‘படத்தத்  தடை செய்றதுக்குள்ள போய்ப் பாத்துரனும்’ங்கற முனைப்போட போய்ப் பாத்த படம். திரு முத்துக்குமரன் இயக்கத்துல, திரு யோகிபாபு நடிச்ச, “தர்மபிரபு” திரைப்படம். முழு நீள நகைச்சுவைப் படம், ஆனா, அரசியல் தொடங்கி சாதி வரைக்கும் அடிச்சித் தொவைச்சி தொங்கவிட்ருக்கு. எமலோகம், சொர்க்கம், நரகம்ங்கற கற்பனைகள தொவைக்கிற கல்லா பயன்படுத்தியிருக்கிறதால, துணி நல்லா வெளுத்திருக்கான்னு  பாக்கனுமே தவிர, கல்லப் பத்தியெல்லாம் கவலப்படக்கூடாது.

dharmaprabhu 320‘யாருடைய மனதாவது புண்பட்டால், குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும்’   Disclaimer கார்டு போடும்போதே, ‘அட, இங்க பார்ரா’ன்னு  நம்மள நிமிர்ந்து உக்கார வச்சிட்டு, தம்பாட்ல வேலையப் பாக்குது படம். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சிலை கடத்தல், கூவத்தூர் கூத்து, டயர் நக்கி அமைச்சரவை, ஹைட்ரோகார்பன், விவசாயிகள் தற்கொலை  மக்கள் அனுபவிக்குற கொடுமைகள் எதையும் விட்டுவைக்கல. சொல்றதுக்கு ஒன்னுமில்லன்னா ஒங்கம்மா ஓட்டு வீட்டுலதானடி புள்ள பெத்தாங்குற மாதிரி, சில பேரு அப்பப்ப எடுத்துவுடுற ‘வாரிசு அரசியல்’ பத்தியும் இந்தப் படம் வச்சி செஞ்சிருக்கு.

   சித்திரகுப்தனுக்கு யோசன சொல்றதுக்காக நரகத்துல இருக்குற ‘கோ’ ரங்கசாமிங்கற ஒருத்தரக் கூட்டிட்டு வராங்க. ஒரே பச்சக்கலர்ல கொழா சட்ட போட்டுக்கிட்டு, தலையில ஒரு ‘மயிலாப்பூர்’ (ஹைகோர்ட்டாவது...ன்னு  சொல்றதெல்லாம் அவுட் ஆஃப் டிரெண்ட் ஆக்கிடுச்சி இந்தப் படம்) கூட இல்லாம, நெத்தியில குங்குமப் பொட்டோட அந்தக் கேரக்டர் என்ட்ரி ஆகுறப்போ, பாப்பானக் காணோம்னு டிவியில வந்து கேட்டுக்கிட்டே இருந்தாரே அவரு மாதிரியே இருக்கேன்னு பாத்துட்டிருக்கிறப்பவே, எமனக் கவுக்குறதுக்கு ஒரு யோசன சொல்வாரு பாருங்க...(யோசன என்னன்னு  படத்துல பாத்துக்கோங்க) அங்க நம்ம டவுட்டு கன்பார்ம் ஆகுது. நம்பிக்கையில்லன்னா, இந்தக் குறளுக்கு என்ன பொருள்  பாத்துக்கோங்க.

“நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்

குலத்திற் பிறந்தார் வாய்ச்சொல்”

   அப்புறம் சிவபெருமான் (நான் கடவுள் ராஜேந்திரன்) குத்து டான்ஸ் போடுறாரு, அவர எமன் யோகிபாபு ராயபுரம் பாசையில அப்பப்போ கலாய்க்கிறாரு.., இது இந்துக்களோட மனச புண்படுத்தியிருச்சின்னு , ‘பண்பட்ட ந.சு. நடிகர் சேகரு முகநூல்ல கதறியிருக்காரு. சிவன இதுவரைக்கும் யாருமே இப்பிடி அசிங்கப்படுத்துனதில்லையாம்...இந்தக் கடவுள் கருமாந்திரக் கதையெல்லாம் இங்க யாருக்குமே தெரியாதுன்னு நெனைக்கிறாரு போலருக்கு. அதத்தான் அந்த ஈரோட்டுக் கெழவன் கடப்பாரையால தோண்டி எடுத்து வெளிச்சம் போட்டுக் காட்டிட்டாரே, இதுக்குமேல என்னருக்கு?. எங்க பாத்தாலும்,  ராமனும், அனுமானும் தெருத்தெருவா பிச்சை எடுத்திட்டிருக்காய்ங்க, இந்த லட்சணத்துல சிவபெருமான குத்து டான்ஸ் ஆட விட்டுட்டாங்கன்னு  பொலம்பல் வேற. அப்புறம், அவ்வளவு பெரிய ‘ஜீனியச’ இப்பிடிக் காட்டலாமான்னு  கேக்குறாரு ந.சு.நடிகர்...அந்த ஜீனியஸ் தன்னத் தானே அரசியல் புரோக்கர்னு  சொல்லிக்கிட்டாரே, அதுக்கு என்ன அர்த்தம்? அப்புறம் எமதர்மனோட மனைவி சரக்கடிக்கிற மாதிரி காட்டிட்டாங்களாம்...முப்பத்து முக்கோடி தேவர்களும் சோம பானம், சுரா பானத்துல முங்கி எந்திரிப்பாங்கன்னு  உங்களாவாதான சொல்லியிருக்காங்க சேகரு.

