நாத்திகர்கள் தாங்கள் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில் தொடக்கத்தில் இறைவணக்கப் பாடல் பாடப்படுகிறபோது, எழுந்து நிற்பதைத் தவிர்த்த தில்லை. திரையரங்குகளில் தேசியகீதம் பாட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் முந்தைய ஆணையை விமர்சித்தவர்கள் எல்லோருடனும் சேர்ந்து எழுந்து நின்று மரியாதை செலுத்த மறுத்ததில்லை. மொழியைத் தெய்வநிலைக்கு உயர்த்திப் பார்ப்பது பற்றிய கேள்விகள் உள்ளவர்கள், அவையினரோடு எழுந்து நிற்கும் பண்பைத் தள்ளியதில்லை. ஆனால் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதி... தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்கவில்லை. மடத்திலிருந்து வெளியிடப்பட்ட விளக்கத்தில், “தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து நிற்கும் மரபு இல்லை,” என்று கூறப்பட்டிருக்கிறது. தமிழை ஆலயங்களுக்குள்ளிருந்து வெளியேற்றிய மரபு இதில் இருக்கிறது போலும்.

கடவுள் வாழ்த்துப் பாடப்படுகிறபோது கூட மடாதிபதிகள் அமர்ந்த நிலையில் தியானம் செய் வார்கள், தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் அவ்வாறே செய் திருக்கிறார் என்றும் மடத்தின் விளக்கம் கூறுகிறது. தமிழைக் கடவுளின் நிலைக்கு உயர்த்தி வைத்திருக்கிறார் களாம்! அது உண்மையென நாம் நம்புவதாகவே வைத்துக்கொள்வோம். அப்படியானால் இனிமேல் தமிழகக் கோயில்களின் கருவறைகளில், திருமணப் புரோகிதங்களில், நீத்தாரை மேலுலகம் அனுப்பும் சடங்குகளில் சமஸ்கிருதத்திற்கு மாறாக தமிழே இறைவனுடனான தொடர்பு மொழியாக இருக்கும் என்று அதிகாரப்பூர்வமாகவும் ஆன்மீகப்பூர்வமாகவும் அறிவிப்பார்களோ?

தமிழ் ஒரு நீச மொழி என்று சிறுமைப்படுத்திய பிராமணியக் கோட்பாட்டிலிருந்தே இப்படிச் செய் திருக்கிறார் என்று தமிழ் உணர்வாளர்களும் பண்பாட்டுத் தள அமைப்புகளும் தெரிவித்துள்ள கண்டனம் முழுக்க முழுக்க நியாயமானது. ஆனால் அதையும் தாண்டிச் சென்று பார்க்கலாம்.

தமிழக முதலமைச்சராக அண்ணா பொறுப் பேற்றிருந்த போதுதான் “நீராருங் கடலுடுத்த” பாடலை, அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடி மரியாதை செலுத்தும் புதிய மரபைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது. அவரது மறைவுக்குப் பின் 1970ம் ஆண்டில் இது நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. செய்யுள் இலக்கணத்தோடு அமைந்த அந்தப் பாடலை எவரும் எளிதில் பின்பற்றிப் பாடத்தக்க வகையில் இசை யமைத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன்.

1891ம் ஆண்டில் ‘மனோன்மணியம்’ கவிதை நாடக நூலை வழங்கிய படைப்பாளி பேராசிரியர் சுந்தரனார் எழுதிய அந்தப் பாடல் சற்று விரிவானது. அதில் சில வரிகள் தவிர்க்கப்பட்டன. மற்றவர் மனது புண்படக் கூடாது என்ற பெருந்தன்மை காரணமாக பெரியார் தாம் பங்கேற்கும் வெளி நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் இறைவணக்கம் பாடப்படுமானால், தமது உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் எழுந்து நின்று, மற்றவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்த பண்பு பற்றிப் பலமுறை எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது. மார்க்சிய வாதிகள் உள்ளிட்ட பகுத்தறிவாளர்கள் அனைவரிடமும் இதைக் காண முடியும்.

இந்தப் பண்பு ஏன் காஞ்சி மடாதிபதிகளுக்கு இல்லாமல் போனது என்றோ, காஞ்சி மடாதிபதிகளுக்கு இதெல்லாம் தெரியுமா என்றோ கேட்டுக்கொண்டிருக்க வேண்டியதில்லை. அதெல்லாம் அவர்கள் என்னென்ன வாசிக்கிறார்கள், எந்த அளவுக்கு வாசிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. எதை வாசிக்கலாம் எவ்வளவு வாசிக்கலாம் என்று முடிவு செய்வது அவர்களது உரிமை.

