என்று தான் உச்சரிப்போம் (veekam) என்று உச்சரிக்க மாட்டோம்.  இது தமிழ் மொழியின் உச்சரிப்பு விதி. எழுதும்போது ககரம் போட்டு எழுதி விடுவோம். அதுவேறு. கி.ராவின் கட்டுரையிலிருந்து இதற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தரலாம்.

‘சொல்லும்மா உன் அம்மா பாக்குறதுக்கு

எப்படி யிருப்பா’

குழந்தை பளிச்சென்று பதில் சொன்னது

‘அழஹ்ஹா இருப்பா’

மக்கள் தமிழ் வாழ்க என்ற கட்டுரையில் இவ்வாறு எழுதியுள்ளார்.  (கி.ராஜநாராயணன் கட்டுரைகள் 2002 412) அழகாக என்ற சொல்லை அழஹ்ஹா என்று உச்சரிப்பிற்கேற்ப மாற்றி எழுதிப் புதுமையைப் புகுத்தியுள்ளார்.  இது ஓர் எடுத்துக்காட்டே. அவரது படைப்பு முழுவதும் தேடிப் பார்த்தால் இன்னும் இத்தகைய புதுமைகள் பல காணமுடியும்.

புதிய சந்திவிதி

மரபிலக்கணங்களில் சொல்லப்படாத சந்திவிதி யன்றை கி.ரா தம் படைப்புகளில் பயன்படுத்துகிறார்.  நிலைமொழி ஈற்றில் இரண்டாம் வேற்றுமையோ, நான்காம் வேற்றுமையோ இருக்க வருமொழி முதலில் க, ச, த, ப இடம் பெற்றால் இரண்டுக்கும் நடுவில் க, ச, த, ப மெய்யெழுத்து மிகும் என்பது சந்தி விதியாகும். லகரத்தை ஈறாகவுடைய நிலைமொழிக்குப் பின்னர் க, ச, த, ப ஒற்று மிகுவதில்லை.  லகரவீற்று நிலைமொழியை அடுத்து வல்லொற்று மிகும் சந்தி விதியைக் கி.ரா தம் படைப்பு முழுவதும் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்.  சில எடுத்துக்காட்டுக்கள் (கோபல்லபுரத்து மக்கள்)

ஆடைகளில்ப் படிந்த (ப.21)

கோயில்க் காளையை (ப.43)

மீசைக்குள்த் தெரியாத (ப.55)

வீட்டுனுள்ப் போய் (ப.55)

இந்த சந்திவிதி படைப்பாசிரியருக்கு எங்கிருந்து வந்தது என்பது புரியவில்லை.  மலையாள மொழியின் தாக்கமாக இருக்கலாம் அல்லது பழைய ஓலைச் சுவடிகளில் பின்பற்றப்பட்ட சந்திவிதிகளாகவும் இருக்கலாம்.  இதனையே ஒரு நடையியல் உத்தியாக இருக்கட்டுமே என்றும் நினைத்திருக்கலாம்.

