தலைவரவர்களே! தோழர்களே!!

இன்று இந்த ஆண்டு விழாவில் நானும் ஏதோ சில வார்த்தைகள் பேசவேண்டுமென்பதாக தலைவர் அழைக்கிறார். நேரம் அதிகமாய்விட்டது நானும் பேசவேண்டியிருக்குமென்று கருதவே இல்லை. அதோடு என்ன பேசுவது என்பதும் இன்னமும் முடிவு செய்யவில்லை. ஆனபோதிலும் ஒரு 10 நிமிஷம் “சுதேசி வர்த்தகம்” என்கின்ற தலைப்பைப் பற்றிப் பேசு கிறேன். ஏனெனில் இந்த ஆண்டுவிழா சுதேச வர்த்தக சங்க ஆண்டுவிழா வாதலால் அதையே தலைமையாய் வைத்து பேசுகிறேன்.

தோழர்களே சுதேசி வர்த்தகம் என்பதில் இரண்டு வார்த்தை இருக் கிறது. அதாவது ஒன்று சுதேசி, மற்றொன்று வர்த்தகம்.

சுதேசியம்

இதில் முதலில் சுதேசியம் என்பதைப் பற்றி பேசுகிறேன். சுதேசியம் என்பது ஒரு அருத்தமற்றதும், சுயநலம் நிரப்பிய சூட்சியால் கற்பிக்கப்பட்டது மான வார்த்தை என்பது எனது அபிப்பிராயம். ஏனெனில் தேசீயம் என்ப தையே புரட்டு என்று வெகு நாளாக நான் சொல்லி வந்திருப்பது உங்களுக்குத் தெரியும். தேசீயம் தேசாபிமானம் என்பவைகளைப் பற்றி பல அறிஞர்கள் மிகக்கண்டித்தும், இழித்துக்கூறியும் எழுதி இருக்கிறார்கள். தேசாபிமானம் என்பது ஒருமனிதனுக்கு அவன் பிழைக்கும் மார்க்கத்துக்கு கடைசியான அயோக்கியத்தனம் என்று ஒரு அறிஞர் கூறி இருக்கிறார். இப்படி இன்னும், பலரும் கூறி இருக்கிறார்கள். இப்படி பலர் பலவிதமாக கூறி இருந்தாலும் என் அனுபவத்தில் இந்த அபிப்பிராயங்கள் பிரத்தியட்ச ருஜுக்களால் பலப்பட்டு வருகிறதை பார்க்கிறேன்.

periyar annaநிற்க சுதேசியம் என்பதற்கு எல்லை எது என்பதை முதலில் யோசித்துப் பாருங்கள். பரந்த உலகத்தில் பல கோடி மக்களின் வாழ்க்கை சம்மந்தப்பட்ட விஷயங்களில் நாம் எந்த அளவுக்கு என்ன வித்தியாசத்தின் மீது தேசங்களை பிரிப்பது என்பதை யோசித்துப்பாருங்கள். இந்தியாவை மாத்திரம் ஒரு தனி தேசம் என்று எந்தக் கணக்கின் மீது பிரித்துக் கொள் ளுவது? இந்தியாவும் ஒரு காலத்தில் 56 தேசங்கள் சேர்ந்ததாக இருந்து ஒரு தேசத்திற்கும், மற்ற தேசத்திற்கும் சண்டையும், வேற்றுமையும் இருந்துதான் வந்திருக்கிறது. பூகோள அளவுப்படி நமது சென்னை மாகாணத்தை எடுத்துக் கொண்டு பாருங்கள். தமிழ்நாடு, ஆந்திரதேசம், கேரள நாடு, கர்னாடக தேசம் என 4 பெரிய பிரிவுகளாகவும் பாஷைகளாகவும் பலவேறுபட்ட ஆச்சார அனுஷ்டானங்களையும் வேறுபட்ட நடை, உடை, பாவனைகளையும் கொண்டிருப்பதோடு ஒருவருக்கொருவர் வேற்றுமை உணர்ச்சி கொண்டே இருக்கிறோம். அன்றியும் அவரவர்களுக்கு தங்கள் தங்கள் நாட்டின் அபிமானமே இருந்து வருகின்றது.

