விசேஷங்களுக்குப் போகிற பொழுதெல்லாம் துணிமணிகளை எடுத்து வைக்கிற போதுதான் குழப்பம் ஏற்பட்டு விடுகிறது. எதை எடுக்க, எதை வைக்க என்று மனிதன் எல்லாத்திசைகளிலும் வாதப் பிரதிவாதங்கள் எழும். மனம் ஒன்றைத் தேர்வு செய்தால் மூளை அதை மறுதலிக்கும்.

ஆடைகளின் வண்ணங்கள் குழப்பங்களைப் பார்வையில் ஏற்படுத்தும். எந்த மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு எந்த மாதிரியான ஆடை பொருத்தம் என்ற கேள்வி எழும்.

இப்பொழுதெல்லாம் எந்த விசேஷங்களுக்குப் போனாலும் குறைந்தது ஒரு வாரமாவது தங்க நேரிட்டு விடுகிறது. அதிலும் மனைவி வழி உறவு விசேஷங்களென்றால் பத்து நாட்களாவது இருக்க வேண்டிய நிலை. நான்கு ஜோடி ஆடைகள், உள்ளாடைகள், பனியன்கள், ஷு அணிவதென்றால் அதற்கும் இரண்டு ஜோடி காலுறைகள், ஷேவிங் செட், பவுடர், சோப்பு சீப்பு, கண்ணாடி என்று ஒரு கல்யாண வீட்டுச் சாமான்கள் சூட்கேஸில் அடைக்க வேண்டும்.

அடைக்கப்படுகிற சூட்கேஸ்களும் பரிணாம வளர்ச்சி பெற்றுவிட்டன. தாத்தா காசிக்குப் போகும் போது மூட்டை கட்டிப் போனார். மூட்டை கைப்பையாகி கைப்பை டிரங்குப் பெட்டியாகி, டிரங்குப் பெட்டி சூட்கேஸ் ஆகி தோள்களில் சுமந்து செல்ல வேண்டிய நிலை. இப்போது அதுவும் மாறி விட்டது. தூக்கித் தூக்கித் தோள் பட்டையை இழுக்கும் சூட்கேஸ்கள், இப்போது சக்கரப் பெட்டிகள் ஆகிவிட்டன. சொடக்குப் போட்டால் கூடவே வரும் நாய்க்குட்டிகள் போல சூட்கேஸ்களை சக்கரம் கட்டி இழுக்கின்றனர். இருந்தாலும் போர்ட்டர்கள் என்னவோ தலையில் தான் சுமக்கின்றனர். பழைய கால டிரங்குப் பெட்டிகள் இப்போது பரண்களில் பழைய பாத்திரங்களைப் பாதுகாக்கின்றன.

ஆடைகளை எடுத்து வைக்கும்போது தான் திகட்டல் என்றால் வண்ணங்கள் கண்ணாமூச்சி காட்டும். இதற்கு இதுதான் எனப் பொருத்தம் பார்ப்பது ஆடைகளுக்கும் பொருந்தும். பொருத் தங்கள் சரியாக இல்லாத போது கோலங்கள் மாறி வாழ்க்கையும் காட்சிப் பிழைகளாகி விடும்.

கறுப்பு பேண்ட்டுக்கு மஞ்சள் சட்டை, அதிலும் புள்ளி, பூக்கள், கோடுகள் என்று வகை; வெள்ளைச் சட்டைக்கு பிரௌன் மேட்ச் பார்த்து அணிவதே அழகு என்பது ஆடைத்தத்துவமாகி விட்டது. பார்க்கிறவர்களும் முகங்களுக்கு முகமன் கூறுவது கிடையாது.

அணிந்து வருகிற துணியின் நேர்த்தியையும், அழகையும் வைத்துத்தான் வரவேற்பும் வார்த்தை களும், பட்டு வேட்டியும், பட்டுச் சட்டையும், சபாரி டிரஸ்சும் ஆண்களுக்கு என்றால், பட்டுச் சேலையும் பவுன் நகைகளும் சுமக்கும் பெண்களுக்கும் நிகழ்ச்சியில் முதல் வரிசையும் பந்திகளில் முதல் அழைப்பும் என்பது மரபு விதி. ஆள்பாதி ஆடை பாதி என்ற மெய்ப்பொருள் உண்மையாகும்.

பெண்களும் ஆடை அணிதலும் என்பதை வைத்து ஒரு முனைவர் பட்டமே வாங்கி விடலாம். எதற்கு எது என்பது அவர்களால் பார்வையிலேயே தீர்மானிக்க முடியும். எல்லாமே பொருத்தம் பார்த்து அணியும் சில பெண்கள் வாழ்க்கையில் இதைப் பாராது கோட்டை விடுவது புரியாத ஒன்று.

புதிதாக ஆடைகளை அணிந்தபின் வெளியே போகும் போது நமது நடையே நமக்கு அன்னியப் பட்டு விடுகிறது. ஆனால் இதைப் “பந்தா” என்று சிலர் கூறுவது தான் ஏனென்று தெரியவில்லை.

ஆடைகளை அணிவதில் தான் இந்தப் பாடு என்றால் ஜவுளிக்கடைகளில் அதைத் தேர்வு செய் வதற்குள் போதும் போதும் என்று மூச்சுத் திணறி விடுகிறது.