  முதல் பாதிவரைக்கும் அரசியலப் போட்டு வெளுக்குற படம், அடுத்த பாதியில, சாதிய வெள்ளாவியில வச்சி அவிச்சி எடுக்குது. ஏன்னா, மதத்தோட அழுக்கையும் சேத்து இந்த சாதிச் சனியந்தான சொமக்குது. அந்தச் சனியன சொமந்துட்டுத் திரியிற ஒரு அரசியல் கட்சியோட தலைவன எப்படி அழிக்கிறதுன்னு  தெரியாம, மண்டயப் பிச்சிக்கிட்டு இருக்கிற எமதர்மன், சாதிச் சனியன ஒழிக்கிறதுக்கு அவங்கதான் சரியான யோசன சொல்ல முடியும்னு  முடிவுபண்ணி, அந்த நாலு பேர கூட்டிட்டு வரச் சொல்றாரு. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், காந்தியடிகள், நேதாஜி இவுங்க நாலு பேரும் வராங்க. அப்போ, பெரியாரும், அம்பேத்கரும் சொல்ற யோசனப்படி, ஒன் பிளஸ் ஒன் திட்டத்த வகுக்குறாரு எமதர்மன். அந்தத் திட்டத்தின்படி, உழைக்கும் மக்கள் கட்சியோட தலைவர் குமாரதாசன எமலோகத்துக்குக் கொண்டு வந்து தண்டிக்கிறதன் மூலமா, பூலோகமும், எமலோகமும் பெரிய அழிவுல இருந்து தப்பிக்கிறதா படம் முடியுது.

அந்தக் குமாரதாசன் கேரக்டர காட்சிப்படுத்தியிருக்கிற நுணுக்கத்தப் பாக்கும்போது, ‘ஆத்தாடி...இயக்குனருக்கு எம்புட்டுத் துணிச்சல் பாரேன்னு’ பாராட்டாம இருக்க முடியல. கொள்ளு திங்கிற குதிர குப்புறத் தள்ளிவிடுறதோட, குழியவும் பறிக்குமாம், அத மாதிரி, சாதி வெறிய ஏத்தி ஏத்தி இளைஞர்கள சீரழிச்சிட்டு, கடைசியில அந்த சாதி வெறிக்கு அவுங்களயே பலி கொடுக்கிற, அசிங்கமான சுயநல சாதி அரசியல் எவ்வளவு கொடூரமானது அப்படீங்கறத, மனுசத் தன்மையே இல்லாத குமாரதாசன் கேரக்டர் மூலமா காட்டியிருக்கு இந்தப் படம். ஒவ்வொரு காட்சியும், அந்த சாதி அரசியல்வாதி பேசுற வசனங்களும், சாதி ஒழிப்புப் போராட்டத்த தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயத்த நமக்கு உணர்த்துது. என்னோட சாதிதான் எனக்கு பெரிய ‘மயிலாப்பூர்’னு  சொல்லிட்டுத் திரிஞ்ச அதே தலைவன், எமன் சலுகை தரேன்னு  சொன்னதும், ‘எஞ்சாதி ஒழிக, எஞ்சாதி ஒழிக’ன்னு  கத்துற காட்சி, சாதி அரசியலுக்குப் பலியாயிட்டிருக்கிற இளைஞர்களுக்கு ஒரு செய்தியச் சொல்றதா தோணுது. இந்த சாதித் தலைவர்கள நம்பினா, அவுங்க தோட்டத்துக்கு உரமாத்தான் ஆக முடியுமே தவிர, என்னிக்குமே மனுசங்களா வாழ முடியாது.

   அம்மா, அப்பாவுக்குப் பொறந்த மக்கள் வாழுற சமூகத்துல, சாதிக்குப் பொறந்த எவனுக்கும் எடங்கிடையாதுன்னு  நம்ம இளைஞர்கள் சொல்லனும், சொல்ல வைக்கனும்...அதுக்குப் பெரியார்(கொள்கைகள்) மறுபடியும் தன்னோட சுற்றுப்பயணத்தத் தொடங்கனும், அம்பேத்கர்(சிந்தனைகள்) சமத்துவத்துக்கான சட்டங்கள இயற்றனும்.

   பல எடங்கள்ல, பெண்கள வாங்கடி, போங்கடின்னு  ஓவராப் பேசி கலாய்க்கிறத ஏத்துக்க முடியாது. மத்தபடி, வசனங்கள் ஆழமா இல்ல, அகலமா இல்லங்கற மாதிரியான துக்கடா காரணங்களக் கண்டுபிடிச்சி விமர்சனத்த அள்ளிவிடாம, படக்குழுவோட துணிச்சல பாராட்டுவோம்.

தர்மபிரபு - மக்கள் மனசோட எதிரொலி... படம் பாருங்க...பரப்புங்க.

இரா.உமா

Pin It