புதிய சொற்சேர்க்கைகள்

ஒரு சொல்லுக்கு இயல்பான அல்லது மரபு வழிப் பட்ட சொற்சேர்க்கைகள் உண்டு.  இதனை ஆங்கிலத்தில் collocations என்று கூறுவர். இலக்கியம் சம்பந்தமான விவாதம் என்றோ உரையாடல் என்றோ கூறலாம்.  எடுத்துக்காட்டாக இலக்கிய அரட்டை என்று கூறுவதில்லை.  இந்த சொற்சேர்க்கை விதிகளை மீறுவ தாகும். படைப்பாளிகள் இத்தகைய சொற்சேர்க்கை விதிகளை மாற்றிப் புதிய புதிய சொற்சேர்க்கைகளை உருவாக்கிச் சொற்களைப் புதிய பொருளில் பயன் படுத்துவர்.  இந்த உத்தியை கி.ரா தம் படைப்புகளில் பெரிதும் கையாண்டுள்ளார்.  கள்ளம் என்ற சொல் கள்ளச்சந்தை, கள்ளச்சாராயம், கள்ளக்கடத்தல், கள்ளநோட்டு போன்ற சொற்களோடு இணைந்து சட்ட விரோதமான என்ற பொருளில் பயன்படுத்தப் படுகின்றது. கி.ரா கள்ளப்பசி என்ற சொல் சேர்க்கையைக் கையாளுகிறார்.  (வேதம் ப.46) சாயந்திரமாகிவிட்டால் வயிற்றில் ஒரு கள்ளப்பசி வரும் என்பது அவர் கையாண்டுள்ள வாக்கியம்.  இன்னொரு எடுத்துக் காட்டைக் காண்போம்.  கடலின் தலைமாட்டில் போய் அமர்ந்தோம் (வேதம். 47). மேற்கண்ட வாக்கியத்தில் தலைமாடு என்ற சொல் சற்று புதிய வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.  தலைமாடு என்ற சொல்லின் பொருள் படுத்த நிலையில் இருக்கும் ஒருவரின் தலையிருக்கும் பகுதி என்பதாகும்.

பெரும்பாலும் உயர்திணைப் பெயர்களோடே இச்சொல் வரும்.  கடலுக்கு ஏது தலையோ காலோ? கடற்கரையைத் தான் கடலின் தலைமாடு என்று கி.ரா கூறுகிறார்.  அதாவது அச்சொல்லைப் புதிய பொருளில் கையாண்டுள்ளார். ராச்சாப்பாடுவரை பேச்சுக் கச்சேரிதான் (வேதம் 46) என்றொரு வாக்கியம்.  பொதுவாகக் கச்சேரி என்ற சொல் பாட்டுக்கச்சேரி, நாட்டியக்கச்சேரி போன்ற சொற்களோடுதான் வரும்.  பேசிப் பேசிப் பொழுதைப் போக்குவதைத்தான் கி.ரா பேச்சுக்கச்சேரி என்ற தொடரால் குறிக்கிறார்.

கடைசியாக இன்னொரு உதாரணம். புதுவை மக்களின் சிநேக மனப்பான்மையைக் குறித்து விவரிக்கும் போது பழகப்பழக அவர்களிடம் அன்பு மினுங்கும் (வேதம் ப.53) என்றொரு தொடரைப் படைத்துள்ளார்.  தங்கம், இரும்பு போன்ற உலோகங்களே மினுங்கும் சக்தி படைத்தவை. காதில் கம்மல் மினுங்கிற்று, தண்ட வாளம் நிலவொளியில் மினுங்கியது போன்ற வாக்கியங் களில் இதனை அறிந்து கொள்ளலாம்.  அன்பு மினுங்கும் என்ற சொற்சேர்க்கை முற்றிலும் புதியது.  வெளிப்படும் என்ற பொருளில் இது வந்துள்ளது.  கி.ரா தமது படைப்புகளில் புதிய புதிய சொற்சேர்க்கைகளை உருவாக்கியுள்ளார்.  இவை படைப்புக்கு அழகியல் சேர்ப்பதோடு மொழிக்கும் வளம் சேர்க்கின்றன.

சொலவடைகள், கதைகள்

கி.ராவின் எழுத்தில் அடிக்கடிக் காணப்படும் ஓர் நடையியல் கூறாகச் சொலவடைகளைக் குறிப்பிடலாம்.  சொலவடைகளைச் சொலவம், சொலவாந்திரம் எனப் பல சொற்களால் குறிப்பிடுகிறார்.  தமிழ்ச் சொல வடைகள் குறித்து ஒரு பொருள் பொதிந்த கட்டுரையும் எழுதியுள்ளார் (2011, 59). சொலவடைகளைத் தனியே வைத்துப் பொருள் காண்பது அரிது என்றும் அவற்றைப் பனுவலில் வைத்துப் புரிந்து கொள்வது எளிதென்றும் அக்கட்டுரையில் விளக்குவார்.  கிராமங்களில் ஊழியம் செய்யும் தோழர்கள் அம்மக்களிடையே புழங்கும் சொலவடைகளை உடனடியாகத் திரட்ட வேண்டும் என்று தம் விருப்பத்தினையும் கி.ரா பதிவு செய்துள்ளார்.  சொலவடைகளுக்குச் சில எடுத்துக்காட்டுக்கள்

