“முருகன் அவனது சிக்கல் மிகுந்த கூட்டுப்பண்பு காரணமாக எல்லோருடைய தொடர்பிலும் இருக்கிறான். குழந்தைகளுக்கு விளையாட்டுப் பிள்ளையாய் “பாலசுப்பிரமணியன்”; வாலிபருக்கு ஒழுக்கம் மிக்கக் “குமரன்”; அறிஞர்களுக்கு ஞானம் தரும் “ஆறுமுகன்”; வீரர்களுக்குச் “சேனாதிபதி”; மெய்ஞானம் தேடும் பக்தர்களுக்கு “ஞான பண்டிதன்”; இல்லறவாசிகளுக்கு “வள்ளி-தெய்வானை மணாளன்”; துறவறம் பூண்டவருக்குப் பழநியில் உறையும் “ஆண்டி”; இறுதியாக, என்னைப் போன்ற மேலை உலக ஆய்வாளர்கட்கு, ஈடுபாட்டுடன் ஆய்வு செய்யத் தகுந்த பொருண்மை”. (1991:2).

sasikala book on muruganஅறிஞர் கமில் சுவலபில் (1927-2009) அவர்களின் பதிவு மேலே உள்ள வரிகள். இன்றைய நடைமுறையில் உள்ள முருகன் பற்றிய விளக்கமாக இப்பகுதி அமைகிறது. கமில் சுவலபில், தொடக்ககால நமது செவ்விலக்கியப் பிரதிகளில் பேசப்படும் முருகன் பற்றியும் பதிவு செய்துள்ளார். அவை பின்வருமாறு:

1.      இளமையும் அழகும் என்றென்றும் உடையவன்.

2.      வேட்டையாடுவதிலும் போர் புரிவதிலும் விருப்பமுடைய வீரன்.

3.      காதலில் ஈடுபாடுடைய ஆண்மை மிக்கவன்.

4.      இன்னொரு உயிரை தன்னுள் வாங்கிக் கொள்ளும் ஆவேச சக்தி உடையவன்.

5.      செந்நிறத்தவன்.

6.      வேல் கருவியைக் கொண்டுள்ளவன்.

7.      யானை, மயில், சேவல், ஆடு, பாம்பு ஆகிய உயிரினங்களோடு தொடர்புடையவன்.

8.      சூர் எனும் அணங்காக இருப்பவன்.

9.      வள்ளியின் மீது காதல் கொண்டவன். (1991:74)

நமது தொன்மைப் பிரதிகளில் காணும் முருகன் குறித்த கமில் சுவலபில் பதிவுகளை நோக்கிய தேடலாக ஆய்வாளர் கோ.சசிகலா அவர்களின் இந்நூல் அமைகிறது. தொன்மையான மரபாக முருகன் இருப்பதற்கான பல்வேறு தரவுகளை இந்த நூல் பதிவு செய்திருப்பதைக் காண்கிறோம். அவை பின்வருமாறு அமைகின்றன.

-       தொல்பழம் கால கற்கருவிகள் புழக்கத்திற்கும் முருகனுக்குமான தொடர்புகள்

-       கடவுள் எனும் நம்பிக்கையின் தொடர்ச்சியாக அமையும் பெண் தெய்வ வழிபாடு, அதன் தொடர்ச்சியான ஆண் தெய்வ உருவாக்கம் ஆகிய கூறுகளுக்கும் முருகனுக்கும் உள்ள தொடர்புகள்

-       நிலத்தோடு தொடர்புடையவனாக முருகன் கட்டமைக்கப்படும் பாங்குகள்

-       மனித சமூகம், தமது நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் சடங்குகள் விழாக்களாக வடிவம் பெறுதல்; அதில் முருகனின் இடம்

-       தொல்பழம் பதிவுகளாக உள்ள கல்வெட்டுகள் போன்றவற்றில் முருகன் குறித்த பதிவு இடம்பெறும் நிலை

-       பேரரசு உருப்பெறலும் அதில் முருகன் எவ்வாறு கட்டப் பெறுகிறான் என்ற விவரணங்கள்