ஜவுளிக் கடைகளெல்லாம் இப்போது ஜவுளிக் கடல்களாகிவிட்டன. விரித்த பாயும் ரேக்குகளில் வரிசைப்படுத்தி வருபவர்களை உட்காரச் சொல்லி எடுத்துக் கொட்டும் ஜவுளிக்கடை. அதன் வாசலி லேயே கழுத்தில் அளவு டேப்புடனும் காதில் பென்சிலுடனும் தையல் மிஷினோடு அமர்ந் திருக்கும் டெய்லர். கிராமங்களில் மட்டுமின்றி நகர்களிலும் தென்பட்ட பழைய துணிக்கடைகள் இப்போது பஸ் நுழையாத பாமரத்தனமான ஊர்களில் கூடக் காண முடியாது. சினிமா நடிகர் விளம்பரங்கள் விற்பனையைச் சூடுபடுத்தும். வெளிநாட்டு மில் தயாரிப்புகள் புன்னகைக்கும்.

நகர்களிலும் பாதிப் பகுதிகள் இப்போது ஆயத்த ஆடை அணியகம், அங்காடி, ஸ்டோர்ஸ், டெக்ஸ்டைல்கள் என்று பெரும் பெரும் ஜவுளி மால்களாகி விட்டன. உயரமான கட்டடங்கள், உள்ளே செல்லத் தானாகத் திறக்கும் கதவுகள், நகரும் மின் படிக்கட்டுகள் வண்ணங்களைத் தூவும் மின் விளக்குகள், சீருடை அணிந்த பணிப் பெண்கள், ஆண்கள், ஒளி வெள்ளத்தில் தொங்கும் துணிகள், தைத்தவை, தைக்காதவை என்று தனித் தனியே காட்டப்படும் ஆடை உலகங்கள், ரேமண்ட், பாம்பே டையிங், விமல் என்று கவர்ச்சியான மில் விளம்பரங்கள் திரையில் ஓடும்.

மதுரையிலும் ஒரு காலத்தில் நூற்பாலை களும், கைத்தறி நெசவுப் பட்டறைகளும் நிறைந் திருந்தன. ஹார்வி மில் என்று அறியப்படும் கோட்ஸ் ஆலை மதுரையின் முக்கிய அடையாள மாக இன்றும் விளங்குகிறது.

இலண்டனில் உள்ள மான்செஸ்டருக்கு நிகராகவும் லங்காஷையர் மில்லுக்கு இணை யாகவும் துணிகள் நெய்யப்பட்டு நாடெங்கும் விற்பனைக்குச் சென்றன. நேரந் தவறாமைக்குச் சான்றாகத் தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றனர். ஹார்விமில் சங்கு ஒலிப்பதை வைத்துத் தங்கள் கடிகாரங்களை மதுரை சரி செய்தது. ஒரு காலத்தில் நீராவியால் ஓடிய மில் பின்னர் மின்சாரமய மானது. நீராவித் தண்ணீர் சுடுதண்ணீர் வாய்க் கால்களாக ஓடி வைகையைத் தழுவியது.

இதன் அருகே ஸ்காட்ரோடையும் மில்லின் வாயிலையும் இணைக்கும் மதுரையின் முதல் சுரங்கப்பாதை புகை வண்டித் தண்டவாளங் களுக்கு அடியே பூமிக்குள் போக்குவரத்தை நடத்தியது. தொழிலாளர்களுக்காகத் தனி ரயிலே விடப்பட்டது. 1990 வரை இது நடந்தது.

ஹார்மிவில் தொழிற்சங்க வரலாறு மிகப் பெரியது. எப்போதும் இதன் அருகே தொழிலாளர் கூட்டங்கள் நடக்கும். மே தினப் போராட்டம், உலகத் தொழிலாளர் எழுச்சிகள், வர்க்க உணர்வு வரலாறுகள் என்றெல்லாம் தொழிற்சங்கத் தலை வர்கள் பேசுவார்கள், வெளிமாநிலத் தலைவர் களும் அடிக்கடி உரையாற்றுவார்கள்.

‘உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்’ என்ற வாசகங்கள் அடிக்கடி ஒலிக்கும். சங்க நிர்வாகிகள் சந்தா, நன்கொடை என்று பார்ப் பவரிடமெல்லாம் இரசீதுப் புத்தகங்களை விரிப் பார்கள். பண்டிகை காலங்களில் போனஸ் கேட்டுப் போராட்டம் நடக்கும்.

ஹார்விமில் தொழிலாளர்களில் பெரும் பாலோர் தெலுங்கு பேசும் நாயுடு சமூகத்தவ ராகவே இருந்தனர். இதற்கு மில் அமைந்திருந்த ஆரப்பாளையம் பகுதியில் இச்சமூகத்தினர் அதிக மாக வாழ்ந்ததுவும், செயல்பட்ட தொழிற்சங்கங் களில் இச்சமூக ஆதிக்கம் நிலவியதும் கூட ஒரு முக்கியமான காரணம் என்று சமூகவியலாளர் கூறுகின்றனர். இதற்கு அடுத்த நிலையில் பிள்ளை மார் சமூகத்தவர் இருந்தனர் என்கின்றனர்.