  • · எறைஞ்ச நாயக்கர் பெரிய நாயக்கர்
  • · அடிச்ச ஏருக்கும் வார்த்த கூழுக்கும் சரி
  • · அட்டமத்துச் சனி பிட்டத்துத் துணியையும் உரிந்து கொண்டது
  • · ஒழைக்கிறவன் ஒரு கோடி ஒக்காந்து திங்கறவன் ஒம்பது கோடி

பழமொழிகள், சொலவடைகள் போன்றவை பண்பாட்டுச் செல்வங்களாகத் (Cultural Resource) திகழ்கின்றன. அவை மக்களிடையே புழக்கத்தில் உள்ளன. அத்தகைய பண்பாட்டுச் செல்வங்களைப் படைப்பாளிகள் பயன்படுத்திக் கொள்வதில் வியப்பேதும் இல்லை. அவற்றை அறிந்த மக்கள் அவற்றைப் படைப்பில் வாசிக்கும்போது திருப்தியைப் பெறுகின்றனர்.  பழைய தெரிந்த ஒன்றைப் புதிய சூழலில் பார்ப்பது ஒருவித வாசிப்பு இன்பத்தைக் கொடுக்கும்.  இந்த நடையியல் உத்தியை (Inter textuality) என்று குறிப்பிடுவர் நடையியல் ஆய்வாளர்கள். எழுத்தாளர் கி. ரா அவர்களும் இந்த உத்தியைத் தம் படைப்பில் வெற்றிகரமாகக் கையாண்டு உள்ளார்.

அவ்வாறே நாட்டார் வழக்காற்றுக் கதைகளையும் தேவைக்கேற்றாற்போல கதையோடு சேர்த்துப் புதினம் புனைவதையும் ஒரு நடையியல் உத்தியாகக் கையாள் கிறார்.  கி.ரா அண்மையில் எழுதிய வேதபுரத்தார்க்கு என்ற சுயசரிதைப் புதுநாவலில் பல கதைகளை இணைத் துள்ளதைக் காணமுடிகிறது.  அந்தப் பாதையின் நிலா வெளிச்சத்தில் தான் நாங்கள் மூன்று பேரும் நடந்து போய்க் கொண்டிருந்தோம்.  மாரீஸ§ம், ராமசாமியும் ஒரு பாகத்துக்கு முன்னால் நடந்து கொண்டிருந்தார்கள் என்று கதை சொல்லும் போதே நிலவைப் பற்றிய ஒரு கதையைச் சேர்த்துவிடுகிறார்.  நிலவுக்குத் தேய்பிறை ஏன் ஏற்பட்டது என்ற வினாவோடு கதை சொல்லத் தொடங்குகிறார்.  இதுவும் ஓர் நடையியல் உத்தியே. கி.ராவின் தனி முத்திரையாக இதனைக் குறிப்பிடலாம்.