-       நாட்டார் மரபுகளில் முருகன் இடம் பெற்றிருக்கும் பாங்கு

-       நக்கீரர், அருணகிரியார், குமரகுருபரர் வழி முருகனின் தொடர்ச்சியும் சித்தர் மரபுகளில் முருகனின் இருப்பும்

மனிதன், சமூக விலங்காக உருப்பெறும் தருணத்தில், அவனது முதல் தேவையாக உணவு அமைகிறது. அந்த உணவைச் சேகரிப்பதில் தன்னைச் சுற்றியுள்ள பொருட்களைப் பயன்படுத்திக் கருவிகளை உருவாக்கிக் கொள்கிறான். அந்த கருவிகள் மண், கல், இரும்பு, வெண்கலம் என முதல் நிலையில் அமைகிறது. இந்த கருவிகளைத் தன் கையில் ஏந்தியவனாக, வேட்டையாடி உணவைச் சேகரிப்பவனாக மனிதன் உருவாகிறான். அப்படியான மனிதர்களில் ஒருவனாக முருகன் இருக்கிறான். உணவு சேகரிப்பு என்ற வேட்டைக்குச் செல்லும் போது, சடங்குகளைச் செய்து ஒலி எழுப்புகிறான். அதுவே மந்திரங்கள் ஆகின்றன. மந்திரம் என்பது புனிதமாகக் கட்டமைக்கப்படுகிறது. அந்த புனிதத்திற்குள் கடவுள் உருவாக்கம் பெற்று விடுகிறது. முருகன் கடவுளாகி விடுகிறான்.

முருகன் எனும் தொன்மம் மேலே சொன்னபடி உருவாகி வளர்ந்து வருவதாகக் கருதலாம். தொன்மம்-கடவுள்-புராணம் ஆகியவை தொடர்புடையவை. இதனை முருகன் மூலம் கண்டறிய முடியும். இந்த அடிப்படையில் இந்த நூல் இயங்குவதாக எனக்குப்படுகிறது. அதற்கானத் தரவுகளைச் சேகரித்து, அவற்றை உரையாடலுக்குட்படுத்தும் முயற்சியைக் காண முடிகிறது.

செவ்விலக்கியப் பிரதிகளில் “நெடுவேல்” பற்றிய பதிவுகள் உள்ளன. அந்த வேல் என்பது இன்று உலோக வடிவில் பார்க்கிறோம். அதன் முன்வடிவம் கல்லாக இருக்க வேண்டும். அதனை முருகன் பயன்படுத்தினான் எனும் கருதுகோளை, பல்வேறு தரவுகள் சார்ந்து உரையாடலுக்கு உட்படுத்துகிறது இந்நூல். தமிழகத்தில் பதினைந்து இலட்சம் ஆண்டுகட்கு முன்பே கற்கருவிகளின் புழக்கம் உறுதிப்படுத்தப்படுகிறது. கற்கருவிகளின் கொள்கூடமாகத் தமிழகத்தின் பல பகுதிகள் இருப்பதை தொல்லியல் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இராபர்ட் புரூஸ் ஃபூட் (1834-1913) ஆய்வுகள் தமிழ் மண்ணில் கற்கருவிகளின் பயன்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த நூல் அக்கருவிகள் கிடைக்கும் இடங்கள், அவற்றின் பயன்பாட்டு வரலாறு, மனிதனின் தொல்பழம் வாழ்க்கை, அதில் அவன் கட்டமைத்த வேலன், முருகன் என்ற தொடர்ச்சியாக ஆய்வாளர் நிகழ்த்தும் உரையாடல் சுவையானது. சமூக வரலாறு எவ்வாறு கடவுளர் கருத்தைக் கட்டமைக்கிறது; அதில் முருகன் எவ்வாறு உருவானான் என்னும் கருதுகோள் தொல்லியல் தரவுகள் வழி கட்டமைக்கப்படுவதைக் காண்கிறோம்.