மதுரையின் தென்பகுதியான பழங்கானத்தத் திற்கும் கிறித்தவர்கள் மதுரைக்கு வந்து முதன் முதலாக கால்பதித்த இடமான பசுமலைப் பகுதிக்கும் இடைப்பட்ட பைகாராவில் மதுரையின் புகழ்பெற்ற பெரிய ஆலைகளில் ஒன்றான மகா லெட்சுமி மில் இயங்கி வந்தது. பல்லாயிரம் பேர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பளித்த இம்மில்லுக்கு வந்து போக பசுமலை ரயில் நிலையமும் மதுரையின் பழைய மையப் பேருந்து நிலையத்திலிருந்து விடப்பட்ட நகரப் பேருந்துகளும் பயன்பாட்டில் இருந்தன.

1934-இல் இம்மில் நிர்வாகம் கடைப்பிடித்த தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் தொழிலாளர் களுக்கும் பொதுமக்களுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தின. இதனால் ஆலைக்கதவுகள் அடைக்கப் பட்டன.

பலகட்டங்களாகத் தொழிலாளர் தலைவர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. அன்று ஆட்சியிலிருந்தவர்களும் மாவட்ட நிர்வாகமும் ஆலை உரிமையாளருக்கு ஆதரவான நிலையைக் கொண்டிருந்தனர்.

போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவதற் கான இரும்புச் சட்டிதொப்பி (மலபார்) போலி சாரும் உள்ளூர்க் காவலர்களும் குவிக்கப்பட்டு பைக்காரா பகுதியைக் குருதி வெள்ளத்தில் குளிப் பாட்டினர். அப்பகுதியில் நடந்து செல்ல வியலாத படி போலீஸ் சட்டம் 30-இன்படி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தண்ணீர் பிடிப்பதற்குக் கூடப் பெண்கள் வெளியே வரமுடியாதபடி அடக்கு முறை நிலவியது.

ரத்த சாட்சிகளாகத் தொழிலாளர்கள் நடத்தி வந்த இப்போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் தோழர் ப. ஜீவானந்தம் தலை மையில் அப்போது நடுத்தர வயதுடையவர்களான தோழர்கள் கே.டி.கே. தங்கமணி, என்.சங்கரைய்யா, ஏ.பாலசுப்பிரமணியன் அப்போது தான் கல்லூரிப் படிப்பை முடித்து வெளியில் வந்த மாணவரும் பின்னால் பெரிய தலைவராக உருவெடுத்தவருமான 25 வயது தோழர் பி.ராமமூர்த்தியும் ஐ.மாயாண்டி பாரதி போன்றவர்களும் தொழிலாளருக்கு ஆதரவாகக் களத்தில் குதித்தனர்.

மதுரை திருநகரில் வசித்து வந்த அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சித் தலைவரும் அருப்புக் கோட்டைத் தொகுதி, சட்டமன்ற உறுப்பினரும் தேசியமும் தெய்வீகமும் இரு கண்களென வாழ்ந்த வருமான பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் தலைமையில் வி.எஸ். கந்தசாமி து.லா.சசிவர்ணத் தேவர், ஏ.ஆர். பெருமாள், சௌடி சுந்தரபாரதி, கண்ணகி நாளிதழ் ஆசிரியர் ஆர். சக்திமோகன் போன்றவர்களும் கலந்து கொண்டனர். இரண்டு கட்சித் தோழர்களும் அண்டை மாவட்டங்களில் எல்லாம் இருந்து தினமும் வந்தனர். மறியல்கள், கைதுகள் என மதுரையில் பரபரப்பாக இருந்தது.

1934 முதல் 1936 வரை தொடர்ந்து கதவடைப் புக்கு எதிராகவும் உரிமைக்காக விட்டுக் கொடுக் காமலும் நடந்த இப்போராட்டம் கடுமையாக நடந்தது. காவல்துறை பலவித பிரித்தாளும் தந்திரங் களைக் கடைப்பிடித்து ஆலை நிர்வாகத்தின் அடி வருடிப் பணியைச் செய்தாலும் தொழிலாளர் மனங்கள் இதைத் தூசிகளாகக் கருதிப் போராடியது. தொழிலாளர்கள் மீது திருப்பரங்குன்றம், மதுரைக் காவல்துறை தினமும் எப்.ஐ.ஆர். பதிந்தனர்.

இப்போராட்டத்தில் “தேவரைத் தூக்கி உள்ளே போட்டால் எல்லாம் முடிந்துவிடும்” என்று அர்த்தமில்லாமல் நினைத்து ஆட்சியாளர்கள் 1935-இல் பசும்பொன் தேவரைச் சிறையில் அடைத் தனர். பொது அமைதியைக் குலைத்ததாக வழக்கு போடப்பட்டது.

தோழர் ஜீவாவும் கே.டி.கே. போன்றவர்களும் அடியாட்களால் தாக்கப்பட்டாலும் அஞ்சாது போராடினர். அடிக்க வந்த காவலரின் பிரம்பைக் கைகளால் பிடித்து தோழர் பி.ராமமூர்த்தி இழுத்தார் என்று வரலாறு தெரிந்தவர்கள் கூறுகின்றனர். மேடைகளில் தோழர் ஜீவாவின் பேச்சு அனலைக் கிளப்பியது.

