சிவப்புகோள் மனிதர்கள் - நூல் விமர்சனம்

செப்டம்பர் 2016 'புத்தகம் பேசுது' மாத இதழில் சிறார் இலக்கிய நூல்களுக்கு விமர்சனமோ அறிமுகமோ கூட செய்வதில்லை என்று தன் ஆதங்கத்தை யெஸ். பாலபாரதி எழுதிய 'சிறார் இலக்கியம் : எதிர்காலம்' என்ற கட்டுரையை வாசித்து முடித்த வேலையில்தான் க.சரவணன் எழுதிய ‘சிவப்புகோள் மனிதர்கள்' என்ற குழந்தைகளுக்கான குறுநாவல் கிடைக்கப் பெற்றேன்.

k saravanan bookஎடுத்த எடுப்பிலேயே அட்டைப்படம் ஆங்கில நாவலை நினைவூட்ட பின்புற அட்டையில் நூலாசிரியரின் விபரக்குறிப்பு மேலும் இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. மதுரையில் உள்ள அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இந்நூலைப் படைத்துள்ளார்.

பெரும்பாலும் பள்ளி ஆசிரியர்கள் நல்ல நூல்களை வாசிப்பதே அரிதாகிவிட்ட நிலையில், இவர் சிறார் இலக்கியத்தைக் கையிலெடுத்து சாதிக்க எடுத்துக் கொண்ட முயற்சிக்கே வாழ்த்துக்கள் பல.

 எளிய நடை, சரளமான சொல்லாடல், யதார்த்தமான கட்டமைப்பு, குழந்தைகளுக்கே உரித்தான புனைவுகள், இடையிடையே கோட்டோவியம் என இக்குறு நாவல் அழகியல் தன்மையுடன் பயணிக்கிறது.

பள்ளி ஆசிரியர் என்பதாலேயே குழந்தைகளின் மொழியையும், சக நண்பர்களுடன் கூடிய உரையாடலையும், அவர்களின் ஆர்வமான கேள்விகளையும், அதற்கு கிடைக்கும் பதிலையும் உயிரோட்டமாய்க் கொடுத்து வாசிக்கும் வேகத்தை கூட்டியுள்ளார்.

அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் அருண் என்ற மாணவன் ‘அடுத்த வாரம் நாங்க கரண்ட் வீட்டுக்கு போறோமே' என்று தொடங்கும் உரையாடலியே அம்மாணவனின் சமூக மற்றும் பொருளாதார பின்புலத்தை ஒளிவு மறைவில்லாமல் அப்பட்டமாய் அச்சில் ஏற்றி விடுகிறார்.

ஏழை பணக்கார ஏற்றத் தாழ்வுகளெல்லாம் மெத்தப் படித்த மேதாவிகளுக்குத்தான் என்பதை அருண், பவித்ரா, பூவரசு மற்றும் லெனின் போன்ற நான்கே நான்கு முக்கியக் கதாபாத்திரங்கள் மூலம் உணர்த்தியிருப்பது இக்குறு நாவலுக்கான பலம்.

இரு வேறு முனைகளான அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரமும், வசதி படைத்தவர்களின் மெட்டீரியலிசமும் குழந்தைகள் மனதை எந்த அளவுக்கு ஆழமாய் ஆக்கிரமிக்கிறது என்பதை முதல் இரண்டு அத்தியாயங்களில் போகிற போக்கில் லாவகமாய் சொல்லிச் செல்வது இக்கதையின் தனித்தன்மை.

                ‘அப்பா.... இன்னைக்கு என் ப்ரண்ட் வீட்டில் தங்கப் போறேன். என்னைத் தேடாதீங்க, நாளைக்கு பத்து மணிக்கு வந்திடுவேன்' என்ற தந்தைக்கும் மகளுக்குமான உரையாடலில் இன்றைய பெண் குழந்தையின் தைரியத்தையும் அவர்கள் விரும்பும் சுதந்திரத்தையும் எவ்வித மிகைப்படுத்தலும் இல்லாமல் எதார்த்தமாய் சொல்லியிருப்பது சிறப்பு.

