ஒற்றைக் குயிலோசையோடு அம்மாலை முடிவடைகிறது

 

பாதைமுடியும் இடமொன்றில் குயில் வந்தடைகிறது

தனித்த மரத்தின் கிளையொன்றில்

 

சற்றுமுன் முத்தத்தைப் பற்றியும்

நீ சொல்லிவிட்டுச் சென்றிருப்பது

நினைவிற்கு வருகிறது

 

உன் பயணம் முழுக்க

இனி குயிலோசையை அனுப்பவும் பின் தொடரவும் செய்யும்

வழிமுறை என்னிடம் இல்லை

 

குயிலோசையையும்

பெறப்பட்ட முதல் முத்தத்தின் கண்மூடிக் கேட்ட சப்தத்தையும்

சில தினங்களுக்கு முன்புதான்

ஒப்பிட்டு சரிபார்த்து நிம்மதி அடைந்துள்ளேன்

பெறப்பட்ட காலமான அம்மாலையைக்

கடந்த காற்றை

குயிலோசையை

உடல் நிறைத்து

நீ கேட்கத் திரும்புகிறேன்.

 

ஒரு பூவை

நிலவோடும் தென்றலோடும் அன்போடும்

சூடிச் செல்ல இயலவில்லை

 

ஏரியில் தளும்பும் பச்சைய நீரீல் தத்தளிக்கிறது மனம்

 

பேரமைதியில்

எனக்கான நதியென வனமென கடலென

மனவெளியில் கிளை விடுகிறது

 

நீர்ப்பச்சை கலைந்து விட்டது

 

தூரத்தில் பறக்கின்ற இரண்டு வெண்கொக்குகள்

நெருடிய தருணங்களை

தன் இரையென தூக்கிச் செல்கின்றன

மஞ்சள்நிறப் பூக்கள் பூத்திருக்கின்ற நிலத்திற்கு.

Pin It