இயக்கம் : மணிமேகலை நாகலிங்கம்

இயக்குனர் மணிமேகலை நாகலிங்கத்தின் இரண்டாவது குறும்பட முயற்சியாக குமுறலுடன் வெளியாகியுள்ளது ‘...த்தூ’. அவரது முதல் படைப்பான ஐக்கூ தரிசனத்தில் குறுங்கவிதைகளைக் காட்சிப்படுத்தி சமூக முரண்களைச் சாடி யிருந்தார். ஒவ்வொரு கவிதைக்கான திரையாக்கங்களையும் ஒரே ஒரு ஷாட்டில் சொல்ல முயன்றிருந்த அவரது அந்தப் படைப்பிலக்கியத் திறன் பெரிதும் கவனம் பெற்றது. இம்முறை குறுங்கவிதை போன்றே ஒரு சிறு செய்தியை எடுத்துக் கொண்டு அதைத் தத்துவ விசாரங்களுக்குள் உள்ளாக்கி விரித்து ஊடகக் கதையாகக் கட்டமைத்து திரை இலக்கியம் செய்திருக்கிறார் மணிமேகலை.

எந்த ஒரு பொது ஒழுக்கமும் தனிமனித ஒழுக்கத்திலிருந்தே தொடங்குவதாக அவர் செய்யும் வாதம் ஒரு விதத்தில் சரியானதாகவே படுகிறது. அதாவது, தனி மனித ஒழுக்கத்தைச் சாத்தியப்பட விடாத அரசியல் தர்க்கங்களுக்கு வெளியே நின்று பேசுவதால் அழுத்தம் குறைகிறதே தவிர, ஊர் - சமூகம் - குடும்பம் - தனி மனிதர்கள் என்ற அடக்குமுறை அடிப்படையில் யோசித்தால் ‘...த்தூ’ சரியாகத்தான் துப்பியிருக்கிறது.

தத்துவம் 1 - ‘கடவுளோடு கனவில் புணர்ந்த ஆண்டாளின் மனோபாவம்’ என்று சித்தாந்த விமர்சனம் பேசும் முதல் காட்சி.

தத்துவம் 2 - ‘முட்டாளோடு வாதம் செய்யாதே, யார் முட்டாள் என்று பார்ப்பவருக்குத் தெரியாது’ என்று அண்ணனிடம் கதாநாயகன் அடங்கிப் போகும் இரண்டாம் காட்சி.

தத்துவம் 3 - ‘பாத்திரம் அறிந்து பிச்சையிடு’ என்பதை - பாத்திரம் அறியாது பிச்சையிட முற்பட்டு, ‘பிச்சை வாங்கிக்கன்னு கெஞ்சுற நிலைமை’ என்று தன்னிறக்கப் படுவதில் சொல்லும் மூன்றாம் காட்சி.

தத்துவம் 4 - ‘எல்லோரும் என்னவர்கள்’ என்ற நிலையிலும் ஒரு அபலைப் பெண்ணை உடற்பசிக்கு இரையாக்கிக் கொண்ட அவர்களைத் ‘...த்தூ’வென்று காறி உமிழும் ஞானத் துணிவும், சற்றும் தாமதியாமல் அப்பெண்ணை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டு ஒளித்திசை நோக்கி நடந்து ‘தனிமனித ஒழுக்கமே தலையாய ஒழுக்கம்’ என்று அழுந்தச் சொல்லும் இறுதிக் காட்சி.

கதையின் கனத்திற்கு ஒரு சரியான காரணமும் இருக்கத்தான் செய்கிறது. ‘...த்தூ’ வைக் கருவுற்றுப் பிரசவித்தவர் நவீனத்துவக் கவிஞரும் எழுத்தாளருமான அமிர்தம் சூர்யா. ‘பகுதிநேரக் கடவுளின் நாட்குறிப்பேடு’ படித்தவர்கள் அமிர்தம் சூர்யாவின் வீச்சைப் புரிந்திருப்பார்கள். அவரது பிடிக்குள் அடங்காத படைப்புத் திறத்தை படமாக்கத் துணிந்ததே இயக்குனருக்குப் பெருமைதான்.

ஒழுக்கம் போற்றும் முகப்புப் பாடல், திரைநுட்ப ஆளுமைகளை ஓவியங்களாக முகப்பில் வைத்தது என்று குறும்பட எல்லைகளை விரிக்க முயன்றுள்ளார் இயக்குனர். நுட்பமான காட்சிகளுக்கு முயலவில்லையெனினும் தெளிந்த ஒளிப்பதிவு. எண்ணி அளந்து பேசும் வசனங்கள் உரை நடை போலிருப்பினும் கச்சிதம். பார்வையாளனையும் கதைக்குள் பாத்திரமாகச் சிக்க வைத்திருக்கம் திரைக்கதை உத்தி என்று நிறையப் பாராட்டலாம்.

தவிர, தனிமனித ஒழுக்கம் குறித்து இந்த அளவு பேச வேண்டுமா? விபச்சாரமே ஒரு தொழில் முறை அந்தஸ்து நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் இக்காலத்தில் ஒழுக்கத்தின் எல்லைகளை பாலியல் சார்ந்து பேசலாமா? அது எதுவரையென்று எப்படிச் சொல்ல முடியும்? அபலைப் பெண் என்றால் விபச்சாரம் தான் கதியா... பிழைக்க வேறு வழி இல்லையா? அபலைப் பெண்ணுக்கு வாழ்வு தர அவளையே கட்டிக் கொண்டுதானாக வேண்டுமா? இப்படியெல்லாம் ‘...த்தூ’ மீது எதிர் வினையாற்ற முடியும்தான்.

ஆனால் ‘வேலியே பயிரை மேய்ந்த’ கதையாகக் காவலர்களும், சாமியார் களும், படிப்பாளிகளாகத் தங்களை அறிவித்துக் கொள்ளும் ஞானவான்களும் ஒரு அபலைப் பெண்ணைத் தங்கள் உடற்பசிக்கு இரையாக்குவார்களேயானால் துப்பு ‘...த்தூ’வென்று - என்று உறுமும் மணிமேகலை நாகலிங்கத்தின் தரவோடு நின்று கொண்டால் யாருக்கும் வேறு கேள்வியில்லை.

மற்றபடி குறும்படங்களுக்கே உரிய தீராப் பிணிகள் இதிலும் உண்டு எனினும், அவை பற்றி(யே)ப் பேசிப்பேசி வயிறு வளர்க்கும் சில குறும்படப் ‘பயிற்சி முகாம்’ வியாபாரிகள் இருக்கவே இருக்கிறார்கள் என்பதால் அந்த ‘நொதியம்’ வேலை நமக்கு வேண்டியதில்லை. 

- தாண்டவக்கோன்

Pin It