இயக்கம் : இரா. ரவிக்குமார் 

எழுத்து : சுப்ரபாரதிமணியன்

மாற்று ஊடக முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருபவர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன். உலகப்படங்களையும் தமிழ் உலகக்கு அறிமுகம் செய்து வருபவர். குறும்பட, ஆவணப்படத் துறையிலும் பங்கெடுத்து வருபவர். எட்டாம் வகுப்பு, சூழல் என்னும் குறும்படங்கள் மூலம் குறும்பட உலகில் ஓரிடத்தைப் பிடித்து இருப்பவர் இரா.ரவிக்குமார். இருவரும் இணைந்து அளித்திருக்கும் படம் ‘சுமங்கலி’. எழுத்து சுப்ரபாரதிமணியன். ஒளிப்பதிவு, இயக்கம் இரா.ரவிக்குமார்.

மில் முதலாளிகள் பெண் தொழிலாளர்களுக்கு ‘சுமங்கலி’ என்னும் ஒரு திட்டத்தை ஏற்படுத்தி மாதாமாதம் சம்பளத்தில் பிடித்தம் செய்து மூன்றாண்டுக ளுக்குப் பின் தொகை தருவதாகக் கூறி பின்னர் ஏமாற்றி வருகிறது. ஏமாற்றுவது என்பது பெண்களை ஒழுக்கம் கெட்டவள் என குற்றஞ்சுமத்தி வெளியேற்றுவது. இத்திட்டத்தில், இம்மாயவலையில் ஏராளமான பெண்கள் சிக்கியுள்ளனர். இப் பிரச்சினை திருப்பூர் மில்களில் மிகுதியாக நடைமுறையில் உள்ளன. ‘தேநீர் இடைவேளை’ என்னும் நாவல் உட்பட பல படைப்புகளின் மூலம் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் இத்திட்டத்தை எதிர்த்துள்ளார். பெண்களுக்கு புரியச் செய் துள்ளார். ‘கூண்டில் அடைபட்ட பெண் தொழிலாளர்கள்’ என்னும் கட்டுரைத் தொகுப்பு மூலமும் இச்‘சுமங்கலி’ திட்டத்தை விரிவாக எழுதி அதன் உண்மை நிலையை எடுத்துரைத்துள்ளார். இத்திட்டத்தை மனிதத்தன்மையற்றது மற்றும் சுரண்டல் தன்மையானது என்றும் சாடியுள்ளார். இத்துடன் இத்திட்டத்தை மைய மாக்கி ‘சுமங்கலி’ என்னும் தலைப்பிலேயே ஒரு கவிதையும் எழுதியுள்ளார் சுப்ரபாரதிமணியன்.

கவிதையைக் காட்சிப்படுத்தியதே இக்குறும்படம். வரிக்கு வரி அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இரா.ரவிக்குமார். காட்சிகளின் மூலம் வரிக்கு உயிர் கொடுத்துள்ளார். கவிதையின் கருவைச் சிதையாமல் தந்துள்ளார். கவிதை பெண் குரலாக ஒலிக்கிறது. பல பெண்களின் பிரதிநிதியாகி பேசுகிறது. ‘சுமங்கலி’ திட்டத்தைக் கூறி ‘முப்பதாயிரம்’ கனவை ஏற்படுத்தி பெண்களை அழைத்து வந்த தைக் கூறுகிறது. முப்பதாயிரம் தொகையை எத்தனை பெண்கள் வாங்கியிருப்பர் என்னும் வினாவையும் எழுப்புகிறது. தினமும் 16 மணிநேரம் பணி என்றும் மாதத்தில் ஒரு நாளே விடுமுறை என்று உழைப்புச் சுரண்டலையும் சொல்கிறது. ஊருக்குப் போன பெண்களில் பலர் பணிக்கு திரும்பவில்லை என்றும் சுவரேறி தப்பித்துச் சென்று விட்டனர் சிலர் என்றும் கூறுகிறது. பெரும்பாலும் மச்சான்கள் குடித்துவிட்டுத்தான் வருவார்கள் என்பது ஆண்கள் மீதான விமரிசனம்.

‘சுமங்கலி’ என்னும் அட்டை கழுத்தில் தொங்கவிடப்படுவதை அவமானமாகக் கருதுகிறாள். ஒரு நாயின் கழுத்தில் தொங்கவிடப்பட்டது போல் கூசுகிறாள். ‘சுமங்கலி’ என திட்டத்தின் பேரால் அழைக்கப்பட வேண்டாம் என்றும் உண்மையிலேயே ‘சுமங்கலி’ ஆக விரும்புவதையும் கவிதை விவரிக்கிறது. சுமங்கலி அட்டையை வாங்கிக் கொண்டாலும் சரி என்னும் இறுதி வரி பெண்ணின் கோரிக்கையாய் வெளிப்பட்டுள்ளது. இக் கவிதை ‘சுமங்கலி’ திட்டத்தை மறுக் கிறது. உழைப்பைச் சுரண்டும் முதலாளிகளை எதிர்க்கிறது. விழிப்புணர்வை ஊட்டுகிறது. கவிதை வாசிப்பதைவிட காட்சியினூடாக கவிதையைக் கேட்பது தாக்கத்தை அதிகரிக்கச் செய்கிறது. எழுதிய சுப்ரபாரதிமணியனும் இயக்கிய இரா.ரவிக்குமாரும் ஒரே நேர்க்கோட்டில் பயணித்துள்ளனர். உடன் உதவியது சு.சுபமுகி. கவிதையின் நாயகியாக குறும் படத்தில் காணப்படுகிறார். இயல்பாக இயக்கத்துக்குக் கட்டுப்பட்டுள்ளார். படைப்பின் தன்மையை அவரிடம் முழுமையாகக் கொண்டுவர முயன்றுள்ளார். இவர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கவிதையைக் காட்சிப்படுத்துவது குறும்படத் துறையில் புதிதல்ல எனினும் ‘சுமங்கலி’ என்னும் ஏமாற்றுத் திட்டத்தை வெளிச்சப்படுத்தியிருப்பதால் சிறப்புப் பெறுகிறது. எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனுக்கும் இயக்குனர் இரா.ரவிக்குமாருக்கும் பாராட்டுக்கள். குறும்படத்துறையில் ஒரு கலைக்குடும்பத்தின் வாரிசாக பிரவேசித்திருக்கும் சு.சுபமுகிக்கு வாழ்த்துக்கள். தயாரித்து வழங்கியிருக்கும் ‘திருப்பூர் மக்கள் அமைப்பு’க்கு நன்றி. 

- பொன்.குமார் 

(திருப்பூர் மக்கள் அமைப்பு, தாராபுரம் சாலை, திருப்பூர்) 

Pin It