மதத்திலும் இந்தியாவனாது பல மதங் களையும், பல உள் மதப்பிரிவுகளையும் கொண்டதாகவே இருந்து வருகிறது. பாஷாபிமானத்தின் மூலம் ஒன்றுக்கொன்று மாறுபட்ட உணர்ச்சியும், மதாபிமானத்தின் மூலம் ஒன்றுக்கொன்று வேறுபட்ட உணர்ச்சியும் வெளிப்படையாய் தாண்டவமாடுவதை யாராவது இல்லை என்று சொல்ல முடியுமா? இந்த நிலையில் தேசியம் என்பதில் என்ன உண்மை இருக்கிறது. ஆனால் இது சமயம் பேசப்படும் சுதேசியம் என்பது வர்த்தகத் துறையைப் பொருத்ததாகவே இருக்கிறது. ஆதலால் வர்த்தக சுதேசியத்தைப் பற்றியே பேசுவோம்.

வெறும் சுதேசியத்தை ஆதாரமாய் வைத்து நடத்தப்படும் வியாபாரத்தில் பொதுஜனங்களுக்கு என்ன லாபம் ஏற்படக்கூடும். தேசீயத்தை ஆதாரமாய் வைத்து நடத்தும் வியாபாரமும், தேசியத்தை ஆதாரமாய் வைத்து நடத்தும் அரசியலும் நாட்டுக்கு எவ்வித பயனும், முன்னேற்றமும் அளிக்கத் தக்கதாய் இருக்காது. அதில் ஈடுபட்ட சிலருக்கு தனிப்பட்ட சுயநலம் உண்டா கலாம். ஆனால் அதில் சிறிதும் நாணையம் கூட இருக்க முடியாது.

உதாரணமாக சுதேசியக் கூப்பாடு போட்டு வெகுபணம் செலவு செய்து சுதேசியப்பிரசாரம் செய்து பதினாயிரக்கணக்கான மக்களுக்கு தேசிய வெறியை உண்டாக்கிய இன்னாட்டில் உத்தியோகம், பத்திரிகை முதலியவை கள் எல்லாம் தேசியத்தையே பிரசாரம் செய்து வந்தும் நமது நாடு இன்று எல்லாத் துறையிலும் மதம், ஜாதி, வகுப்பு, அரசியல், தொழில், கல்வி, கலை, ஞானம், நாகரிகம் முதலிய எல்லாக் காரியங்களும் பரதேசத்தில் மூழ்கிக் கிடக்கின்றது என்பதை நான் சொல்லாமலே அறிவீர்கள். இதற்கென்ன காரணம் பரதேசத்தின் ஆதிக்கம் என்றோ, பரதேசிகளின் சூட்சி என்றோ, வலிமை என்றோ சொல்லி விட்டால் போதுமா?

பரதேசம் ஒன்று இருக்கின்றது என்று தெரியாத காலத்திலும் பரதேச விஷயங்கள் நமக்கு எட்டுவதற்கு மார்க்கமில்லாதிருந்த காலத்திலும் எல்லாம் சுதேசமாகத் தான் இருந்து இருக்கும். அப்படி இருந்த இந்த நாடு இன்று ஏன் பரதேசியத்தால் கவரப்பட்டுக் கிடக்கிறது? சுதேசியம் என்கின்ற அபிமானத்தை மாத்திரம் கட்டி அழுதோமே அல்லாமல் பரதேசியம் வந்து புகாமல் இருக்கத் தகுந்த மாதிரி நடந்து கொள்ள நமக்கு யோக்கியதை யில்லாமல் போய் விட்டது. நமது சுதேசியம் நமது முற்போக்கையும் அறிவு விர்த்தியையும், புதுமையையும் தடைப்படுத்தி விஷயங்களுக்கு புதிய குணவிசேஷங்களை உண்டாக்க மார்க்கமில்லாமல் போய் விட்டது.