1936இல் நிர்வாகம் சமரசம் காண முற்பட்ட போது கோரிக்கைகளை முழுவதும் நிறைவேற்றினால் தான் கையொப்பமிடுவேன் என்று தேவர் மறுத்து விட்டார். தோழர் ஜீவாவிடம் “மில் திறக்கட்டும் வெளியே வருவேன்” என்று கூறினார்.

கடைசியில் பசும்பொன் தேவர் சிறையில் இருந்த நிலையில் நிர்வாகத்திடம் ஜீவாவும், கே.டி.கே.யும் பேச்சு நடத்தி சமரச ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். போராட்டம், வழக்குகள் முடிவுக்கு வந்து தொழிலாளர்கள் பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் பெற்றனர். புல்லரிக்கும் புரட்சிகர வரலாறுகள் மதுரையில் தான் நடந்தன என்பது இன்றுவரை மதுரைக்குப் பெருமை.

தேர்தல் நேரங்களில் மதுரையின் தொழிலாளர்கள் முன்னணியில் நிற்பார்கள். தொழிலாளர்களிடையே பிரச்சினை வரும்போது லேபர் கோர்ட், காவல்துறை சுறுசுறுப்பாக இருக்கும். ஹார்வி மில் செய்திகள் என்று நாளிதழ்களில் தனிப்பகுதியே இடம்பெறும். மதுரையின் அரசியல், ஆலைப் பகுதிகளைச் சுற்றியே சுழன்றது.

இன்று உலகமயமாக்கல், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், உற்பத்திப் பிரச்சினைகளால் பிரம் மாண்டமான ஹார்வி மில் இன்று கோட்ஸ் வயல்லாவாகச் சுருங்கிச் சிறிய பஞ்சாலையாகி விட்டது.

ஏ.ஐ.டி.யூ.சி, சி.ஐ.டி.யூ, தேசிய பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம், ஹிந்து மஸ்தூர் சபா, எஸ்.ஆர். வரதாஜுலு நாயுடுவின் மில் தொழி லாளர் சங்கம் என்று கலகலப்பான மதுரை தொழிற்சங்க வரலாற்றில் தி.மு.க.வின் தொ.மு. சங்கம் மிகவும் தாமதமாகவே இணைந்தது. தொழிற் சங்க அரசியலில் தி.மு.க.விற்குத் தொலைநோக்கு கிடையாது. இம்மில் சார்பாக மதுரை லேபர் ஹைஸ்கூல் இயங்கி வருகிறது. இதுவும் இப்போது தள்ளாடுகிறது.

மதுரையின் முக்கிய அடையாளமான மற்றொரு ஆலை மீனாட்சி மில், ஹார்வி மில்லுக்கு நிகராக இயங்கி லாபம் பார்த்தது. இன்று மீனாட்சி மில் அக்ரினி, வசுதாரா அபார்ட்மெண்ட்டுகளாகி விட்டது.

மதுரை கப்பலூர் தியாகராசர் நூற்பாலையும் மதுரை புது ராமநாதபுரம் சாலை சென்டினரி மில்லும் மட்டுமே இன்று இயங்கி வருகின்றன.

மணிநகரம் ராஜா மில், பரவை மீனாட்சி மில், பைகாரா மகாலெட்சுமி மில், தேனூர் மில், திருநகர் செஷையர் மில், விளாங்குடி, வாடிப் பட்டிகளில் இயங்கிய விசாலாட்சி மில்கள், சௌராஷ்டிரா இனத்தவரின் திருநகர் சீதா லெட்சுமி மில், இவைகளெல்லாம் பல்லாயிரம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பளித்து, பிற்படுத்தப்பட்ட வாழ்க்கையை ஸ்திரப்படுத்தி வந்த காமதேனுப் பசுக்களாகும்.

இன்று இவைகளெல்லாம் மடி வற்றிய பசுக்களாகி இதையே நம்பிய மக்களின் வாழ்க்கை களின் நம்பிக்கைகளைச் சிதிலமாக்கிவிட்டன. ஓடியாடி உழைத்த தொழிலாளர்களெல்லாம் பெட்டிக்கடைகள், தேநீர்க்கடைகளை வைப்ப தோடு சம்பளம் தேடி வேறு வேலைகளுக்குச் சென்று விட்டன என்பது சமூக அவலங்களில் முக்கியமானது.

ஆலைத் தொழில்களின் சரிவிற்கு அரசின் கொள்கைகளும் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலான மின்வெட்டும், மாநில மத்திய அரசின் ஏற்றுமதி இறக்குமதிக் கொள்கைகளில் ரிலையன்ஸ் போன்ற “கார்ப்பரேட்”டுகள் நுழைந்ததும் கூட முக்கிய காரணம். புகழ்பெற்ற சென்னை பின்னிமில் இன்று சினிமா ஸ்டண்டு காட்சிகளில் மட்டுமே காணப்படுகிறது.

