சிலப்பதிகாரத்தின் வழக்குரை காதையை நாம் அனைவரும் அறிவோம். அரியணையில் பாண்டிய மன்னன் வீற்றிருக்க, தன் சிலம்பை உடைப்பாள் கண்ணகி. மாணிக்கப் பரல்கள் சிதறி ஓடும். தன் மனைவியின் சிலம்பில் இருந்தவை முத்துப் பரல்கள் என்பதால், தான் தவறு செய்துவிட்டோம், நீதி தவறிவிட்டோம் என்பதை உணர்ந்த மன்னன், "யானோ அரசன், யானே கள்வன்"  என்று கூறி அங்கேயே உயிர் துறப்பான்.

அரியணையில் வீற்றிருந்தது நீதி தவறாத அரசன் என்பதால் அந்தக் காட்சி அங்கு அரங்கேறியது. ஒருவேளை, குற்றம் இழைத்த பொற்கொல்லனே  மன்னனாக வீற்றிருந்தால் யாரிடம் நீதி கேட்க முடியும்?

சிலம்பை உடைத்து என்ன பயன்

அரியணையிலும்

அதே கொல்லன்

என்று ஒருகவிதையில் எழுதியிருப்பார், கவிஞர் ஈரோடு தமிழன்பன்.

இன்றைய அரசியல் சூழல்,  அந்த வரிகளைத்தான் நினைவுபடுத்துகிறது.  எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என்பது எல்லோருக்கும் தெரிகிறது. யாரும் கோராமலே ஆளுநர் நடவடிக்கை எடுத்திருக்க முடியும். ஆனால் எதிர்க்கட்சிகள் பலவும் அந்தக் கோரிக்கையை முன்வைத்த பின்னும், எதுவுமே நடக்காதது போலப் பேசுகின்றார் ஆளுநர்.

இப்போது குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் என்ன பயன் என்ற  எண்ணமே மக்களிடம் மேலோங்கியுள்ளது. குடியரசுத் தலைவர், ஆளுநர் அனைவரும், மோடியின் மறுமுகங்கள்தாம் என்றால் யாரிடம் நீதி கோருவது?

அரசியல் கட்சிகளைத் தாண்டி, பொதுமக்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என்று பல்வேறு தரப்பினரும் இந்த அரசு நீடிப்பது சரியில்லையென்று வெளிப்படையாகவே கூறுகின்றனர்.

இந்து நாளேடு, "சட்ட ரீதியிலான வியாக்கியானங்களைத் தாண்டி, முதலில் தார்மீக ரீதியாக இந்த அரசு பதவியில்  நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டது என்பதற்கு முதல்வர் பழனிச்சாமி முகம் கொடுக்க வேண்டும்..........கண்ணியமாக ஆட்சியிலிருந்து விலகுங்கள், மக்களைச் சந்தியுங்கள்" என்று தலையங்கம் (2017 செப்.1) எழுதியுள்ளது.

சரி, அவையெல்லாம் கண்ணியவான்களின் காதுகளில்தானே ஏறும்!         

Pin It