மனிதன் நிலவில் முதல்முதலாக தரையிறங்கிய அப்போலோ11 திட்டத்தின் நிகழ்வை நேரடியாக அன்று ஒளிபரப்பிய உலகப் புகழ்பெற்ற ஆஸ்திரேலியா நியூ சவுத் வேல்ஸ் பார்க்ஸ் வரிசை தொலைநோக்கி (Parkes Pulsar Timing Array telescope) அண்மையில் மற்றொரு விண்வெளிக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது. இதன் தரவுகளில் ஈர்ப்பு அலைகள் பற்றிய புதிய விவரங்களைப் பதிந்துள்ளது.

ஈர்ப்பு அலைகள் எனப்படுபவை மனிதனால் பார்க்க முடியாத வேகமாகப் பயணிக்கும் அலைகள். இவை ஒளியின் வேகத்தில் அதாவது ஒரு விநாடிக்கு 1,86,000 மைல் வேகத்தில் பயணம் செய்கின்றன. சுழலும் நியூட்ரான் நட்சத்திரங்கள், கருந்துளைகளின் மோதல் போன்றவற்றால் இந்த அலைகள் உருவாவதாகக் கருதப்படுகிறது.

இதை பொது நல அமைப்பு நாடுகளின் அறிவியல் தொழில்துறை மற்றும் ஆய்விற்கான அமைப்பின் (CSIRO Commonwealth Scientific and Industrial Research Organisation) விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரபஞ்சத்தின் இரகசியங்களை அறிய இது ஒரு புதிய சாளரமாக அமையும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

கடந்த பதினெட்டு ஆண்டுகளாக மில்லி செகண்டு பல்சார்கள் எனப்படும் விண்மீன்களில் இருந்து வரும் துடிப்புகளை ஆராய்ந்து வரும் இந்த ஆய்வுக்குழு பிரபஞ்சத்தில் ஈர்ப்பு அலைகள் இருப்பதற்கான சான்றுகளைக் கண்டறிந்துள்ளது. ஈர்ப்பு அலைகள் பற்றிய கோட்பாட்டை ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீன் முதல்முதலாக 1915ல் வெளியிட்டார்.parkes radio telescopeவிண்வெளியில் இருந்து உயர்ந்த அலைவரிசையுடன் கூடிய சிணுங்கல் ஒலிகள் 2016ல் கண்டறியப்பட்டது. ஆனால் ஒன்றையொன்று சுற்றிக் கொள்ளும் இணையான கருந்துகள்களில் இருந்து வரும் அல்ட்ரா குறைந்த அலைநீளம் உடைய அலைகள் சமீபத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டன.

விஞ்ஞானிகள் கடந்த இருபது ஆண்டுகளாக நானோ ஹெர்ட்ஸ் அலைநீளமுடைய பல்சார்களை ஆராய்ந்து வருகின்றனர். விண்வெளி மதிப்பீட்டில் பால்வீதியளவுள்ள சிற்றலைகள் இருப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

விண்வெளியில் இருந்து வரும் அலைகள்

இந்த அலைகள் சில ஆண்டுகள் அல்லது பத்தாண்டுகள் அளவு நீளமானவை என்பதால் இது பற்றிய ஆய்வுகள் நீண்ட காலமாகத் தொடர்கிறது. "பார்க்ஸ் மற்றும் பிற ஆய்வுக்குழுவினரின் தரவு விவரங்களில் இதற்கான சான்றுகள் பதிவாகியுள்ளன” என்று கடந்த மூன்றாண்டுகளாக இத்திட்டத்தில் பணியாற்றிவரும் சிசைரோ ஆய்வாளர் டாக்டர் ஆண்ட்ரூ ஜிக் (Dr Andrew Zic) கூறுகிறார்.

உற்றுநோக்கப்பட்டதில் பிரபஞ்சத்தில் எக்ஸ் கதிர்கள், ரேடியோ அலைகள் போன்ற பல்வேறு ஒளி வடிவங்கள் மட்டுமே இருப்பதாகக் கருதப்பட்டதால் ஈர்ப்பு அலைகள் பற்றிய இந்தக் கண்டுபிடிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. மற்ற ஒளி வடிவங்களில் இருந்து ஈர்ப்பு அலைகள் முற்றிலும் வித்தியாசமானவை. இந்த அலைகளின் உதவியுடன் பிரபஞ்சத்தை வேறெந்த முறையிலும் காண முடியாத புதியதொரு வழியில் காண முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

“ஈர்ப்பு அலைகள் ஆய்விற்கான லேசர் கண்காணிப்புக் கருவியின் (Laser Interferometer Gravitational-Wave Observatory (Ligo)) மூலம் ஏழாண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டவற்றில் இருந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள அலைகள் முற்றிலும் வேறுபட்டவை. இவற்றின் உதவியுடன் பெருவெடிப்பிற்குப் (Big bang) பிறகு தோன்றியதாகக் கருதப்படும் நட்சத்திர மண்டலங்களின் பரிணாமம், வடிவமைப்பு போன்றவற்றைப் பற்றி அறிய முடியும்" என்று ஜிக் கூறுகிறார்.

