பூசாரித் தாத்தாவின் வீடு பனையோலைகளால் யப்பட்டது. அவ்வீடு கொடுத்த சில்லிப்பை எந்த ஏசியாலும் கொடுக்கவே முடியாது. வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் மண்தரையை சாணத்தால் மொழுகுவார் பூசாரி பாட்டி. அவர்கள் வீட்டுக்கு சென்றாலே சாண மணம் அடிக்கும். வீட்டுக்கு முன்பாக ஆலமர விஸ்தீரணத்தில் மிகப்பெரிய வேப்பமரம் ஒன்றிருக்கும். எங்கள் தெருவாசிகளின் வேடந்தாங்கல் அது. அம்மரத்தில் பொன்னியம்மன் இறங்கியிருப்பதாக பூசாரி தாத்தா சொல்வார்.

இரவு வேளைகளில் உச்சா போவதற்காக அப்பாவை துணைக்கழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வரும்போது, இருளில் அந்த மரம் மினுக் மினுக் என ஒளிருவதை கண்டிருக்கிறேன். மின்மினிப் பூச்சிகள் அதற்கு காரணமாய் இருந்திருக்கலாம். மரத்தின் பிரம்மாண்டமும் ஒரு மாதிரியான அடர்த்தி தோற்றம் இராமயணத்து சூர்ப்பனகையை நினைவுபடுத்தும். பெரும்பாலும் இரவு வேளைகளில் அந்த மரத்தை பார்ப்பதை தவிர்ப்பேன். அடிமன திகிலே அதற்கு காரணம்.

பகல் வேளைகளில் தெருப்பெண்கள் வீட்டு வேலையையும், மதிய உணவையும் முடித்துவிட்டு அந்த மரவாசலில் கூடுவார்கள். தாயக்கட்டை விளையாடுவது, ஊர்வம்பு பேசுவது எல்லாம் அம்மரத்தடியில் தான். டிவி இல்லாத அந்த காலத்தில் அது அவர்களுக்கு அவசியமான பொழுதுபோக்காக இருந்தது. அந்த தெரு அப்போது மண் சாலையாக இருந்தது. எப்போதாவது ஓரிரண்டு கட்டை வண்டிகள் வைக்கோலையோ, தர்ப்பூசணி அல்லது கிர்ணி பழங்களையோ லோடு எடுத்துச் செல்லும். மிலிட்டரிக்காரர் மட்டும் மோட்டார் சைக்கிள் வைத்திருந்தார். என் அப்பா உட்பட சிலர் மிதிவண்டி வைத்திருந்தார்கள். ஊரிலிருந்த நூற்றுச் சொச்சம் பேரில் பெரும்பாலானோர் நடைராஜா சர்வீஸ் தான். அப்போதெல்லாம் மடிப்பாக்கத்தில் இருந்த ஒரே டாக்டர் கூட்ரோடு அசோக்குமார் மட்டுமே. எனக்கு காய்ச்சல் என்றால் உடனே மருத்துவரிடம் அழைத்து செல்லமாட்டார்கள். பூசாரிதாத்தாவிடம் கூட்டி செல்வார்கள். அந்த வேப்ப மரத்திலிருந்து கொத்தாக இலைகளை பறித்து என் முகத்தில் அடித்து ஏதோ மந்திரம் போல சொல்வார். கொல்லிக்கண்ணு, நல்லக் கண்ணு, ஊருக்கண்ணு போன்ற வார்த்தைகள் அந்த மந்திரத்தில் இருந்ததாக நினைவு. பூசாரி தாத்தா மந்திரித்தும் காய்ச்சல் சரியாக வில்லையென்றால் மூவரசம் பேட்டு தர்காவுக்கு போய் தாயத்து வாங்கி கட்டுவார்கள். அதிலும் சரியாகாவிட்டால் தான் அசோக்குமார் டாக்டர்.

பூசாரி தாத்தாவுக்கு ஒரே மகன். இரு மகள்கள். அவரை தாத்தா என்று அழைத்தாலும் அவரது மகனை அண்ணே என்றும், அவரது மகள்களை அக்காவென்றும் அழைப்போம். மூத்தமகளுக்கு திருமணமாகியிருந்தது. இரண்டாவது மகள் சரசக்காவுக்கும், மணி அண்ணனுக்கும் தான் கல்யாணமாகியிருக்கவில்லை.

அது ஒரு கோடைக்கால மதியம். பூசாரி தாத்தா மச்சுவீடு கட்டிக் கொண்டிருந்தார். அவர் வீட்டு முன்பு கொட்டியிருந்த மணல் சூடாக இருந்த போதிலும் அதில் குதித்து, சறுக்கி விளையாடிக் கொண்டிருந்தோம். எப்போதாவது சாலையில் பிளாஸ்டிக் மற்றும் அலுமினிய சாமான்காரன் வருவான். அதைத் தவிர்த்து சாலையில் ஆள் அரவமில்லை. அம்மா, பெரியம்மா, ராதா பாட்டி போன்றவர்கள் பூசாரி தாத்தா வீட்டு வேப்பமர நிழலில் தாயக்கட்டை உருட்டிக் கொண்டிருந்தார்கள்.