தமிழகத்தின் பாரம்பரியமான சுங்கடி சேலை, கூறைநாட்டு நெசவுப்புடைவைகள், காஞ்சிபுரம், ஆரணி என்று பட்டு நெசவுகளில் தடம் பதித்த சேலைகள், ஈரோடு, பவானி, வடசேரி வேட்டிகளும் ஜமுக்காளம் துண்டுகளும் மட்டுமல்ல,

மதுரை, சின்னாளப்பட்டி கைத்தறி நெசவுச் சேலைகளெல்லாம் மூலப்பொருள் விலை உயர்வு, தொழிலாளர்களின் ஊதியம், மக்களிடையே வரவேற்பின்மை, மின்சாரத் தட்டுப்பாடு அரசின் கெடுபிடியான சட்டங்களால் “கோ-ஆப்டெக்ஸ்”கள் வாங்கினாலே போதும் என்று தள்ளாடுகின்றன. கைத்தறி நெசவு என்பது தமிழரின் பாரம்பரியச் சின்னமாகும்.

செல்லூர், பாலரெங்காபுரம், முனிச்சாலை, கிருஷ்ணாபுரம், மகால் பந்தடித் தெருக்கள், தவிட்டுச் சந்தைப் பகுதிகளிலெல்லாம் ஒரு கட்டத்தில் ஓடம் ஓடும் நெசவுச் சத்தங்களே கேட்டு வந்தன. தெருக்களிலெல்லாம் அறுக்கப்பட்ட வண்ண மயமான நூல்கள் கிடக்கும். நெசவுத் தொடர் பான பொருட்கள் விற்பனை ஸ்டோர்கள் சுற்றி இருந்தன.

சாயம் ஏற்றுதல், ராட்டைகள் மூலம் சுற்றி டப்பாக்களில் நூல்களை அடைத்தல், தெருக் களில் எதிரெதிராகக் கம்பிகளை நட்டு அதில் நூல் கற்றைகளைப் பிரித்து சிக்கல்கள் எடுத்தல், இந்த நெசவுக் கூடங்களைச் சுற்றி அமைந்த காபிக் கடைகள், உணவு விடுதிகள், வடைக் கடைகள், இத்தொழிலாளிகளைச் சுற்றி மையம் கொண்ட அரசியல் இன்று எல்லாம் சீட்டுக் கட்டு கோபுரம் போலச் சரிந்து விட்டன.

நூலும் பாவுமாக வாழ்க்கையில் நெசவு தவிர வேறெதுவும் தெரியாத கடுமையான உழைப்பாளி களான சௌராஷ்டிர மக்கள் செல்லூர் பகுதி முஸ்லீம்கள், தலித் வாழ்க்கைகளெல்லாம் இன்று வேறு தொழில்களின் கூலி வேலைக்கு மாறி விட்டது காலத்தின் கொடுமை.

ஊருக்கெல்லாம் மானம் காத்தவன் இன்று தமது வாழ்வைக் காக்க தாங்கள் நெய்த துண்டு களையும் வேட்டிகளையும் விற்பதற்குச் சாலை முக்குகளில் தோள்களில் சுமப்பது விளக்குத்தூண் பகுதி அவலங்கள் - பெண்கள் தையல் தொழில், சேலை விற்பனை என்று மாறிக் குடும்பம் காக் கின்றனர். தவணை முறைகளில் சீட்டுக் கட்டி எளிய மக்களும் வாங்குகின்றனர்.

உலகு புகழ் வள்ளுவர் கூட நெசவாளர் தான் என்று கைத்தறி விழாக்களில் மட்டுமே உரை யாற்றுகிற தலைவர்கள் தங்கள், இடுப்புகளில் பாம்பே மில்களைக் கட்டுகின்றனர். சின்னச் சின்ன இழை பின்னி வரும் என்ற பட்டுக்கோட்டை பாடல்கள் விழாக்களில் மட்டுமே ஒலிக்கின்றன.

கைத்தறி நெசவையும் மதுரை மில்களின் தயாரிப்புகளையும் இன்று சூரத், அகமதாபாத், மும்பை மில்களின் துணிகளும் வெளிநாட்டு இறக்குமதிகளும் பிடித்துக் கொண்டு விட்டன. ஓட்டோ, பீட்டர் இங்லாண்ட், அரிஸ்டோ என்ற ஆடம்பரப் பெயர்களின் மோகம் மதுரை இளைஞர் களை மோகினிப் பேய்களைப் போலப் பிடித்துக் கொண்டுள்ளன.

தலை துவட்டுகிற துண்டுகளுக்கும், ஜட்டி பனியன், டி.சர்ட்டுகளுக்கும் மட்டுமே இன்று மக்கள் திருப்பூரை நாடுகின்றனர்.

இன்று ஜவுளி உலகம் தலைகீழாக மாறி விட்டது. குவிந்து தேங்கியுள்ள கோடவுன் சரக்கு களை ஆடித்தள்ளுபடிகளில் மக்கள் அள்ளிக் கொண்டு போகிறார்கள். விற்றவைபோக மீத முள்ளவைகளைப் புதிய இறக்குமதி என்று பண்டிகை காலங்களில் அணிகிறார்கள்.

நகர்மயமாதலின் விளைவு இன்று பெரும் மோகமாகி விட்டது. உள்ளூரிலேயே கிடைத்தாலும் கூட அதையே பெரிய நகரங்களில் வாங்கினால் தான் மக்களுக்குத் திருப்தி.