முருகன் “கொற்றவைச் சிறுவ” என்றும் பழையோள் “குழவி” என்றும் அழைக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டு, தாய்வழிச் சமூகத்தின் எச்சமாகவும் முருகனைக் காண முடிகிறது. கொற்றவை தலைமையானது தாய்வழிச் சமூகத்தின் குறியீடு. அதன் தொடர்ச்சியாக, வீரனாக, வேல் ஏந்தியவனாக முருகன் உருவாகிறான். அதன் மூலம் முருகன் தந்தைவழிச் சமூகத்தின் மூலமாக உருப்பெறும் ஏதுக்கள் உருவாகின்றன. இவ்வகையில் தொல் சமூக அமைப்பின் அடையாளமாகவும் முருகன் அமைந்திருக்கின்றான். தமிழ்ச்சமூகத்தின் தொல்பழம் இருப்பை அறியும் தரவாகவும் முருகனைக் கொள்ளமுடியும் என்ற உரையாடலும் இந்நூலில் முன்வைக்கப்படுகிறது. சிந்துவெளியில் கிடைக்கும் முத்திரை வடிவில் அமைந்த சித்திர எழுத்துக்களை வாசிக்கும் முயற்சியில் முருகு ஒரு திராவிடச் சொல்; வளையல் அமைப்புகள், காவடி அமைப்புகள் ஆகிய பிறவற்றை முருகனோடு தொடர்புபடுத்துகிறார்கள் அஸ்கோபர்ப்போலோ (1941- ..), மற்றும் ஐராவதம் மகாதேவன் (1930-2018) ஆகிய பிறர். சிந்து சமவெளி, கற்காலம், செவ்வியல் பிரதிகள் உருவான காலம் ஆகிய அனைத்திலும் முருகன் குறித்தத் தரவுகள் எடுகோள்களாக முன்வைக்கப்படுவதன் மூலம், தமிழ்ச் சமூகத்தின் தொன்மை குறித்த உரையாடல் வலுப்படுகிறது.

செவ்விலக்கியப் பிரதிகள் வழி கட்டமைக்கப்படும் “திணை” எனும் கருதுகோள் தமிழ்ச்சமூக வரலாறு குறித்தப் புரிதலுக்கு அடிப்படையாக அமைகிறது. திணை என்பது அடிப்படையில் நிலம்; மனிதர்கள் வாழும் வெளி. அதில் குறிஞ்சி என்பது, நிலம் உருவாக்க மரபின் முதன்மையான தன்மை பெற்றதாகக் கருதலாம். அந்த நிலத்தின் மனிதர்கள், அவர்கள் உருவாக்கும் கடவுளர்கள், சமூக வரலாற்றுக்கு அடிப்படைத் தரவாக அமைகிறது. குறிஞ்சியின் மாற்றங்கள் தான் முல்லை, மருதம், பாலை போன்றவை. இந்த நிலப்பகுதியின் முதன்மையானவனாக முருகன் கருதப்படுகிறான். வேள், வேலன், வேலன் வெறியாட்டு, குறிஞ்சிக்கடவுள் எனப் பல பரிமாணங்களில் முருகன் அமைகிறான். இத்தன்மை தொல்லியல் ஆய்வுகள், தொன்மங்கள் ஆகிய பிறவற்றின் தொடர்ச்சியாக அமைகிறது. இதன்மூலம் தொன்மையானவன் முருகன் எனும் பதிவு கிடைக்கிறது. இத்தன்மையை இந்நூலின் பதிவுகளில் காண முடிகிறது.

மானிடவியல் ஆய்வுகள் சார்ந்து மனித சமூகத்தில் உருவான குலக்குறியீடுகள் சமூக வரலாற்று ஆய்வுக்குப் பெரிதும் ஏதுவாக இருப்பதைக் காண முடியும். செவ்வியல் பிரதிகளில் இடம் பெறும் குலக்குறியீடுகள் எந்தெந்த வகையில் முருகனோடு தொடர்புடையதாக இருக்க முடியும்? என்ற உரையாடல் சுவையானது. முருகன் என்ற தொன்மம் போர்வீரன், தலைவன், வேள் எனும் அரசன் ஆகிய பல வடிவங்களில் செவ்வியல் பிரதிகள் பதிவு செய்கின்றன. இந்தப் பதிவுகள் அனைத்தும் குலக்குறியீட்டு வடிவத்தில் அமைந்திருப்பதை இந்நூல் பேசுகிறது. சமூக வரலாற்றுக்கு அடிப்படையாக அமையும் “குலக்குறியீடு” எனும் அடையாளம் சார்ந்தும் முருகன் குறித்து அறிய முடிகிறது.