‘ஜோசியம், கிளி ஜோசியம்’ என்று சாலையில் சத்தம் கேட்டது. மஞ்சள் தலைப் பாகை அணிந்து நெற்றியில் சந்தனமும் பெரிய குங்குமமும் வைத்திருந்த ஜோசியர் ஒருவர் வெயிலில் வந்துகொண்டிருந்தார். கூண்டுக்குள் இருந்த கிளியைப் பார்க்க நான் உட்பட சில வாண்டுகள் அவர் பின்னாலேயே ஓடினோம். பூசாரி தாத்தா வீட்டுக்கருகே வந்தவர் வெய்யிலில் கொஞ்சம் ஓய்வெடுக்க நினைத்து வேப்பமரத்தடியில் அமர்ந்தார். தாகமாக இருந்த அவருக்கு ஒரு சொம்பில் மோர் கொண்டு வந்து கொடுத்தார் பூசாரிப் பாட்டி.
‘கொமார் அம்மா உம் புள்ளைக்கு ஜோசியம் பாக்குறது தானே?’ பூசாரிப்பாட்டி அம்மாவை நோக்கி கேட்டார்.
‘சின்னப் புள்ளைக்கு என்னத்த ஜோசியம் பாக்குறது? சரசுக்கு எப்போ கல்யாணம் ஆவுமுன்னு நீங்க வேணும்னா பாருங்க!’ என்றார் அம்மா.

சரசக்காவுக்கு வயதாகியும் ரொம்ப நாளாக கல்யாணம் ஆகவில்லை என்ற ஏக்கம் பூசாரிப் பாட்டிக்கு இருந்தது. இத்தனைக்கும் அப்போது சரசக்காவுக்கு வயது பதினெட்டோ அல்லது பத்தொன்பதோ தான் இருக்கும். அவர்கள் குடும்பத்தில் பதிமூன்று, பதினான்கு வயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள்.

அம்மா எனக்கு ஜோசியம் பார்க்க மறுத்ததுமே எல்லையில்லா கோபம் வந்தது. உடனே தரையில் உருண்டு, புரண்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்து விட்டேன். நான் அடம் பிடிப்பதாக இருந்தால் உடனே தரையில் உருண்டு நினைத்ததை சாதிப்பது என் பாணி. ஒரே பையன் (ரொம்ப சோனியாக வேறு இருக்கிறான்) ரொம்ப அடிக்கக் கூடாது என்பதால் என் அடத்தை சகித்துக் கொண்டு பொறுத்துப் போவார் அம்மா. அன்றும் அப்படித்தான்.

‘ஜோசியக்காரரே! ஜோசியம் பார்க்க எவ்வளவு?’

‘ஒரு தலைக்கு ஒரு ரூபாய்மா!’

‘இதென்னா அநியாய ரேட்டா இருக்கே? போன வருஷம் வந்த ஜோசியருக்கு தலைக்கு நாலணா தான் கொடுத்தோம்!’

‘எத்தனை தலை பார்க்கப் போறீங்கன்னு சொல்லுங்க. அதுக்கேத்தாப்புலே ரேட்டை கொறைச்சிக்குறேன்’

கடைசியாக எனக்கு, சரசக்காவுக்கு, ராதாப்பாட்டிக்கு மற்றும் மூவருக்கு (யார் யாரென்று இப்போது நினைவில்லை) என்று ஆறு தலை முடிவாயிற்று. மூன்று ரூபாய்க்கு ஒத்துக்கொண்டார் ஜோசியக்காரர். ராதாப்பாட்டிக்கு அப்போதே வயது 75 இருக்கும். அவருக்கு கிளி எடுத்த சீட்டில் வைகுண்டம் வந்தது. நேரடியாக சொர்க்கத்துக்கு போவீர்கள். அமைதியான முடிவு கிடைக்கும் என்றார் ஜோசியர்.

அடுத்து என் பெயர் கேட்டார். ‘கிர்ஷ்ண குமாரு. குமரான்னு கூப்பிடுவோம்’ என்றார் அம்மா. ஜோசியர் ‘குமரன்ற பேருக்கு சீட்டு எடும்மா‘ என்று கிளியிடம் சொல்ல கிளி சீட்டெடுக்க வந்தது. கிளி ஒவ்வொரு சீட்டாக எடுக்கும்போதும் ஜோசியரின் கையை கவனித்தேன். நான்கைந்து நெல்மணிகளை வைத்து ருத்திராட்ச கொட்டைகளை ரிஷிகள் உருட்டுவது போல விரல்களை மெதுவாக உருட்டிக் கொண்டிருப்பார். அவர் விரல்களை உருட்டிக் கொண்டிருக்கும் போதெல்லாம் கிளி அப்போது வரும் சீட்டுகளை புறக்கணிக்கும். அவர் விரல்களை உருட்டுவதை நிறுத்திவிட்டால் உடனடியாக அப்போது இருக்கும் சீட்டினை எடுத்து அவர் முன் போடும்.