தன் வீட்டருகில் வசிப்பவர்களை உறவு முறை சொல்லி அழைப்பதையும், புதிய விருந்தினரை கரிசனத்துடன் ‘சாப்பிட்டியாம்மா... வா.... சாப்பிட்டுப் போகலாம்' என்று வரவேற்பதையும் ஏழைகளுக்கே உரித்தான ஒன்றாக பதிவு செய்து அவர்களின் விகல்ப்பம் இல்லாத வாழ்க்கையை கண்முன்னே படம் பிடித்துக் காட்டியுள்ளது இக்கதையின் தனித்துவம்.

குழந்தைகளுக்கு மூன்று விதமான ஆர்வம் தவிர்க்க முடியாத ஒன்றாகவே வெளிப்படுகிறது. ஒன்று பேய் பற்றிய பயம், மற்றொன்று கடவுள் பற்றிய ஆராய்ச்சி, மூன்றாவது வேற்று கிரகவாசி பற்றிய கற்பனை. இம்மூன்றும் இக்கதையின் முக்கிய அம்சமாகவே அமைந்து விட்டது.

வேற்று கிரகவாசி (ஏலியன்ஸ்) நான்கு குழந்தைகளையும் விண்வெளிக்கு அழைத்துச் செல்வதும், செல்லும் வழியில் நம் சூரிய குடும்பத்தின் தகவலையும், செயற்கைக் கோளின் முக்கியத்துவத்தையும் குழந்தைகளின் மனதில் ஆழமாய் பதிய வைக்க முயற்சித்திருப்பது பள்ளி ஆசிரியருக்கே உரித்தான கை வந்த கலை என்பதை அச்சரம் பிசகாமல் மெய்பித்துள்ளார்.

கதையின் இடையிடையே நெகிழிப் பைகளால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் தீங்கு மற்றும் செயலிழந்த செயற்கைக் கோள்களால் விண்வெளியில் சேரும் குப்பை என்று வருங்காலம் எதிர்கொள்ளப் போகும் ஆபத்துக்களை குழந்தைகள் புரிந்து கொள்ளும்படி கதையை நகர்த்தியிருப்பது இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

வேற்றுக் கிரகவாசி (ஏலியன்ஸ்) தன்னை ‘பாரதி' என்று தமிழில் அறிமுகப்படுத்திக் கொண்டு குழந்தைகளை வேற்று கிரகங்களுக்கு அழைத்துச் செல்வது ஆங்கில நாவல்களுக்கு நிகராக நமது குழந்தைகள் புரிந்து கொள்ளும் வகையில் இக்கதை கட்டமைக்கப் பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் கிடைக்கும் கனிம வளங்களையும், ரஷ்ய – ஐரோப்பிய கூட்டு முயற்சியில் உருவாகியுள்ள டிரேஷ் கேஸ் ஆர்பிட்டர் என்ற வாயு ஆய்வுக் களனைப் பற்றியும் குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் கதையை வடிவமைத்துள்ளது வாசிப்பின் விறுவிறுப்பைக் கூட்டுகிறது.

நமது சூரிய குடும்பத்தைக் கடந்து மற்றொரு சூரிய குடும்பத்திற்குள் பயணித்து ரோபார்ட்-2 என்ற புதிய கோளை அறிமுகப்படுத்துவது கற்பனையின் உச்சம் என்ற போதிலும், குழந்தைகள் வானவியல் சார்ந்த தேடல்களுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறது.

இந்நூல் இவரது முதல் புத்தகம் என்று அடையாளப்படுத்திக் கொண்டாலும் அந்த சுவடே தெரியாமல் கதையை விவரித்திருப்பது தற்போதைய சிறார் இலக்கியத்திற்குக் கிடைத்த மற்றொரு சிறந்த படைப்பு என்றே தோன்றுகிறது.

குழந்தைகள் எதை நம்புகிறார்கள், எப்படி கற்பனை செய்கிறார்கள் என்பது புரியாத புதிர். அவர்களின் கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் கதவுகள் இல்லை.

- வே.சங்கர்

Pin It