இன்றும் கூட மேல் காட்டிய எல்லாத் துறைகளிலும் சுதேசியத்தைவிட பரதேசியமே பெரும்பாக மக்களால் மதிக்கப்படுகின்றது. ஆனால் தனிப்பட்ட கூட்டத்தார்களின் நபர்களின் நன்மைக்கே சுதேசியம் பெரிதும் பேசப் படுகின்றது.

“செட்டி முடுக்கா, சரக்கு முடுக்கா என்பது பழமையானதும், அர்த்த புஷ்டியுமுடையதான ஒரு பழமொழி.

சரக்கு முடுக்காய் இருக்குமானால் சுதேசியம் பேசவேண்டியதே யில்லை. சரக்கை பழைய நிலையிலேயே வைத்துக் கொண்டு சுதேசியம் பேசுவது செட்டி முடுக்கில் காரியம் சாதித்துக் கொள்ள நினைப்பதையே ஒக்கும். அதுபோலவே தான் ஒவ்வொரு துரையிலும் மதம், கல்வி, அரசியல், கலைஞானம், வியாபாரம் தொழில் ஆகிய ஒவ்வொரு துரையிலும் நாம் சரக்கு முடுக்காக்க வேண்டும்.

நல்ல வஸ்துக்களை நல்ல கொள்கையை நயமான வழியில் பயன் படும்படி செய்ய வேண்டும். அப்போது பரதேசியம் தானாக பரந்தோடி விடும் அதில் கவலையில்லாமல் இருந்தால் ஒரு நாளும் சுதேசியம் வெற்றி பெறாது.

இது தவிர சுதேசியத்தில் மற்றொரு சூட்சி என்ன வென்றால் சுதேசியத் திற்கு யந்திரம் கூடாதாம்! இது எவ்வளவு பித்தலாட்டமான யோசனை. இன்று உலகில் மக்கள் யாராவது எந்தத் துறையிலாவது யந்தீரத்தை உபயோகிக்கா மல் இருக்கிறார்களா? யந்திரம் என்றால் என்ன அருத்தம்? அறிவு, பிரயோகம் அல்லது (புரோகிரசிவ்) முன்னேற்றம் என்றுதானே பொருள். அறிவுப் பிரயோகமும், முன்னேற்றமும் வேண்டாம் என்று எந்த மனிதனாவது சொல்ல முடியுமா? தவிரவும் யந்திர பயன் என்ன என்று பாருங்கள். யந்திர மானது மனிதனுடைய சரீரக் கஷ்டத்தை - நேரக்கேட்டைக் குறைக்கிறது என்பதில்லாமல் அது வேறு என்ன கெடுதி செய்கின்றது, யந்திரத்தின் பயனை மக்கள் அடையவொட்டாமல் எவனோ ஒரு அயோக்கியன் (முதலாளி) கொள்ளையடிக்கிறான் என்றால் அதற்கு யந்திரத்தை ஒழிப்பதா? அல்லது அந்த முதலாளியை ஒழிப்பதா என்பதை யோசித்துப்பாருங்கள்.