உள்ளூரின் மஞ்சள் பைகளில் கிடைக்காத கௌரவம் நகரக் கடைகள் கொடுக்கும் கட்டைப் பைகளிலும் சூட்கேஸ், தோல்பைகளிலும் கிடைப் பதான ஒரு நினைப்பு உள்ளூர ஓடுகிறது.

கட்டைப் பைக்கும் அன்பளிப்புப் பொருளுக்கும் வாங்கும் பொருட்களின் விலைகளிலேயே ஒரு மறைமுகப் பிடித்தம் இருக்கிறது என்பதைப் படித்திருந்தும் பாமரர்களாக இருப்பவருக்கே புரியவில்லை.

கண்ணை மயக்கிக் கருத்தைக் குழப்பி எப்படி யாவது வாங்கவேண்டும் என்று தூண்டும் தோற்றங் களுடன் காட்சிக்கு வருகின்றன. ஏழு வண்ணங் களுக்கும் மேலான வண்ணங்கள் உள்ளன. வண்ணங் களிலும் லேசான, அடர்த்தியான, என்ற பிரிவுகள், வாங்கும் தொகைகளுக்கேற்ப அடுக்கி வைக்கப் பட்டுள்ள சேலைகள், ரெடிமேட் ஆடைகள், (ரெடிமேட் சட்டைகளில் உள்பாக்கெட் கிடையாது) குறைந்த சம்பளத்திற்குக் கால் கடுக்க நிற்பது புரிந்தும் கால் வலியை மறந்து புன்னகைத்து வாடிக்கையாளரை வரவேற்கும் அங்காடித்தெரு ஷோரும் பணியாளர்கள். சிறுவர்கள் தொல்லை தராமல் இருக்கக் காட்டப்படும் ஸ்பைடர்மேன், சோட்டாபீம் சுட்டி டிவிக்கள். வருடத்தில் ஒரு நாள் உடுத்துவதற்காக ஐம்பதாயிரத்தில் ஒரு சேலை எடுக்கும் மேட்டுக்குடி மக்கள், முந் நூறுக்குள் என்று கூறைப்புடைவை, சுங்கடி சேலை தேடும் எளிய பாமர மக்கள், ஒரு மீட்டர் ஐந்நூறு ரூபாயா என்று வாய் பிளக்கும் விளிம்பு நிலைச் சிறார்கள், ரம்ஜானுக்கு சேலை எடுக்கும் இஸ்லாமியர், கிறிஸ்துமஸிற்கு ஸ்கர்ட் தேடும் மாணவியர் என்று ஜாதிமத பேதமில்லாத மக்களின் சங்கமம் திகழும் சமரச பூமி ஜவுளிக்கடைகள்.

எப்படியோ ஒன்றை எடுத்து வரும் போது உப தொழில்களாக உள்ளேயே பவுடர், பெல்ட்டுகள், கண்ணாடிகள், சாக்லேட் விற்பனை நடக்கும். கடலைத் தாண்டி விடுபட்டு வெளியே வரும் போது பணப்பை மெலிந்து கைப்பை கனக்கும். எல்லா ஊர்களிலும் ஆடை சார்ந்த தொழில்கள் ஒரே இடத்தில் அமைந்து வருகின்றன. சுற்றிலும் தேநீர் உணவு விடுதி, சிறுவர்களுக்கு பலூன், விளையாட்டுப் பொருட்கள், ஹேர்பின் போன்ற பேன்சிப் பொருட்கள் என்று வணிகங்களால் சாலை பரபரப்பாகும்.

ஒவ்வொரு முறை ஆடைகளைத் தேர்வு செய்யும் போதும் மனதிற்குள் பதுங்கியிருந்த வண்ண ருசி தேடும் மனிதம் ஒவ்வொரு முறையும் வெளிப்பட்டு விடுகிறது. துணிகளில் மட்டுமல்ல மானிட மனம் எல்லா விஷயங்களிலும் வண்ண ருசி தேடுகிறது. ஆண்கள் வாய்விட்டுச் சொல் வதைப் பெண்மை சொல்ல (சிலரால்) முடியாது.

துணிகளில் கறுப்பு என்பது ஒதுக்கப்பட்ட வண்ணமாகக் கருதப்படுகிறது. துக்கங்களும் சோகங்களும் இதன் குறியீடாக உணர்த்தப் படுகிறது. இருந்தாலும் கன்னிச் சாமிகளும் கழக அனுதாபிகளும் இதையே பிடித்த நிறமாக எண்ணுவது ஏனென்று புரியவில்லை. மஞ்சளாடை எப்போதும் மங்கலம் தான். ஆனால் மனிதன் நஷ்டப்பட்டுப் போனால் அவனை மஞ்சள் கடுதாசி கொடுத்தவன் என்று அமங்கலமாகக் குறிப்பிடுவது சரியா என்ற கேள்வி எழுகிறது. ஒரே வண்ணத்திற்கு இரு வேறு பொருள் என்றால் அது மஞ்சள் தானோ?