பார்க்ஸ் தொலைநோக்கியின் அமைவிடமும் பணிகளும்

பார்க்ஸ் என்ற பெயர் 2017ல் மாற்றப்பட்டு இது அமைந்திருக்கும் இடத்தின் பாரம்பரிய உரிமையாளர்களான வேரஜூரி (Wiradjuri) என்ற ஆதிவாசி இனத்தவரை கௌரவிக்கும் வகையில் மரியாங் (Murriyang) என்று பெயரிடப்பட்டது.

வானியல் கண்டுபிடிப்புகளில் மிக முக்கியப் பங்காற்றி வரும் பார்க்ஸ் தொலைநோக்கியே பூமியின் தென்கோளத்தில் உள்ள மிகப்பெரிய ஒற்றை ஆண்டேனாவைக் கொண்ட ஒரே ஒரு தொலைநோக்கி. பால்வீதி நட்சத்திர மண்டலத்தின் மையம் புவியின் தென்கோள வானில் அமைந்துள்ளது. இதனால் ஈர்ப்பு அலைகள் இருப்பதற்கான சான்றாக இப்போது அறியப்பட்டுள்ள மில்லி செகண்டு பல்சார்கள் உட்பட நட்சத்திர மண்டலங்களில் இருக்கும் பொருட்களை ஆராய இது அமைந்துள்ள இடம் மிகச் சிறந்தது என்று கருதப்படுகிறது.

பெரிய, அதிகத் திறனுடையவை என்றாலும் மற்றவை புவியின் வடகோளத்தில் இருப்பதால் கடந்த பதினெட்டு ஆண்டுகளாக மில்லிசெகண்டு பல்சார்களை விஞ்ஞானிகள் பார்க்ஸ் தொலைநோக்கி வழியாக ஆராய்ந்து வருகின்றனர். 1951ல் சிட்னி நகரில் இருந்து 355 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் பார்க்ஸ் தொலைநோக்கியின் மிகப்பெரிய ஆண்டெனா நிறுவப்பட்டது. இங்கு மனிதர்கள் பயன்படுத்தும் சாதனங்கள் ஏற்படுத்தும் குறுக்கீடுகள் மிகக் குறைவு.

“ஆண்டெனா நிறுவப்படுவதற்கு முன்பு இங்கு மிக சிலர் மட்டுமே வீட்டு உபயோக மற்றும் மின் சாதனங்களைப் பயன்படுத்தினர். விண்வெளி இந்த சாதனங்கள் உருவாக்கிய குறுக்கீடுகளால் ஆய்வுகள் பாதிக்கப்படவில்லை. 1961ல் இருந்ததைவிட இத்தொலைநோக்கி இப்போது 10,000 மடங்கு அதிகத் திறனுடையது. 60களில் உள்ளூர் விவசாயிகளில் ஒரு சிலர் மட்டுமே வால்வு ரேடியோக்கள், ஜெனரேட்டர்கள், வீட்டு உபயோக மின் விளக்குகள் தவிர வேறெதையும் பயன்படுத்தவில்லை.

ஆனால் பிறகு இந்த அமைதி குலைந்து விட்டது. இன்று ஒவ்வொருவரும் மொபைல் போன்கள், டிஜிட்டல் ரேடியோ, தொலைக்காட்சி, கணினி, காணொளிக் கருவிகள், இதய ஃபேஸ் மேக்கர்கள், கார் கணினிகள், மடிக்கணினிகள் போன்ற ஏராளமான சாதனங்களைப் பயன்படுத்துகின்றனர். மற்ற தொலைநோக்கிகள் அமைந்திருக்கும் இடங்களுடன் ஒப்பிடும்போது பார்க்ஸ் இருக்கும் இடம் மிக நல்ல இடம். அதனால் இங்கிருந்து மிகச்சிறந்த ஆய்வுப் பணிகளை வரும் பல ஆண்டுகளுக்கு தொடரலாம்.

"வருங்காலத்தில் அப்போலோ11 நிலவுத் திட்டத்தின் இறுதிக் குறிக்கோளை நிறைவு செய்ய இந்தக் கண்டுபிடிப்பு உதவும்” என்று 1996 முதல் பார்க்ஸ் தொலைநோக்கி திட்டத்தில் ஆண்டெனா பிரிவின் செயல்பாட்டு விஞ்ஞானி ஜான் சார்கிஷன் (John Sarkissian) கூறுகிறார். ஆரம்பத்தில் இந்த ஆண்டெனா இருபது ஆண்டுகள் செயல்படும் வகையிலேயே உருவாக்கப்பட்டது. ஆனால் புதிய மேற்பரப்பு பலகைகள், புதிய கேபின் போன்ற நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளதால் இது மேலும் இருபது ஆண்டுகளுக்கு திறம்பட பணியாற்றும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

பூமியின் தென் கோடியில் அமைந்திருக்கும் இந்தத் தொலைநோக்கி இதுவரை மனிதனால் கண்டறியப்படாத பிரபஞ்சத்தின் பல இரகசியங்களை வெளிக்கொணரும். அதன் மூலம் ஒரு நாள் மனிதன் சூரிய குடும்பத்தையும் தாண்டி வேறொரு நட்சத்திர மண்டலத்தில் சுழலும் ஒரு கோளில் குடியேறலாம்!

மேற்கோள்கள்: https://www.theguardian.com/australia-news/2023/jul/12/parkes-radio-telescope-gravitational-waves-evidence-murriyang?

&

https://www.csiro.au/en/about/facilities-collections/atnf/parkes-radio-telescope-murriyang/apollo-11-moon-landing

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It