எனக்கு வந்த சீட்டு முருகன் வள்ளி தெய்வானை சகிதமாக வீற்றிருக்கும் சீட்டு. ‘பையனுக்கு ரெண்டு பொண்டாட்டிம்மா‘ என்று சொல்லி சில சுபபலன்களை சொன்னார். அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். ‘பொறக்கறப்பவே அவனுக்கு ரெட்டைச்சுழி‘ என்று எல்லோரிடமும் சொன்னார்.

அடுத்ததாக சரசக்காவுக்கு கிளி சீட்டு எடுத்தது. ஒரு நாகப்பாம்பு தாலி ஒன்றை கவ்விக்கொண்டு செல்வதைப் போன்றும், பின்னணியில் ஏதோ அரக்கி உருவம் இருப்பதைப் போன்றும் ஒரு சீட்டு வந்தது. ‘இந்தப் பொண்ணுக்கு கல்யாணமே ஆவாது. தோஷம் இருக்கு. கடைசி வரைக்கும் கன்னியாதான் இருப்பா’ என்றார் ஜோசியர்.

உடனே பூசாரிப் பாட்டி கலங்கிப் போய்விட்டார். கண்களில் நீர் கோர்த்து ‘பரிகாரம் எதுவாவது இருக்கா?’ என்று கேட்டார். ஜோசியர் சொன்ன பரிகாரம் நடைமுறைக்கு ஒத்து வராததாகவும் பல ஆயிரம் செலவு பிடிப்பதாகவும் இருந்தது. கோயில் பூசாரியாக கிடைத்த சொற்ப வருமானத்தில் குடும்பத்தை ஓட்டிக் கொண்டிருந்த பூசாரி தாத்தாவால் அந்த பரிகாரமெல்லாம் செய்வதற்கு அப்போது வாய்ப்பேயில்லை. ஜோசியர் அடுத்த மார்கழி மாதம் வருவதாகவும், பரிகாரம் செய்ய முடிந்தால் செய்ய ஏற்பாடு செய்யுங்கள் என்றும் சொல்லி விட்டு கிளம்பினார். பரிகாரம் எதுவும் செய்யப் படவேயில்லை. இரு தசாப்தங்களும் அதனோடு சில வருடங்களும் உருண்டோடி விட்டது. அப்போது உருண்டு, புரண்டு அடம்பிடித்தது போலல்லாமல் இப்போது ரொம்ப நல்ல பிள்ளையாகி விட்டேன். எப்போதாவது அம்மா தான் என்னிடம் இப்போது அடம் பிடிக்கிறார். ஜோசியர் சொன்னது போலல்லாமல் இரட்டைப் பொண்டாட்டி எல்லாம் கிடையாது. இதுவரை ராமனாகத் தான் இருக்கிறேன். அம்மா சொன்ன இரட்டைச் சுழியும் வேலைக்கு ஆகவில்லை.

பூசாரி தாத்தா மறைந்து பதினைந்து ஆண்டுகள் இருக்கும். அவரது குச்சுவீடு மாற்றப்பட்டு இரண்டடுக்கு மச்சுவீடாக மாறிவிட்டது. மணி அண்ணன் இப்போது பிரபல அரசியல்வாதி. அம்பாசிடர் கார், என்பீல்டு புல்லட் என்று கட்சிக்கொடி கட்டி கலக்கிக் கொண்டிருக்கிறார். பூசாரிப் பாட்டியும் பத்து ஆண்டுகளுக்கு முன்பாக போய்ச்சேர்ந்து விட்டார். வீடு கட்ட இடையூறாக இருந்ததால், அந்த வேப்பமரம் எப்போதே வெட்டிப் போடப்பட்டு விட்டது.

சென்ற வாரத்தில் ஒரு நாள் மதியம் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தேன். வாசலில் வண்டியை ஸ்டார்ட் செய்யும்போது கவனித்தேன். சரசக்கா தன் பேரனுக்கு சாலையில் வாகனங்களை காட்டி சோறு ஊட்டிக் கொண்டிருந்தார். மகள் வயற்று பேரன், குழந்தைக்கு ஒரு வயது இருக்கலாம். சாலையில் ‘ஜோசியம், கிளி ஜோசியம்‘ என்று குரல் கேட்டது. சரசக்காவைப் பார்த்தேன். நான் சற்றும் எதிர்பார்க்காத வகையில் கொஞ்சம் இளைஞனாக இருந்த அந்த ஜோசியக்காரனை கூப்பிட்டார். ‘என்னோட ரெண்டாவது பொண்ணுக்கு எப்போ கல்யாணம் ஆவும்னு பார்த்து சொல்லுங்க ஜோசியக்காரரே. பேரு ராஜலஷ்மி‘ என்றார். குழந்தை கிளியைப் பார்த்து பொக்கைவாய் காட்டி சிரித்துக் கொண்டிருந்தது.

- யுவகிருஷ்ணா

Pin It