மிகத்துல்லியமாக துப்பு
அவனைப் பற்றிய சித்திரங்கள்
வலியுடன் தோலுரிந்து உதிரட்டும்

கடலின் அழுத்தத்தை
அலைகளில் கடத்துவது
காலம் காலமாக
காற்று செய்வது

நானும்
எனக்குள் துப்பத் தொடங்குகிறேன்
அவனைக் கிழிக்க ஆரம்பிக்கிறேன்

எல்லாவற்றையும்
நம்பும்படியாகவே சொல்வதால்
உன்னை விட்டால்
யாரைக் கேட்கப் போகிறேன்

ஒரு கண்ணீரில்
நீ எழுப்பும் வண்ணங்கள்
மேலெழுந்து தீயாகி
மறுபடியும்
கால்களை எரிக்கின்றன

அவனை
என்னிலிருந்து இறக்கி
வெளியில் கொன்று
உள்ளே மீண்டும் புதைப்பதில்
இன்று உனக்கு அலாதிப் பிரியம் போல

வேறென்ன செய்ய வேண்டும்

கூடாரத்தின் நான்கு முனைகளுக்கும்
தீ வைக்கும் உன் அவசரம் புரிகிறது
ஆனாலும்
சதை வேக
சிறது நேரம் ஆகலாம்

அவன் சதை கருகும் மணத்தில்
கூந்தல் பரப்பி
ஆற்றுப்படுத்திக் கொள்கிறாய்

நான் உனக்கு
இப்போது
விசிறிகள் செய்ய வேண்டுமா
அல்லது
மீளும்
புடைத்தெழும் அவன் நினைவெலும்புகளை
அடித்து அடக்க வேண்டுமா?

- இரா.கவியரசு

Pin It