அதிக மன உறுதியுள்ளவர்கள் குறிப்பாக பெண்கள் நீண்ட காலம் உயிர் வாழ்கின்றனர். சீனாவின் சன் யாட் சென் (Sun Yat-sen) பல்கலைக்கழக ஆய்வாளர்களால் நடத்தப்பட்டு அதே துறையை சேர்ந்த நிபுணர்களால் மதிப்பீடு செய்து மன ஆரோக்கியத்திற்கான பிரிட்டிஷ் மருத்துவ இதழில் (BMJ mental health) வெளியிடப்பட்ட ஆய்வு கூறுகிறது.பெண்களும் மன உறுதியும்
அனைத்து வகை உடல் பாதிப்புகளாலும் ஏற்படும் உயிரிழப்பு மன உறுதியுள்ளவர்களிடம் குறைவாக உள்ளது. அமெரிக்காவில் தேசிய அளவில் நீண்ட காலமாக பயன்படும் ஆரோக்கியம் மற்றும் ஓய்வுக்குப் பிந்தைய வாழ்வு (Health and Retirement Study HRS) என்ற அமைப்பின் தரவுகளை ஆராய்ந்தபோது மன உறுதிக்கும் நீண்ட ஆயுளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலோனோர் ஐம்பது வயதை அடைந்தவர்கள். 1992ல் தொடங்கிய இந்த ஆய்வில் பங்கேற்பாளர்களின் பொருளாதாரம், ஆரோக்கியம், திருமணம் மற்றும் குடும்ப நிலை பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்பட்டு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை கண்காணிக்கப்பட்டது. ஹெச் ஆர் எஸ் அமைப்பின் 10,569 பங்கேற்பாளர்களின் தரவுகள் ஆராயப்பட்டது. 2006 முதல் 2008 வரை உள்ள காலத்தில் இவர்களின் மன உறுதி குறித்த கேள்விகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு முதல்முறையாக பதில்கள் பெறப்பட்டது.
ஒட்டுமொத்த பங்கேற்பாளர்களின் சராசரி வயது 66. இவர்களில் 59% பெண்கள். தொடர் ஆய்வில் மே 2021 வரை அல்லது உயிரிழக்கும் வரை இவர்கள் ஆய்வில் பங்கேற்றனர். 12 ஆண்டு ஆய்வு காலத்தில் 3,489 பேர் மரணமடைந்தனர்.
இவர்களில் அதிக மன உறுதியுடன் வாழ்ந்தவர்கள் அதிக உடல் நலப் பிரச்சனைகள் இல்லாமல் நீண்ட நாள் உயிர் வாழ்ந்தனர். இது இவர்களின் தரவுகளை ஆராய்ந்தபோது தெரிய வந்தது.
ஆண்களை விட பெண்களிடையில் மன உறுதிக்கும் நீண்ட ஆயுளிற்கும் இடையில் அதிக தொடர்பு இருப்பதை இந்த ஆய்வு கண்டறிந்தது. ஆய்வு காலத்தில் இருந்து அவர்கள் உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறு பத்தாண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் உயர்ந்த மன உறுதி உள்ள 53% பங்கேற்பாளர்கள் பத்தாண்டுகளுக்கும் மேல் உயிர் வாழும் சாத்தியம் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். என்றாலும் இந்த ஆய்வுகள் உற்றுநோக்கல்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டவை. மன உறுதிக்கும் நீண்ட ஆயுளுக்கும் இடையில் இருக்கும் உளவியல் ரீதியான தொடர்புகள் பற்றி மேலும் தீவிரமாக ஆராயப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
மன உறுதி உள்ளவர்களின் பண்புகள்
மரபணு அம்சங்கள், குழந்தைப் பருவ பிரச்சனைகள் போன்ற மற்ற காரணங்கள் ஆய்வில் உட்படுத்தப்படவில்லை. நேர்மறை மன உறுதி அளவீடு என்பது நம்பிக்கை, இலக்கை அடைவதில் குறியாக இருப்பது, அர்ப்பணிப்புடன் குறிக்கோளுக்காக பாடுபடுவது, கட்டுப்பாட்டு உணர்வு, சவாலை எதிர்கொள்ளுதல் போன்ற மன உறுதிக்கான நேர்மறை பண்புகளைக் கொண்டது என்று நேர்மறை உளவியலாளர்கள் கூறுகின்றனர்.
மன உறுதி, விடாமுயற்சி, அமைதியான மனநிலை, வாழ்விற்கான காரணமறியும் பண்பு, சுயசார்பு, சில அனுபவங்களை தனியாகத்தான் சந்திக்க வேண்டும் என்பதை அங்கீகரித்தல் போன்ற பண்புகளால் மதிப்பிடப்பட்டது. விரிவான வாழ்வின் பொருள், நேர்மறை உணர்வுகள், தன் ஆரோக்கியத்தின் சுய மதிப்பீடு, சமூக ஆதரவுடன் உள்ள மனநிறைவு போன்றவை உளவியல் உறுதித் தன்மைக்கு முக்கியமானவை என்று ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
இந்த நேர்மறை எண்ணங்களைத் தூண்டி விட்டால் உளவியல் உறுதித்தன்மை பாதுகாக்கப்படும், மன நலம் மேம்படும். வயது வந்தவர்களிடம் ஒன்று திரளும் பிரச்சனைகள், கஷ்டங்களால் ஏற்படும் எதிர்மறை பாதிப்புகளும் இதனால் குறையும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
“மன நலம், மன உறுதி மற்றும் உயிரிழப்பிற்கு இடையில் இருக்கும் தொடர்புகள் பற்றி இந்த ஆய்வு விரிவாக கூறவில்லை. என்றாலும் தொடர்பில் இருப்பது, வாழ்வின் பொருளறிதல், மகிழ்ச்சி தரும் செயல்களில் ஈடுபடுதல் போன்ற அம்சங்களால் வாழ்வின் பிற்பகுதி நேர்மறையானதாக இருக்கும். இதனால் வாழ்வு பொருள் உடையதாக மாறும். சிறிய மாற்றங்களால் கூட பெரிய நன்மைகள் ஏற்படும். வயதாக வயதாக நமக்கு மகிழ்ச்சி தரும் செயல்களில் ஈடுபட அதிக உரிமை நமக்கு உள்ளது” என்று முதியவர்களுக்கான யு கே (Age U K) அறக்கட்டளையின் இயக்குனர் கேரலைன் ஏப்ரகாம்ஸ் (Caroline Abrahams) கூறுகிறார்.
முதுமையில் ஆரோக்கியமான உணவு உண்ணுதல், நாள்தோறும் புதிய பொழுதுபோக்கு அல்லது செயலில் ஈடுபடுதல், நண்பர்கள், குடும்பத்தாருடன் நேரம் செலவிடுதல் ஆகியவை முதியோரின் உணர்வுப்பூர்வ நலத்திற்கு அவசியம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்