அன்றியும் இன்று யந்திரத்தை பகிஷ்காரம் செய்து அதற்கு பதிலாக என்று உபயோகிக்கப்படும் கைராட்டினம் யந்திரமா அல்லவா? ஒரு கைராட்டினத்தில் ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 1500 கெஜம் நூல் நூற்பதாக வைத்துக்கொள்ளுங்கள். இந்த 1500 கெஜ நூலையும் ராட்டினத்தை உடைத்து அடுப்பு எறித்துவிட்டு வெறுங்கையால் நூற்பதாய் இருந்தால் ஒரு ஆள் தினம் ஒன்றுக்கு 15 கெஜம் நூல்தான் நூற்க முடியும். அப்படியானால் ஒரு ராட்டினம் ஒரு நாளில் ஒரு ஆளால் நூற்கப்படும் 1500கெஜ நூலை 100 ஆளைக் கொண்டு வேலை செய்யச் சொல்லலாம் அல்லவா? இந்த கை ராட்டினம் 100பேருடைய வேலையை கெடுத்துவிடுகிறதல்லவா? ஆதலால் ராட்டினத்தையும் அடுப்பெரித்து விட்டு ஏன் கையினாலேயே நூற்கச் சொல்லக் கூடாது என்று யோசித்துப் பாருங்கள்.

யந்திரத்திற்கும், கைத்தொழிலுக்கும் வியாக்கியானம் சொல்ல காந்தி ஒருவர் தான் பாஷியக்காரரா என்று கேட்கின்றேன். அப்படிப்பட்ட காந்தி யாரே புதிய முறையில் ராட்டின யந்திரம் கண்டுபிடிக்க ஒரு லட்ச ரூபாய் பரிசு கொடுப்பதாக அறிக்கை இட்டு இருக்கிறாரே அதற்கு பெயர் யந்திரம் அல்லவா?

தோழர்களே! இந்த மாதிரி சுதேசியமெல்லாம் முதலாளிகள், ஆமதாபாத் முதலாளிகள் பிழைக்க சூழ்ச்சியே ஒழிய வேறில்லை.

வியாபாரம்

இது சமயத்தில் வியாபாரம் என்பதைப்பற்றியும் சில வார்த்தைகள் பேசுகிறேன்.

வியாபாரம் என்பது பொதுஜனங்களுடைய நன்மைக்காக பொதுஜன சௌகரியத்துக்காக ஏற்பட்டது. அதாவது ஒரு குடும்பத்தார் அக்குடும்பத் திலுள்ளவர்கள் ஆளுக்கொரு தொழிலை சமமாக எடுத்து உழைத்து சமமாக பயன் அடைவது என்கின்ற தத்துவத்தில் ஏற்பட்டதே தவிர வேறில்லை.

ஆனால் நாம் எப்படி வியாபாரத் தொழிலை நடத்துகின்றோம். பயிரிடு கின்றவன் கஷ்டம் எவ்வளவு? அதைப் பண்டமாக்கி, வஸ்துக்களாக்கி வைக்கிற தொழிலாளியினுடைய கஷ்டம் எவ்வளவு? அதை மக்களுக்கு சுலபத்தில் கிடைக்கும்படி கொண்டு வந்து சேர்க்கும் கூலியாளுடைய கஷ்டம் எவ்வளவு? இவற்றை யெல்லாம் கஷ்டப்பட்டு செய்த பின்பு கடையில் கொண்டு வந்து வைத்து விலை சொல்லி எடுத்துக் கொடுக்கச் செய்தும் பணத்தை வாங்கி பெட்டியில் போடச் செய்வதுமான வியாபாரியுடைய கஷ்டம் எவ்வளவு? முற்கூறியவைகளில் 100ல் ஒரு பங்கு கஷ்டம் இந்த வியாபாரிகளுக்கு உண்டா? என்று பாருங்கள், ஆனால் ஊதியம் அடைவதில் மேல்கண்ட முதல் மூன்று பாட்டாளிகளைவிட 100 பங்கு அதிகமான ஊதியத்தை வியாபாரி என்கின்ற முறையில் அடைகிறான். 10 வருஷத்தில் ஒரு வியாபாரி லட்சாதிபதி ஆகி விடுகிறான். அவன் வீடுவாசல் அனுபவங் கள் எப்படி உயர்ந்துவிடுகிறது என்று பாருங்கள். காரணம் என்ன? வியாபாரம் என்கின்ற தொழில் அவ்வளவு கொடுமையான தொழில். அதாவது திருடன் மற்றவர்களை பணம் அபகரிப்பதுபோல் வியாபாரியும் மற்ற ஜனங்களை வஞ்சித்து பணம் சம்பாதிக்கிறான் என்பதேயாகும். ஆதலால் இன்றைய வியாபார நிலை அழிக்கப்படவேண்டிய தொன்றாகும்.

