தலைக்குள் புகுந்து
சவப்பெட்டிக்கு
ஆணியடித்துக் கொண்டிருந்தான்
கண்களில், நாசியில்
நீர்வழிய
அவ்வப்போது கண்திறந்து வழிபார்த்து
அவசரமாக அறைக்கு
விரைகிறேன்
கருவில் இருக்கும்
குழந்தையென
சுருண்டு தூங்கிக்கொண்டிருக்கிறது
ஒரு வெள்ளைப் பூணை
வாசல் படியில்
இப்பொழுது
சபிக்கத் தொடங்குகிறேன்
எல்லோரையும்
கடவுள் உட்பட.
இந்த மனதிற்காக
எதிலும்
இருப்புக் கொள்ளாமல்
அலைந்து கொண்டிருக்கிறது
மனது
அவசியமின்றி
மூச்சுக்காற்றில் நிறைந்திருக்கிறது
கோபம்
தன்னை எதிர்க்காத
ஒருவனை
சளைக்காமல்
தாக்கிக் கொண்டிருக்கிறான்
சிறுவன் ஒருவன்
கணிப்பொறி விளையாட்டொன்றில்
நானும்
சிருஷ்டிக்கத் துவங்குகிறேன்
இப்பொழுது
எனக்கான ஒருவனை
இந்த மனதிற்காக.
- பிரவின்ஸ்கா