வட்டார வழக்குச் சொற்கள்

வட்டார வழக்கில் புனைகதை படைக்கும்போது வட்டார வழக்குச் சொற்கள் ஏராளமாகப் பயின்றுவரும்.  கதை மாந்தரின் மொழியறிவைப் பிரதிபலிப்பதாகவே வட்டார வழக்குச் சொற்கள் அமைகின்றன.  படைப்பாளிக்கு வட்டார வழக்குச் சொற்களுக்கு நிகரான பொதுச் சொற்கள் தெரிந்திருந்தாலும் நிலம் சார்ந்த மக்களின் மொழியோட்டத்தில் புதைந்துவிட்ட சொற்களோடு வெளிப்படும் அம்மக்களின் மொழிவழியே தான் அவர்களை முழுமையாகத் தரிசிக்க முடிகின்றது.  கதையோட்டத்தைப் பூரணமாகப் புரிந்து கொள்வதற்கு வட்டார வழக்குச் சொற்கள் தடையாகக் கூட இருக்கலாம்.  இவற்றைத் தவிர்த்து எழுதலாமே என்று வாசகர்களை சிலர் ஆதங்கப்படலாம்.  இவை ஒரு பகுதியைச் சார்ந்த சொற்கள் என்று கூட குறை கூறலாம்.  ஆனால் இவற்றைப் பற்றியெல்லாம் கி.ரா கவலைப் படவில்லை.  ஒரு பழந்தமிழ்ப் பாடலை வாசித்துவிட்டு சில சொற்களுக்கும் பொருள் புரியவில்லையே என்று அதனைக் குறை கூறுகிறோமா இல்லையோ முயற்சி செய்து அதனைக் கற்று மகிழ்ந்து போற்றுகிறோ மன்றோ? அவ்வாறுதான் வட்டார வழக்குச் சொற் களையும் கற்க வேண்டும்.  கரிசல் சீமையில் பயன் படுத்தப்படும் சொற்கள் நாவலுக்குப் புதுமை சேர்க்கின்றன.  சில எடுத்துக்காட்டுக்கள்

போகணி: ஆளுக்கு ரண்டு போகணி மூணு போகணின்னு குடிச்சிட்டு (ப.10)

குலுக்கை: கம்மம்புல் எடுக்க குலுக்கைக்குள் இறங்குவதில்லை (ப.32)

எசலிப்பு: அச்சிந்த்தலுக்கும் கிட்டப்பனுக்கும் இடையில் இப்படி வெளியில்த் தெரியாத எசலிப்பு இருக்கிறது (ப.20)

வாப்பாறுதல்: மூணு பேரையும் கொண்ணு தானும் செத்தான் என்று வாப்பாறினர் (ப.25)

வாளித்தல்: கிட்டப்பன் களத்தில் பொலியை வாளித்துக் கொண்டிருந்தான் (ப.31)

அரணிப்பு: பருத்திச் செடிகளின் அரணிப்பு பார்த்துப் பார்த்து சந்தோஷப்படும்படியாக இருந்தது (ப.79)

கி.ரா அவர்களே வட்டார வழக்குச் சொல்லகராதி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.  வட்டார வழக்குச் சொற்களைச் சரியாகப் புரிந்துகொள்ள விஸ்தாரமான ஒரு அகராதி தமிழில் இல்லாதது பெரிய்ய குறை என்றும் குறிப்பிடுகிறார்.  (கோபல்ல கிராமத்து மக்கள் ப.272)

ஒலிக்குறிப்புச் சொற்கள்

ஒலிக்குறிப்புச் சொற்கள் சம்பவம் நடந்த இடத்திற்கே வாசகர்களை இட்டுச் செல்லும் ஆற்றல் படைத்தவை. அவை கண்ணாலும், காதாலும், மூக்காலும், காலாலும் உணரப்படுவது போலவே படைக்கப்படும் சொற்கள்.  அவையும் வட்டாரத்துக்கு வட்டாரம் வேறுபடும் தன்மை வாய்ந்தவை.  படைப்பிலக்கியத்தில் பளிச்சென்று பொருள் உணர்த்தக் கூடியவை.  கி.ரா தம் படைப்புகளில் ஏராளமான ஒலிக்குறிப்புச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்.

