மழைப் பெண்

பிரார்த்தனையின்போது இறுக
மூடிஇருக்கும்
குழந்தையின் இமைகளை போல்
என்னை பொத்தி
வைத்துக்கொள்ள எத்தனிக்கும்
உன் பிரியம்

நன்றியும் மன்னிப்பும் மறுக்கப்பட்ட
உனது அகராதியில்
முத்தமும் கண்ணீரும் நிரப்புகின்றன
ஒரு நீண்ட மௌனத்திற்கு பிறகான நொடிகளை
சாக்லேட் தடவிய
சயனைடு முத்தங்கள்
இல்லா
வசீகர பொய்கள் இல்லா
இந்த வெளி
உனதேயானது

நத்தை நகர்ந்த
ஈரத்தடத்தில்
பிறக்கிறது ஒரு முத்துக்கான
துளியை சுமக்கும்
மேகம்.


முத்தம்

தகனம் செய்ய எவருமற்ற
பிரேதம் போல் காற்றில்
மிதந்து கொண்டிருக்கிறது
ஒரு
நிராகரிக்கப்பட்ட முத்தம்

கொடுக்கப்படும் அதே அழுத்தத்துடன்
உணரப்படும் முத்தங்கள்
எல்லோருக்கும் வாய்ப்பதில்லை
முழுமையுறாத
நிராகரிக்கப்பட்ட
முத்தங்களை நுகர நேர்கிறது
வெளியெங்கும் குறுந் தகடுகளைப்போல
அறிந்தவரை
விடுபடும் கணத்தில் கண்களால்
பேசிக்கொள்ளும் முத்தங்கள்
தீர்ந்து போகாதவை.

- நேசமித்ரன்