தொன்மையான சமூகத்தின் தொடர்ச்சி என்பது, அச்சமூகத்தின் நம்பிக்கைகளின் வெளிப்பாடுகளில் கண்டறிய முடியும். நம்பிக்கைகளின் வெளிப்பாடுகளே சடங்குகள். அவற்றுள் பல விழுமியங்கள் உள்ளாக அமைந்திருக்கின்றன. விழுமியம் சார்ந்த சடங்குகளின் நிகழ்த்து முறைதான், கொண்டாட்டங்கள் எனும் விழாக்கள். முருகன் என்ற தொன்மையின் கொண்டாட்டமான விழாக்கள், தமிழ்ச்சமூகத்தில் தொடர்வது முருகன் என்ற தொன்மை மரபின் தொடர்ச்சியாகக் காணலாம். “தைப்பூசம்”, ”பங்குனி உத்திரம்” எனும் விழாக்களை அந்த வகையில் இனம் காணும் பாங்கை இந்நூலில் பார்க்கிறோம். இவ்விரு விழாக்களில் காணப்படும் காவடி, அலகு குத்துதல், பலி, சூரசம்ஹாரம் எனும் போர், வள்ளி குறித்தப் பதிவுகள் ஆகிய அனைத்தும் முருகனோடு தொடர்புடையதாக அமைகிறது. இந்த சடங்குகள் அனைத்தும் தொல்லியல் மரபு சார்ந்தவையாகவும் உள்ளன. கற்கால மரபுகள், சிந்துவெளி மரபுகள், செவ்வியல் பிரதிகள் சார்ந்த மரபுகள் ஆகியவற்றின் தொடர்ச்சியாக இருப்பதைக் காண்கிறோம். இவ்வகையில் தமிழ்ச் சமூக வரலாற்றின் மூலத் தரவாக முருகனை எவ்வாறெல்லாம் இனம் காண முடிகிறது. தொல்பழம் கூறுகளைக் கொண்ட ஒரு சமூகத்தின் எச்சங்கள், தொடர்ச்சிகள் சமகால வரலாற்றுப் புரிதலுக்கு எவ்வாறு உதவ முடியும்; அதில் “முருகன்” என்ற தொன்மத்தின் விரிந்து பரந்திருக்கும் பல்வேறு பரிமாணங்களை உள்வாங்க முடிகிறது. இதன் தொடர்ச்சியாகவே அகழாய்வு, கல்வெட்டுப் பதிவுகள் அமைந்திருப்பதைக் காண முடிகின்றது.

செவ்வியல் பிரதிகளில் காணப்படும் சமச்சீரற்ற சமூக அமைப்பு என்பது படிப்படியாக அரச உருவாக்கம் உருவானதை புரிந்து கொள்ள உதவும். இவ்வாறு உருவான அரச உருவாக்க மரபில், பல்லவர் காலம் தொடங்கி, பண்பாட்டுப் பரிமாணங்களில் வைதீக மரபுகள் செல்வாக்குப் பெறத் தொடங்கின. வேத, புராண மரபுகளும் தமிழ் மரபின் தொடர்ச்சியோடு இணைந்து கட்டமைக்கப்படும் சூழல் உருவானது. அந்தச் சூழலில் முருகன் எனும் அவைதீக, இயற்கை மரபு படிப்படியாக மறையத் தொடங்கியது. வைதீக மரபு சார்ந்து முருகன் கட்டமைக்கப்படுகிறான். ஸ்கந்தன், குமரன், சுப்பிரமணியன் ஆகிய பல கூறுகளில் முருகன் எனும் தொன்மம் உருமாறுகிறது. இத்தன்மை குறித்து, இக்கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள பேராசிரியர் கமில் சுவலபில் அவர்களின் பதிவு சொல்கிறது. தொல்பழம் முருகனும், வைதீக முருகனும் குறித்தப் புரிதலுக்கு பேரா.கமில் சுவலபில் அவர்களின் இரண்டு மேற்கோள்களும் நமக்கு உதவுகின்றன. இந்த வரலாற்றின் முதல் பகுதியைப் பற்றிய செய்திகளைச் சொல்லும் இந்நூல், இரண்டாம் பகுதியையும் தொட்டுக் காட்டுகிறது என்று கூறமுடியும்.

