கோடை மழை வசந்தங்களை

செலவழித்துக் கொண்டிருந்தேன்

கடவுளின் வருகைக்காக.

காலதாமதமாகக்கூட வரவில்லை கடவுள்

ஒரு கவளம் சோறு உண்டேன்

உள்ளே விழுந்தான் கடவுள்

 

சிலுவைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டனர்

அப்பல்லோ மினர்வா எனும் ஆதிக்கடவுள்கள்

சிவ விஷ்ணு சாப்பிட்டுவிட்டனர் குட்டித் தெய்வங்களை

 

புற்றுக்குள் கைவிட்டுப் பார்த்தேன். கடவுள் இல்லை

நகம் தேய்த்து பெருமாள் பூப்போடுஎன்றேன்

கழுகு ஒன்று எச்சமிட்டுச் சென்றது சிரசில்

 

வண்டார் குழலாளோடு வருவார் என்றார்கள் சன்னிதானங்கள்

வாரார் எனக் கனைத்துவிட்டுப் போனது

தெருவோரம் மேய்ந்த நந்திஒன்று

 

சோமபானம் கிட்டாதாம் டாஸ்மாக்கில்

புலித்தோல் கண்டால் சுட்டுவிடுமாம் ராணுவச் சட்டம்

பாம்பு வதைக்காய் வழக்கிடுமாம் நீலச்சிலுவை

இரு பாகத்தோடு வந்தால் திருநங்கை என

ஒரு மங்கை வரமாட்டாள் வழியில்

வாகனக் காட்டில் வந்திறங்க ஏலாவாம் ஐராவதம்

ஒருகால் இழந்து விட்டால் மறுகால் உதவும் என்றே

தூக்கிய பாதம் தூக்கி நின்றானாம் அச்சத்தால்

என அலம்பிவிட்டுப் போனது ஆதிப்பாம்பு

 

கருவறைக்கு அரசுக்கு முத்திரையிட்டுவிட்டு

படுக்கப்போனேன் அரைப்பாட்டில் பிராந்தியுடன்

மஞ்சள் திரவத்தில் மின்னல் அடித்ததுபோல்

ஜோதிமயமாயக் கிடந்தான் மோனத் தவசில் என் கடவுள்

 

கடவுளைக் குடித்து கடவுளாகவே மாறிய என் உடம்பில் அடங்கின பஞ்சமாபூதங்கள்..............

அகம் பிரம்ம ஹஸ்மி

Pin It