வியாபாரத்தில் நாம் உண்மையான சுதேசியத்தை விரும்பி அது இந்த நாட்டு மக்களுக்கு பயன்படத்தக்க வழியில் சுதேசியமாக்கவேண்டும் என்று இருந்தோமேயானால் கடைசியாக இன்றைய வியாபார முறையை அழித்து முன்காலத்தில் இருந்ததாகச் சொல்லப்படும் பண்டமாற்ற முறையை புதுப்பிக்க வேண்டும். அல்லது லாபத்தைக் குறைத்து நிர்ணயிக்க வேண்டும். அப்போது தான் வியாபாரம் ஒரு யோக்கியமான சமாதானமான தொழிலாகும். அன்றியும் மக்கள் வஞ்சிக்கப்படாமல் தங்கள் கஷ்டத்தை மற்றொருவர்கள் ஏமாற்றியடையாமல் இருக்கச் செய்வதற்கும் அனுகூலமாக இருக்கும்.

அதில்லாமல் சுதேசியம் பேசுவதும், வியாபார விருத்தி முன்னேற்றம் பேசுவதும் ஏழைகளை, பாடுபடுகின்றவர்களை இன்னம் அதிகமாக எப்படி வஞ்சிப்பது என்பதேயாகும் என்பதோடு இப்போதைய வியாபார முறைக்கு வேறு சரியான வெள்ளையான பெயர் கொடுக்க வேண்டுமானால் பகல் கொள்ளை என்ற வார்த்தை தான் உபயோகிக்க வேண்டும். திருட்டு என்பதற்கு என்ன அருத்தம்? ஒருவனுடைய பொருளை மற்றவன் எடுப்பது தனது அல்லாததைத் தான் எடுப்பது என்பது திருட்டு. அதுபோலவே ஒருவனுடைய உழைப்பை மற்றவன் அனுபவிப்பது திருட்டா அல்லவா? பொருள்களை உற்பத்தி செய்பவனுக்கும் அவைகளை வாங்கி அனுபவிப்பவனுக்கும் மத்தியில் மத்தியஸ்தர்கள் அல்லது நடு மனிதன் எதற்கு? இந்த முறையே அக்கிரமமல்லவா? இன்று உலகில் உள்ள செல்வவான்கள் எல்லாம் நடு மனிதர்களே அல்லாமல் வேறு யாராவது இருக்கிறார்களா? யோசித்து பாருங்கள். ஆதலால் வியாபாரம் ஜன சமூக நன்மைக்கு ஏற்றதாய் இருக்க வேண்டுமானால் தரகர் நடுமனிதர் மிடில் மேன் (middle-man) தன்மை ஒழிய வேண்டும். அப்படிக்கில்லாமல் வியாபார விருத்தியைப் பேசுவது திருட்டுத் தொழிலை எப்படி விருத்தி செய்வது எப்படி சாமர்த்தியமாய் திருட மார்க்கம் கண்டு பிடிப்பது என்று யோசிப்பதையே ஒக்கும் என்பது எனதபிப்பிராயம்.

(குறிப்பு: 28.04.1933 இல் ஈரோட்டில் நடைபெற்ற ஈரோடு சுதேச வர்த்தகர் சங்க ஆண்டுவிழா ஆற்றிய உரை.

குடி அரசு - சொற்பொழிவு - 07.05.1933)

Pin It