தாய்த்தெய்வ வழிபாடு, மூத்தோர் வழிபாடு, வீரர் வழிபாடு, குடித்தெய்வ வழிபாடு என்ற நாட்டார் மரபு சார்ந்த வழிபாடுகளுக்கும் முருகன் எனும் தொல்பழம் மரபு சார்ந்த வழிபாட்டிற்கும் உள்ள உறவுகளையும் இந்நூல் சுட்டிக் காட்டுகிறது.

திருமுருகாற்றுப்படை, பரிபாடல் ஆகியவற்றில் பேசப்படும் முருகன், தமிழ்ச்சமூக வரலாற்றுக் காலம் பொ.ஆ. ஆறாம் நூற்றாண்டு தொடங்கி ஒன்பதாம் நூற்றாண்டு வரை இருக்க ஏதும் உண்டு, இப்பிரதிகள் செவ்வியல் பிரதிகளாகப் பிற்காலத்தில் தொகுக்கப்பட்டவை. செவ்வியல் பிரதி மரபில் இவற்றை முழுமையாக இணைக்க முடியாது. இதில் நக்கீரன் பதிவுகள் முருகன் குறித்த செவ்வியல் பிரதிகளின் தொடர்ச்சியாகவே அமைகிறது. அவைதீக மரபும் வைதீக மரபும் பின்னிப் பிணைந்த மரபாக அமைகிறது. இதன் தொடர்ச்சியாக பதினைந்தாம் நூற்றாண்டில் அருணகிரிநாதரின் பதிவுகள் அமைகின்றன. இதன் அடுத்த தொடர்ச்சியாக பதினேழாம் நூற்றாண்டின் குமரகுருபரர் அமைகிறார். இக்கால மரபை “இரண்டாம் பக்தியுகம்” என்று பேராசிரியர் கா.சிவத்தம்பி (1932-2011) மதிப்பிடுவார். இந்த யுகத்தில் முருகனின் பரிமாணங்கள் வேறு வேறாக வடிவம் பெற்றுவிட்டன. இந்த வரலாறும் சுவையானது.

இவ்வகையில் ஆய்வாளர் கோ.சசிகலா அவர்களின் முருகன் குறித்த உரையாடல் என்பது தொல்பழம் கால மரபில் விரிவான பதிவுகளும் பின்னர் அதன் தொடர்ச்சியையும் பேசும் வகையில் உருப்பெற்றுள்ளது. தமிழ்ச் சமூகத்தின் முதன்மையான தொன்மம் ஒன்றின் பயணத்தைப் பதிவு செய்ததின் மூலம் தமிழ்ச் சமூக வரலாற்றுக்குப் பங்களிப்பு செய்திருக்கின்றார். அவருக்கு வாழ்த்துகளும் வணக்கங்களும். இப்பிரதியை வாசிக்க வாய்ப்பளித்த அவருக்கு எனது நன்றி உரியது.

பயன்பட்ட நூல்கள்

1973. வானமாமலை.நா. தமிழர் பண்பாடும் தத்துவமும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.

1981. Zvelebil.kamil.V. Thiru Murugan உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை.

1991. Zvelebil.kamil.V. Tamil Traditions on Subramanya-Murugan, Institute of Asian Studies, Chennai.

(திருப்பூர் செம்பியன் பதிப்பக வெளியீடாக கோ.சசிகலா எழுதிய தாய்வழிப்படூவும் முருகன் எனும் நூலுக்கான அணிந்துரை)

- பேராசிரியர் வீ. அரசு