கல்வியைக் காவிமயமாக்கிக் கொண்டிருக்கிறது பா.ஜ.க.வின் மோடி அரசு.

சி.பி.எஸ்.சி. பாடத்திட்டப் பள்ளிகளில் சமஸ்கிருத வைர விழாக்களைக் கொண்டாடியது.

விருப்பப் பாடமாக இருந்த ஜெர்மன் மொழியை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் சமஸ்கிருதத்தை நுழைத்தது.

வரலாறுகளை மாற்றிப் பாடதிட்டங்களைத் தயாரிக்கிறது, இந்துத்துவ வரலாறுகளைத் திணித்துப் பாடத்திட்டங்களைத் தயாரிக்கிறது.

நீட் தேர்வு என்ற பெயரால் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின, தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களின் மருத்துவப் படிப்பிற்குப் படுபாதாளக் குழி தோண்டியிருக்கிறது.

இப்படி ஒரு தனித்த இனநலம் சார்ந்து கல்விக் கொள்கையைக் கொண்டு செல்லும் பா.ஜ.க. அரசின் அடுத்த அடி நிதி ஆயோக் என்ற அமைப்பு.

அரசு பள்ளிகள் சரிவரச் செயல்படவில்லை, கல்வித் தரம் தாழ்ந்துவிட்டது, எனவே இப்படிப்பட்ட அரசுப் பள்ளிளைத் தனியாரிடம் ஒப்படைத்துவிடலாம் என்று பரிந்துரை செய்கிறது இந்த நிதி ஆயோக்.

ஏற்கேனவே கல்வி வணிகமயமாகிக் கொண்டிருக்கிறது தனியார் நிறுவனங்களால்.

அதைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்கும் அரசாங்கத்திடம் அரசுப் பள்ளிகளையும் வணிகமயமாக்கும் பரிந்துரையைச் செய்கிறது இந்த நிதி ஆயோக்.

சரியாக இயங்காத அரசுப் பள்ளிகளைத் தனியாரிடம் ஒப்படைத்துவிடலாம் என்று சொல்லும் நிதி ஆயோக், அப்பள்ளிகளைச் சரியாக இயக்காத அதிகாரிகள், அமைச்சர்கள், அரசாங்கத்தை என்ன செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும். ஏன் சொல்லவில்லை?

பள்ளிகளின் கல்வித்தரம் தாழ்ந்து, சரியாக இயங்கவில்லை என்று சொன்னால் அதனைச் சரிசெய்து, தவறுகளைக் களைந்து  கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது அறிவுடையோர் கருத்து.

நிதி ஆயோக் இதற்கு எதிராக இருக்கிறது என்பதனால் அதன் மீது ஐயம் ஏற்படுகிறது.

மத்தியில் மோடியின் ஆட்சி அமைந்த பிறகு, திட்டக்குழுவைக் கலைத்து விட்டு, நிதி ஆயோக் என்பதை உருவாக்கியது என்பதனால், இந்த ஐயம் மேலும் வலுக்கிறது.

விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கூடாது என்றும் -

விவசாயம் மற்றும் உணவுத் துறைகளுக்கான மானியங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் &

பொது வினியோகத் திட்டங்களை நிறுத்தி மூடிவிட வேண்டும் என்றும் பரிந்துரை செய்த நிதி ஆயோக், இப்பொழுது கல்வித் திட்டத்திலும் தவறான கொள்கையைப் பரிந்துரை செய்திருப்பது ஒரு மக்கள் விரோத செயல், மாணவர் விரோத செயல்.

நிதி ஆயோக் & இந்த அமைப்பு மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் அமைப்பு என்பதனால் உடனடியாக அதைக் கலைக்க வேண்டும்.

Pin It