ஆடைகளைத் தேர்வு செய்த பின் அதை எந்த டெய்லரிடம் தருவது என்ற யோசனை வரும். சிலருக்கு ஆஸ்தான டெய்லர்களே இருப்பார்கள். மதுரை புது மண்டபத்தில் ஒரே இடத்தில் நூறு டெய்லர்கள் இருக்கிறார்கள். குறைந்த கூலிக்குச் சேவை செய்கிறார்கள்.

ஒவ்வொரு டெய்லர் முகத்திலும் சொர்க்கத்தை தீர்மானிப்பவர்கள் நாங்களே என்ற கம்பீரம் தோன்றி நிற்கும். மனிதனின் மறு பாதியைத் தீர் மானிப்பவர்களே நாங்கள் தான் என்ற அசத்த லான பார்வை நம்மீது விழும்.

கடைகளில் எடுத்து வந்து தரப்படும் துணி களின் விலையைக் காட்டிலும் தையற்கூலி இரண்டு மடங்காக இருக்கும். கேட்டால் “உழைக்கணு மில்லே” என்ற பதில் வரும்.

என் வீட்டிற்கு அருகில் தையற்கடை வைத்திருந்தவன் கே.முத்துப்பாண்டி, உள்ளூர் தையல் ஓசித்தையல் என்று வருபவர்களெல்லாம் “என்னப்பா” ஒரு அடி தானே?

இதுக்குப் போய் ரெண்டு ரூபாய் கேக்குறியே? என்று இலவசம் கேட்டதால் மும்பைக்குப் போய் கட்டிங் பழகி இன்று கே.எம்.பி. என்று நகரின் நடுவே பிளக்ஸ் போர்டு வைத்து கடை நடத்தி வருகிறான். மும்பையின் அனுபவம் இவனுக்குத் தையல் அடிப்படை, ஆடைகள் வடிவமைப்பு ஆர்வமோடு விஷயங்கள் என்று அத்துப்படியாகி இருந்தன. ஒரு நாள் மாலை கூறினான்.

“மேல்நாட்டில் ஆரம்ப காலங்களில் இரும்பு வளையம் வைத்த கிரினோலைன், ஸ்கர்ட்டு களுக்கு மேல் நெருக்கமான ரவிக்கை, பின்கோட், சூட், புல்ஷர்ட், கழுத்துப் பாம்பாக நெளியும் டை” என்று தையல் தொழில் வளர்ந்தது. மேலை நாடுகள் முழுவதும் பனிபடர்ந்தவைகள் என்பதால் அவர்கள் ஆடையே கனமான கோட், சூட் தான். அது மட்டுமல்ல இன்று நாம் “சிலாக்” என்று போடு கிறோமே? அது வெள்ளைக்காரன் வாரம் முழு வதும் கோட் சூட் போட்ட அலுப்பை மறைக்க விடுமுறை நாளில் அணிந்த அரைக்கை சட்டை. அவன் ஆங்கிலத்தில் ரிலாக்ஸ்சர்ட்” என்றான். நாம் அதைத் தமிழில் சிலாக் (அரைக்கை) சட்டை என்று வருடம் முழுவதும் அணிகிறோம். ஆடை களைத் தைத்து வாங்குவதில் மட்டுமல்ல, அணி வதிலும் ஒரு கம்பீரம் தெரிய வேண்டும். நமது ஆடைகளில் பழமை மறைந்து வருகிறது. முண்டாசு கட்டிய உழவன் தலையை வெள்ளைக்காரன் தொப்பி பிடித்துவிட்டது.

எனக்கு அவன் சொல்வது வியப்பாக இருந்தது. அரைக்கை சட்டை அணிகிறபொழுதெல்லாம் அது வெள்ளைக்காரனின் விடுமுறைக்கால ஆடை என்ற நினைப்பே எழுகிறது. என் அனுபவத்தில் விருதுநகர் வேலாமடைரோடு சுப்பையா என்ற ரேடியோ டெய்லர் தைத்துக் கொடுக்கும் டவுசர் சட்டைகள் தான் எனக்கு ஆடைகளாக விதிக்கப் பட்டிருந்தன. யூனிபார்ம் டவுசர் தொளதொள வென்று இருக்கும். அரைஞாண் கயிற்றால் இறுக்கி இருப்பேன். ஆறாவதில் போட ஆரம்பித்த அந்த டவுசர் சட்டைகள் மேலும் ஐந்து வருடங்கள் உபயோகத்தில் இருந்தன.

டவுசரில் இடுப்பு உட்புறம் கள்ளப்பாக்கெட் தைத்துக் கொடுப்பார். வீட்டில் எடுக்கும் காசுகள் அதில் குடி புகுந்து கனக்கும். சட்டை டவுசர்கள், பின்னி மில் துணியால் ஆனதால் உறுதியாக இருக்கும். சட்டைகளும் லாங்கிளாத், பாப்ளின், டெரிலின், டெரிகாட்டன், முழு சதவீத காட்டன் என்று பரிணாம வளர்ச்சி பெற்று விட்டன.

பாவாடை, தாவணி அணிந்தவர்கள் சுடிதார், கம்மீஸ் அணிவதும் வயதான பெண்கள் “நைட்டி” அணிந்து வருவதும் இன்று காலத்தின் கோலமாகி விட்டது. உள்ளாடைகள் அணியாமல் சில பேரிளம் பெண்கள் லேசான நைட்டிகள் அணிந்து வரும் போது “நைட்டியைத் தடை செய்யத் தீர்மானம் போட அரசு முன் வருமா? என்ற கேள்வி எழும். சிறு பிள்ளைகள் பாவாடை, சட்டையில் தான் அழகாக இருக்கின்றனர்.