ஆனால், பெ.சுந்தரம் பிள்ளை என்ற பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கல்வியாளர் தனது பாடலில் மேற்கண்ட தவிர்க்கப்பட்ட வரிகளை எழுதியிருந்தார் என்பது நிச்சயமாக அவர்களுக்குத் தெரியும். ‘‘ஆரியம் போல் உலக வழக்கொழிந்து சிதையா” என்ற வரி அக்கறையோடு அகற்றப்பட்டதும் அவர்களுக்குத் தெரியும். அந்தப் பெருந்தகைமையைப் போற்றிட முன்வர வேண்டும். அதற்கு மாறாக, ஆரியம் அல்லது ஆரிய மொழி வழக்கொழிந்து போனதாகச் சொல்லும் அந்த வரியும் சேர்ந்ததுதானே மூலப்பாடல் என்ற வன்மம் மனதில் ஊறிப்போயிருக்கிறது, ஆகவேதான், அந்த வரி அகற்றப்பட்டுவிட்டதால் அந்தப் பாடலுக்கு எதற்காக மதிப்பளிப்பது என்ற எண்ணத்திலிருந்தே. அதற்கு எழுந்து நிற்பதில்லை என்ற மரபைத் தொடங்கி யிருப்பார்கள் என்ற முடிவுக்கு வருவது கடினமல்ல,

தமிழ்வாழ்த்துப் பாடுவது வெறும் சடங்காகி விட்டதே என்பதுதான் கவலைக்குரியது, எத்தனை பேர் அதன் பொருளுணர்ந்து பாடுகிறார்கள் அல்லது வாயசைக்கிறார்கள் அல்லது மௌனமாக நிற்கிறார்கள்? தமிழ்த்தாயை வாழ்த்திவிட்டு, தமிழ் வழிக்கல்வியை வளர்க்க. அவ்வழி கற்றவர்களுக்கான வாய்ப்புகளை விரிவாக்க, அதன் மூலம் தமிழ்வழிக் கல்வி மீதான நம்பிக்கையைப் பெருக்க எத்தகைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன? தமிழகத்தை ஆண்டு வந்திருக்கிற திராவிட இயக்கக் கட்சிகளின் கொள்கைக் கூர்மையின்மை நிச்சயமாக இதில் கடும் விமர்சனத்திற்கு உரியதே. எங்கும் பரவியிருக்கும் ஆங்கிலவழிக் கல்வி நிறுவனங்கள், வீடுகளுக்குள் சர்வ சாதாரணமாகிவிட்ட மம்மி - டாடி - ஆன்ட்டி - அங்கிள் கலாச்சாரம், பொது வெளியில் இயல்பாக இருக்கிற ஆங்கில உரையாடல், சாலைகளில் எங்கும் கடைகளின் முகப்புகளில் ஒளிரும் ஆங்கிலப் பெயர்ப்பலகைகள், இந்தித் திணிப்பு எதிர்ப்பின் உறுதி முன்போல் இல்லை என்ற நிலைமை ஆகியவை இந்த விமர்சனத்திற்கு வலுச் சேர்க்கின்றன.

ஆனால் இதில் மாநில அரசை மட்டும் குறை கூறிவிட்டுப் போவதற்கில்லை. தேசிய மொழிகள் பற்றிய அறிவியல் பார்வையோ சமூக அக்கறையோ இல்லாமல் மத்திய ஆட்சியில் இருக்கிற, ஏற்கெனவே இருந்த கட்சிகளின் இந்தித் திணிப்பு வன்முறைகளை மிக முக்கியமாகக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியாக வேண்டும், மொழிகளின் சமத்துவ உரிமைகளை

நிலைநாட்டுவது நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியத் தேவை. ஒற்றைக் கலாச்சார ஆதிக்க சித்தாந்தத்தைக் கொண்டுள்ள மடங்களும் மடாதிபதிகளும் அவர்களின் அத்துமீறல்களுக்கு வக்காலத்து வாங்குகிறவர்களும் இந்தப் புரிதலைப் புறக்கணிக்கவே செய்வார்கள், புரிந்து கொண்டவர்கள் இதையும் மக்களின் இயக்கமாகப் பரிணமிக்கச் செய்திடப் பாடுபடுவார்கள்.

நன்றி: தீக்கதிர்

Pin It