நெகு நெகு: அவள் உடம்பு அவன் பார்வையில் நெகு நெகு என்று பளபளத்து (ப.28)

சக்கென்று: படுக்கப்போட்டு மேலே ஏறி சக்கென்று உட்கார்ந்து விட்டான் (ப.190)

கசுபுசு: கசுபுசு கசுபுசு கசுபுசு என்று சன்னமான குரலில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் (ப.170)

மார்மார்: மார் மார்ண்ணு கத்தி சதசதண்ணு

வட்டாரத்தில் காணப்படும் ஒலிக்குறிப்புச் சொற்களோடு ஆசிரியர் படைப்பு நோக்கி உருவாக்கிக் கொண்டே ஒலிக்குறிப்புச் சொற்கள் ஒருமுறை தோன்றி மறைவனவாக இருக்கலாம்.

புதிய சொற்கள்

படைப்பாளிகள் கதை சொல்கிற போக்கில் புதிய சொற்களைப் படைத்து மொழிக்கு வளம் சேர்ப்பர்.  கனிகளை உண்டு களித்த பறவைகள் தங்களை அறியாமலே விதைகளை எடுத்துச் சென்று தாவரங்களை விருத்தி செய்வதைப் போலவேதான் படைப்பாளிகளும்.  படைப்பாளிகள் படைத்த சொற்களில் சில நிலைபெற்று வழக்கில் பெருகும்.  சில சொற்கள் ஈசல் போல ஒரு முறை தோன்றி மறைந்துவிடும். கி.ராவின் படைப்பு களில் புதுப்புதுச் சொற்கள் வருவதைக் காணமுடிகின்றது.  எடுத்துக்காட்டு

இட்லன்: இங்கிலாந்தைப் பிடிக்காம இந்த இட்லன் லேட்டாக்கிட்டே இருக்கானே

ஏரோப்பிளையம்: வெள்ளக்காரன் ஏரோப்பிளையம் கண்டுபிடிச்சதைப் (ப.199)

அசையாத்தனம்: கேப்டனுடைய மௌனம், அசையாத்தனம் மாலுமிகளுக்குக் கோபத்தை உண்டு பண்ணியது (ப.250)

ஒரு கட்டுரையில் கி.ரா எருமைப்பாலன் என்ற தொகைச் சொல்லைப் படைத்துள்ளார்.  அந்தச் சொல்லையும் அதன் பயன்பாட்டையும் அக்கட்டுரையி லிருந்து எடுத்துக் கீழே தருகிறோம்.

கம்மாயில் கொண்டு போய் மாட்டை நீய விடுகிறதோ கழுவுறதோ, உண்ணிகளைப் பொறுக்கி அப்புறப்படுத்துகிறதோ தட்டித் தடவிக் கொடுக் கிறதோ அடேயப்பா? அந்த விஷயத்தில் அவன் எருமைப்பாலன் தான் (கோபாலன் மாதிரி) (கரிசல் காட்டுக் கடுதாசி 2007 ப.124). எருமைப்பாலன் என்ற சொல்லைப் படைத்து எப்படிக் கையாண்டுள்ளார் பார்த்தீர்களா? அவரது எல்லாப் படைப்புகளிலும் இத்தகைய சொற்களைக் கண்டறியலாம் அல்லவா? கதை சொல்கிற வாக்கில் தெலுங்கு சொற்களையும் இடத்திற்குத் தகுந்தாற்போல பயன்படுத்திப் படைப்பில் வெற்றி காண்கிறார்.

அரிசியின் இந்த மணம் கொண்ட ருசிக்கு கம்மங்க என்று தெலுங்கில் சொல்லுவது, தமிழில் இந்த ருசிக்கு எப்படிப் பெயரிட என்று எனக்குத் தெரியவில்லை (கரிசல்காட்டுக் கடுதாசி ப.76)

முடிவுரை

அவரது படைப்பு முழுவதையும் ஒருங்கே வைத்து ஆராய்ந்தால் அவரது புதுமையான நடையியல் கூறுகளைக் கண்டறியலாம்.  தமிழ் வளர்ச்சிக்கு அவரது பங்கு மிகவும் மகத்தானது.

Pin It