டெய்லர்கள் பெண்களை அவர்களின் ஆடை அணிவதை வைத்தே தீர்மானிக்கலாம் என்கின்றனர். ஒரு தடவை கொல்காத்தாவிலும், மும்பையிலும், கூவாகம் திருவிழாவிற்கும் வந்த திருநங்கைகளின் ஆடை நேர்த்தியை இப்போதும் மறக்க முடிய வில்லை. ஆடை அணிவதை ஒரு தவமாகவும், கலையாகவும் கடைப்பிடிப்பதாகக் கூறிய அவர்கள் தங்களின் பெண்மையை வெளிப்படுத்துவதே தங்கள் ஆடைகளும் அவற்றைத் தேர்வு செய்யும் விதமும் தான் என்று கூறினர்.

ஆடையைப் பற்றியும் அழகு குறித்தும் கவிஞர் கண்ணதாசன் கூறியது நினைவுக்கு வருகிறது. வடநாட்டுப் பெண்கள் போல் முற்றிலும் மூடியும் மலையாளப் பெண்கள் போல முழுக்கத் திறந்தும் இருக்காமல் தமிழ்ப்பெண்கள் போல மூடியும் மூடாமலும் அணிந்து அழகு காட்டுவதே ஆடை என்பார்.

துணிகளைச் சோப்புப் போட்டு ஊறவைத்து கல்லில் துவைக்கும் போதும் துவைத்தவைகளைப் பிழிந்து உதறிக் காயப்போடுவதும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடற்பயிற்சியாக இருந்தது. இப் போது வீரியம் மிகுந்த ரசாயனக் கலவைப் பொருட் களாலும் வாஷிங்மெஷின் உபயோகத்தாலும் “துணி துவைக்கச் சோம்பல்” பெருகிவிட்டது. துணிகளும் விறைப்புத்தன்மை இழந்து கிழிசல்கள் பெருகிவிட்டன. எங்கள் தெரு சலவைக்காரச் சகோதரர் ஒரு துணியைப் பார்த்த மாத்திரத்தி லேயே வாழ்நாளைக் கூறிவிடுவார்.

பேருந்துப் பயணத்திற்கு வேட்டி தான் சிறந்தது என்பதால் எப்போதும் பேருந்தில் ஏறியவுடன் முழுக் கால் சட்டையைக் கழற்றிவிட்டு வேட்டியைக் கட்டிவிடுவேன். நெருடல் இல்லாத, காற்றோட்டமான ஆடைகளைக் கண்டுபிடித்தவன் தமிழன் தான்.

வெட்டிய ஆடையை வேட்டி (வட்டுடை) என்றும், துண்டிக்கப்பட்ட துணியைத் துண்டு என்றும், சேயிழை ஆடை (பெண்கள்)யைச் சேலை என்றும், மேல்சட்டையைக் குப்பாயம் என்றும் கண்டுபிடித்த தமிழன் ஆடைகள் பற்றியும் விசாலப் பார்வை கொண்டிருந்தான். தமிழனின் ஆடை ஞானம் ஆரோக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது.

கந்தையானாலும் கசக்கிக் கட்டி வெள்ளுடை மனிதனாக வாழ்ந்தவன் தமிழன். ஆனால், இன்று வெள்ளைப் பேப்பரிலேயே எல்லாமும் முடித்துக் கொள்ளும் வெள்ளைக்காரனின் ஜீன்ஸ் தார்ப்பாய் துணிகளிலான பர்முடாஸ். ஜீன்ஸ் என்று அணிகிறோம். தண்ணீரில் நனைத்தாலும் நனையாத துணி என்ற விளம்பரங்கள் வேறு.

இன்று ஜீன்ஸ் துணிகளால் மலட்டுத்தன்மை, இறுக்கமான மார்பக ஆடைகளால் புற்றுநோய் என்று மானங்காக்கிற ஆடைகளால் நோய்கள் பெருகுகின்றன என்று கண்டுபிடிப்புகள் கூறுகின்றன. பெரும்பெரும் அறிஞர் பெருமக்களும் மாணவர்கள்போல இன்று ஜீன்ஸ் அணிவதாகக் கூறுகின்றனர்.

என்னதான் ஆயிரக்கணக்கில் செலவுசெய்து ஆடைகள் தைக்கத் துணி எடுத்து நூற்றுக்கணக்கில் செலவு செய்து தைத்து அணிந்தாலும்கூட அது புகைப்படத்திற்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம்.

ஆனால் நினைத்தபோது சப்பணம் கொட்டி உட்காரவும், காற்றோட்டமாக முழங்காலுக்கு மேல் ‘டப்பா’ கட்டு ஆக மடித்துக்கட்டி நடக்கவும் சுகமாக இருக்கிற ‘நான்குமுழம்’ வேட்டிக்கு இணையாக ஒரு ஆடைச்சுகம் வேறு எதிலும் இல்லை.

Pin It